search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM Machine"

    • கோவை - திருச்சி மெயின் ரோடு அருகே தனியார் வங்கி கிளை உள்ளது.
    • ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை - திருச்சி மெயின் ரோடு அருகே தனியார் வங்கி கிளை உள்ளது. வங்கியின் முன்புறம் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்றுமுன்தினம் ஏ.டி.எம். மையத்தில் ஒருவர் பணம் எடுக்க சென்ற போது அங்குள்ள ஏ.டி.எம்.எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு :

    உடனே இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பணம் கொள்ளை போனதா? என்பது தெரியவில்லை. இதைத்தொடர்ந்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அவர் வந்து பார்வையிட்ட போது ஏ.டி.எம். எந்திரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த ரூ .12 லட்சம் பணம் அப்படியே இருந்தது. பணம் எதுவும் கொள்ளை போகவில்லை.ஏ.டி.எம். மைய சி.சி.டி.வி. கேமரா, மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர்களின் உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆராய்ந்த போது அதில் ஒருவர் ஏ.டி.எம். அறை முன்பு இருந்த கல்லை எடுத்துக் கொண்டு, ஏ.டி.எம். எந்திர அறைக்குள் செல்வது பதிவாகி இருந்தது.

    தொழிலாளி கைது :

    கண்காணிப்பு கேமராக்களின் பதிவை வைத்து ஆராய்ந்ததில், அந்த நபர் பல்லடம் பஸ் நிலையம் அருகே பதுங்கி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் மன்னார்குடியை சேர்ந்த நாகேந்திரன் (வயது 66) என்பது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.போலீசார் கூறுகையில்,கடந்த 2019ம் ஆண்டு கள்ள நோட்டு கும்பலிடம் இருந்து ரூ.2ஆயிரம் நோட்டு பெற்று அதை மாற்ற முயற்சித்த போது நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். தற்போது கூலி வேலைக்கு செல்லும் போது மது அருந்த ரூ.300 தேவைப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்றுள்ளார் என்றனர்.

    • வெற்றியூர் கிராமப்பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரியலூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமானூர் ஏலாக்குறிச்சி, கீழப்பலூர் ஆகிய பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைந்துள்ளது. இருப்பினும் கல்லூர் , வெற்றியூர், சாத்தமங்கலம், விரகாலூர், திருப்பெயர், கீழகொளத்தூர் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏ.டி.எம். எந்திரம் இல்லை. எனவே வெற்றியூர் ஊராட்சிவெ.விரகாலூர் பகுதிகள் ஏடிஎம் எந்திரம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேற்கண்ட கிராமங்களிலிருந்து ஏ.டி.எம்மில் பணம் எடுக்க கிராமங்களிலிருந்து மக்கள் திருமானூர் அல்லது கீழப்பழுர் ஏடிஎம்மை நாடுவதால், நேரம் அதிகமாவதுடன் சில நேரங்கில் அம் மையங்களில் பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியுள்ளது. அல்லது திருவையாறு,

    அரியலூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் வெற்றியூர் அருகில் தேசிய நெடுஞ்சாலை கல்லூர் பாலத்தில் ஏ.டி.எம். மையம் அமைந்தால் கிராம பொதுமக்கள் பணம் எடுக்க சிரமம் இல்லாமல் இருக்கும் எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் சிரமங்களை மனதில் கொண்டு உடனடியாக கல்லூர் பாலம் அருகே ஏடிஎம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வாலர்களும் தெரிவித்துள்ளார்.

    • கடையநல்லூர் அருகே பெண் ஒருவர் பள்ளி சீருடை வாங்க பணம் எடுத்தபோது ஏ.டி.எம். எந்திரத்தில் கிடைத்த கிழிந்த ரூ.500 நோட்டுகளால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
    • 8 நோட்டுகள் கிழிந்து பேப்பர் வைத்து ஒட்டப்பட்ட நிலையில் இருந்தது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள மேலக்கடையநல்லூர் பூங்கா அருகில் பண்பொழி சாலையில் தனியார் நிறுவன ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள முக்கிய பகுதியில் இந்த ஏ.டி.எம். இருப்பதால் மற்ற வங்கி ஏ.டி.எம். மையத்தை விட பொதுமக்கள் இதனை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    நேற்று மேல கடையநல்லூர் பஜனை மட தென்வடல் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மனைவி மாரியம்மாள் அந்த ஏ.டி.எம்.மிற்கு வந்து ரூ.9 ஆயிரம் எடுத்தார்.

    அப்போது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வந்த 500 ரூபாய் நோட்டுகளில் 8 நோட்டுகள் கிழிந்து பேப்பர் வைத்து ஒட்டப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் சில நோட்டுகள் கரையான் அரித்த நோட்டுகளாக இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே கணக்கு வைத்திருந்த வங்கி மேலாளரிடம் புகார் கூறியதற்கு, சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். எங்கள் வங்கியை சேர்ந்தது இல்லை என்பதால் இங்கு புகார் செய்ய முடியாது என்று தெரிவித்து விட்டனர்.

    சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன ஏ.டி.எம். ஊழியரிடம் புகார் தெரிவித்தபோது, அவர் இதுகுறித்து நெல்லையில் உள்ள அந்த ஏ.டி.எம்.மின் மண்டல அலுவலகத்தில் புகார் செய்யுமாறு கூறிவிட்டார். இதேபோல் மற்ற வாடிக்கையாளர்கள் சிலருக்கும் கிழிந்த நோட்டுகள் வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், எனது கணவர் சென்னையில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். மகளின் பள்ளி சீருடைகள் வாங்க அனுப்பிய பணத்தை எடுத்த போது இவ்வாறு உள்ளது.

    ஆனால் அதில் இருந்து வினியோகம் செய்யப்படும் நோட்டுகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது வேதனைக்குரியது. இதுபோன்ற தனியார் ஏ.டி.எம்.மையங்களை வங்கி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


    அரக்கோணத்தில் பண மழை கொட்டிய ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    அரக்கோணம்:

    ஏ.டி.எம். மையத்தில் நமது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தில் எவ்வளவு ரூபாய் வேண்டும் என்று குறிப்பிடுகிறோமோ? அந்த அளவு ரூபாய் மட்டுமே வரும். ஆனால் அரக்கோணத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக பணம் வந்தது.

    அது பற்றிய விவரம் வருமாறு:-

    வேலூர் மாவட்டம், அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் எஸ்.ஆர். கேட் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை போட்டு ரூ.1,000 எடுக்க பட்டனை அழுத்தினார். அப்போது அவருக்கு ரூ.5 ஆயிரம் வந்தது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. தகவல் அறிந்ததும் 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையம் முன்பு குவிந்தனர். பலர் ஏ.டி.எம். எந்திரத்தில் குறைவான தொகையை குறிப்பிட்டு அதிகமான பணத்தை மகிழ்ச்சியுடன் எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த சிலர் அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏ.டி.எம். மைய வாசலில் இருந்த காவலாளியிடம் ஏ.டி.எம். மையத்தை மூட சொன்னார்கள். மேலும் இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வங்கி அதிகாரிகள் இதுவரை எத்தனை பேருக்கு அதிக அளவில் பணம் அளிக்கப்பட்டு உள்ளது என்பது கம்ப்யூட்டரில் பதிவாகி இருக்கும். அதை வைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். மேலும் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட ஏதேனும் கோளாறு காரணமாக இதுபோன்ற கூடுதல் பணம் வந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    அரக்கோணம் கிளை வங்கியில் உள்ள அலுவலர்கள் இதுகுறித்து சென்னை மற்றும் வேலூரில் உள்ள வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கம்ப்யூட்டர் பொறியாளர்கள் குறிப்பிட்ட ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.



    தற்காலிகமாக அந்த ஏ.டி.எம்.மில் பணபரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் சரியான விதத்தில் பணம் அளிக்கப்படுகிறதா? என்பதை பலமுறை கணக்கில் எடுத்து அதன்பின்னர் அந்த ஏ.டி.எம். இயங்க அனுமதி அளிக்கப்படும் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    திடீரென ஏ.டி.எம். எந்திரத்தில் பணமழை கொட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூடுதல் பணம் கிடைக்கும் என்று வந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் மையம் மூடப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    போச்சம்பள்ளியில் தொழிலாளி வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர்.
    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (69) இவரது இளைய மகன் சோமசுந்தம் உடல் நலமில்லாமல் கடந்த 11,07.2018 அன்று உயிரிழந்தார். அவரது பெயரில் சேமித்து வைத்திருந்த எல்.ஐ.சி. பணம் ரூ. 2 லட்சத்தை போச்சம்பள்ளியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் சீனிவாசன் வரவு வைத்திருந்தார்.

    கடந்த வாரம் செலவுக்காக பணம் எடுக்க சென்றபோது, அவரது கணக்கில் பணம் இல்லாதது கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். அவரது கணக்கில் இருந்த மொத்தம் ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து வங்கி மேலாளரிடம் முறையிட்டபோது உங்களது ஏ.டி.எம். கார்டு மூலம் மும்பையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    மேலும் எப்.ஐ.ஆர். இல்லாமல் என்னால் எதுவும் செய்ய இயலாது என கைவிரித்து விட்டார். 

    இதையடுத்து, போச்சம்பள்ளி போலீசில் சீனிவாசன் புகார் அளித்தார். அப்போது இது சைபர் கிரைம் சம்பந்தப்பட்டது என்று கூறி போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சீனிவாசன் தவித்து வருகிறார்.
    காஞ்சீபுரத்தில் ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர்கள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தினை கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலை பழைய ரெயில் நிலையம் அருகே உள்ள மாமல்லன் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    அதிகாலை ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர்கள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தினை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    தகவல் அறிந்து வந்த காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காஞ்சீபுரம் நகருக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் காஞ்சீபுரம் நகரப் பகுதியில் ஏராளமான ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஆனால் போதிய காவலர்கள் நியமிக்கப்படாததே இது போன்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகின்றன என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமான் மாவட்டத்தில் உள்ள வங்கி அலுவலர்களை அழைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுறுத்தியுள்ளார். ஆனால் முழுமையான அளவில் ஏ.டி.எம். மையங்களில் காவலாளிகள் நியமிக்கப்படாததாலேயே இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என தெரிவித்தனர். #tamilnews
    பெருந்துறை அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ளது காஞ்சிகோவில். இங்குள்ள நான்கு ரோடு பகுதியில் ஒரு தேசிய வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.

    24 மணி நேரம் செயல்படும் இந்த ஏ.டி.எம்.மில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பணம் எடுத்து செல்வார்கள். மேலும் இந்த ஏ.டி.எம். அருகே கடைகளும், வீடுகளும் உள்ளன.

    அதிகாலையில் இந்த ஏ.டி.எம்.மில் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன் சுற்று முற்றும் பார்த்தான். பிறகு அவன் கொண்டு வந்த இரும்பு கம்பியால் பணத்தை கொள்ளையடிக்க ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தான்.

    இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ள பொதுமக்கள் எழுந்து வெளியே வந்தனர். அப்போது ஏ.டி.எம்.மில் இருந்து சத்தம் வரவே அங்கு சென்றனர்.

    பொதுமக்களை கண்டதும் மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். ஆனால் அவனை பொதுமக்கள் விரட்டி மடக்கி பிடித்தனர்.

    பிறகு அவனுக்கு தர்ம அடி கொடுத்து காஞ்சிகோவில் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

    அவனை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விசாரணையில் அவன் பெயர் அரவிந்த்சாமி (வயது 27) என்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மான்குட்டை பாளையத்தை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது.

    போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ஏ.டி.எம். எந்திரங்கள் மற்றும் ஆன்-லைன் பண பரிமாற்றங்களில் உள்ள குளறுபடிகளுக்கு தீர்வு காண கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், இது தொடர்பாக ரிசர்வ் வங்கியை அணுக உத்தரவிட்டனர். #RBI
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டைச் சேர்ந்த வக்கீல் ஜி.எஸ்.மணி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

    இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுக்கும் போது சில நேரங்களில் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வருவது இல்லை. ஆனால் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட தொகை கணக்கில் இருந்து கழிக்கப்பட்டு விடுகிறது. இந்த தொகை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கில் உடனே வரவு வைக்கப்படுவது இல்லை. சில நாட்கள் தாமதம் ஆகிறது.

    சில நேரங்களில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதே பிரச்சினை ஆன்-லைன் மூலமான வங்கி பண பரிமாற்றங்களிலும் நிகழ்கிறது.

    இந்த பிரச்சினைகளால் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.



    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சய் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    இந்த மனுவை தற்போது விசாரணைக்கு ஏற்க முடியாது. எனவே தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் மனுதாரர் இந்த பிரச்சினை குறித்து ரிசர்வ் வங்கியை அணுகி மனு அளிக்கலாம். ரிசர்வ் வங்கி அந்த மனுவை 3 மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவை எடுக்கவில்லை என்றால் மனுதாரர் உரிய அமைப்பை அணுகி முறையிடலாம்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர். #RTI #SupremeCourt #RBI
    ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுத்து மோசடி செய்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பழகனை கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஒகளூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மனைவி ஜெயா(வயது 45). இவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி சார்பில் கடந்த மாதம் புதிதாக ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெயா கடந்த 22-ந் தேதி தனது ஏ.டி.எம். கார்டை பயன்பாட்டிற்கு வந்து விட்டதா? என்பதனை ஏ.டி.எம். மையத்தில் சோதனை செய்து வருமாறு அருகே வசிக்கும் அறிவழகன் மகன் அன்பழகனிடம்(27) கொடுத்துள்ளார்.

    அவரும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தில் சோதனை செய்து விட்டு ஏ.டி.எம். கார்டை பயன்பாட்டிற்கு வந்து விட்டது என்று ஜெயாவிடம் கொடுத்து விட்டு சென்றார். இதையடுத்து ஜெயா தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சம்பவத்தன்று பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது வங்கி ஊழியர்கள் உங்கள் வங்கி கணக்கில் ஏற்கனவே ரூ.40 ஆயிரம் ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயா சம்பவத்தன்று அன்பழகனிடம் தான் ஏ.டி.எம். கார்டை கொடுத்தோம். அவர் தான் பணத்தை எடுத்திருப்பார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என்றும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்பழகன் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சந்தேகத்தின்பேரில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் பி.எஸ்.கே.நகர் பஸ் நிறுத்தம் அருகில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து கடப்பாரையால் எந்திரத்தை உடைக்க முயன்றது. அரைமணி நேரத்திற்குமேல் போராடியும் அவர்களால் உடைக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அந்த பகுதியில் ஆட்கள் வருவதை உணர்ந்த கும்பல் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு பாதியிலேயே தப்பியது

    இன்று காலை ஏ.டி.எம். எந்திரம் சேதம் அடைந்து இருப்பதை கண்ட மக்கள் வங்கி அதிகாரிகளுக்கும், ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், ராஜாமணி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்

    இந்த நிலையில் போலீசார் ராஜபாளையம் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கடப்பாரை மற்றும் ஆயுதங்களுடன் 3 பேர் சிக்கினர். இவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்றவர்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ஏ.டி.எம். மையத்துக்கு பணத்தை திருட வந்த கொள்ளையர்கள் பணத்தை திருட முடியாமல் ஏ.டி.எம். எந்திரத்தை அலேக்காக தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். #ATMMachine #Robbery
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம் வழியாக ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் சான் ரோரியன் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று வந்த கொள்ளையர்கள் சிலர், அந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றனர். ஆனால் அது முடியாமல் போகவே, அந்த எந்திரத்தை அலேக்காக தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். அந்த எந்திரத்தில் ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 400 இருந்ததாக ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.

    போலீசார், ஏ.டி.எம். எந்திரத்துடன் தப்பி ஓடிய கொள்ளையர்களை கைது செய்யும் பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.  #ATMMachine #Robbery 
    திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ATM #ATMBroken
    சென்னை:

    திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் இயங்கி வரும் இந்த மையத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.

    எந்திரத்தை உடைத்து அதில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்து இருக்கலாம் என தெரிகிறது. கொள்ளையர்கள் நீண்ட நேரம் போராடி, முயற்சி தோல்வி அடைந்த ஆத்திரத்தில் கண்ணாடி கதவினை உடைத்து சென்றுள்ளனர்.

    இதுபற்றி திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஏ.டி.எம். மையத்தை முழுமையாக ஆய்வு செய்தனர். வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். உடைக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் உள்ள கேமராவை வைத்து கொள்ளை கும்பலை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை முயற்சியில் எத்தனை பேர் ஈடுபட்டார்கள். அவர்களது முயற்சி தோல்வி அடைந்தற்கான காரணம் என்ன?

    பொதுமக்கள் யாரும் வந்ததால் முயற்சியை கைவிட்டு ஓடினார்களா? குடிபோதையில் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. #ATM #ATMBroken
    ×