search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் தட்டுப்பாடு"

    • பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
    • பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் கூட்டுறவு பால் உற்பத்தி (பாண்லே) நிறுவனம் இயங்கி வருகிறது.

    இங்கு 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் புதுவை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிறுவனத்துக்கு புதுவை விவசாயிகளிடமிருந்து 55 முதல் 60 ஆயிரம் லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள 40 முதல் 50 ஆயிரம் லிட்டர் பால் தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகிறது.

    பிறகு கொள்முதல் செய்யப்பட்ட பாலை கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரித்து நீலம், பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் பால் பாக்கெட் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளி மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு பணம் கொடுக்காததால் பால் கொள்முதல் குறைந்தது. இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    பிறகு அவர்களிடம் சமாதானம் பேசி, பணத்தை கொடுத்தப் பின் மீண்டும் பால் அனுப்பினர். தற்போது மீண்டும் வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு நிலுவை தொகை செலுத்தாததால் கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பால் காலதாமதமாக வருகிறது.

    மேலும் கடைகளுக்கும் காலதாமதமாக செல்கிறது. மேலும் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என கிடுக்குப்பிடி செய்து வருகின்றனர்.

    தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே பால் கொள்முதல் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதில்லை. இதனால் புதுவையில் மீண்டும் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    மேலும் உள்ளூர் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் கொடுக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலை நீடித்தால் கால்நடை விவசாயிகள் அனைவரும் வெளி மார்க்கெட்டில் பால் விற்பனை செய்யும் நிலை ஏற்படும்.

    தற்போது பாண்லே நிறுவனம் பால், பாட்டில், அட்டை பெட்டி, பிளாஸ்டிக் பாக்கெட் போன்றவை கொள்முதல் செய்ததில் ரூ.25 கோடி கடன் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

    இதனால் உற்பத்தி குறைந்து கடைகளில் போதிய அளவு பாதாம் பால், குல்பி, சாக்லேட் போன்றவை இருப்பு இல்லாமல் உள்ளது. சில பூத் ஏஜெண்டுகள் சில தனியார் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளிகூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • டெல்லியில் மல்யுத்த வீராங்கனையிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று காலை கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஆவின் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி நான் ஏற்கனவே அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அறிவித்து விட்டேன்.

    தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. அதனை இந்த ஆண்டு 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதற்காக உலகதரம் வாய்ந்த எந்திரங்களை பயன்படுத்த உள்ளோம்.

    ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    பள்ளிகூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் மல்யுத்த வீராங்கனையிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் நியாயமான முறையில் போராடினார்கள். அவர்கள் மீது பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

    • திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ஆவின் நிறுவனத்தை முடக்கும் வேலையை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
    • பால் தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

    சென்னை:

    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அம்மா ஆட்சிக் காலங்களில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளில், தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்றால் என்ன என்ற நிலை மாறி, இன்று தமிழக மக்கள் குடிக்க பால் இல்லாமல் அல்லலுறும் அவல நிலையை இந்த நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்திவிட்டனர்.

    தாய்ப் பாலுக்கு நிகராக ஆவின் பால், பிஞ்சு குழந்தைகளின் சத்துணவாக இருந்தது என்ற பாராட்டை தமிழக தாய்மார்களிடமிருந்து பெற்றது. தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஆவின் பால் நிறுவனமும், பால் கூட்டுறவு சங்கங்களும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் மூன்று வகையான தரமான பாலை வழங்கி வந்தது. அதே நேரத்தில், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து உடனுக்குடன் அவர்கள் வழங்கிய பாலுக்கான விலையைக் கொடுத்து வந்தது. இதனால் அம்மா ஆட்சிக் காலங்களில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக, ஒரு நாளைக்குத் தேவையான அளவு பால் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல், தனியார் பால் நிறுவனங்கள், ஆவின் நிறுவனத்துடன் போட்டிபோட்டு குறைந்த விலைக்கு தரமான விற்பனை செய்ய முடியாத நிலையில் இருந்தன.

    பாலை தமிழகம் முழுவதும், குறிப்பாக தலைநகர் சென்னை மாநகர மக்களில் 99 சதவீதத்தினர் ஆவின் பாலையே நம்பியுள்ளனர். ஆனால், தற்போது 20 முதல் 25 லட்சம் லிட்டர் வரை மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதால் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ஆவின் நிறுவனத்தை முடக்கும் வேலையை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. பாலின் தரத்தைக் குறைத்தது. அதிக அளவு விற்கும் பாலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியது. இரண்டாம் ரகப் பாலின் கொழுப்புச் சத்தை 1 சதவீதம் குறைத்தது. ஆவின் பொருட்களில் தயிர், மோர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பால் பவுடர் போன்ற இதர பொருட்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி, தனியார் நிறுவனங்கள் பயனடைய வழிவகை செய்தது. 50 சதவீதத்திற்கும் மேல் முகவர்களுக்கு பால் சப்ளையைக் குறைத்தது. முக்கியமாக பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதலை குறைத்தது.. இதன் காரணமாக, பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு தங்களுடைய பாலை விற்கத் தொடங்கினார்கள்.

    மேற்கண்ட காரணங்களால் இன்று, தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் பால் சப்ளை அடியோடு சீர்குலைந்து போயுள்ளதால், மக்கள் அநியாய விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் பாலை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முறையாக, தமிழக மக்களுக்கு தட்டுப்பாடின்றி ஆவின் பாலை சப்ளை செய்யாத அரசை கண்டிக்கிறேன்.

    எங்கும் எதிலும் கமிஷன், கலெக்சன், கரப்சன் என்ற தாரக மந்திரத்துடன் ஆட்சி செய்யும் திமுக ஆட்சியாளர்கள், தனியார் பால் நிறுவனங்களுடன் ரகசியமாக கூட்டணி அமைத்து ஆவின் நிறுவனத்தை முடக்க நினைக்கிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. இந்நிகழ்வு அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆவின் நிறுவனத்தை சீரழித்து, மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் போக்கை இந்த ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். இல்லையெனில் ஆவின் பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் கண்ணீர் இந்த ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் சுட்டெரிக்கும்.

    உடனடியாக பால் கொள்முதலை அதிகரித்து, அனைத்து மாவட்ட பால் உற்பத்தி நிறுவனங்களையும் அம்மா ஆட்சியில் இருந்தது போல் மீண்டும் சிறப்பாக செயல்படத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பால் தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இல்லையெனில் பிஞ்சு குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கும் என, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவைப்படும் தரமான ஆவின் பாலை தட்டுப்பாடின்றி வழங்க இயலாத இந்த ஆட்சியாளர்களை எதிர்த்து பொதுமக்கள் கொந்தளிப்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். உடனடியாக தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகத்தை மேம்படுத்த அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×