search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.டி.எம். எந்திர குளறுபடிக்கு தீர்வு காண வழக்கு - ரிசர்வ் வங்கியை அணுக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    ஏ.டி.எம். எந்திர குளறுபடிக்கு தீர்வு காண வழக்கு - ரிசர்வ் வங்கியை அணுக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    ஏ.டி.எம். எந்திரங்கள் மற்றும் ஆன்-லைன் பண பரிமாற்றங்களில் உள்ள குளறுபடிகளுக்கு தீர்வு காண கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், இது தொடர்பாக ரிசர்வ் வங்கியை அணுக உத்தரவிட்டனர். #RBI
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டைச் சேர்ந்த வக்கீல் ஜி.எஸ்.மணி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

    இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுக்கும் போது சில நேரங்களில் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வருவது இல்லை. ஆனால் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட தொகை கணக்கில் இருந்து கழிக்கப்பட்டு விடுகிறது. இந்த தொகை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கில் உடனே வரவு வைக்கப்படுவது இல்லை. சில நாட்கள் தாமதம் ஆகிறது.

    சில நேரங்களில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதே பிரச்சினை ஆன்-லைன் மூலமான வங்கி பண பரிமாற்றங்களிலும் நிகழ்கிறது.

    இந்த பிரச்சினைகளால் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.



    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சய் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    இந்த மனுவை தற்போது விசாரணைக்கு ஏற்க முடியாது. எனவே தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் மனுதாரர் இந்த பிரச்சினை குறித்து ரிசர்வ் வங்கியை அணுகி மனு அளிக்கலாம். ரிசர்வ் வங்கி அந்த மனுவை 3 மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவை எடுக்கவில்லை என்றால் மனுதாரர் உரிய அமைப்பை அணுகி முறையிடலாம்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர். #RTI #SupremeCourt #RBI
    Next Story
    ×