search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் பல இடங்களில் தாமதமாக கணக்கெடுக்கப்படுவதால் மின் கட்டணம் அதிகரிப்பு
    X

    சென்னையில் பல இடங்களில் தாமதமாக கணக்கெடுக்கப்படுவதால் மின் கட்டணம் அதிகரிப்பு

    • 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து மின் கட்டணத்தை கணக்கெடுக்கிறார்கள்.
    • மின் ஊழியர்கள் சரியான நாளில் வந்து கணக்கெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கெடுக்கப்படுகிறது. வீடுகளுக்கான மின்சாரம் 100 யூனிட்டுகள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. 101 யூனிட் முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 மின் கட்டணம் ஆகும். 401 முதல் 500 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6-ம், 501 முதல் 600 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், 601 முதல் 800 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9-ம், 801 முதல் 1000 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10-ம், 1001-க்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து மின் கட்டணத்தை கணக்கெடுக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக சென்னையில் பல இடங்களில் மின்கட்டண கணக்கெடுப்பு பணியில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் தங்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    ஒவ்வொரு முறை மின் பயனீட்டு அளவை 5 முதல் 8 நாட்கள் வரை தாமதமாக கணக்கெடுப்பதால் ரூ.300 முதல் ரூ.500 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. குறிப்பாக ஒரு வீட்டில் 2 மாதத்துக்கு 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் நிலையில் தாமதமாக கணக்கெடுக்க செல்லும் நிலையில் கூடுதலாக 10 முதல் 20 யூனிட் வரை பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக 500 யூனிட்டை தாண்டி மின் அளவு சென்று விடுவதால் அதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.

    தமிழக அரசு மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது 2 மாதத்தையும் தாண்டி கணக்கெடுக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

    எனவே மின் ஊழியர்கள் சரியான நாளில் வந்து கணக்கெடுக்க வேண்டும். அண்ணாநகர், அம்பத்தூர், மாதவரம், அடையாறு, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தாமதமாகவே மின் கட்டணம் கணக்கெடுக்கப்படுகிறது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக சென்னையில் சில இடங்களில் மின் கட்டணம் தாமதமாக கணக்கெடுக்கப்படுகிறது. தாமதம் ஏற்படும் இடங்களில் 2 மாதங்களுக்கான சராசரி எடுத்து, அதில் காலதாமதமான நாட்களை கழித்தே மின்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது' என்றார்.

    Next Story
    ×