search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட்டு மீண்டும் மறுப்பு
    X

    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட்டு மீண்டும் மறுப்பு

    • செந்தில் பாலாஜிக்கு எதிரான 30 வழக்குகளில் 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.
    • வழக்கை தினசரி அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என உத்தரவு.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து அவர் தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் 'அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜிக்கு எதிரான 30 வழக்குகளில் 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.

    போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகள் தவிர மீதமுள்ள 6 வழக்குகள் சுவரொட்டி ஒட்டியது, அப்போதைய முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள் தான். வேலை வாங்கித் தருவதாக ரூ.67 கோடி வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. புலன் விசாரணை முடிந்து விட்டது. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்ட காலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

    இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில், 'சுமார் ரூ.67 கோடி வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு கோர்ட்டால் சான்றளிக்கப்பட்ட உண்மையான ஆவணங்கள். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார். சாட்சிகள் அச்சுறுத்தப்படமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது' என்று தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கடந்த வாரம் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கினார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.

    நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    மனுதாரர் செந்தில் பாலாஜி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அதனால், அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று கூறும் குற்றச்சாட்டை ஏற்க தேவையில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை நான் ஏற்க முடியாது.

    துறை இல்லாத அமைச்சராக பதவி வகித்த மனுதாரர், ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு, துறையில்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மனுதாரர் கடந்த 8 மாதங்களாக அமைச்சர் பதவியில் நீடித்துள்ளார்.

    இதன்மூலம், துறையே இல்லாத அமைச்சராக சிறைக்குள்ளே இருந்தார் என்றால், அவர் எவ்வளவு செல்வாக்குமிக்கவர் என்பதும், அவருக்கு மாநில அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதும் நன்கு தெரிகிறது.

    அமைச்சர் பதவியை தற்போது அவர் ராஜினாமா செய்தாலும், ஆட்சி செய்கிற கட்சியின் எம்.எல்.ஏ.வாக அவர் தொடர்ந்து நீடித்து வருகிறார். அதனால், தமிழ்நாடு அரசின் செல்வாக்கை தொடர்ந்து மனுதாரர் பெற்று வருகிறார் என்று கூறுவதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை.

    இப்படி ஒரு சூழ்நிலையில், இந்த வழக்கில் சாட்சிகளாக போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் உள்ளனர். எனவே சாட்சிகளை கலைக்கக்கூடும்.

    அதுமட்டுமல்ல, வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்குகளில், புகார்தாரர்களை மனுதாரர் சமரசம் செய்து விட்டார். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்ட பிறகு, அவருக்கு எதிராக வழக்குகளின் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இவை எல்லாம் மனுதாரர் இந்த வழக்கில் நடந்துக் கொண்ட விதத்தை காட்டுகிறது.

    இவர் முன்பு போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுள்ளார். பலருக்கு வேலையும் வழங்கியுள்ளார். இதனால், இந்த வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பணம் கொடுத்தவர்கள் போக்குவரத்துத் துறையில் வேலையை கைப்பற்றிக் கொண்டனர்.

    இதன்மூலம் ரூ.67.74 கோடியை சட்டவிரோதமாக மனுதாரர் பெற்றுள்ளதாக அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டுகிறது.

    இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு ஜாமின் வழங்கினால், அது இந்த சமுதாயத்துக்கு தவறான தகவலை தெரியப்படுத்தும். எனவே, இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன். மனுதாரர் 8 மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

    அதனால், இவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க கால நிர்ணயத்தை கீழ் கோர்ட்டுக்கு வழங்க வேண்டியது உள்ளது. எனவே, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தினந்தோறும் 3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு உத்தரவிடுகிறேன்.

    இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×