search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK"

    • போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    • ஆத்திரமடைந்த ரமேஷ், ஆல்வினை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    கரூர்:

    கரூர் மாவட்ட கடவூர் தே.மு.தி.க தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஆல்வின் (வயது47) முன்னாள் கவுன்சிலரான இவர் நேற்றுமுன் தினம் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கூட்டணி கட்சியான அ.தி.மு.கவை சேர்ந்த மணிகண்டன், ஆல்வினிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த அ.தி.மு.க கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரமேஷிடம் ஆல்வின் கருத்து மோதலில் ஈடுப்பட்டார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், ஆல்வினை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஆல்வின், கரூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக ஆல்வின் அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தே.மு.தி.க ஒன்றிய செயலாள் ஆல்வின் கூறுகையில், கொலை வெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க கவுன்சிலர் ரமேஷை போலீசார் கைது செய்ய வேண்டும். அ.தி.மு.க கவுன்சிலர் ரமேஷை போலீசார் கைது செய்ய வேண்டும். அ.தி.மு.கவினர் கூட்டணி கட்சியனர் என்றும் பாராமல் தேர்தல் முடிந்ததும் தங்கள் வேலையை காட்டி உள்ளனர்.

    இதற்கு அ.தி.மு.க தலைமை பதில் செல்லியே ஆக வேண்டும் என்றார்.

    • சாந்தகுமார் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
    • உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு இந்த விடியா அரசின் முதல்வரையும் வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம்.

    பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு இந்த விடியா அரசின் முதல்வரையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க..
    • இரவு, பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் தனி முகவர்கள்; கழக உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள்!

    அ.தி.மு.க. 1972-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே பாராளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

    இந்த இயக்கத்தின் பாராளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, அம்மாவின் காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் 3-வது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு பாராளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு; அம்மாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க..

    ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், 3-வது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அ.தி.மு.க., அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, நேற்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளுக்கும், கோடானு கோடி கழக உடன்பிறப்புகளுக்கும், முகவர்களுக்கும், அதேபோல், கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஜூன் மாதம் 4-ந்தேதி அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும்; கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும்; கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
    • அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    எடப்பாடி:

    தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

    முன்னதாக இன்று அதிகாலை தனது சொந்த கிராமத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காலை 7.10 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனது பூர்வீக வீட்டிலிருந்து அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா, பேரன் ஆதித், சகோதரர் கோவிந்தன் உள்பட குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு நடந்து சென்ற அவர் அங்கு பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.


    வாக்குப்பதிவிற்கு பின் நிருபர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    • உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
    • உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க மாநில வக்கீல் பிரிவு செயலாளர் இன்ப துரை நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக உளவுத்துறையினர் அ.தி.மு.க தலைவர்கள் முதல் வட்ட செயலாளர்கள் வரை செல்போனில் பேசுவதை ஒட்டு கேட்கும் விவகாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்காக ரூ. 40 கோடி மதிப்பில் உளவு சாதனம் ஒன்றை இறக்குமதி செய்து நாங்கள் பேசுவதை கண்காணித்து ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக நான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து 5 நாட்கள் ஆகிவிட்டது. தேர்தல் ஆணையமோ, உள்துறை செயலாளரோ, தமிழக முதலமைச்சரோ யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    எனது புகார் மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் தேர்தல் சமயத்தில் எங்களது வெற்றிக்கு பல்வேறு வியூகங்கள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் உரையாடல் நடத்துவோம். அதனை உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரியிடம் செல்போனில் இன்று காலை தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று மாலைக்குள் தமிழக தேர்தல் ஆணையம் பதில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்கள்.

    இன்று மாலைக்குள் பதில் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் நேற்று நெல்லையில் இருந்து நாங்குநேரி வழியாக ராதாபுரம் தொகுதிக்கு ஒரு கோடி ரூபாய் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராதாபுரத்தை சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகிக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதனை பறக்கும் படையினர் சோதனை செய்யவில்லை.

    அதே நேரத்தில் நாங்குநேரி போலீசில் பிடிபட்ட அந்த பணத்தின் மதிப்பு ரூ. 28 லட்சம் வரை மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது.

    இது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த பணம் யாருடையது? எதற்காக கொண்டு செல்லப்பட்டது? என்பது குறித்து விரிவான விசாரணை தேவை. அந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் முறையான விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை தெரிவிக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் கெடு விதிக்கிறேன். நான் கொடுத்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளரும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீங்கள் திமுகவிற்கு வாக்களிப்பதும், பாஜகவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்.
    • அது நம் மாநிலத்தின் எதிர்காலத்தையே பாதித்துவிடும்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ மூலம் வெளியிட்டுள்ள செய்தியுள்ள கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு ரத்து, போதைப்பொருள் புழக்கம், காவிரி-மேகதாது விவகாரம் என அனைத்து முக்கிய பிரச்சனைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விடியா முதல்வரிடம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன்- பதில் சொல்ல முடியாமல் திணறினார்!

    அறிக்கை வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் கேட்டேன்- பதில் சொல்ல முடியாமல் நழுவினார்!

    இப்போது எஜமானர்களாம் உங்களிடமே வந்தேன்- 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் முன்னிலையில் மேடையில் நம் கேள்விகளை உரக்கக் கேட்டேன்- பதில் சொல்ல திராணியின்றி என் மீது தனிப்பட்ட விமர்சனம்தான் வைத்தார்!

    மு.க. ஸ்டாலின் என்னைப்பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளித்துவிட்டேன். நான் கேட்ட ஒரு கேள்விக்காவது அவருக்கு பதில் சொல்ல தெம்பு, திராணி இருந்ததா?

    இல்லை. ஏனெனில், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, தமிழ்நாட்டைக் காக்கத் தவறிய, பொய் வாக்குறுதிகளால் பொதுமக்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றிய ஒரு விடியா ஆட்சிதான் ஸ்டாலினின் ஆட்சி.

    ஒரு மக்களவை உறுப்பினரின் அடிப்படைக் கடமையான "MPLADS" நிதியைக் கூட சரிவரக் கேட்டு பெறமுடியாமல், வெறும் 25 சதவீதம் மட்டுமே செலவிட்டு, 75 சதவீத ஒதுக்கீட்டை வீணடித்த திமுக கூட்டணி எம்பிக்களுக்கு மீண்டும் வாக்களித்து என்ன பயன்?

    இவர்கள் ஒருபுறம் எனில், நம் மாநிலத்தின் உரிமைகளை கிஞ்சற்றும் மதிக்காத, நாட்டின் கூட்டாட்சியில் நமக்குரிய பங்கை அளிக்க மறுக்கும் பாரதிய ஜனதா அரசு மறுபுறம். மதத்தின் மூலம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியே கொள்கையாக வைத்துக்கொண்டு, மாநில கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்த முயன்று, அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் பாரதிய ஜனதாவின் எண்ணம் ஒருபோதும் தமிழ்நாட்டில், குறிப்பாக அதிமுவிடம் ஈடேறாது.

    அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே- வரும் 19-ம் தேதி நீங்கள் அளிக்கப் போகும் வாக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் திமுகவிற்கு வாக்களிப்பதும், பாஜகவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்; அது நம் மாநிலத்தின் எதிர்காலத்தையே பாதித்துவிடும்.

    நம் மாநிலத்தின் உரிமைகளை மறுக்கும் தேசிய கட்சிகளையும், 38 எம்பிக்கள் இருந்தும் மவுனியாக இருந்து மாநில உரிமைகளை தாரைவார்த்த திமுகவையும் ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்!

    அதிமுகவின் தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள், மக்களவையில் உங்களின் குரலாக, நம் தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலிப்பார்கள் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

    தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா- புரட்சித்தலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலைவி அம்மா ஆகிய திராவிடப் பேரியக்கத்தின் மாபெரும் ஆளுமைகள் கட்டமைத்த வளமிக்க தமிழ்நாட்டை, சமூகநீதி-சமத்துவம்-சகோதரத்துவம் ஆகிய கொள்கை நெறிகொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சிசார் பாதையில் வழிநடத்த உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டைஇலை சின்னத்திலும் முரசு சின்னத்திலும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    • எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது.
    • மதுரை மாவட்டத்திற்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்துள்ளது.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் இணைந்து பழங்காநத்தம், மாடக்குளம், சம்பட்டிபுரம், முடக்குச்சாலை, அண்ணா மெயின் வீதி, பெத்தானியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். பழங்காநத்தம் நடைபெற்ற பிரசாரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார். ஏராளமான பெண்கள் டாக்டர் சரவணனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து ராட்சசகிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்தனர்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்தது. மதுரை மாவட்டத்திற்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்துள்ளது. ஆகவே மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த டாக்டர் சரவணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசுகையில், தி.மு.க. அரசு மீது ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிருப்தி, மகளிர் உதவித் தொகை தொகை வழங்குவதில் குளறுபடி, எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் ஆகிய காரணங்களுக்காக மக்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை புறக்கணித்து அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய முடிவு விட்டார்கள்.

    வைகை நதிக்கரையில் இருந்து டாக்டர் சரவணன் என்ற பாராளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து யமுனை நதிக்கரைக்கு அனுப்பி வையுங்கள் என பேசினார். அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசுகையில், "உங்கள் வீட்டுப் பிள்ளையா நினைத்து என்னை வெற்றி பெறச் செய்தால் மதுரை மக்களவைத் தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை நிச்சயம் செயல்படுத்துவேன்" என உருக்கமான பேசினார்.

    • முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
    • வாக்குப் பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, ''தமிழர் உரிமை மீட்போம்; தமிழ்நாடு காப்போம்'', "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்" என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.

    எனது இந்த சுற்றுப் பயணத்தின்போது, மக்களைப் பாதுகாக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதை நிரூபிக்கின்ற வகையில் கோடானு கோடி மக்கள் திரண்டிருந்து, எங்கள் வாக்கு இரட்டை இலைக்கே, முரசு சின்னத்திற்கே என விண்ணதிர முழக்கமிட்டது, இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    கழக உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்குச்சாவடிக்கு வரும் பொதுமக்களிடம் பண்போடும், பாசத்தோடும் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோர வேண்டும். மேலும், நம் முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

    வாக்குப் பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும். வாக்குப்பதிவு நிறைவுபெற்று அதனை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருந்திடல் வேண்டும்.

    எனதருமை வாக்காளப் பெருமக்களே,

    அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் வெற்றிச் சின்னமாம் ''இரட்டை இலை'' சின்னத்திலும்; தே.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ''முரசு'' சின்னத்திலும்; விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு ''இரட்டை இலை'' சின்னத்திலும், உங்களது பொன்னான வாக்குகளை அளித்து, வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்து, புதிய வரலாற்றுச் சாதனையை படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
    • இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதி வழங்கப்படவில்லை.

    சென்னை:

    சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அதிமுக ஆட்சியில் தான் மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

    * திமுக அரசின் 520 அறிவிப்புகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் சுமார் 10 சதவீத அறிவிப்புகளே நிறைவேற்றப்பட்டுள்ளது.

    * முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக தலைவருமான ஸ்டாலின், அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகள் 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சை பொய்யை தேர்தல் பிரசார கூட்டத்தில் சொல்லி வருகிறார்.

    * தமிழகத்தில் நதிநீர் பிரச்சனை, போதைப்பொருள் நடமாட்டம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு என்று பல பிரச்சனைகள் நிலவிக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த தவறிய அரசு விடியா திமுக அரசு.

    * மத்தியில் ஆளும் பாஜக அரசும் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

    * கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.

    * பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து சென்றதால் எந்த பயனுமில்லை.

    * வாக்குகளை மட்டும் குறி வைத்து வருகிறார் பிரதமர் மோடி.

    * இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதி வழங்கப்படவில்லை.

    * அதிமுக-வை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை.

    * பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் எதையும், தமிழகத்திற்கு 10 ஆண்டுகளாக தரவில்லை.

    * இயற்கை சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை முழுமையாக வழங்குவதில்லை.

    * திமுக அரசுக்கு நிர்வாக திறமையின்மை; அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.
    • மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாஜக ஏன் வரவே கூடாது?

    தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம்.

    இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது.

    தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம்.

    புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.

    மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?

    தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

    இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக்காசாக்கி விடும்! வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

    மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள்.

    மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!

    பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க #Vote4INDIA!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


    • மழை வெள்ளத்தின் போது, மக்களை திமுக அரசு வஞ்சித்தது.
    • மழை வெள்ளத்தின்போது, மக்களுக்கு உதவி செய்தது அதிமுக தான்.

    சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அங்கு தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து வாக்கு சேகரிக்கப்பட்டது.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். மழை வெள்ள பாதிப்புக்கு, மற்றவர்கள் மீது பழி சுமத்தி திமுக அரசு தப்பிக்க பார்க்கிறது.

    மழை வெள்ளத்தின் போது, மக்களை திமுக அரசு வஞ்சித்தது. மழை வெள்ளத்தின்போது, மக்களுக்கு உதவி செய்தது அதிமுக தான்.

    ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், திமுக அரசு என்ன செய்தது ? விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.

    ஊழல் இல்லாத துறையே இல்லை, எல்லா துறையிலும் லஞ்சம். மழை வெள்ளத்தின்போது, மக்களுக்கு உதவி செய்தது அதிமுக தான்.

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனை செய்ததாக 2,118 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. திமுக அறிவித்த 520 வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர்.

    2021 சட்டமன்ற தேர்தலில், திமுக, அதிமுக இடையேயான வாக்கு சதவீதம் 3 சதவீதம் மட்டுமே.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது
    • இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐக்கு மாற்றபட்டது

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சிபிஐக்கு மாற்றபட்டது.

    இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி வி ரமணா மீதான குட்கா வழக்கை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சிபிஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    கவர்னர் ஒப்புதல் அளித்தும் சிபிஐ இன்னும் பரிசீலனை செய்து வருவதாக நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளதால் கோபமடைந்த நீதிபதி வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சிபிஐக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ×