search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chinmayi"

    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய ராதாரவிக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்த நயன்தாரா, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். #Nayanthara #RadhaRavi
    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி, மிலிந்த் ராவ் உட்பட திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.

    இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    நான் பொதுவாக அறிக்கைகள் வெளியிடுவதில்லை. பெண்களுக்கு எதிரான ஆண்களின் தவறான கருத்துகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்களால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

    நடிகர் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



    தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் தான் பிறந்தவர் என்பதை ராதாரவி உள்ளிட்ட அவரைப் போன்றவர்கள் மறக்க வேண்டாம். சினிமா துறையில் மூத்த நடிகரான அவர் மற்ற இளம் தலைமுறையினருக்கு  முன்னுதாரணமாக, வழிகாட்டுபவராக திகழ வேண்டும். 

    சரியான பட வாய்ப்பு இல்லாததால், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைய முயற்சிக்கிறார் ராதாரவி. இதில் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால், அவருடைய கீழ்த்தரமான பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது தான். தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அவரை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.

    ராதாரவி போன்ற பெண்களுக்கு எதிராக பேசுபவர்களை பொதுமக்களும், ரசிகர்களும் ஆதரிக்கக் கூடாது என்பதே எனது கோரிக்கை. அவரது இத்தகைய கேவலமான பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது திறமைக்கு ஏற்ற வேலையை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். எனது ரசிகர்களுக்காக நான் என்னால் முடிந்த வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். இனியும் நடிப்பேன்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விசாகா வழிகாட்டு குழு அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே எனது பணிவான கடைசி கேள்வி.

    எனக்கு துணையாக நின்ற, நிற்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #Nayanthara #RadhaRavi #NadigarSangam #KolaiyuthirKaalam

    நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய நடிகர் ராதாரவிக்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி உள்ளிட்ட பலரும் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர். #KolaiyuthirKaalam #Nayanthara
    ராதாரவியின் பேச்சு தொடர்பாக எழுந்த கண்டனங்கள்:-

    நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘சமீபத்துல நீங்கள் பெண்களுக்கு எதிராக கீழ்த்தரமான முறையில் பேசியதை வன்மையாகக் கண்டித்து, நடிகர் சங்கக் கடிதத்தில் கையெழுத்து போடுறதுல நடிகர் சங்க பொதுச் செயலாளராக மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கடிதம் விரைவிலேயே வந்து சேரும். இப்போதிலிருந்து உங்கள் பெயரை ‘ரவி’ன்னு வச்சிக்கோங்க. காரணம், உங்கள் பெயரில் ஒரு பெண்ணின் பெயரும் இருக்கிறது”.


    ராதாரவியின் சகோதரியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ‘இன்று நம் துறையில் இருக்கும் அர்ப்பணிப்பான ஒரு சில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அவரை எனக்குத் தெரியும். அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். வீடியோவை முழுதாகப் பார்க்கவில்லை. ஆனால் ராதாரவியை இன்று சந்தித்தேன். அவர் பேசியது முற்றிலும் தவறு என்று சொன்னேன்’’.


    ராதாரவியின் பேச்சு குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    ‘பெண்களை அசிங்கப்படுத்துவது, பெண்களைப் பற்றி ஆபாசமான நகைச்சுவை பேசுவது பெண்களை இழிவுபடுத்துவது, பெண்களை காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவது எல்லாம் இந்த திரைத்துறையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

    மீ டூ குறித்த சர்ச்சை வரும்போது, துறையில் இருக்கும் பெண்கள் என்னைப்போல, சின்மயியைப் போல எண்ணற்ற பெண்களுக்கு ஆதரவாக நின்றிருந்தால் வி‌ஷயங்கள் ஒருவேளை மாறியிருக்கலாம். அமைதி நமக்கு எந்தத் தீர்வையும் தராது. நேரம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு பெண்ணும் துணிந்து நிற்க வேண்டும்.


    திரைப்பட சங்கங்கள் என்று சொல்லிக் கொள்பவை எல்லாமே சில ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படுபவை. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். பெண்களை ஆதரிப்பது போல நடிப்பார்கள். ஆனால் நிஜத்தில் இவர்கள் ஏதோ ஒரு வகையில், திரையிலோ, வாழ்க்கையிலோ பெண்கள் இழிவுபடுத்தப்படும் சூழ்நிலைக்கு பங்காற்றியிருப்பார்கள்.

    கவர்ச்சியான உடைகள் அணிவதன் மூலம் எங்களை நாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறோம் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன், அது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். ஒரு பெண்ணின் குணத்தை அவளது உடையை வைத்து நீங்கள் முடிவு செய்யக் கூடாது.

    ஒரு ஆண் என்ன செய்தாலும், அது எவ்வளவு மோசமான, தவறான, நெறிமுறையற்ற செயலாக இருந்தாலும், அந்த ஆணுக்கு எத்தனை துணைகள் இருந்தாலும் அதை வைத்து நீங்கள் அவரது குணத்தை மதிப்பிட மாட்டீர்கள் என்றால் பெண்களைப் பற்றி மதிப்பிடவும் யாருக்கும் உரிமை இல்லை. உங்கள் சகோதரி என்ன உடை அணிந்திருந்தாலும் உங்களுக்கு அவரை பலாத்காரம் செய்யத் தோணாது இல்லையா. அதே போல மற்ற பெண்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்’.

    இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் என் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒதுங்கியிருந்தனர். காரணம் அவர்கள் வேறு யூனியன் வி‌ஷயத்தில் தலையிட முடியாது என்பதால். ஆனால், இந்த முறை அந்த நபர் மிகவும் வெற்றிகரமாக தன்னை நிரூபித்த நடிகையையல்லவா மேடையில் சீண்டியுள்ளார். இப்போதாவது நடவடிக்கை எடுங்கள். முடிந்தால் எடுங்கள். அப்படி எடுத்தால் ரொம்ப நன்றி.

    இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.


    ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ், ராதாரவியை இனிமேல் தன் படத்திற்கு ஒப்பந்தம் செய்ய மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

    ‘கொலையுதிர் காலம்‘ படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    ‘மேடையில் அனைவருமே இருந்தார்கள். ராதாரவி சார் சீனியர் நடிகர். அவர் அந்த இடத்தில் அப்படி பேசியிருக்கக் கூடாது. எனக்கே அதில் உடன்பாடில்லை.

    இவ்வாறு மதியழகன் தெரிவித்துள்ளார். #KolaiyuthirKaalam #Nayanthara #RadhaRavi

    டப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. #Chinmayi #DubbingUnion
    சினிமா பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டுகளை சுமத்தினார். சர்வதேச அளவில் பிரபலமான மீடூ இயக்கம் மூலம் சமூக வலைதளங்களில் புகார் கூறியவர் பின்னர் போலீசிலும் புகார் அளித்தார்.

    சின்மயி தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். பாலியல் புகாருக்கு பிறகு அவருக்கும், சங்க தலைவர் ராதாரவிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.

    சங்க விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி கடந்த ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சின்மயி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சின்மயி தரப்பில் சென்னை 2-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.



    இந்த வழக்கு நீதிபதி எஸ்.முருகேசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது 2006-ம் ஆண்டிலேயே நுழைவு கட்டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணங்களை செலுத்திவிட்டதாகவும், 2018-ம் ஆண்டு உறுப்பினர் பட்டியலில் தன் பெயர் இருப்பதாகவும் கூறி சின்மயி தரப்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தன் விளக்கத்தைக் கேட்காமல் சங்கத்தில் இருந்து நீக்கியதாகவும் சின்மயி தரப்பில் வாதிடப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சின்மயியை சங்கத்தில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக மார்ச் 25-ந் தேதிக்குள் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார். #Chinmayi #DubbingUnion #RadhaRavi

    மீடூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது புகார் அளித்து எந்த பயனும் இல்லாததால், மத்திய மந்திரி மேனகா காந்தியிடம் சின்மயி புகார் அளித்துள்ளார். #MeToo #Chinmayi #ManekaGandhi
    பெண்கள் தங்கள் துறைகளில் இருக்கும் ஆண்கள் மூலம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்த தொடங்கப்பட்டது மீடூ இயக்கம். சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கம் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறினார்.

    சின்மயி புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால் இந்த விவகாரம் குறித்து அவர் மத்திய மந்திரி மேனகா காந்தியிடம் புகார் அளித்துள்ளார். மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை மந்திரியான மேனகா காந்தியை குறிப்பிட்டு சின்மயி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், “வைரமுத்து மீது நான் புகார் அளித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு தமிழ் சினிமா துறையிலிருந்து (டப்பிங் யூனியன்) நான் விலக்கப்பட்டுள்ளேன். வழக்கு பதிவு செய்வதற்கு இன்றைய சட்டம் எனக்கு அனுமதி அளிப்பது இல்லை. எனக்கு ஒரு தீர்வு அளியுங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.



    சின்மயி பதிவுக்கு மத்திய மந்திரி மேனகா காந்தி அளித்த பதில் ட்விட்டில், “உங்களது புகாரை தேசிய மகளிர் ஆணையத்திடம் எடுத்துச் சென்றுள்ளேன். உங்களது விவரங்களை செய்தியில் அனுப்பவும்” என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சரின் ட்விட்டுக்குப் பதிலளித்த சின்மயி, “என்னைப் போலவே பல பெண்கள் தங்களது பாதுகாப்புக்காகவும், தொழிலுக்காகவும் பயப்படுகின்றனர். வைரமுத்து மட்டும் அல்லாமல் சினிமா துறையில் பல ஆண்களால் பெண்கள் அஞ்சுகின்றனர். எங்கள் அனைவருக்குமே தீர்வு வேண்டும். உங்களது பதில் ட்விட்டைப் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். #MeToo
    பாடகி சின்மயின் கணவரும், நடிகருமான ராகுலை, நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவு செய்திருக்கிறார். #Samantha #Chinmayi
    பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மீடூ இயக்கத்தை குறை கூறி இருந்தார். அதில் “நான் ஒரு பெண்ணியவாதி. ஆனால் மீ டூவை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது குப்பை” எனப் பேசியிருந்தார்.

    இது குறித்து சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தர், தனது சமூகவலைதள பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை பதிவிட்டார். அதில் தனது மனைவியின் துணிச்சலைப் பாராட்டியதோடு பாலியல் சீண்டல்கள் குறித்து தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் எனக் கூறி இருந்தார்.



    இந்நிலையில் இது குறித்து நடிகை சமந்தா ராகுலின் டுவிட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில், “நிறைய பெண்களைவிட உங்களுக்குச் சிறப்பான புரிதல் இருக்கிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
    டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி, ரூ.1.5 லட்சம் கட்டி, மன்னிப்பு கடிதம் கொடுத்தால் தான் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்படுவார் என்ற யூனியன் நிர்வாகிகளின் அழைப்பை சின்மயி நிராகரித்துள்ளார். #Chinmayi #DubbingUnion
    தமிழ் திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் சங்கம் டப்பிங் யூனியன். இதன் தலைவராக நடிகர் ராதாரவி பொறுப்பு வகித்து வருகிறார். பாடகியும், பின்னணி கலைஞருமான சின்மயி தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீத பணத்தை டப்பிங் யூனியன் பெற்றுக் கொள்கிறது என்று சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    சின்மயியின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ் திரைப்பட டப்பிங் யூனியனின் துணைத்தலைவர் வீரமணி, பொருளாளர் ராஜ்கிருஷ்ணா மற்றும் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

    ‘டப்பிங் கலைஞர்களிடமிருந்து 10 சதவீத சம்பள பணத்தை பெற்றுக் கொள்வது உண்மைதான். ஆனால் இதில் இன்சார்ஜ் என்று சொல்லக்கூடிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 சதவீதமும் மீதம்உள்ள 5 சதவீதம் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்குவதற்கும் செலவிடப்படுகிறது. 10 சதவீத பணத்தையும் முழுமையாக சங்க நிர்வாகமே வைத்துக் கொள்கிறது என்று சின்மயி கூறுவது கண்டனத்திற்குரியது.

    நடிகர் ராதாரவி இல்லை என்றால் இந்த சங்கம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று இருக்காது. டப்பிங் பேசினால் மட்டுமே பணம் என்று இருந்த நிலையில், டப்பிங் பேசினாலும், பேசவில்லை என்றாலும் ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்தாலே ஊதியம் வழங்க வேண்டும் என்ற நிலைமையை கொண்டு வந்தது ராதாரவி தான். ஆனால் சின்மயி, ராதாரவி பற்றி பேசுவது தவறானது.



    இந்த சங்கத்தில் இருந்த தேர்தல் அதிகாரிதான் 90 ரூபாய் சந்தா கட்டாததால் சின்மயியை நீக்கினார். ராதாரவி இல்லை.

    சின்மயி ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்து புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்த்து கொள்வோம்’ என்று விளக்கம் அளித்தனர்.

    இந்த செய்தியை மேற்கோள்காட்டி சின்மயி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் ‘தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கு பணிபுரிய வேண்டும் என்றால் மன்னிப்பு கடிதமும், ரூ.1.5 லட்சம் கொடுக்க வேண்டுமாம். 2006-ம் ஆண்டு முதல் என்னை வைத்து டப்பிங் யூனியன் நிறைய வருவாய் பார்த்தது.



    ஆனால் நான் இப்போது என் வேலை உரிமைக்காக ரூ.1.5 லட்சம் கட்ட வேண்டுமா? ஒன்று இரண்டு படங்களில் டப்பிங் பேசியவர்கள் கூட யூனியனில் ஆயுள் கால உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

    12 ஆண்டுகளாக யூனியனில் இருக்கும் நான் புதிய உறுப்பினராக சேர வேண்டுமா? டப்பிங் யூனியனிடமும், ராதாரவியிடமும் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறேன்.

    யூனியனில் உறுப்பினராக சங்க விதிப்படி 2,500 ரூபாய் கட்டினாலே போதும். அப்படி இருக்கையில் எனக்கு மட்டும் ஏன் ரூ.1.5 லட்சமும் மன்னிப்பு கடிதமும் என்று தெரியவில்லை’.

    இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். #Chinmayi #DubbingUnion #RadhaRavi

    மீடூவில் செக்ஸ் புகார் கூறியதால் என்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள் என்று பாடகி சின்மயி கூறியிருக்கிறார். #MeToo #Chinmayi
    பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறினார். இது கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் பரபரப்பான செய்தியானது. இதன் பின்னர் ராதாரவியுடன் மோதல் தொடங்கியது.

    ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்டது என்பதே பொய் என்று டுவிட்டரில் கடித ஆதாரத்துடன் கூறிய சின்மயி, மீண்டும் அது தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

    நேற்று முகநூலில் நேரடி வீடியோவில் பேசிய அவர், மீடூ பற்றி பல்வேறு வி‌ஷயங்களை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து தன்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்க ராதாரவி சதி செய்திருப்பதாகக் கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது:-

    “நான் 2016ல் இருந்தே டப்பிங் யூனியன் உறுப்பினர் இல்லை என்று சொல்லும் ராதாரவி, கடந்த 2 ஆண்டுகளில் 4 படங்களில் டப்பிங் பேச ஏன் ஒப்புக் கொண்டார்? டப்பிங் யூனியன் உறுப்பினர்களிடம் வசூலிக்கப்படும் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு, எதற்காக டத்தோ ராதாரவி வளாகம் எனப் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்?

    மீடூ புகார் எல்லாம் சொன்னால் இனி நீங்கள் நடிக்கவே வராதீர்கள். ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள் என ஏன் எச்சரிக்கிறார்?

    ராதாரவி டத்தோ பட்டத்தை பயன்படுத்திக் கொள்வதில் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், அதை அவருடைய லெட்டர் பேட், டப்பிங் வளாகக் கட்டிடம் என எல்லா வற்றிலும் பயன்படுத்திய தாலேயே நான் அதைப் பற்றி ஆராய்ந்தேன். அப்போது தான் மெலாகா அரசு டத்தோ பட்டம் தரவே இல்லை என்பது தெரிய வந்தது.

    பின்னர் இப்போது அதை சுல்தான் ஒருவர் வழங்கினார் என்றார். அது எந்த சுல்தான் அல்லது எந்த தொழிலதிபர் என்று சொல்லலாம் அல்லவா? ராதாரவி அவருக்கு அவரே பாரத ரத்னா, பத்மஸ்ரீ என என்ன விருது வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளட்டும். எனக்கு அதைப் பற்றி சிறிதும் கவலை இல்லை.

    ஆனால், டப்பிங் யூனியனில் விசாகா குழு இருக்கிறது என்று அவர் கூறினால், பணியிடம் என்று எதைக் குறிப்பிடுவார் என்று கேள்வி கேளுங்கள். மீடூ பிரச்சினை வந்தது முதல் ஆண்களிடம் கேள்வி கேட்பதற்கும், பெண்களிடம் கேள்வி கேட்பதற்கும் இடையே அவ்வளவு வித்தியாசம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

    பாலியல் வன்கொடுமைகளை மறைக்காதீர்கள். இதை மூடி மறைக்கக்கூடாது. வெட்கப்பட வேண்டியது பெண்களும் குழந்தைகளும் கிடையாது என்பதே மீடூவின் அடிநாதம். பெண்களுக்கு மட்டும் இது நிகழ்வதில்லை. ஆண் குழந்தைகளுக்கும் நிகழ்கிறது. என்னிடம் நிறைய ஆண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை சொல்லியிருக்கின்றனர். இது நம்மை நாமே கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய தருணம்.

    ஆனால், இன்றும்கூட பாதிக்கப்பட்டவர்களை விடுத்து பாதிப்புக்கு உள்ளாக்கியவர்களை பலப்படுத்தவே இந்த சமூகம் முற்படுகிறது. பெண்கள் சொல்லும் புகார் மீதான சமூகத்தின் அமைதி பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் பலமாக்கும். மீடூவில் நான் புகார் சொன்ன பிறகு. நிறைய பெண்கள் என்னை இந்த சமூக வலைதளங்கள் எப்படிப் பார்க்கிறது என்று உற்று நோக்கினார்கள்.

    என்னை அவ்வளவு வசைபாடுகிறார்கள். தமிழில் இருக்கும் எல்லா கெட்ட வார்த்தைகளை சொல்லித்தந்த தமிழ் ஆண்மகன்களுக்கும் நன்றி. நீ யோக்கியமா? நீ ஒழுக்கமா? நீ உத்தமியா என்று கேட்பார்கள். அப்புறம் என்னை பாலியல் தொழிலாளி என்பார்கள். ஒரு வி‌ஷயம் சொல்கிறேன். நீங்கள் என்னை பாலியல் தொழிலாளி எனக் கூறுவதால் நான் வெட்கித் தலை குனிய மாட்டேன்.

    இந்த உலகிலேயே ஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில். ஆண்களின் பல்வேறு பாலியல் தேவைக்காகவே இந்தத் தொழில் இருக்கிறது. ஒருவேளை அந்த தொழிலாளிகள் எல்லாம் திருந்திவந்தால் நீங்கள் சமூகத்தில் அவர்களுக்கு இடமா கொடுக்கப் போகிறீர்கள்? இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

    உங்கள் வீட்டு பெண்கள் பாலியல் புகார் சொன்னால், வேலைக்கு போகாதே படிக்கப் போகாதே என்று வீட்டுக்குள் பூட்டி வைக்காதீர்கள். தப்பு செய்தவர்களை திருத்துங்கள். பாதிக்கப்பட்டவரை கேவலப்படுத்தாதீர்கள், அசிங்கப்படுத்தாதீர்கள். பாலியல் வன்கொடுமைகள் ஏன் நடக்கிறது. எதற்கு நடக்கிறது என்று பேசுங்கள். குடும்பம், கல்வி நிறுவனம், பணியிடம் என எல்லா இடத்திலும் பேசுங்கள். ஆண்களும் நம்மை புரிந்து கொள்வார்கள். எதுவாக இருந்தாலும் பேசி முடிவு செய்யலாம். சமூகம் அதற்கான மாற்றம் கண்டு வருகிறது.

    திருமணத்துக்குப் பின் கணவன் மனைவியின் விருப்பம் இல்லாமல் உறவு கொண்டால் அது மேரிட்டல் ரேப் என்று பேசும் அளவுக்கு இப்போதெல்லாம் சமூக மாற்றம் வந்திருக்கிறது. இன்னும் மாற்றம் வர வேண்டுமானால் அதற்கு விவாதமும் ஆலோசனையும் செய்யப்பட வேண்டும். எனவே வெளிப்படையாக பேசுங்கள். இதில் நீங்கள் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. இன்று சமூகம் சில விமர்சனங்களை முன்வைத்தாலும்கூட விரைவில் மாற்றம் வரும்’

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
    ரெட்கார்டு போடுவேன் என்று டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி மிரட்டியதாக பாடகி சின்மயி புகார் கூறியுள்ளார். #Chinmayi #RadhaRavi
    கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்து வந்தார். பாலியல் புகார் கூறியதால் அவர் டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக இன்று சின்மயி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் மீ டூ தொடர்பாக குரல் கொடுக்கத் துவங்கியதால் தான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். யார் எதிராக பேசினாலும் உடனே டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி அவர்களை நீக்கிவிடுவார். இது பல முறை நடந்துள்ளது. நான் 2006-ம் ஆண்டில் இருந்து டப்பிங் பேசி வருகிறேன்.

    தேர்தல் பற்றி எனக்கு தெரிவித்ததே இல்லை. ஒரு கண்டன பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் முன்பணம் வாங்கிய இசை நிகழ்ச்சி ஒன்றை ரத்து செய்து முன்பணத்தை திருப்பி தர வைத்தார் ராதாரவி.

    பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் ரெட்கார்டு கொடுப்பேன் என்று மிரட்டினார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் போராட்டம் நடத்தியபோது வருகைப்பதிவேடு வைத்திருந்தனர்.

    அவர் அழைக்கும் போராட்டங்களுக்கு வராதவர்களுக்கு வேலை கிடையாது. இல்லை என்றால் அபிபுல்லா சாலையில் இருந்த டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு வரவழைத்து கண்டபடி திட்டுவார். ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் கேவலமாக திட்டுவார்.

    நான் ஒரு முறை அப்படி திட்டு வாங்கியபோது என் அம்மாவும் உடன் இருந்தார். சுசித்ராவும் திட்டு வாங்கியுள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதால் நானும், சுசித்ராவும் திட்டு வாங்கினோம். ஆனால் கூட்டம் நடப்பது குறித்து யாருமே எங்களிடம் தெரிவிக்கவில்லை.

    ஒட்டப்பாலத்தில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தார் ராதாரவி. நான் ராதாரவிக்கு போன் செய்து நிகழ்ச்சியை ஒப்புக் கொண்டது பற்றி தெரிவித்தது எனக்கு நினைவில் உள்ளது.

    அதற்கு அவரோ, எனக்கும் ஷூட்டிங் இருக்கு. நான் கேன்சல் பண்ணிட்டு வரல? நீ வரவில்லை என்றால் ரெட்கார்டு கொடுப்போம் என்றார். டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். அதற்கு உதாரணம் பூமாராவ் என்ற பெண்’

    இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.
    டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். #Chinmayi
    தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருபவர் பாடகி சின்மயி. இவர் பல படங்களுக்கு பின்னணி வசனங்களையும் பேசியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பின்னணி வசனம் பேசினார்.

    இவர் மீடூ விவகாரத்தில் கடந்த அக்டோபரில், கவிஞர் வைரமுத்து தனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு பாடகி சின்மயி ஆதரவாக பேசினார். இதனால் தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.



    கடந்த 2 ஆண்டுகளாக சந்தா தொகை செலுத்தவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி எனக்கு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியுள்ள நிலையில், 96 தனது கடைசி படம் ஆக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகாருக்கு பதிலளித்துள்ள அவரது மகன் கபிலன் வைரமுத்து, வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது என தெரிவித்துள்ளார். #Vairamuthu #MeToo #Chinmayi
    சென்னை:

    இந்தியா முழுவதும் மீடூ இயக்கம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. பணியிடங்களில் குறிப்பாக சினிமா துறையில் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியான தொல்லைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார்.



    இந்த பதிவு சினிமா துறையையே உலுக்கியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து, வைரமுத்துவின் பெருமைகளை அழுக்குப்படுத்த நினைப்பவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்கள் என தெரிவித்துள்ளார்.

    மேலும், வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக வந்தால் எதிர்கொள்ள தயார் எனவும், வைரமுத்துவின் எழுத்துக்களை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது மற்றும் பாடம் நிறைந்தது என குறிப்பிட்டுள்ளார். #Vairamuthu #MeToo #Chinmayi
    சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார். #BJP #HRaja #Vairamuthu
    மதுரை:

    மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச்செயலாளர் எச்.ராஜா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளாவில் இடதுசாரி அரசும், மக்கள் விரோத சக்தியும் இந்துத்துவ விரோத சக்திகளும் ஒருங்கிணைந்து சபரிமலை புனிதத்தை கெடுத்து விட வேண்டும் என கங்கணம் கட்டி செயல்படுகின்றன.

    இது 6 மாதத்திற்கு முன்பு கேரளாவில் இரு பிரிவினர் ஒரு தேவாலயத்திற்கு உரிமை கொண்டாடினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் தரப்பினர் பேரணி போராட்டம் நடத்தினர். உடனே பினராயி விஜயன் அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தினால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். எனவே கால அவகாசம் வேண்டுமென கோரியது.


    இதே நடைமுறையை சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு ஏன் பின்பற்றவில்லை? இந்துக்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றாமல் ஆபாசமான புகைப்படங்களை பதிவிட்ட ரெஹனா பாத்திமா என்பவர் கமாண்டோ உடையணிந்து சபரிமலை வரை சென்றுள்ளார். இது கேரள முதல்வரின் கீழ்த்தரமான செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    கேரள அரசை கண்டித்து வருகிற 30-ந்தேதி பா.ஜ.க. சார்பில் அய்யப்பன் நாமசங்கீர்த்த யாத்திரை நடக்கிறது. சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தாய் ஆண்டாளை பழித்த வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக தூங்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja #Vairamuthu #Chinmayi
    சின்மயிக்காக குரல் கொடுப்பவர் ஸ்ரீரெட்டிக்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று நடிகர் சித்தார்த்துக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். #Seeman #Siddharth
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘மீ டூ’ இயக்கத்தின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த், டுவிட்டரில் பதில் அளித்தார்.

    அதில் “மீ டூ இயக்கத்தின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக சீமான் கூறுகிறார். இது ஒரு கேலிக்கூத்து என்றும் விமர்சிக்கிறார். வெறுப்பாளர்களும், சின்ன மனதுக்காரர்களும் அரசியலில் எல்லா பக்கத்திலும் இருக்கிறார்கள் எனக்கு இப்போது புரிகிறது. சீமானின் கருத்தை கடுமையாக கண்டிக்கிறேன். அவரது கருத்து மரியாதைக் குறைவானது. போலித்தனமானது. கூடவே பெண் வெறுப்புத்தன்மையுடையது என்று கூறினார்.

    சித்தார்த்தின் கண்டனத்துக்கு சீமான் பதிலளித்துள்ளார். ‘‘இன்று சின்மயிக்காக குரல் கொடுப்பவர் ஸ்ரீரெட்டிக்காகவும் குரல் கொடுக்க வேண்டுமல்லவா? காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது உங்கள் குரல்வளை எங்கிருந்தது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., மீது தனது மகளை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்த தந்தை கொல்லப்பட்டார். அப்போது ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை. எல்லா கற்களும், அம்புகளும் வைரமுத்துவை நோக்கியே திரும்புவது ஏன்?” என கேட்டுள்ளார். #Seeman #Siddharth
    ×