search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case Field"

    • குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் மேட்டூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    இந்த நிலையில் இவரது மருமகள் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி வீரக்காரன் கோவில் பகுதியை சேர்ந்த மனோலியா (24) என்பவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    அதில் தன்னை தனது கணவர் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.

    அதன்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் எம்.எல்.ஏ. சதாசிவம், அவரது மகன் உள்ளிட்ட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தானத்திற்கும், பயணி ராமுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சிகிச்சை அளித்த டாக்டர்கள் கை விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

    திருவான்மியூர்:

    வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் ராமு. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணி முடிந்து திருவான்மியூர் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றார். டிரைவராக சந்தானம் இருந்தார். ஆட்டோ சென்று கொண்டு இருந்தபோது டிரைவர் இருக்கையின் பின்புறம் உள்ள கம்பியில் ராமு தனது காலை வைத்ததாக தெரிகிறது. இதற்கு டிரைவர் சந்தானம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சந்தானத்திற்கும், பயணி ராமுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த டிரைவர் சந்தானம் ஆட்டோவில் இருந்த கம்பியால் ராமுவை தாக்கினார். மேலும் ராமுவின் கை சுண்டு விரலை துண்டாக கடித்து துப்பினார். இதில் ரத்தம் வடிந்த நிலையில் துடித்த ராமுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கை விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சந்தானத்தை கைது செய்தனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • நிலப்பத்திரம் காணவில்லை என்று சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அரங்கனூர் பகு தியை சேர்ந்தவர் பிரபு. இவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் அரங்கனூரில் உள்ளது.

    இந்த நிலப் பத்திரங்களை வங்கியில் வைத்து கடன் வாங்க முடிவு செய்தார். இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மேச்சேரியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பத்திரங்களை நகல் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது அவர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்குள்ள கடையில் பூ மாலை வாங்கிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தார். அப்போது நிலப்பத்திரங்கள் வைத்திருந்த பையை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு இது பற்றி மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் சண்முகம் நிலப்பத்திரம் காணவில்லை என்று சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரபு இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தனது நிலப்பத்திரம் காணவில்லை என்று மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் புகார் கொடுத்தேன். ஆனால் ஒரு ஆண்டாக பத்திரம் காணவில்லை என்பதற்கு சான்றிதழ் தராமல் பல்வேறு காரணங்களை தெரிவித்து இழுத்தடித்து வந்தார். நீதிமன்ற உத்தரவு வாங்கி வரவேண்டும் என தெரிவித்தார். நானும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வாங்கி வந்து கொடுத்தேன். ஆனாலும் காணாமல் போன பத்திரம் தொடர்பாக சான்றிதழ் வழங்க வேண்டுமானால் ரூ.25 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என தெரிவித்தார். இதற்கு உடந்தையாக இன்ஸ்பெக்டரின் டிரைவர் போலீஸ்காரர் மனோஜ் விஜயன் இருந்தார். அவரும் பணம் கேட்டு வந்தார். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ்காரர் மனோஜ் விஜயன் ஆகியோர் காணாமல் போன பத்திரத்திற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டது தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகம், டிரைவர் மனோஜ் விஜயன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது நிறுவனம் சார்பில் தேசியக்கொடி ஆர்டர் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
    • புகாரின் பேரில் திங்களூர் போலீசார் அய்யப்பன் மற்றும் கவிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் பீளமேடு எல்லை தோட்டம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மனைவி சித்ரா. சித்ரா ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது நிறுவனம் சார்பில் தேசியக்கொடி ஆர்டர் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்த பாதி பாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (48) என்பவர் சித்ராவை சந்தித்து தான் திங்களூரில் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும் தான் தேசியக்கொடி ஆர்டர் எடுத்து வருவதாகவும் கூறி அவரிடம் தேசிய கொடியை காண்பித்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சித்ரா அவரிடம் தேசிய கொடி ஆர்டர் கொடுத்துள்ளார்.

    இதையடுத்து அய்யப்பன் தனது மனைவி கவிதா வங்கி கணக்கிற்கு முன் பணம் போடுமாறு சித்ராவிடம் கூறியுள்ளார். இதை நம்பி சித்ரா, கவிதாவின் வங்கி கணக்கிற்கு கடந்த 4-ந் தேதி ரூ.3 லட்சத்தை முன்பணமாக அனுப்பியுள்ளார்.

    அதைத்தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கிற்கு மேலும் ரூ.1 லட்சம் பணம் அனுப்பி உள்ளார். 2 நாட்களில் வேலையை முடித்து ஆர்டர் கொடுத்து விடுவதாக கூறி அய்யப்பன் சென்றுவிட்டார்.

    ஆனால் அதன் பிறகு அவர் செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டார். சித்ரா பலமுறை போன் செய்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் நேரடியாக திங்களூர் சென்று அய்யப்பனிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அய்யப்பன் ஏதேதோ காரணம் சொல்லி நாட்களை கடத்தி வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சித்ரா இது குறித்து கோவை மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்திற்கு புகார் அளித்தார்.

    அந்தப் புகார் நகல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் அந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். புகாரின் பேரில் திங்களூர் போலீசார் அய்யப்பன் மற்றும் கவிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடிகர் மோகன்லால் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறை வழக்குப்பதிவு செய்தது.
    • பெரும்பாவூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி தேவாரத்தில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு 4 யானை தந்தங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நடிகர் மோகன்லால் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    மேலும் அவருக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு வனத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் நடிகர் மோகன்லால் மட்டுமின்றி, மேலும் 3 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் மோகன்லால் மீதான வழக்கை வனத்துறை ரத்து செய்தது.

    மேலும் யானை தந்தங்களை வைத்துக் கொள்ள மோகன்லாலுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியது. ஆனால் எர்ணாகுளத்தை சேர்ந்த பவுலோஸ் என்பவர், நடிகர் மோன்லாலுக்கு யானை தந்தங்கள் உரிமை சான்று வழங்கிய முதன்மை தலைமை பாதுகாவலரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    கிருஷ்ணகுமார் என்பவரிடம் யானை தந்தத்தை வாங்கியதாகவும், தந்தம் செட் வைத்திருப்பதற்கான சான்றிதழ் தன்னிடம் இருப்பதாகவும் கோர்ட்டில் நடிகர் மோகன்லால் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் இந்த பிரச்சினையை பொதுநலனாக கருதிய ஐகோர்ட்டு, வழக்கை தொடர மாஜிஸ்திரேட்டு கோட்டுக்கு பரிந்துரைத்தது. அதன்படி பெரும்பாவூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

    நடிகர் மோகன்லால் மற்றும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் நவம்பர் 3-ந்தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று பெரும்பாவூர் மாஜிஸ்திரேட்டு கோர்டடு உத்தரவிட்டுள்ளது.

    • மறுநாள் காலையில் அழகர் ராஜாவை அவர்கள் பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.
    • அணிந்து இருந்த 7 பவுன் செயின், 4 பவுன் காப்பு, முக்கால் பவுன் மோதிரம் ஆகியவற்றையும் பறித்தனர்.

    கோவை:

    கோவை காளப்பட்டி அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் அழகர் ராஜா (வயது 37). தொழில் அதிபர்.

    இவர் பீளமேடு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கடந்த 2 ஆண்டுகளாக சித்ராவை சேர்ந்த குமாரசாமி என்பவரது மனைவி நித்யா (36) என்பவருடன் சேர்ந்து பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் அலுவலகம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் அழகர் ராஜா, நித்யாவுக்கு ரூ.25 லட்சம் பணம் கொடுக்க வேண்டியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறால் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 1 மாதத்துக்கு முன்பு அழகர்ராஜா அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.

    சம்பவத்தன்று இவர் தனது சொகுசு காரில் பெரியநாயக்கன் பாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். கார் விளாங்குறிச்சி 80 அடி ரோட்டில் சென்ற போது நித்யாவின் கணவர் குமாராசாமி உள்பட 3 பேர் காரில் வந்தனர்.

    அவர்கள் அழகர் ராஜாவின் காரை வழி மறித்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பேச வேண்டும் எங்களுடன் வாருங்கள் என அழைத்தனர். அவர் மறுக்கவே அந்த கும்பல், தாங்கள் வந்த காரில் அழகர் ராஜாவை கடத்தி சென்றனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் அவரை துடியலூர் இடையர்பாளையத்தில் உள்ள சண்முகம் என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவர்கள் அழகர் ராஜாவை சிறை வைத்து தாக்கி மிரட்டி ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். மேலும் அவர் அணிந்து இருந்த 7 பவுன் செயின், 4 பவுன் காப்பு, முக்கால் பவுன் மோதிரம் ஆகியவற்றையும் பறித்தனர்.

    பின்னர் ஒரு நாள் முழுவதும் அவரது வீட்டிலேயே சிறை வைத்தனர். மறுநாள் காலையில் அழகர் ராஜாவை அவர்கள் பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.

    அங்கு வைத்து அந்த கும்பல் குரும்பபாளையத்தில் உள்ள அழகர் ராஜாவுக்கு சொந்தமான 4 முக்கால் ஏ நிலத்தை மிரட்டி சண்முகம் என்பவரது பெயருக்கு கிரையம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் சொகுசு காரையும் விற்பனை செய்தது போல மிரட்டி கையெழுத்து வாங்கினர். இதனை தொடர்ந்து அந்த கும்பல் நடந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது.

    அப்படி கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அழகர் ராஜாவை பீளமேட்டில் இறக்கி விட்டு சென்றனர்.

    இது குறித்து அவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் தொழில் அதிபரை காரில் கடத்தி சென்று சிறை வைத்து மிரட்டி நகை, சொத்து மற்றும் சொகுசு காரை அபகரித்த குமாரசாமி உள்பட 4 மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீ வைத்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜேடர் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • சம்பந்தமாக 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தர். இவரது மனைவி நித்யா (28 )இவர் கடந்த மார்ச் 11-ந்தேதி ஆடு மேய்க்க சென்ற போது கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த மே 13-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு ஜேடர்பாளையம், அருகே சரள மேட்டில் முத்துச்சாமி என்பவரின் கரும்பாலையில் பணிபுரித்து வந்த வட மாநில தொழிலாளர்கள் 4 பேர் சிமெண்ட் அட்டையால் தடுக்கப்பட்ட அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிமெண்ட் அட்டையை உடைத்து உள்ளே புகுந்து தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் ராஜேஷ்( 19,) சுகிராம்( 29,) எஸ்வந்த்( 18, )கோகுல் (28 )ஆகிய 4 பேர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கரூர் மாவட்டம் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த ராஜேஷ் என்கிற வாலிபர் கடந்த மே 17-ந் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜேடர் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இது சம்பந்தமாக 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதில் முக்கிய நபரான கருக்கம்பாளையத்தை சேர்ந்த தீபக், ராகுல் மற்றும் பாகம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் ஆகிய 3 பேரையும் வட மாநிலத்த தொழிலாளிகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா பரிந்துரையை ஏற்று 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் உள்ள தீபக், ராகுல், சக்திவேல் ஆகிய 3 பேருக்கும் குண்டர் சட்டத்தில் கைதான நகல் போலீசாரல் வழங்கப்பட்டது.

    • வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் போலீஸ் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
    • போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்கள், வாடகை கார் டிரைவர்களும் தங்களது வாகனங்களை இன்று இயக்கவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவும், காரும் எதிர்பாராத விதமாக மோதியது. இதுதொடர்பாக அந்த 2 வாகனங்களின் உரிமையாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதியில் நின்ற சிலர் அவர்கள் 2 பேரையும் விலக்கிவிட்டனர்.

    அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் மேலப்பாளையம் போலீசார் 5 வாலிபர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக நிலையத்தில் பொய்யான புகாரின் அடிப்படையில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அங்கு தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், ஜமாத் பிரமுகர்கள் ஒன்றிணைந்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.

    தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் போலீஸ் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் பேச்சு வார்த்தைக்கு சென்றபோது அனைத்து கட்சி நிர்வாகி களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு சென்ற மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதிஜா இக்லாம் பாசிலா, மாமன்ற கவுன்சிலர்கள் ரம்ஜான் அலி, ஷேக் மன்சூர், நித்திய பாலையா உட்பட 8 கவுன்சிலர்கள், பிற அரசியல் கட்சி மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலர் மீது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனை ரத்து செய்யக்கோரி போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து அனைத்து கட்சியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் வழக்கினை வாபஸ் பெறாவிட்டால், கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து நேற்று நெல்லை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மேலப்பாளை யத்தில் போலீசாரை கண்டித்து அனைத்து வியாபாரி கள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர், அனைத்து அமைப்பினர், அனைத்து ஜமாத்துகள் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போலீசார் போட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டது.

    அத்தியாவசிய பொருளான பால், மருந்து கடைகள் உள்ளிட்ட ஒரு சில கடைகள் மட்டும் திறந்திருந்தது. சில மீன்கடைகளும் திறந்திருந்தன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்கள், வாடகை கார் டிரைவர்களும் தங்களது வாகனங்களை இன்று இயக்கவில்லை. அவை சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது.

    சந்தை முக்கு ரவுண்டானா உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மேலப்பாளையம் பகுதியில் அத்தியாவசிய பணிகள் முடங்கியுள்ளன. அதே நேரத்தில் குறிச்சி மற்றும் கருங்குளம் பகுதிகளில் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. அங்கு ஆட்டோ, வேன், வாடகை கார்கள் ஓடின.

    • செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
    • பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 45). இவர் அப்பகுதியில் ஜெயபாலகோகுலம் வித்யாலயா மேல் நிலைப்பள்ளி என்ற பெயரில் பள்ளி நடத்தி வருகிறார்.

    இந்த பள்ளியில் தொண்டமாநத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு, சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பாலியல் ரீதியாக பள்ளி நிர்வாகி குமரன் தொடர்ந்து சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு சிறப்பு வகுப்பின் போது பள்ளி நிறுவனர் குமரன், அம்மாணவிக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    இதையடுத்து அவரது பெற்றோர் வில்லியனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வேலய்யன் போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவான பள்ளி நிறுவனர் குமரனை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் பெற்றோர்கள், அந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக கூறி வேறு பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கிராமப்புறத்தில் பள்ளி நிறுவனரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருநங்கை சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். சிறுமியிடம் முகவரி கேட்பது போல் அருகில் சென்றனர். திடீரென சிறுமியை தூக்கி பைக்கில் வைத்துக் கொண்டு அங்குள்ள சர்வீஸ் ரோடு வழியாக சென்றனர்.

    அங்குள்ள மறைவான இடத்திற்கு சிறுமியை தூக்கிச் சென்ற வாலிபர்கள் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர்.

    அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி சாலைக்கு ஓடி வந்து காப்பாற்றுமாறு கூச்சலிட்டார்.

    அந்த வழியாக வந்த திருநங்கை ஒருவர் சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு சென்றார். அவரை கண்டதும் வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    திருநங்கை சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த திருநங்கைக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • மாணவியின் பெற்றோர், திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தனர்.
    • போலீசார் விசாரித்தபோது, இருவரும் லெஸ்பியன் ஜோடியாக மாறியிருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    பிளஸ்-2 படிப்பதால் அவரது பெற்றோர் மாணவிக்கு டியூசன் ஏற்பாடு செய்தனர். இதற்காக அந்த பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவரை ஏற்பாடு செய்தனர். அந்த ஆசிரியை தினமும் மாணவி வீட்டிற்கு சென்று மாணவிக்கு பாடங்களை சொல்லி கொடுத்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மாணவி பள்ளிக்கு சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியின் தோழிகளிடம் விசாரித்தனர். அப்போது மாணவியை அவரது டியூசன் ஆசிரியை பள்ளிக்கு வந்து அழைத்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர், திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடினர். மேலும் அவரது டியூசன் ஆசிரியையின், செல்போன் எண் மூலம் அவர்கள் தங்கி இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்.

    இதில் அவர்கள் எர்ணாகுளம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. போலீசார், நேற்று அங்கு விரைந்து சென்று அவர்கள் இருவரையும் பிடித்தனர்.பின்னர் அவர்களை திருவனந்தபுரம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.

    மருத்துவ பரிசோதனையில் மாணவி, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்தபோது, இருவரும் லெஸ்பியன் ஜோடியாக மாறியிருப்பது தெரியவந்தது. ஆசிரியை, டியூசன் எடுக்க மாணவியின் வீட்டுக்கு சென்ற போது அவர்கள் இருவருக்கும் இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டதும் தெரியவந்தது.

    இதுபற்றி மாணவி கூறும்போது, ஆசிரியை தன்னை கடத்தி செல்லவில்லை என்றும், தானே விருப்பப்பட்டு அவருடன் சென்றதாகவும் கூறினார்.

    மாணவி, ஆசிரியையுடன் விருப்பப்பட்டு சென்றாலும், மாணவி மேஜர் ஆகாததால், அவரை ஆசிரியை கடத்தி சென்றதாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டு, ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

    ஏற்கனவே கேரளாவை சேர்ந்த லெஸ்பியன் ஜோடி, கோர்ட்டு உத்தரவுப்படி இப்போது சேர்ந்து வாழ்கிறார்கள். இதுபோல இன்னொரு பெண், தனது லெஸ்பியன் ஜோடியை பெற்றோர் கடத்தி சென்றுவிட்டதாக கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இப்போது பள்ளி மாணவியை, அவருக்கு டியூசன் எடுத்த ஆசிரியையே கடத்தி சென்றதும், இருவரும் லெஸ்பியனில் ஈடுபட்டதும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு ஆஸ்பத்திரி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார்.
    • விசாரணை அதிகாரியாக சித்தூர் ஏ.எஸ்.பி.சுதாகர் நியமிக்கப்பட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    இந்நிலையில், பூதலப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிபிரசாத் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி சென்றனர்.

    புளியம்பட்டியை சேர்ந்த அய்யப்பா, அவரது மனைவி பூமதி மற்றும் 4 பெண்களை கைது செய்தனர். அவர்களை பூதலப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அய்யப்பாவும் அவரது மனைவி பூமதி ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    4 பெண்கள் அவரது வக்கீல் முன்னிலையில் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அரசு ஆஸ்பத்திரி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார்.

    பூதலப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ஹரிபிரசாத், ஏட்டு தணிகாசலம் மற்றும் 4 போலீசார் தங்களை சித்தூர் போலீஸ் பயிற்சி மையத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்து தொல்லை கொடுத்தனர்.

    உடலில் மிளகாய்ப் பொடியை தூவினர், அதனால் தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக அந்த பெண் கூறினார்.

    இது குறித்து பெண் டாக்டர் ஒருவர் சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு ரிஷாந்த் ரெட்டியிடம் போனில் புகார் செய்தார்.

    அதன் பேரில் நகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்தார்.

    மேலும் விசாரணை அதிகாரியாக சித்தூர் ஏ.எஸ்.பி.சுதாகர் நியமிக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் ஆந்திர மாநில சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×