search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrashekar Rao"

    • காங்கிரஸ் கட்சி நன்றியற்ற கட்சியாக மாறி உள்ளது.
    • எம்.எல்.சி.கவிதா காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் உள்ள போர்கான் எக்ஸ்' சாலையில், பிராமண சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் சிலையை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.எல்.சி யுமான கவிதா திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகளும் எம்.எல்.சி.யுமான சுரபி வாணி, பி.வி.பிரபாகர் ராவ், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கவிதா பேசியதாவது:-

    முன்னாள் பி.வி. நரசிம்மராவின் தலைமைப் பண்புகளையும், தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளையும் மறக்கமுடியாது.

    நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களை உருவாக்கியவர் பி.வி.நரசிம்மராவ். அவரை கவுரவிக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.

    காங்கிரஸ் கட்சி நன்றியற்ற கட்சியாக மாறி உள்ளது. காங்கிரஸ் கட்சி பி.வி. நரசிம்மராவை முற்றிலுமாக மறந்து அவர் கட்சிக்கு ஆற்றிய பங்களிப்பைப் புறக்கணித்துள்ளது.

    தெலுங்கான முதலமைச்சர் கே.சி. சந்திரசேகர ராவ் அவரது பங்களிப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், நரசிம்மாராவ் பிறந்த நாள் நூற்றாண்டை உலகம் முழுவதும் பெரிய அளவில் கொண்டாடினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எம்.எல்.சி.கவிதா காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது.
    • பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது.

    கம்மம் :

    தெலுங்கானாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கம்மம் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது மாநிலத்தை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி அரசையும், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவையும் கடுமையாக சாடினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    'பாரதிய ராஷ்டிர சமிதி' என்பது, 'பா.ஜனதா உறவினர் சமிதி' போலத்தான். சந்திரசேகர் ராவ், தன்னை ஒரு பேரரசராகவும், தெலுங்கானாவை தனது பேரரசாகவும் நினைத்துக்கொள்கிறார்.

    பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எப்போதும் பா.ஜனதாவுக்கு எதிராகத்தான் நின்று இருக்கிறது. ஆனால் சந்திரசேகர் ராவின் கட்சி, பா.ஜனதாவின் பி டீமாகத்தான் உள்ளது.

    சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்களை பா.ஜனதாவுக்கு அடிபணியச் செய்துள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது.

    சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது. இதை பிற எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கூறிவிட்டேன்.

    காங்கிரஸ் கட்சி சமீபத்தில் கர்நாடகத்தில் ஒரு ஊழல் மற்றும் ஏழை விரோத அரசுக்கு எதிராக வெற்றி பெற்றது. ஏழைகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவுடன் நாங்கள் அவர்களை தோற்கடித்தோம்.

    இது தெலுங்கானாவிலும் நடைபெறும். மாநிலத்தின் பெரும் பணக்காரர்கள், அதிகாரம் மிக்கவர்கள் ஒருபுறம் இருக்கின்றனர். மறுபுறம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் எங்களுடன் இருக்கின்றனர். கர்நாடகாவில் நடந்தது இங்கேயும் நடக்கும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    • தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • சந்திரசேகர் ராவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.

    புதுடெல்லி :

    தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தொடங்கிய கட்சி, பின்னர் பாரத ராஷ்டிர சமிதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேர் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேரும், தாங்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், தெலுங்கானா கம்மத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுவோம். அதில் அனேகமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்வார் என்று தெரிவித்தனர்.

    காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகளில் கம்மம் மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டியும், ஆந்திரா, தெலுங்கானா முன்னாள் மந்திரி ஜூபள்ளி கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.

    தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தை சுமார் 10 ஆண்டுகளாக ஆண்டுவரும் சந்திரசேகர் ராவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியில் இருந்து 35 நிர்வாகிகள் காங்கிரசுக்கு இடம்பெயர்ந்திருப்பது அக்கட்சிக்கு ஒரு புத்துணர்வை அளித்திருக்கிறது.

    • டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது.
    • மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    ஐதராபாத்:

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஆகியோர் முதல் மந்திரி சந்திரசேகர் ராவை இன்று சந்தித்தனர். அவசர சட்ட எதிர்ப்புக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சந்திரசேகர் கூறியதாவது:

    இந்த அவசரச் சட்டத்தை நீங்களே திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் நாங்கள் அனைவரும் கெஜ்ரிவாலை ஆதரிப்போம் என பிரதமரிடம் கோருகிறோம். அவருக்கு துணை நிற்போம்.

    மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எங்களின் முழு பலத்தையும் பயன்படுத்தி அவசரச் சட்டத்தை முறியடிப்போம். தேவையின்றி பிரச்சனை செய்யாதீர்கள் என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்களுக்கு நீதி வழங்க, கேசிஆர் கட்சி மற்றும் அவரது அரசு எங்களுடன் உள்ளது. இது டெல்லி மட்டுமல்ல, தேசத்தின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது. கே.சி.ஆர் ஆதரவு எங்களுக்கு பலத்தை அளித்துள்ளது என கூறினார்.

    • தெலுங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்தது
    • தெலுங்கானா மாநிலத்தின் 10-ம் ஆண்டு உதய தினத்தை 21 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி உருவாக்கப்பட்டது. அடுத்த மாதம் 1-ந் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

    ஜூன் 2-ந் தேதி 10-ம் ஆண்டு பிறக்கிறது. இதை பிரமாண்டமாக கொண்டாட தெலுங்கானா அரசு முடிவு செய்தது.

    இந்நிலையில், தெலுங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தின் 10-ம் ஆண்டு உதய தினத்தை 21 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தின் அடிப்படையில் விழா கொண்டாடப்படும். ஜூன் 2-ந் தேதி ஐதராபாத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து, தெலுங்கானா மாநிலம் உருவாக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு முதல்-அமைச்சர் சந்திரசேகரராவ் அஞ்சலி செலுத்தி விழாவை தொடங்கி வைக்கிறார்.

    21 நாள் கொண்டாட்டத்துக்கு ரூ.105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.767 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
    • வங்கி வட்டியாக மாதம் ரூ.7 கோடி கிடைக்கிறது.

    ஐதராபாத் :

    தெலுங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்தக் கட்சியின் நிறுவன நாள் விழா, ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகரராவ் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நமது கட்சியிடம் ரூ.1,250 கோடி நிதி சேர்ந்துள்ளது. இதில் ரூ.767 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கட்சியை நடத்துவதற்கும், மாவட்டங்களில் கட்சி அலுவலகங்கள் கட்டுவதற்கும், பிரசாரம் செய்வதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதற்கும் கட்சி நிதி செலவிடப்பட்டுள்ளது. வங்கியில் டெபாசிட் செய்துள்ள பணத்துக்காக மாதம் ரூ.7 கோடி வட்டி கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழாவில், கட்சியின் நிதி நிர்வாகம் பற்றியும், நிதி விவகாரத்தை கட்சித்தலைவர் கவனிப்பது குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் தலைநகரான டெல்லியில், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் அலுவலகம் அடுத்த மாதம் 4-ந் தேதி திறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாரத ராஷ்டிர சமிதி கட்சியை நாட்டு மக்களிடம் பெருமளவில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக டி.வி. சேனல்களில் விளம்பரங்கள் செய்யவும், திரைப்படம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கட்சி சார்பில் ஒரு டி.வி. சானல் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் தெலுங்கானா வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம் முதல்வரின் செயல்பாடுதான் என்று விளாசினார்.
    • சந்திரசேகரராவுக்கு தி.மு.க. மீது லேசாகவாது சந்தேக கோடு விழ வைக்கலாம்.

    அரசியல்வாதிகள் என்றாலே அதிரடி, பல்டி, அந்தர்பல்டி... என்று களத்தில் எந்த பக்கம் நின்றாலும் எப்படியும் அடித்து ஆடக்கூடியவர்கள்.

    அப்படி இருக்கும் போது ஒட்டுமொத்தமாக இந்திய அரசியல் களத்தில் விளையாடும் மோடியின் அரசியல் கில்லாடித் தனத்தை சாதாரணமாக எடைபோட்டு விட முடியுமா...?

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தெலுங்கானா மற்றும் தமிழ் நாட்டில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பிரதமர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் அந்த அந்த மாநில முதலமைச்சர் கலந்துகொள்வது மரபு. ஆனால் தெலுங்கானாவில் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அந்த மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை.

    இதை பிரதமர் மோடி தனக்கே உரிய பாணியில் வெளுத்து வாங்கினார். அதாவது அரசு வேறு அரசியல் வேறு. இப்படி ஒரு முதல்வர் அரசு திட்டங்களையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் எப்படி மாநிலம் வளரும்.

    மத்திய அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் தெலுங்கானா வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம் முதல்வரின் செயல்பாடுதான் என்று விளாசினார். அங்கிருந்து சென்னைக்கு வந்த மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார். வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்க செல்லும் இடத்துக்கு செல்ல 2 பேட்டரி கார்கள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன.

    அதில் ஒரு காரில் முதல்வர், கவர்னர், அமைச்சர்கள் ஏறியிருந்தனர். ஒரு கார் மோடி ஏறுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் மோடியோ தனது காருக்கு வரும்படி மு.க.ஸ்டாலினையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். கொடி அசைத்தபோதும் மு.க.ஸ்டாலினை தன் அருகில் நிற்க வைத்து கொண்டார்.

    இதன்மூலம் அரசியலில் இருவரும் மோடியின் எதிரிகளாக இருந்தாலும் சந்திரசேகரராவை விட மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காக பாடுபடுகிறார் என்று உணர வைத்து மக்கள் மத்தியில் சந்திரசேகரராவின் செல்வாக்கை சாய்ப்பதற்கான யுக்தி ஒன்று.

    இன்னொரு விதத்தில் பார்த்தால் சந்திரசேகர ராவ் அமைக்கும் கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினும் செல்வார் என்று எதிர் பார்க்கும் நிலையில் தன்னுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்டால் சந்திரசேகரராவுக்கு தி.மு.க. மீது லேசாகவாது சந்தேக கோடு விழ வைக்கலாம்.

    மூன்றாவதாக என்ன தான் தி.மு.க. மோடியை வசை பாடினாலும் அவரது பெருந்தன்மையை பார் என்று தமிழக மக்கள் யோசிப்பார்கள். அதன் மூலம் மோடியின் இமேஜ் வளரவும் வாய்ப்பு உண்டு.

    அதாவது ஒரே கல்லில் இரண்டுக்கும் மேற்பட்ட மாங்காய்களை மோடி வீழ்த்தி இருக்கிறார். அரசியலில் மோடி கில்லாடி தான்.

    • விளக்கேற்ற ஒரு தீப்பொறி போதும்.
    • எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம்.

    ஐதராபாத் :

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட அம்பேத்கர் சிலையை முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மத்தியில் பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சி அமைக்கும் என கூறினார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பாரதிய ராஷ்டிர சமிதி மராட்டியத்தில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றது. மேற்கு வங்காளம், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திலும் இதைப்போன்ற ஆதரவை எதிர்பார்க்கிறது. நான் சில விஷயங்களைச் சொல்கிறேன். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அடுத்த அரசு நம்முடையது.

    இதை நம் எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம். ஆனால் விளக்கேற்ற ஒரு தீப்பொறி போதும்' என்று கூறினார். மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தலித் பந்து திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் சந்திரசேகர் ராவ் கூறினார்.

    இந்த திட்டத்தின் கீழ், தலித் குடும்பத்தினருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரைப்பை பிரச்சனையால் அவதிப்பட்ட அவரை குடும்பத்தினர் ஏஐஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • வயிற்று வலி மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

    இரைப்பை பிரச்சனையால் அவதிப்பட்ட அவரை, அவரது குடும்பத்தினர் ஐதராபாத், கச்சிபவுலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

    அவருக்கு வயிற்று வலி மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சந்திரசேகரராவ் மருத்துவமனைக்கு வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    சந்திரசேகரராவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் நாகேஸ்வரரெட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    காலையில் வயிற்றில் அசவுகரியமாக இருப்பதாக சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

    அவருக்கு சி.டி., எண்டோஸ்கோபி பரிசோதனைகள் செய்யப்பட்டது. அவருக்கு அல்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அல்சர் பிரச்சினையில் இருந்து சந்திரசேகரராவ் விரைவில் குணமடைவார். மற்ற அனைத்து வகையான சோதனைகளும் இயல்பானவை. அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே, இரவு 7.15 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சந்திரசேகர ராவ் பிரகதி பவன் சென்றார். 

    • இந்தியாவில் ஆப்கானிஸ்தானாக தெலுங்கானா மாநிலம் மாறி வருகிறது.
    • தலிபானாக முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உள்ளார் என ஆந்திர முதல் மந்திரி சகோதரி கூறியுள்ளார்.

    ஐதராபாத்:

    ஆந்திர முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெகன்மோகனின் ரெட்டி. இவரது சகோதரி ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், தெலுங்கானாவில் மெஹபூபாபாத் நகரில் ஷர்மிளா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சந்திரசேகர ராவ் சர்வாதிகாரி, கொடுங்கோலனாக உள்ளார். இங்கு இந்திய அரசியல் சாசனம் அமலில் இல்லை. சந்திரசேகர ராவின் சாசனம் தான் உள்ளது. இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தெலுங்கானா உள்ளது. அதன் தலிபானாக சந்திரசேகர ராவ் உள்ளார் என தெரிவித்தார்.

    இதையடுத்து, ஷர்மிளாவைக் கண்டித்து சந்திரசேகர ராவ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது கொடும்பாவியை எரித்ததுடன் மாநிலத்தை விட்டு வெளியேறு என கோஷம் போட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும்.
    • சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.

    திருப்பதி:

    தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், ஜெகன் மோகன் ரெட்டி தங்கையுமான ஷர்மிளா தனது தாயுடன் சேர்ந்து தெலுங்கானா முழுவதும் பாதயாத்திரை நடத்தி வந்தார்.

    அப்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பாதயாத்திரை சென்ற ஷர்மிளா மீது முதலமைச்சர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக கூறி அவரது பிரச்சார வாகனத்தின் மீது கற்களை வீசினர்.

    பின்னர் பிரசார வாகனத்திற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை அனுப்ப உள்ளதாக ஐதராபாத்தில் நிருபர்களிடம் ஷர்மிளா கூறினார்.

    தனது ஆட்சி அற்புதமாக இருப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறி வருகிறார். தெலுங்கானாவில் எந்த பிரச்னையும் இல்லை என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்.

    இது உண்மை இல்லை என்றால் சந்திரசேகர ராவ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

    சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும். சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.

    ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சந்திரசேகர ராவுக்கு தைரியமும், ஆட்சியில் நம்பிக்கையும் இருந்தால் ஒரு நாள் பாத யாத்திரைக்கு என்னுடன் வர வேண்டும்.

    இதற்காக தான் ஒரு ஜோடி ஷூக்களை முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறேன். ஷூ சைஸ் சரியாக இல்லாவிட்டால் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள பில் கூட அனுப்புகிறேன்.

    தொப்பி அணிந்து கொண்டு தனி விமானத்தில் சுற்றி வராமல் தங்களது கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் குறைகள் இன்றி வாழ்ந்தனர்.

    பொதுமக்கள் முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவித்தனர். ஆனால் தற்போது முதலமைச்சரை பொதுமக்கள் யாரும் சந்திக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவகவுடாவை, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். பின்னர் அவர் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி அமைப்பது குறித்த சூசக தகவலை வெளியிட்டார்.
    பெங்களூரு

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அங்கு சந்திரசேகர ராவுக்கு மதிய உணவு பரிமாற்றப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முடிந்து சந்திரசேகர ராவ் விமானம் மூலம் ஐதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். அவர் புறப்படும் முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்தேன். நாட்டின் தற்போதையை நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 2, 3 மாதங்களுக்கு பிறகு நீங்கள் பரபரப்பான செய்தியை பார்க்க போகிறீர்கள்.

    கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு பெங்களூரு வந்திருந்தேன். குமாரசாமி முதல்-மந்திரி ஆவார் என்று கூறினேன். அது உண்மையானது. அரசியலில் தேசிய அளவில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. நாட்டில் போதுமான வளங்கள் உள்ளன. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் குடிநீர், மின்சார பிரச்சினை ஏற்படுகிறது. இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த நாடுகள் நம்மை விட முன்னேறி இருக்கின்றன. இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாடு வளர்ச்சியில் ஒளிரும். இந்த நோக்கத்தில் நாட்டை கட்டமைப்பதில் ஒவ்வொரு கட்சியும் கைகோர்க்க வேண்டும். ஒளிமயமான இந்தியாவை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    நாடு மோசமான நிலையை நோக்கி செல்வதால், நாம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். விவசாயிகள், ஆதிதிராவிடர்கள் என யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை. வெறும் வாக்குறுதிகள் மட்டும் கொடுக்கிறார்கள். தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சி சரிவை சந்தித்து வருகிறது. பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது. பண மதிப்பு முழுமையாக சரிந்து வருகிறது. வரலாற்றில் பண மதிப்பு இவ்வாறு வீழ்ந்தது எப்போதும் நடக்கவில்லை.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.

    சந்திரசேகரராவ், தேவேகவுடாவுடன் சந்தித்து இருப்பதன் மூலம் தேசிய அளவில் மெகா கூட்டணி அமையும் என்று கூறப்படுகிறது. இதை அவரும் சூசகமாக தெரிவித்துள்ளார்.

    குமாரசாமி கூறும்போது, 'அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சந்திரசேகர ராவ் தேவேகவுடாவுடன் விவாதித்தார். 2, 3 மாதங்களில் நல்ல செய்தி கிடைக்கும். மாநில கட்சிகள் வளர்ந்து வருகின்றன. பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து நாட்டின் நலனுக்காக ஓரணியில் திரள வேண்டும். காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது.

    சந்திரசேகர ராவ் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல பலனை வழங்கும்' என்றார். இந்த சந்திப்பு குறித்து தேவேகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் என்னை நேரில் சந்தித்து பேசினார். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் கருத்துகளை பரிமாறி கொண்டோம். இந்த சந்திப்பு உண்மையாகவும், மனப்பூர்வமாகவும் அமைந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
    ×