search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity bill"

    • ஆண்டுதோறும், 6 சதவீத மின்கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும்
    • அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தவில்லை.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில் அமைப்புகள் இணைந்து, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பீக்ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார நிலை கட்டண உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும்.

    ஆண்டுதோறும், 6 சதவீத மின்கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர். மின்கட்டண உயர்வுகளால் சிறு, குறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் நேரடியாக தலையிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

    கடந்த 11ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், முதல்வருக்கு, 'இ-மெயில்' அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பூரில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விரைவு தபால் அனுப்பும் போராட்டம் நடத்த தொழில் அமைப்புகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று திருப்பூர் நிட்மா சங்க அலுவலகத்தில் இருந்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பினர்.

    இது குறித்து டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

    பீக்ஹவர் கட்டணம் ரத்து, நிலை கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வர் அலுவலகத்துக்கும், தொழில்துறைக்கும், இ-மெயில் அனுப்பி வருகிறோம். சங்கம் சார்பிலும், தனித்தனி உறுப்பினர்களும் அனுப்பி வருகின்றனர். அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தவில்லை. மின் கட்டண உயர்வால் தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் மட்டுமே, போராட்டம் நடத்துகிறோம்.

    இன்று திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டாக இணைந்து நடைபயணமாக சென்று முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பி உள்ளோம். வருகிற 25-ந் தேதி, தமிழகம் முழுவதும், தொழிற்சாலைகளில் கறுப்பு கொடி ஏற்றி வைத்து, ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் வருகிற 24-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் வருகிறார். அப்போது தொழில்துறையினரை சந்தித்து குறைகளை தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

    அப்படி இல்லாதபட்சத்தில் 25-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்தனர்.

    • தொழில் நசிவு காரணத்தினால், தொழிலிலிருந்து வெளியேறும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது.
    • நிரந்தர நிலைக்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்சாலைகள், சிறு-குறு தொழில்களுக்காக உச்சபட்ச மின்பயன்பாடு நேர கட்டண உயர்வு ஏற்கனவே காலை 6 முதல் 9 மணி வரை, மாலை 6 முதல் 9 மணி வரை என 6 மணிநேர மின்கட்டண உயர்வு வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 8 மணிநேரமாக உயர்த்தி மறுவரையரை செய்யப்பட்டிருக்கிறது. வரையரை செய்யப்பட்டதோடு அல்லாமல் கட்டண உயர்வும் அமலாக்கத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே, தொழில் துறையினர் தங்களது உற்பத்தியில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தங்களது தயாரிப்புப் பொருட்களின் உற்பத்தியை குறைத்திருப்பதாக தெரியவருகின்றது.

    இதனால் இத்தொழில் சார்ந்த துறையினர் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதோடு, தங்களது தொழில் நசிவு காரணத்தினால், தொழிலிலிருந்து வெளியேறும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது. எனவே தொழில் துறை கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்துப்பேசி, உச்சபட்ச நேர மின்பயன்பாட்டு உயர்வு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்து, பொதுமக்கள், தொழில்துறையினர், சிறு வியாபாரிகள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். இதேபோல் நிரந்தர நிலைக்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் 45 சதவீதம் பேர் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் தகவல் தெரிவித்தார்
    • தற்போது மின் கம்பத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    ஈரோடு,

    ஈரோடு மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் மின் இணைப்பு மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அளவில் தற்போது 60 சதவீதம் மின் நுகர்வோர் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இது ஈரோடு மாவட்டத்தில் 45 சதவீதமாக உள்ளது. இதை மேலும் அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது மின் கம்பத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புகார் குறை, புது இணைப்பு விண்ணப்பித்தலும் ஆன்லைனில் பதிவு செய்வதால் விரைவாக பரிசீலனை செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு தடுக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்கள், மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் பாஜகவினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர் நெய்விளக்கு தொகுப்பு பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக நகர தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தின் , விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், உள்ளிட்ட கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தின் பொழுது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு மாலை அணிவித்து, ஊதுபத்தி கொளுத்தி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ க மாவட்டத் தலைவர் பாஸ்கர், நகர துணை தலைவர் முறுக்கு பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அனைத்து வகையிலும் கட்டணங்களை 100 முதல் 200 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
    • விலை உயர்வுகள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.

    சென்னை:

    தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க கூட்டம் தலைவர் ஜான் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் சங்க தலைவர் ஜான் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திலுள்ள சுமார் 7000 திருமண மண்டபங்களுக்கு தொடர்ச்சியாக சொத்து வரி, மின் கட்டணம், வணிக உரிம கட்டணம் என்று அனைத்து வகையிலும் கட்டணங்களை 100 முதல் 200 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

    கொரோனா கால நஷ்டத்திலிருந்து இன்றளவும் மீள முடியாமல் திணறிக்கொண்டு இருக்கும் திருமண மண்டபங்கள் இவ்வாறான வரிகளால் திருமண மண்டப உரிமையாளர்கள் மண்டபங்களை பராமரிக்க முடியாமல், வங்கி கடனை செலுத்த முடியாமலும் மண்டபங்களை மூடும் தருவாய்க்கு வந்துவிட்டார்கள். இந்த விலை உயர்வுகள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.

    மேலும் திருமண மண்டபங்கள் மூடப்பட்டால் திருமண நிகழ்ச்சிகளில் ஈடுபடும் கேட்டரிங், நடேஸ்வரன், புகைப்படம், அலங்காரம், புரோகிதர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும். எனவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து மின் கட்டணத்தை கணக்கெடுக்கிறார்கள்.
    • மின் ஊழியர்கள் சரியான நாளில் வந்து கணக்கெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கெடுக்கப்படுகிறது. வீடுகளுக்கான மின்சாரம் 100 யூனிட்டுகள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. 101 யூனிட் முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 மின் கட்டணம் ஆகும். 401 முதல் 500 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6-ம், 501 முதல் 600 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், 601 முதல் 800 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9-ம், 801 முதல் 1000 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10-ம், 1001-க்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து மின் கட்டணத்தை கணக்கெடுக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக சென்னையில் பல இடங்களில் மின்கட்டண கணக்கெடுப்பு பணியில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் தங்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    ஒவ்வொரு முறை மின் பயனீட்டு அளவை 5 முதல் 8 நாட்கள் வரை தாமதமாக கணக்கெடுப்பதால் ரூ.300 முதல் ரூ.500 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. குறிப்பாக ஒரு வீட்டில் 2 மாதத்துக்கு 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் நிலையில் தாமதமாக கணக்கெடுக்க செல்லும் நிலையில் கூடுதலாக 10 முதல் 20 யூனிட் வரை பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக 500 யூனிட்டை தாண்டி மின் அளவு சென்று விடுவதால் அதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.

    தமிழக அரசு மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது 2 மாதத்தையும் தாண்டி கணக்கெடுக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

    எனவே மின் ஊழியர்கள் சரியான நாளில் வந்து கணக்கெடுக்க வேண்டும். அண்ணாநகர், அம்பத்தூர், மாதவரம், அடையாறு, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தாமதமாகவே மின் கட்டணம் கணக்கெடுக்கப்படுகிறது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக சென்னையில் சில இடங்களில் மின் கட்டணம் தாமதமாக கணக்கெடுக்கப்படுகிறது. தாமதம் ஏற்படும் இடங்களில் 2 மாதங்களுக்கான சராசரி எடுத்து, அதில் காலதாமதமான நாட்களை கழித்தே மின்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது' என்றார்.

    • மின் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • இது கிரகஜோதி திட்டம் இல்லை, கிரக நாடக திட்டமாகும்.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    5 இலவச திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. தற்போது அந்த இலவச திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருக்கிறது. அதுவும் மின் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. 200 யூனிட் இலவச மின்சாரம் தருவதாக கூறிவிட்டு, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றுகிறது.

    இது கிரகஜோதி திட்டம் இல்லை, கிரக நாடக திட்டமாகும். மாநிலத்தில் மின் கட்டண உயர்வு விவகாரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 தேசிய கட்சிகளும் விளையாடுகிறது. காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம், நாங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை என்கிறார்கள்.

    பா.ஜனதாவினர் நாங்கள் ஆட்சியில் இல்லை, காங்கிரஸ் தான் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக நாடகமாடுகிறார்கள். மின் கட்டண உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தன்னை நிதி மந்திரி என்று கூறிக் கொள்ளும் சித்தராமையாவுக்கு சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது குறித்து புரிந்து கொள்ள முடியவில்லையா?.

    சிறு தொழில் நிறுவன அதிபர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து, ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகின்றனர். இலவச வாக்குறுதி அளித்துவிட்டு மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின் கட்டண உயர்வு திரும்ப பெறப்பட மாட்டாது
    • ஏழைகளுக்கு அரிசி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது.

    பெங்களூரு :

    விஜயாப்புராவில் நேற்று தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 11 மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது பற்றி என்னுடைய கவனத்திற்கும் வந்தது. தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை காங்கிரஸ் ஆட்சியில் உயர்த்தவில்லை. கர்நாடக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கடந்த ஏப்ரல் மாதமே மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அது காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நடந்திருந்தது.

    அந்த மின் கட்டண உயர்வு தான் தற்போது அமலுக்கு வந்திருக்கிறது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒவ்வொரு ஆணடும் மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. தற்போது மட்டும் புதிதாக கட்டணத்தை உயர்த்தவில்லை. எனவே தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்படாது. மின் கட்டண உயர்வு திரும்ப பெறப்பட மாட்டாது என்று முதல்-மந்திரி சித்தராமையாவும் தெரிவித்திருக்கிறார்.

    அதே நேரத்தில் மின் கட்டண உயர்வு காரணமாக தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளையும், பிற சலுகைகளையும் வழங்க அரசு முன் வரும். எனவே மின் கட்டணத்தை குறைக்கும்படி தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, அதுபற்றி தெரிந்து கொள்வது முக்கியமாகும்.அன்னபாக்ய திட்டத்திற்காக கர்நாடகத்தில் 2 லட்சம் டன் அரிசி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்வது சரி இல்லை. முதலில் தங்களிடம் 7 லட்சம் டன் அரிசி இருப்பு இருப்பதாக கூறிவிட்டு, தற்போது கர்நாடகத்திற்கு அரிசி கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. ஏழைகளுக்கு அரிசி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்த்தப்பட்டது.
    • முதல் 1000 யூனிட் வரை சலுகை வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஏற்ற, இறக்கத்துடன் கூடிய சந்தை நிலவரம், மூலப்பொருட்களான பஞ்சு, நூல் ரகங்கள் விலையில் தினமும் ஏற்படும் மாற்றங்கள், உரிய ஒப்பந்தக்கூலி கிடைக்காமை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது விசைத்தறி தொழில்.

    கடந்த செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்த்தப்பட்டது. அதிர்ச்சி அடைந்த விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்துவதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் மின் கட்டணம், 50 சதவீதம் குறைக்கப்பட்டது. முதல் 1000 யூனிட் வரை சலுகையும் வழங்கப்பட்டது. இதையடுத்து விசைத்தறியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு விசைத்தறிகளை இயக்கினர்.

    கடந்த 9 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், ஒவ்வொரு விசைத்தறி கூடங்களுக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை பில்கள் வந்துள்ளன.அதில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்துடன் அபராதத்தொகை மற்றும் வட்டியும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த தயாராக உள்ளதாகவும், நிலுவைத் தொகையை கட்ட தவணை வேண்டும்.வட்டியை ரத்து செய்ய வேண்டும் என விசைத்தறியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 6 தவணைகளில் நிலுவைத்தொகையை செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

    வட்டி குறைப்பு குறித்து முறையான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறுகையில், குறைக்கப்பட்ட மின் கட்டண அடிப்படையில் நிலுவைத் தொகையை செலுத்த தயாராக உள்ளோம். ஆனால், அதுகுறித்தும் வட்டியை ரத்து செய்வது குறித்தும் எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. இதனால் ஒவ்வொரு விசைத்தறியாளர்களுக்கும் மின் கட்டண தொகை சுமையாக மாறியுள்ளது.மின் துறை அமைச்சர், மின் வாரிய சேர்மன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. என்ன செய்வது என புரியவில்லை என்றனர்.

    • விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது.
    • மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.

    பல்லடம் :

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசைத்தறியாளர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர். இந்தநிலையில், விசைத்தறியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பல்லடம் வேலுச்சாமி, திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது :- தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று நிலுவையில் உள்ள விசைத்தறி மின் கட்டணத்தை கட்டுவதற்கு 6 தவணைகளாக பிரித்து கட்டணம் செலுத்தவும்,மேலும் மின் கட்டணத்தில் உள்ள அபராத தொகையை கழித்தும் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்த, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி.

    இந்தநிலையில் தமிழ்நாடு மின் வாரியம் விசைத்தறியாளர்களுக்கு கடந்தாண்டு 2022 செப்டம்பர் முதல் ஏப்ரல் 2023 வரை நிலுவையில் உள்ள மின் பயன்பாட்டு கட்டணத்தை அபராதத்துடன் ஆறு மாத தவணையில் செலுத்த வேண்டும் என தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்படி விசைத்தறியாளர்கள் நிலுவையில் உள்ள மின் பயன்பாட்டு கட்டணத்துடன் அபராததொகையும் சேர்த்துசெலுத்தி வருகின்றனர்.திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்த தயாராக உள்ளோம். அபாரதத் தொகையை தள்ளுபடி செய்யக்கோரி அமைச்சரை சந்திப்பதற்காக நிர்வாகிகள் சென்னை சென்றுள்ளனர்.அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • புதுவை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    • செயற்பொறியாளர் வேண்டுகோள்

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மின்துறை நகர இயக்குதல் மற்றும் பராமரித்தல் கோட்டம், நகர்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உட்பட்ட (கடற்கரை சாலை, வம்பாகீரப்பாளையம், துப்புராயப்பேட், நெல்லித்தோப்பு, எல்லைப்பிள்ளைச் சாவடி வரை மற்றும் முருங்கப்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரை), சாரம், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், பாலாஜி நகர், சுதந்திர பொன்விழா நகர், திருமுடி சேதுராமன் நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள் மின் கட்டணத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்து மின்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • போராட்டம் காரணமாக 6 மாத மின் கட்டணம் விசைத்தறியாளர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது.
    • உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்கும் வரை கட்டணத்தைச் செலுத்துவதில்லை என்று கூறி, விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது.உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்கும் வரை கட்டணத்தைச் செலுத்துவதில்லை என்று கூறி, விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அறிவித்த மின் கட்டண உயர்வில் இருந்து 50 சதவீதத்தை அரசு குறைத்தது. மேலும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக வழங்கவும் அறிவிப்பு வெளியானது.

    போராட்டம் காரணமாக 6 மாத மின் கட்டணம் விசைத்தறியாளர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இதை தவணை முறையில் செலுத்த அவகாசம் வேண்டும் என விசைத்தறியாளர்கள், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தனர்.

    இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ''விசைத்தறியாளர் கோரிக்கையை ஏற்று தவணை முறையில் மின் கட்டணத்தை செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

    தற்போது பயன்பாட்டில் உள்ளதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் என்ற முறையில் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். விசைத்தறியாளர் நலனை கருத்தில் கொண்டு அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக மீண்டும் மின் துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    ×