search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madras HC"

    • ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
    • 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முதல் அம்பத்தூர் தாசில்தாராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் உள்ள மோலி அலெக்சாண்டர் என்பவரது நிலத்துக்கு பட்டா வழங்கும் படி, அம்பத்தூர் வட்டாட்சியருக்கு கடந்த 2010-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக ஐகோர்ட் உத்தரவு அதிகாரிகளால் வேண்டுமென்று அவமதிக்கப்பட்டுள்ளதாக கூறி, 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முதல் அம்பத்தூர் தாசில்தாராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    இதனை எதிர்த்து மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் தாசில்தார்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

    • வக்கீல் அஜ்மல் கான் ஆஜராகி பாராளுமன்ற தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
    • தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், "1996-ம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ம.தி.மு.க. போட்டியிட்டு வருகிறது.

    இந்த தேர்தல்களில் எங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

    கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக கூறி, எங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

    அதன்பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளேன்.

    பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை. வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. எங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வைகோ தரப்பில் மூத்த வக்கீல் அஜ்மல் கான் ஆஜராகி பாராளுமன்ற தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

    தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    இதையடுத்து, ம.தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மதிமுகவுக்கு அனுமதி அளித்தனர்.

    மேலும், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • ஏ.வி.ராஜூவிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார்.
    • வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலத்தையும், நடிகை திரிஷாவையும் தொடர்புபடுத்தி அ.தி.மு.க.வில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட சேலம் மாவட்ட நிர்வாகி ஏ.வி.ராஜூ சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஏ.வி.ராஜூவிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக கேட்டும், தன்னைப் பற்றி மேலும் அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கிற்கு பதில் அளிக்கும்படி ஏ.வி.ராஜூவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், வெங்கடாசலம் குறித்து அவதூறாக பேசவும் அவருக்கு இடைக்கால தடை விதித்தார்.

    • செந்தில் பாலாஜிக்கு எதிரான 30 வழக்குகளில் 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.
    • வழக்கை தினசரி அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என உத்தரவு.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து அவர் தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் 'அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜிக்கு எதிரான 30 வழக்குகளில் 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.

    போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகள் தவிர மீதமுள்ள 6 வழக்குகள் சுவரொட்டி ஒட்டியது, அப்போதைய முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள் தான். வேலை வாங்கித் தருவதாக ரூ.67 கோடி வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. புலன் விசாரணை முடிந்து விட்டது. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்ட காலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

    இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில், 'சுமார் ரூ.67 கோடி வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு கோர்ட்டால் சான்றளிக்கப்பட்ட உண்மையான ஆவணங்கள். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார். சாட்சிகள் அச்சுறுத்தப்படமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது' என்று தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கடந்த வாரம் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கினார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.

    நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    மனுதாரர் செந்தில் பாலாஜி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அதனால், அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று கூறும் குற்றச்சாட்டை ஏற்க தேவையில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை நான் ஏற்க முடியாது.

    துறை இல்லாத அமைச்சராக பதவி வகித்த மனுதாரர், ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு, துறையில்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மனுதாரர் கடந்த 8 மாதங்களாக அமைச்சர் பதவியில் நீடித்துள்ளார்.

    இதன்மூலம், துறையே இல்லாத அமைச்சராக சிறைக்குள்ளே இருந்தார் என்றால், அவர் எவ்வளவு செல்வாக்குமிக்கவர் என்பதும், அவருக்கு மாநில அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதும் நன்கு தெரிகிறது.

    அமைச்சர் பதவியை தற்போது அவர் ராஜினாமா செய்தாலும், ஆட்சி செய்கிற கட்சியின் எம்.எல்.ஏ.வாக அவர் தொடர்ந்து நீடித்து வருகிறார். அதனால், தமிழ்நாடு அரசின் செல்வாக்கை தொடர்ந்து மனுதாரர் பெற்று வருகிறார் என்று கூறுவதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை.

    இப்படி ஒரு சூழ்நிலையில், இந்த வழக்கில் சாட்சிகளாக போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் உள்ளனர். எனவே சாட்சிகளை கலைக்கக்கூடும்.

    அதுமட்டுமல்ல, வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்குகளில், புகார்தாரர்களை மனுதாரர் சமரசம் செய்து விட்டார். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்ட பிறகு, அவருக்கு எதிராக வழக்குகளின் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இவை எல்லாம் மனுதாரர் இந்த வழக்கில் நடந்துக் கொண்ட விதத்தை காட்டுகிறது.

    இவர் முன்பு போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுள்ளார். பலருக்கு வேலையும் வழங்கியுள்ளார். இதனால், இந்த வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பணம் கொடுத்தவர்கள் போக்குவரத்துத் துறையில் வேலையை கைப்பற்றிக் கொண்டனர்.

    இதன்மூலம் ரூ.67.74 கோடியை சட்டவிரோதமாக மனுதாரர் பெற்றுள்ளதாக அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டுகிறது.

    இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு ஜாமின் வழங்கினால், அது இந்த சமுதாயத்துக்கு தவறான தகவலை தெரியப்படுத்தும். எனவே, இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன். மனுதாரர் 8 மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

    அதனால், இவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க கால நிர்ணயத்தை கீழ் கோர்ட்டுக்கு வழங்க வேண்டியது உள்ளது. எனவே, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தினந்தோறும் 3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு உத்தரவிடுகிறேன்.

    இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும்.
    • கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

    சென்னை:

    சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணைக்கு பின் நீதிபதி கூறியதாவது:-

    * ராமர்கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தனியார் கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை.

    * அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலை, பூஜை மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    * உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும்.

    * கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

    • தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.
    • மேல்முறையீட்டு மனு தொடர்பாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

    சென்னை:

    கடந்த 2022 ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

    இந்த நிலையில், அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி சில உத்தரவுகளை பிறப்பித்தார். பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை. எனவே, அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பி.எஸ். மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்தார். மேலும் வழக்கை நவம்பர் 30-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் நவம்பர் 8-ந்தேதி, தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்து விட்டதால் வழக்கை நவம்பர் 10-ந்தேதி விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்திருந்தனர்.

    ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்தபிறகும்கூட, வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. எனவே, இன்றைக்கே இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதையடுத்து வழக்கு விசாரணை தொடங்கி நடத்தப்பட்டது.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன், தகுதி நீக்கம் செல்லும் என ஏற்கனவே 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது.

    தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு. கொடி, சின்னம் பயன்படுத்தக்கூடாது என்ற தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு சமமானது. இடைக்கால உத்தரவின் அடிப்படையில் தடை விதிக்க முடியாது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வக்கீல் விஜயின் நாராயண் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தடையை நீக்கக் கோரும் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.

    இந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் இன்று காலை தீர்ப்பளித்தனர்.

    அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. அந்த தடையை நீக்க முடியாது.

    எனவே இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இந்த விவகாரத்தில் நிவாரணம் வேண்டி, தனி நீதிபதியிடமே ஓ.பன்னீர்செல்வம் முறையீடு செய்யலாம்.

    அதுபோன்று அவர் மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் அந்த மனுவை தனி நீதிபதி சட்ட ரீதியாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் ஐகோர்ட்டு நீதிபதிகள் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மேலும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    இதன் மூலம் அ.தி.மு.க. கொடி மற்றும் கட்சி பெயரை பயன்படுத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. தனி நீதிபதியின் தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வமும் அவரது அணியினரும் கடந்த 2½ மாதங்களாக அ.தி.மு.க. கொடி சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
    • பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று காலை விசாரித்த நீதிமன்றம், ''போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம்.

    பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு ஏன் இடையூறு ஏற்படுத்த வேண்டும்? நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

    பின்னர் ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா? ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிற்பகலுக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

    மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், ஜனவரி 19-ந்தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைத்து பணிக்கு திருப்பவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்களை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என தெரிவித்தனர்.

    • முரசொலி அலுவலகம் உள்ள நிலம், பஞ்சமி நிலம் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த ரிட் வழக்கில் இது யாருடைய நிலம் என்று முடிவு செய்ய முடியாது.
    • பஞ்சமி நிலம் என்று வந்த புகாரின் அடிப்படையில், முரசொலி அறக்கட்டளைக்கு புதிதாக தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

    சென்னை:

    முரசொலி அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என்று தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தில் பா.ஜ.க., நிர்வாகி சீனிவாசன் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அவர் பிறப்பித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    மனுதாரர் நிலம் குறித்து வந்த புகாரின் அடிப்படையில், ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் பின்னர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆணையத்தின் நோட்டீசுக்கும், அதை தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கும் தடை விதிக்கும் விதமாக எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. விசாரணைக்கு தடை விதிக்க எந்த காரணத்தையும் மனுதாரர் கூறவில்லை.

    தற்போது, இந்த விவகாரம் ஆரம்பக்கட்ட நிலையில் தான் உள்ளது. தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதில் எந்த விதிமீறலும் இல்லை. தேசிய ஆணையத்தின் முன்பு மனுதாரர் தன் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க எந்த தடையும் இல்லை.

    பஞ்சமி நிலம் என்பது எஸ்.சி., பிரிவினருக்கு சொந்தமானது. அந்த நிலத்தை வேறு பிரிவினர் அபகரித்துக் கொண்டாலோ, அல்லது அந்த நிலத்தை பயன்படுத்த எஸ்.சி. பிரிவினருக்கு தடை ஏற்பட்டாலோ, அது குறித்து விசாரிக்க தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.

    தற்போது, முரசொலி அலுவலகம் உள்ள நிலம், பஞ்சமி நிலம் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த ரிட் வழக்கில் இது யாருடைய நிலம் என்று முடிவு செய்ய முடியாது.

    மேலும், இந்த ஆணையத்தின் துணை தலைவராக இருந்த எல்.முருகன், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பதால் உள்நோக்கத்துடன் சம்மன் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தற்போது எல்.முருகன் அந்த பதவியில் இல்லை. அவர் மத்திய மந்திரியாக உள்ளதால், இந்த புகார் குறித்து ஆணையம் விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை.

    எனவே, பஞ்சமி நிலம் என்று வந்த புகாரின் அடிப்படையில், முரசொலி அறக்கட்டளைக்கு புதிதாக தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

    பின்னர், அனைத்து தரப்புக்கும் வாய்ப்பு கொடுத்து, யாருடைய செல்வாக்கிற்கும் அடிபணியாமல், சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்.

    • அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.
    • பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பால் கிதியோன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''போக்குவரத்து ஊழியர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக முடிவு ஏற்படவில்லை.

    அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது சட்டவிரோதமாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்'' என்று கூறினார்.

    தொழிற்சங்கங்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ''6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்திருந்தாலும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை ஜனவரி மாதத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காததால் தான் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். சட்டபடி அரசுக்கு முன்பே போராட்டம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது'' என்று வாதிட்டனர்.

    அப்போது நீதிபதிகள், ''போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம்.

    பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு ஏன் இடையூறு ஏற்படுத்த வேண்டும்? நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

    பின்னர் ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா? ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிற்பகலில் 2.15 மணிக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

    • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் நலன்கருதி தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு முறையிடப்பட்டுள்ளது.

    போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பொங்கல் பண்டிகை நேரத்தில் மக்கள் பாதிப்பை சந்திக்க நேரிடும். இதனால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் படி அரசுக்கு உத்தரவிடக்கோரி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்தால் இதுசம்பந்தமான அவசர வழக்கை பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து இவ்வழக்கு பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சம்பவம் நடந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
    • சம்பவத்தின் நினைவாக நினைவிடம் அமைக்க 20 லட்சம் ரூபாயை விடுவிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யக் கோரியும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், துப்பாக்கிச் சூட்டில் பலியான இளம்பெண்ணின் தாய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022ம் ஆண்டு மே 18-ந்தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.

    அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட கலெக்டர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.

    ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி அரசாணை பிறப்பித்தது.

    இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது இளம்பெண் ஸ்னோலின் என்பவரின் தாய் வனிதா சென்னை ஐகோர்ட்டில், பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தும், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

    ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று 5 ஆண்டுகளாக காத்திருந்தேன்.

    இந்த நிலையில், சட்ட விதிகளுக்கு முரணாக அரசு, எந்திரத்தனமாக செயல்பட்டுள்ளது.

    துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி காவல் துறையினர், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதியவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    சம்பவம் நடந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

    அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கும் வகையில் தமிழக அரசு 2022 அக்டோபர் மாதம் பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்; அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    சம்பவத்தின் நினைவாக நினைவிடம் அமைக்க 20 லட்சம் ரூபாயை விடுவிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர் வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, விசாரணையை பிப்ரவரி 21-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.

    • வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியே எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

    சென்னை:

    சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என கடந்த ஜூன் 16-ந்தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதில், "செந்தில் பாலாஜி விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    மேலும் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து தமிழக முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும். அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அதில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது மற்றும் அது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

    இந்த மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில் ஐகோர்ட்டு உத்தரவு சரியே என்றும் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது பற்றி முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

    ×