search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    டப்பிங் யூனியன் நிர்வாகிகளின் அழைப்பை நிராகரித்த சின்மயி - மன்னிப்பு கேட்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு
    X

    டப்பிங் யூனியன் நிர்வாகிகளின் அழைப்பை நிராகரித்த சின்மயி - மன்னிப்பு கேட்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு

    டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி, ரூ.1.5 லட்சம் கட்டி, மன்னிப்பு கடிதம் கொடுத்தால் தான் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்படுவார் என்ற யூனியன் நிர்வாகிகளின் அழைப்பை சின்மயி நிராகரித்துள்ளார். #Chinmayi #DubbingUnion
    தமிழ் திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் சங்கம் டப்பிங் யூனியன். இதன் தலைவராக நடிகர் ராதாரவி பொறுப்பு வகித்து வருகிறார். பாடகியும், பின்னணி கலைஞருமான சின்மயி தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீத பணத்தை டப்பிங் யூனியன் பெற்றுக் கொள்கிறது என்று சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    சின்மயியின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ் திரைப்பட டப்பிங் யூனியனின் துணைத்தலைவர் வீரமணி, பொருளாளர் ராஜ்கிருஷ்ணா மற்றும் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

    ‘டப்பிங் கலைஞர்களிடமிருந்து 10 சதவீத சம்பள பணத்தை பெற்றுக் கொள்வது உண்மைதான். ஆனால் இதில் இன்சார்ஜ் என்று சொல்லக்கூடிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 சதவீதமும் மீதம்உள்ள 5 சதவீதம் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்குவதற்கும் செலவிடப்படுகிறது. 10 சதவீத பணத்தையும் முழுமையாக சங்க நிர்வாகமே வைத்துக் கொள்கிறது என்று சின்மயி கூறுவது கண்டனத்திற்குரியது.

    நடிகர் ராதாரவி இல்லை என்றால் இந்த சங்கம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று இருக்காது. டப்பிங் பேசினால் மட்டுமே பணம் என்று இருந்த நிலையில், டப்பிங் பேசினாலும், பேசவில்லை என்றாலும் ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்தாலே ஊதியம் வழங்க வேண்டும் என்ற நிலைமையை கொண்டு வந்தது ராதாரவி தான். ஆனால் சின்மயி, ராதாரவி பற்றி பேசுவது தவறானது.



    இந்த சங்கத்தில் இருந்த தேர்தல் அதிகாரிதான் 90 ரூபாய் சந்தா கட்டாததால் சின்மயியை நீக்கினார். ராதாரவி இல்லை.

    சின்மயி ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்து புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்த்து கொள்வோம்’ என்று விளக்கம் அளித்தனர்.

    இந்த செய்தியை மேற்கோள்காட்டி சின்மயி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் ‘தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கு பணிபுரிய வேண்டும் என்றால் மன்னிப்பு கடிதமும், ரூ.1.5 லட்சம் கொடுக்க வேண்டுமாம். 2006-ம் ஆண்டு முதல் என்னை வைத்து டப்பிங் யூனியன் நிறைய வருவாய் பார்த்தது.



    ஆனால் நான் இப்போது என் வேலை உரிமைக்காக ரூ.1.5 லட்சம் கட்ட வேண்டுமா? ஒன்று இரண்டு படங்களில் டப்பிங் பேசியவர்கள் கூட யூனியனில் ஆயுள் கால உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

    12 ஆண்டுகளாக யூனியனில் இருக்கும் நான் புதிய உறுப்பினராக சேர வேண்டுமா? டப்பிங் யூனியனிடமும், ராதாரவியிடமும் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறேன்.

    யூனியனில் உறுப்பினராக சங்க விதிப்படி 2,500 ரூபாய் கட்டினாலே போதும். அப்படி இருக்கையில் எனக்கு மட்டும் ஏன் ரூ.1.5 லட்சமும் மன்னிப்பு கடிதமும் என்று தெரியவில்லை’.

    இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். #Chinmayi #DubbingUnion #RadhaRavi

    Next Story
    ×