search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முரசொலி அலுவலகம்"

    • முரசொலி அலுவலகம் உள்ள நிலம், பஞ்சமி நிலம் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த ரிட் வழக்கில் இது யாருடைய நிலம் என்று முடிவு செய்ய முடியாது.
    • பஞ்சமி நிலம் என்று வந்த புகாரின் அடிப்படையில், முரசொலி அறக்கட்டளைக்கு புதிதாக தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

    சென்னை:

    முரசொலி அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என்று தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தில் பா.ஜ.க., நிர்வாகி சீனிவாசன் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அவர் பிறப்பித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    மனுதாரர் நிலம் குறித்து வந்த புகாரின் அடிப்படையில், ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் பின்னர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆணையத்தின் நோட்டீசுக்கும், அதை தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கும் தடை விதிக்கும் விதமாக எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. விசாரணைக்கு தடை விதிக்க எந்த காரணத்தையும் மனுதாரர் கூறவில்லை.

    தற்போது, இந்த விவகாரம் ஆரம்பக்கட்ட நிலையில் தான் உள்ளது. தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதில் எந்த விதிமீறலும் இல்லை. தேசிய ஆணையத்தின் முன்பு மனுதாரர் தன் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க எந்த தடையும் இல்லை.

    பஞ்சமி நிலம் என்பது எஸ்.சி., பிரிவினருக்கு சொந்தமானது. அந்த நிலத்தை வேறு பிரிவினர் அபகரித்துக் கொண்டாலோ, அல்லது அந்த நிலத்தை பயன்படுத்த எஸ்.சி. பிரிவினருக்கு தடை ஏற்பட்டாலோ, அது குறித்து விசாரிக்க தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.

    தற்போது, முரசொலி அலுவலகம் உள்ள நிலம், பஞ்சமி நிலம் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த ரிட் வழக்கில் இது யாருடைய நிலம் என்று முடிவு செய்ய முடியாது.

    மேலும், இந்த ஆணையத்தின் துணை தலைவராக இருந்த எல்.முருகன், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பதால் உள்நோக்கத்துடன் சம்மன் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தற்போது எல்.முருகன் அந்த பதவியில் இல்லை. அவர் மத்திய மந்திரியாக உள்ளதால், இந்த புகார் குறித்து ஆணையம் விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை.

    எனவே, பஞ்சமி நிலம் என்று வந்த புகாரின் அடிப்படையில், முரசொலி அறக்கட்டளைக்கு புதிதாக தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

    பின்னர், அனைத்து தரப்புக்கும் வாய்ப்பு கொடுத்து, யாருடைய செல்வாக்கிற்கும் அடிபணியாமல், சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்.

    • முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு சொந்தமானது என தமிழக அரசு தெரிவித்தது.
    • முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

    சென்னை:

    தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான "முரசொலி"யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1,825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பா.ஜ.க. மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இந்தப் புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக்கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரமன் லால் ஆஜராகி, ஜெர்மன் நிறுவனத்திடம் இருந்த நிலத்தை அதன் கலைப்பிற்கு பிறகு பார்வதி மாதவன் நாயர் என்பவருக்கு விற்றதாகவும், அவரிடமிருந்து அஞ்சுகம் பதிப்பகம் வாங்கியதாகக் கூறி ஆவணங்களை தாக்கல் செய்தார். எனவே முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் அஞ்சுகம் பதிப்பகத்திற்குச் சொந்தமானது என குறிப்பிட்டார். அதன்படி இந்த நிலம் பஞ்சமி நிலம் இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.

    முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, 2019-ல் அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஆனால் இவ்வளவு காலமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் இழுத்தடித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தைக் கிடப்பிலேயே வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுதவற்கான செயலாகவே தெரிவதாகவும், அரசு நிதியில் செயல்படும் ஆணையத்தை தங்களுக்கு ஆதரவாக தவறாகப் பயன்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மணிப்பூர் மக்கள் பாதிக்கப்பட்டபோது என்ன செய்தது தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் எனவும் கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

    ×