என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தமிழகம் முழுவதும் மின்கட்டண உயர்வை கண்டித்து 9, 12, 13-ந்தேதிகளில் அ.தி.மு.க. போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரே நேரத்தில் சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர்.
  • மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். அல்லது கைவிட வேண்டும்.

  கோவை:

  மின்கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டி கோவை சிவானந்தா காலனியில் இன்று அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சரும், எதி்ர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

  அ.தி.முக. கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் முடக்கும் பணியில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து எழவே இந்த உண்ணாவிரத போராட்டம். தி.மு.க. ஆட்சியில் மக்கள் துன்பப்படுகின்றனர். அல்லல்படுகின்றனர்.

  எனவே மக்களின் கோபங்களை, கொந்தளிப்பை உணர்ந்து முதல்-அமைச்சர், செயல்பட வேண்டும்.

  தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகிறது. 18 மாதங்களில் அவர்களால் கோவைக்கு என்ன நன்மை கிடைத்தது. கோவை மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் என்ன நன்மை கிடைத்தது. அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? அதனால் மக்கள் பெற்ற பலன்கள் ஏதாவது உண்டா என்று கேட்டால் ஒன்றுமே கிடையாது.

  2 தினங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அதில் ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கும், ஒரு முதல்-அமைச்சர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு முன்னாள் ஆட்சி என்றார்.

  அதனை யார் சொல்கிறார் பார்த்தீர்களா தற்போதைய பொம்மை முதல்-அமைச்சர், திறமையற்ற முதல்-அமைச்சர். நாங்கள் சொல்கிறோம் ஒரு ஆட்சி எப்படி செயல்படக்கூடாது. ஒரு முதல்-அமைச்சர் எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு இந்த 18 மாத கால தி.மு.க. ஆட்சியே சான்று. இந்த ஆட்சியில் மக்கள் என்ன பலனை கண்டனர். எங்கள் மீது திட்டமிட்டே அவதூறு பிரசாரத்தை முதல்-அமைச்சர் பேசி வருகிறார். அ.தி.மு.க. மீதான அவதூறு பிரசாரத்தை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்.

  தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. 10 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தை பாதாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டதாக குற்றம் சாட்டி வருகிறார்.

  நான் சொல்கிறேன். 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சி பொற்கால ஆட்சி. அந்த ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

  வரலாற்று சிறப்புமிக்க அ.தி.மு.க இயக்கத்தை பற்றி பேசுவதற்கும் தகுதி வேண்டும். தற்போதைய முதல்-அமைச்சருக்கு எங்கள் இயக்கத்தை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

  கோவையில் குடிமராமத்து திட்டம், உயர்மட்ட பாலங்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளில் அள்ளி வழங்கியது அ.தி.மு.க ஆட்சிதான்.

  அது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா. எல்லாம் கொண்டு வந்தது நாங்கள். அதனை நீங்கள் திறந்து வைக்கிறீர்கள். அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து வருகிறார் ஸ்டாலின்.

  வெள்ளலூரில் பஸ் நிலையம் கொண்டு வந்து 50 சதவீத பணிகள் முடிந்தது. தற்போது அ.தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்பதால் அதனை முடக்கி வேறுபகுதிக்கு கொண்டு செல்ல பார்க்கிறார்கள். ஜி கொயர் என்ற நிறுவனம் 200 ஏக்கர் இங்கு வாங்கி வைத்துள்ளனர். அங்கு வெள்ளலூர் பஸ் நிலையத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். அதனை தி.மு.க அரசு கைவிட வேண்டும். திட்டத்தை நிறைவேற்றினால் கோவை மக்கள் கொந்தளித்து அதனை எதிர்கொள்வார்கள்.

  அன்னூரில் விவசாய நிலத்தில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும்.

  18 மாத ஆட்சியில் கோவை மாவட்டம் முழுவதையும் தி.மு.க.வினர் புறக்கணித்து வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்துள்ளனர்.

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது 520 வாக்குறுதிகளை அள்ளிவீசினார். அதில் எதையும் நிறைவேற்றவில்லை. மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை அறிவித்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை கொடுக்கவில்லை. கேட்டால் ஆய்வு செய்து வருவதாக கூறுகின்றனர். எல்லாம் ஏமாற்று வேலை.

  முதியோர்களுக்கு மாதம் 1000 கொடுத்து வந்தோம். அதனை இப்போது நிறுத்தி உள்ளனர். சுமார் 7 லட்சம் பேருக்கு வழங்கப்படுவதில்லை என தகவல் வந்துள்ளது.

  100 நாள் திட்ட பணிகளை முடக்கி மக்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறது தி.மு.க அரசு.

  ஒரே நேரத்தில் சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர். மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். அல்லது கைவிட வேண்டும்.

  மாதந்தோறும் சிலிண்டர், கட்டுமான பொருட்கள் அத்தியவாசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு மக்கள் வாங்குகிற அளவுக்கு குறைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.

  அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வேண்டுமேன்றெ பொய் வழக்கு போடுகின்றனர். அப்படி வழக்கு போட்டால் அ.தி.மு.க முடங்கி விடுமா. அ.தி.மு.க.வை முடக்க ஓராயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் அ.தி.மு.க.வை முடக்க முடியாது.

  தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425.40 சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு வழங்குவதை அரசு கைவிட வேண்டும்.

  ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை விவசாயிகள் நலன் கருதி நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வந்தததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து கையெழுத்துதான் என்றனர். அது என்னவானது? நாங்கள் செய்ததையே தான் அவர்களும் செய்துள்ளனர்.

  2017-18 வெறும் 9 பேருக்கு தான் டாக்டர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை எண்ணி பார்த்து தான் அரசு பள்ளி மாணவர்கள் கனவு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தான் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். அதன் மூலம் இந்த ஆண்டு 565 பேர் டாக்டர் படித்து வருகிறார்கள்.

  10 ஆண்டு கால ஆட்சி பாதாளத்தில் செல்லவில்லை. மிளிர்ந்து மீறுநடை போட்டது அ.தி.மு.க ஆட்சியிலே. தி.மு.க. ஆட்சி அமையும் போது எல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும். அது இன்றும் தொடர்கிறது.

  இதுகுறித்து கேட்டால் ஸ்டாலின், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே பழி சுமத்துகின்றனர். வயிறு எறிகிறது என்கிறார். எங்களது வயிறு எரியவில்லை. மக்களின் வயிறு எரிகிறது ஸ்டாலின் அவர்களே.

  மு.க.ஸ்டாலின் ஒரு நடைபயணம் சென்றார். அப்போது அவருடன் சுகாதாரத்துறை அமைச்சரும் செல்கிறார். அவரிடம் எனது மகன் நடித்த கலகத்தலைவன் படம் எப்படி போகிறது என்று கேட்கிறார்.

  மருத்துவமனைகளில் மக்கள் மருந்து மாத்திரை இல்லாமல் அவதிப்படும் நிலையில் மகனின் படம் குறித்து சிந்திக்கிறார். கலகத்தலைவன் படம் தான் நாட்டிற்கு அவசியமான முக்கியமான விஷயமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

  அ.தி.மு.க ஆட்சியில் நல்ல திட்டங்கள் மற்றும் மக்கள் பெற்ற பலன் குறித்து நான் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன். நீங்கள் செய்த திட்டங்கள் மக்கள் பெற்ற பலன்கள் குறித்த என்னுடன் பேச நீங்கள் தயாரா?

  இந்த போராட்டத்திற்கு வந்தவர்கள் வாகனத்தை இங்கு நிறுத்தினார்கள். அந்த வாகனத்தை திட்டமிட்டு எடுத்து சென்றுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். விடுவிக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம்.

  மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். வருகிற 9-ந்தேதி பேரூராட்சி பகுதிகளிலும், 12-ந்தேதி அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.

  அதேபோன்று வருகிற 13-ந்தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

  பொங்கல் பரிசு தருவதற்கு முதல்-அமைச்சர் தடுமாறி வருகிறார். கடந்த பொங்கலுக்கு கொடுத்த வெல்லம் தரமற்றதாக இருந்ததது. இது மக்களுக்கு தெரியும். பொங்கல் தொகுப்பில் இருந்த அரிசியில் பூச்சி, பல்லி இருந்தது.

  தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்து உள்ளது. சுமார் ரூ.500 கோடிக்கு மேல் ஊழல் நடந்து உள்ளது. இவ்வாறு ஏழை-எளிய மக்களுக்கு வழங்க கூடிய பொருட்களில் கூட ஊழல் செய்து வருகிறார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  மாலை 5 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முடித்து வைக்கிறார்.

  உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தனபால், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், வி.பி.கந்தசாமி, டி.கே.அமுல்கந்தசாமி முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செ.ம.வேலுசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி.ராமலிங்கம், எம்.எஸ்.எம். ஆனந்தன், கே.சி. கருப்பணன், கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×