search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவல்லிக்கேணி"

    • பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.
    • 10-ம் நாள் வரை மூலவர் மீசையின்றி சேவை சாதிப்பார்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருமொழித் திருநாள் என்னும் பகல் பத்து உற்சவத்துடன் நேற்று தொடங்கியது. நேற்று வேங்கட கிருஷ்னன் திருக்கோலத்தில் பெருமாள் மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தார்.

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உற்சவர், வேணுகோபாலன், காளிங்க நர்த்தனர், சக்கரவர்த்தி திருமகன், ஏணிக் கண்ணன், பரமபத நாதன், பகாசு ரவதம், ராமர் பட்டாபிஷேகம், முரளி கண்ணன், நாச்சியார் ஆகிய திருக்கோலங்களில் மாட வீதிகளை வலம் வந்து அருள் பாலிக்கிறார். பகல் பத்து விழாவில் 6-ம் நாள் மாலை முதல் 10-ம் நாள் வரை மூலவர் மீசையின்றி சேவை சாதிப்பார்.

    வைகுண்ட ஏகாதசியான வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடும் நடக்கிறது.

    வைகுண்ட ஏகாதசியை யொட்டி 23-ந்தேதி அதி காலை 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பக்தர்கள் மூலவரை தரி சனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    பின்னர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருவாய்மொழித் திருநாள் எனப்படும் ராப் பத்து உற்சவம் வருகிற 24-ந்தேதி முதல் ஜனவரி 2-ந்தேதி வரை நடக்கிறது.

    • 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.
    • அர்ஜுனனுக்கு தேர் ஓட்டியதால் கிருஷ்ணருக்கு `பார்த்தசாரதி’ என்று பெயர்.

    விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான ஆலயம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. பார்த்தன் என்ற பெயருடைய அர்ச்சுனனுக்கு, சாரதியாக இருந்து தேர் ஓட்டியதால், கிருஷ்ணருக்கு `பார்த்தசாரதி' என்ற பெயர் வந்தது. அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்து, கீதையை உபதேசம் செய்து, மகாபாரதப் போரை வெல்ல உதவியாக இருந்த கிருஷ்ணனுக்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

    சுமதிராஜன் என்ற மன்னர் திருமால் பக்தராக இருந்தார். அவருக்கு குருஷேத்ர போரில் பார்த்தனுக்கு சாரதியாக (தேரோட்டி) இருந்த கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தனது விருப்பத்தை திருமாலிடம் தெரிவிக்க, திருமாலும் அவ்வண்ணமே காட்சி கொடுத்து அருள்பாலித்தார். தான் விரும்பிய கோலத்தில் கிருஷ்ணரைக் கண்டு மகிழ்ந்த மன்னர், அதேகோலத்தில் இத்தலத்தில் கோவில் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

    போரில் பார்த்தனுக்கு சாரதியாக இருந்தபோது, கிருஷ்ணர் கையில் எந்த ஆயுதமும் இல்லை. அதேபோல இத்தலத்திலும், ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி அருள்பாலிக்கிறார். பார்த்தன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகள் அனைத்தையும் தானே முன்னின்று ஏற்றுக்கொண்டு, அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்தார் கிருஷ்ணர். அப்போது கிருஷ்ணரின் முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் இருக்கும்.

    இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பார்த்தசாரதியின் முகத்திலும் வடுக்கள் காணப்படுகின்றன. திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மை கொண்டது என்ற தத்துவத்தை அனைவரும் உணர்வதுண்டு. மூலவர் வேங்கடகிருஷ்ணராக இருந்தாலும் உற்சவர் பார்த்தசாரதி பெயரிலேயே இக்கோயில் அழைக்கப்படுகிறது.

    முதலாம் நரசிம்மவர்ம பல்லவ மன்னரால் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. சோழர்கள் இந்த ஆலயத்தை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். கிருஷ்ணர், நரசிம்மர், ராமர், வராகர் போன்ற மகாவிஷ்ணுவின் திருமேனிகளை இங்கே தரிக்க முடியும். ராமர் மற்றும் நரசிம்மர் சன்னிதிகளை அடைய தனித்தனி வாசல்கள் இருக்கின்றன. பல நுணுக்கமான அலங்காரக் குடைவு வேலைப்பாடுகளை, இக்கோவிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் தூண்களில் காணலாம்.

    ×