search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்படாது: மந்திரி எம்.பி.பட்டீல்
    X

    தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்படாது: மந்திரி எம்.பி.பட்டீல்

    • மின் கட்டண உயர்வு திரும்ப பெறப்பட மாட்டாது
    • ஏழைகளுக்கு அரிசி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது.

    பெங்களூரு :

    விஜயாப்புராவில் நேற்று தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 11 மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது பற்றி என்னுடைய கவனத்திற்கும் வந்தது. தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை காங்கிரஸ் ஆட்சியில் உயர்த்தவில்லை. கர்நாடக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கடந்த ஏப்ரல் மாதமே மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அது காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நடந்திருந்தது.

    அந்த மின் கட்டண உயர்வு தான் தற்போது அமலுக்கு வந்திருக்கிறது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒவ்வொரு ஆணடும் மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. தற்போது மட்டும் புதிதாக கட்டணத்தை உயர்த்தவில்லை. எனவே தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்படாது. மின் கட்டண உயர்வு திரும்ப பெறப்பட மாட்டாது என்று முதல்-மந்திரி சித்தராமையாவும் தெரிவித்திருக்கிறார்.

    அதே நேரத்தில் மின் கட்டண உயர்வு காரணமாக தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளையும், பிற சலுகைகளையும் வழங்க அரசு முன் வரும். எனவே மின் கட்டணத்தை குறைக்கும்படி தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, அதுபற்றி தெரிந்து கொள்வது முக்கியமாகும்.அன்னபாக்ய திட்டத்திற்காக கர்நாடகத்தில் 2 லட்சம் டன் அரிசி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்வது சரி இல்லை. முதலில் தங்களிடம் 7 லட்சம் டன் அரிசி இருப்பு இருப்பதாக கூறிவிட்டு, தற்போது கர்நாடகத்திற்கு அரிசி கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. ஏழைகளுக்கு அரிசி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×