search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK protest"

    • அ.தி.மு.க. சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிர்வாகிகள் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் முதலியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் - அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.செ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள், ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க நிர்வாகிகள் தி.மு.க. அரசை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷம் எழுப்பினர்.

    இதில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணைமேயர் கே.சி. பழனிச்சாமி, மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.டி.தங்கமுத்து, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஸ், கோவிந்தராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால், பெரியார் நகர் அவைத்தலைவர் மீன் ராஜா, வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், சிந்தாமணி இயக்குனர் பொன்சேர்மன், முருகானந்தம், மாதையன், முன்னாள் கவுன்சிலர் கோபால், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி, சூரிய சேகர் உள்பட கலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
    • அ.தி.மு.க. சார்பில், வருகின்ற 21-ந்தேதி வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை சிறிதும் கண்டுகொள்ளாமல், தன் குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

    மு.க.ஸ்டாலின் குடும்பம் வளம்பெற வேண்டும் என்பதற்காக, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பதவியில் இருந்த செந்தில் பாலாஜி பல்வேறு வகைகளில் ஊழல் முறைகேடுகள் செய்துள்ளதை மக்கள் அனைவரும் கண்கூடாகப் பார்க்கின்றனர்.

    போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றுக்கொண்டு அப்பாவி இளைஞர்களை ஏமாற்றிய வழக்கில் அமலாக்கத்துறையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரது செயலால் தமிழ்நாட்டிற்கு மிகுந்த அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.

    பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று, நேற்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கழகத்தின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டது.

    தி.மு.க. அரசைக் கண்டித்தும்; லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில், வருகின்ற 21-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும்; கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அண்ணாமலைக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக் கூடிய தலைமை பண்பு தேவைப்படுகிறது.
    • கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக தவறான தகவல்களை கூறி வருவதை புதுவை மாநில அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இதற்கு அ.தி.மு.கவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் அண்ணாமலையை கண்டித்து உப்பளம் தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை அ.தி.மு.கவினர் எழுப்பினர்.

    தொடர்ந்து நிருபர்களிடம் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:-

    தன்னுடைய தகுதி, உயரம் என்னவென்று தெரியாமல் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா பற்றி தவறான கருத்தை கூறியுள்ளார். இது தி.மு.க.விற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. அ.தி.மு.க.வை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்தவித தகுதியும், அருகதையும் கிடையாது.

    அண்ணாமலைக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக் கூடிய தலைமை பண்பு தேவைப்படுகிறது. கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக தவறான தகவல்களை கூறி வருவதை புதுவை மாநில அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

    கூட்டணியில் இருந்து கொண்டு அண்ணாமலை அ.தி.மு.க.வை பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில் பேசுவது அபத்தமாகும். இதுபோல் அவதூறு பேசி வரும் அண்ணாமலையை தமிழக தலைவர் பதவியில் இருந்து பா.ஜனதா தேசிய தலைமை உடனடியாக நீக்க வேண்டும்.

    எதிர்காலங்களில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர்ந்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாத முடியாத நிலை ஏற்படும். 3 மாதத்திற்கு ஒரு முறை அண்ணாமலை இதுபோல் அ.தி.மு.கவை அவதூறாக பேசி வருகிறார்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    • செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
    • அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33 ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு முழு செங்கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்த அரசு ஒரு கரும்பு 33 ரூபாய் வீதம் 2.19 கோடி கரும்புகள் கொள்முதல் செய்வதற்காக 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு கரும்புக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 33 ரூபாய்.

    ஆனால் இப்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன.

    செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33 ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    அரசு அறிவித்த கரும்புக்கான முழு தொகையும் விவசாயிகளைச் சென்றடையாவிடில், பொறுப்புள்ள எதிர்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும், அ.தி.மு.க. சார்பில் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அரசை எச்சரிக்கை செய்கிறேன்.

    கரும்பு கொள்முதலில் கமிஷன் அடிக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுவது, இடைத்தரகர்களை பயன்படுத்துவது போன்ற அரசின் விவசாய விரோத செயல்களுக்கு அ.தி.மு.க. சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திரளாக கருப்பு பேட்ச் அணிந்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் எம்.சி.எஸ்.பிரவீன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர்.
    • முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது தி.மு.க. அரசு பொய்யான வழக்கினை பதிந்து உள்ளது என கூறி சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத். இவர் தொழில் துறை அமைச்சராக இருந்த போது நேர்முக உதவியாளராக மேல் குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் இருந்து வந்தார்.

    இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினை தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத், அண்ணன் எம்.சி. தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் குமார் மாமனார் ராமச்சந்திரன் மற்றும் மாமியார் ஆகியோரை அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி தாக்கப்பட்டனர்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் தங்கமணி உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இத்தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. மேலும் தற்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருவதால் எந்தவித விசாரணையும் இன்றி முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என கடும் குற்றம்சாட்டி இருந்தனர்.

    இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திரளாக கருப்பு பேட்ச் அணிந்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் எம்.சி.எஸ்.பிரவீன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது தி.மு.க. அரசு பொய்யான வழக்கினை பதிந்து உள்ளது என கூறி சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்றுக்கொண்டு அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • மத்தியில் 15 ஆண்டாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தி.மு.க. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தற்போது 2 கட்சிகளும் புதுவை மக்களிடையே நாடகமாடுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் சட்ட விதிகளின்படி கவர்னரின் அதிகாரத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்த சமயங்களில் மாநில வளர்ச்சி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

    ஆனால் வேறு, வேறு கட்சிகள் ஆட்சி செய்த போது அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகுவதால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்படுகிறது. கவர்னர், முதல்-அமைச்சர் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும்போது மாநில நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. ஜனநாயகமே கேள்விக்குறியாகிறது.

    இதை கருத்தில் கொண்டே 1998-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மாநில அந்தஸ்தை வலியுறுத்தினார். மத்திய அமைச்சரவையிலும் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மாநில அந்தஸ்து கிடைப்பது முடக்கப்பட்டது.

    மத்தியில் 15 ஆண்டாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தி.மு.க. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது 2 கட்சிகளும் புதுவை மக்களிடையே நாடகமாடுகின்றனர். மக்கள் நலன், அதிகாரம், ஜனநாயகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை அவசியமாக உள்ளது.

    இதை வலியுறுத்தி மீண்டும் பலகட்ட போராட்டங்கள் நடைபெற தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) புதுவை மாநிலத்தில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் பந்த் போராட்டம் நடைபெறும். அ.தி.மு.க. சார்பில் கட்சிகளுக்கு போராட்டத்தை ஆதரிக்கக்கோரி அழைப்பு அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் தங்க சாலை, பெரம்பூர் ரெயில் நிலையம் அருகில் ஆகிய 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

    கடந்த 13-ந்தேதி சென்னை உள்பட 15 மாவட்டங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் தலைமை தாங்கினார்கள்.

    சென்னையில் மட்டும் சுமார் 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி தலைமையில் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெரு, கிண்டி மடுவங்கரை, ஜாபர்கான்பேட்டை ஆகிய 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் தங்க சாலை, பெரம்பூர் ரெயில் நிலையம் அருகில் ஆகிய 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    பகுதி செயலாளர்கள் முகுந்தன், பரமகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆர்.கே.நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகிலும், சர்மாநகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தொழிற்பேட்டை பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் சார்பில் அமைப்பு செயலாளரும் மாவட்ட செயலாளருமான நா.பாலகங்கா தலைமையில் துறைமுகம் தொகுதியில் சக்கரை செட்டி தெரு, அம்மன் கோவில் தெரு, எழும்பூர் தொகுதியில் சூளை அவதாமா பாப்பையர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட பி.வி.நாயக்கன் தெருவில் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையிலும், ஆயிரம் விளக்கு தெற்கு கோடம்பாக்கம் தர்மாபுரத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் தலைமையிலும், ஆயிரம் விளக்கு வடக்கு பகுதியில் சூளைமேட்டில் சங்கரதாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் தி.நகர் சத்தியா தலைமையில் கோடம்பாக்கம் பவர் அவுஸ், மற்றும் அண்ணா ஆர்ச் ஆகிய 2 இடங்களிலும் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் பெருங்குடி கந்தன்சாவடி, கண்ணகி நகர், சோழிங்கநல்லூர் சந்திப்பு, மடிப்பாக்கம் கூட்ரோடு ஆகிய 4 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆலந்தூரில் பகுதி செயலாளர் பரணி பிரசாத் தலைமையிலும், கண்டோன் மெண்ட் பகுதியில் பகுதி செயலாளர் வேல்ராஜா தலைமையிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டார்.

    • பெண்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் டி.கே.எம் சாலையில் திரண்டு, ஊர்வலமாக சென்று அங்கு கடைவீதியில் கூடியிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
    • மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மாமல்லபுரம் அ.தி.மு.க.வினர் சார்பில், தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என குற்றம் சாட்டி, அதை கண்டித்து நகர செயலாளர் கணேசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தனபால், முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் தினேஷ்குமார், வேலாயுதம், தணிகைவேல், ஜெயச்சந்திரன், செல்வம், விஜயரங்கன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    பின்னர் பெண்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் டி.கே.எம் சாலையில் திரண்டு, ஊர்வலமாக சென்று அங்கு கடைவீதியில் கூடியிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.

    • 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
    • பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பஜார் வீதியில் இன்று மின் கட்டண உயர்வு, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு, பால் விலை, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் பொய்யான வாக்குறுதிகளை அளித்த தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் பூண்டியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். இதில் திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. அவை தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர்கள் பசுபதி, வண்டி மேடு ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன

    போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கல்பட்டு முத்துமைச்செல்வன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராமதாஸ், ராஜா, ஜே. பேரவை துணைச் செயலாளர் பாலாஜி, இணைச் செயலாளர் செங்குட்டுவன், நிர்வாகிகள் வக்கீல் பிரபாகரன், கனல் கண்ணன், பழக்கடை மணிகண்டன், வண்டி மேடு ராஜா ராமன், பன்னீர், கஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். இதேபோல் திண்டி வனம், கோட்டக் குப்பம் ஆகிய பகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. மாநில நிர்வாகி கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு பேசினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    • ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட , நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    ஆத்தூர்:

    தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர். இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    ஜெயசங்கரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஆத்தூர் நகர செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார்.

    சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட , நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    • ஒரே நேரத்தில் சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர்.
    • மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். அல்லது கைவிட வேண்டும்.

    கோவை:

    மின்கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டி கோவை சிவானந்தா காலனியில் இன்று அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சரும், எதி்ர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

    அ.தி.முக. கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் முடக்கும் பணியில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து எழவே இந்த உண்ணாவிரத போராட்டம். தி.மு.க. ஆட்சியில் மக்கள் துன்பப்படுகின்றனர். அல்லல்படுகின்றனர்.

    எனவே மக்களின் கோபங்களை, கொந்தளிப்பை உணர்ந்து முதல்-அமைச்சர், செயல்பட வேண்டும்.

    தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகிறது. 18 மாதங்களில் அவர்களால் கோவைக்கு என்ன நன்மை கிடைத்தது. கோவை மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் என்ன நன்மை கிடைத்தது. அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? அதனால் மக்கள் பெற்ற பலன்கள் ஏதாவது உண்டா என்று கேட்டால் ஒன்றுமே கிடையாது.

    2 தினங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அதில் ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கும், ஒரு முதல்-அமைச்சர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு முன்னாள் ஆட்சி என்றார்.

    அதனை யார் சொல்கிறார் பார்த்தீர்களா தற்போதைய பொம்மை முதல்-அமைச்சர், திறமையற்ற முதல்-அமைச்சர். நாங்கள் சொல்கிறோம் ஒரு ஆட்சி எப்படி செயல்படக்கூடாது. ஒரு முதல்-அமைச்சர் எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு இந்த 18 மாத கால தி.மு.க. ஆட்சியே சான்று. இந்த ஆட்சியில் மக்கள் என்ன பலனை கண்டனர். எங்கள் மீது திட்டமிட்டே அவதூறு பிரசாரத்தை முதல்-அமைச்சர் பேசி வருகிறார். அ.தி.மு.க. மீதான அவதூறு பிரசாரத்தை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. 10 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தை பாதாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டதாக குற்றம் சாட்டி வருகிறார்.

    நான் சொல்கிறேன். 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சி பொற்கால ஆட்சி. அந்த ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    வரலாற்று சிறப்புமிக்க அ.தி.மு.க இயக்கத்தை பற்றி பேசுவதற்கும் தகுதி வேண்டும். தற்போதைய முதல்-அமைச்சருக்கு எங்கள் இயக்கத்தை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

    கோவையில் குடிமராமத்து திட்டம், உயர்மட்ட பாலங்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளில் அள்ளி வழங்கியது அ.தி.மு.க ஆட்சிதான்.

    அது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா. எல்லாம் கொண்டு வந்தது நாங்கள். அதனை நீங்கள் திறந்து வைக்கிறீர்கள். அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து வருகிறார் ஸ்டாலின்.

    வெள்ளலூரில் பஸ் நிலையம் கொண்டு வந்து 50 சதவீத பணிகள் முடிந்தது. தற்போது அ.தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்பதால் அதனை முடக்கி வேறுபகுதிக்கு கொண்டு செல்ல பார்க்கிறார்கள். ஜி கொயர் என்ற நிறுவனம் 200 ஏக்கர் இங்கு வாங்கி வைத்துள்ளனர். அங்கு வெள்ளலூர் பஸ் நிலையத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். அதனை தி.மு.க அரசு கைவிட வேண்டும். திட்டத்தை நிறைவேற்றினால் கோவை மக்கள் கொந்தளித்து அதனை எதிர்கொள்வார்கள்.

    அன்னூரில் விவசாய நிலத்தில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும்.

    18 மாத ஆட்சியில் கோவை மாவட்டம் முழுவதையும் தி.மு.க.வினர் புறக்கணித்து வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்துள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது 520 வாக்குறுதிகளை அள்ளிவீசினார். அதில் எதையும் நிறைவேற்றவில்லை. மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை அறிவித்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை கொடுக்கவில்லை. கேட்டால் ஆய்வு செய்து வருவதாக கூறுகின்றனர். எல்லாம் ஏமாற்று வேலை.

    முதியோர்களுக்கு மாதம் 1000 கொடுத்து வந்தோம். அதனை இப்போது நிறுத்தி உள்ளனர். சுமார் 7 லட்சம் பேருக்கு வழங்கப்படுவதில்லை என தகவல் வந்துள்ளது.

    100 நாள் திட்ட பணிகளை முடக்கி மக்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறது தி.மு.க அரசு.

    ஒரே நேரத்தில் சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர். மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். அல்லது கைவிட வேண்டும்.

    மாதந்தோறும் சிலிண்டர், கட்டுமான பொருட்கள் அத்தியவாசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு மக்கள் வாங்குகிற அளவுக்கு குறைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.

    அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வேண்டுமேன்றெ பொய் வழக்கு போடுகின்றனர். அப்படி வழக்கு போட்டால் அ.தி.மு.க முடங்கி விடுமா. அ.தி.மு.க.வை முடக்க ஓராயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் அ.தி.மு.க.வை முடக்க முடியாது.

    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425.40 சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு வழங்குவதை அரசு கைவிட வேண்டும்.

    ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை விவசாயிகள் நலன் கருதி நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வந்தததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து கையெழுத்துதான் என்றனர். அது என்னவானது? நாங்கள் செய்ததையே தான் அவர்களும் செய்துள்ளனர்.

    2017-18 வெறும் 9 பேருக்கு தான் டாக்டர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை எண்ணி பார்த்து தான் அரசு பள்ளி மாணவர்கள் கனவு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தான் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். அதன் மூலம் இந்த ஆண்டு 565 பேர் டாக்டர் படித்து வருகிறார்கள்.

    10 ஆண்டு கால ஆட்சி பாதாளத்தில் செல்லவில்லை. மிளிர்ந்து மீறுநடை போட்டது அ.தி.மு.க ஆட்சியிலே. தி.மு.க. ஆட்சி அமையும் போது எல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும். அது இன்றும் தொடர்கிறது.

    இதுகுறித்து கேட்டால் ஸ்டாலின், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே பழி சுமத்துகின்றனர். வயிறு எறிகிறது என்கிறார். எங்களது வயிறு எரியவில்லை. மக்களின் வயிறு எரிகிறது ஸ்டாலின் அவர்களே.

    மு.க.ஸ்டாலின் ஒரு நடைபயணம் சென்றார். அப்போது அவருடன் சுகாதாரத்துறை அமைச்சரும் செல்கிறார். அவரிடம் எனது மகன் நடித்த கலகத்தலைவன் படம் எப்படி போகிறது என்று கேட்கிறார்.

    மருத்துவமனைகளில் மக்கள் மருந்து மாத்திரை இல்லாமல் அவதிப்படும் நிலையில் மகனின் படம் குறித்து சிந்திக்கிறார். கலகத்தலைவன் படம் தான் நாட்டிற்கு அவசியமான முக்கியமான விஷயமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    அ.தி.மு.க ஆட்சியில் நல்ல திட்டங்கள் மற்றும் மக்கள் பெற்ற பலன் குறித்து நான் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன். நீங்கள் செய்த திட்டங்கள் மக்கள் பெற்ற பலன்கள் குறித்த என்னுடன் பேச நீங்கள் தயாரா?

    இந்த போராட்டத்திற்கு வந்தவர்கள் வாகனத்தை இங்கு நிறுத்தினார்கள். அந்த வாகனத்தை திட்டமிட்டு எடுத்து சென்றுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். விடுவிக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம்.

    மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். வருகிற 9-ந்தேதி பேரூராட்சி பகுதிகளிலும், 12-ந்தேதி அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.

    அதேபோன்று வருகிற 13-ந்தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    பொங்கல் பரிசு தருவதற்கு முதல்-அமைச்சர் தடுமாறி வருகிறார். கடந்த பொங்கலுக்கு கொடுத்த வெல்லம் தரமற்றதாக இருந்ததது. இது மக்களுக்கு தெரியும். பொங்கல் தொகுப்பில் இருந்த அரிசியில் பூச்சி, பல்லி இருந்தது.

    தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்து உள்ளது. சுமார் ரூ.500 கோடிக்கு மேல் ஊழல் நடந்து உள்ளது. இவ்வாறு ஏழை-எளிய மக்களுக்கு வழங்க கூடிய பொருட்களில் கூட ஊழல் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாலை 5 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முடித்து வைக்கிறார்.

    உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தனபால், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், வி.பி.கந்தசாமி, டி.கே.அமுல்கந்தசாமி முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செ.ம.வேலுசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி.ராமலிங்கம், எம்.எஸ்.எம். ஆனந்தன், கே.சி. கருப்பணன், கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ×