search icon
என் மலர்tooltip icon

  சினிமா

  நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
  X

  நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்

  நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய நடிகர் ராதாரவிக்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி உள்ளிட்ட பலரும் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர். #KolaiyuthirKaalam #Nayanthara
  ராதாரவியின் பேச்சு தொடர்பாக எழுந்த கண்டனங்கள்:-

  நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  ‘சமீபத்துல நீங்கள் பெண்களுக்கு எதிராக கீழ்த்தரமான முறையில் பேசியதை வன்மையாகக் கண்டித்து, நடிகர் சங்கக் கடிதத்தில் கையெழுத்து போடுறதுல நடிகர் சங்க பொதுச் செயலாளராக மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கடிதம் விரைவிலேயே வந்து சேரும். இப்போதிலிருந்து உங்கள் பெயரை ‘ரவி’ன்னு வச்சிக்கோங்க. காரணம், உங்கள் பெயரில் ஒரு பெண்ணின் பெயரும் இருக்கிறது”.


  ராதாரவியின் சகோதரியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

  ‘இன்று நம் துறையில் இருக்கும் அர்ப்பணிப்பான ஒரு சில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அவரை எனக்குத் தெரியும். அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். வீடியோவை முழுதாகப் பார்க்கவில்லை. ஆனால் ராதாரவியை இன்று சந்தித்தேன். அவர் பேசியது முற்றிலும் தவறு என்று சொன்னேன்’’.


  ராதாரவியின் பேச்சு குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

  ‘பெண்களை அசிங்கப்படுத்துவது, பெண்களைப் பற்றி ஆபாசமான நகைச்சுவை பேசுவது பெண்களை இழிவுபடுத்துவது, பெண்களை காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவது எல்லாம் இந்த திரைத்துறையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

  மீ டூ குறித்த சர்ச்சை வரும்போது, துறையில் இருக்கும் பெண்கள் என்னைப்போல, சின்மயியைப் போல எண்ணற்ற பெண்களுக்கு ஆதரவாக நின்றிருந்தால் வி‌ஷயங்கள் ஒருவேளை மாறியிருக்கலாம். அமைதி நமக்கு எந்தத் தீர்வையும் தராது. நேரம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு பெண்ணும் துணிந்து நிற்க வேண்டும்.


  திரைப்பட சங்கங்கள் என்று சொல்லிக் கொள்பவை எல்லாமே சில ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படுபவை. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். பெண்களை ஆதரிப்பது போல நடிப்பார்கள். ஆனால் நிஜத்தில் இவர்கள் ஏதோ ஒரு வகையில், திரையிலோ, வாழ்க்கையிலோ பெண்கள் இழிவுபடுத்தப்படும் சூழ்நிலைக்கு பங்காற்றியிருப்பார்கள்.

  கவர்ச்சியான உடைகள் அணிவதன் மூலம் எங்களை நாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறோம் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன், அது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். ஒரு பெண்ணின் குணத்தை அவளது உடையை வைத்து நீங்கள் முடிவு செய்யக் கூடாது.

  ஒரு ஆண் என்ன செய்தாலும், அது எவ்வளவு மோசமான, தவறான, நெறிமுறையற்ற செயலாக இருந்தாலும், அந்த ஆணுக்கு எத்தனை துணைகள் இருந்தாலும் அதை வைத்து நீங்கள் அவரது குணத்தை மதிப்பிட மாட்டீர்கள் என்றால் பெண்களைப் பற்றி மதிப்பிடவும் யாருக்கும் உரிமை இல்லை. உங்கள் சகோதரி என்ன உடை அணிந்திருந்தாலும் உங்களுக்கு அவரை பலாத்காரம் செய்யத் தோணாது இல்லையா. அதே போல மற்ற பெண்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்’.

  இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  ‘தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் என் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒதுங்கியிருந்தனர். காரணம் அவர்கள் வேறு யூனியன் வி‌ஷயத்தில் தலையிட முடியாது என்பதால். ஆனால், இந்த முறை அந்த நபர் மிகவும் வெற்றிகரமாக தன்னை நிரூபித்த நடிகையையல்லவா மேடையில் சீண்டியுள்ளார். இப்போதாவது நடவடிக்கை எடுங்கள். முடிந்தால் எடுங்கள். அப்படி எடுத்தால் ரொம்ப நன்றி.

  இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.


  ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ், ராதாரவியை இனிமேல் தன் படத்திற்கு ஒப்பந்தம் செய்ய மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

  ‘கொலையுதிர் காலம்‘ படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

  ‘மேடையில் அனைவருமே இருந்தார்கள். ராதாரவி சார் சீனியர் நடிகர். அவர் அந்த இடத்தில் அப்படி பேசியிருக்கக் கூடாது. எனக்கே அதில் உடன்பாடில்லை.

  இவ்வாறு மதியழகன் தெரிவித்துள்ளார். #KolaiyuthirKaalam #Nayanthara #RadhaRavi

  Next Story
  ×