search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாநில அந்தஸ்து வழங்க கோரி புதுவையில் 28-ந்தேதி  பந்த் போராட்டம்:  அ.தி.மு.க. அறிவிப்பு
    X

    மாநில அந்தஸ்து வழங்க கோரி புதுவையில் 28-ந்தேதி பந்த் போராட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு

    • மத்தியில் 15 ஆண்டாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தி.மு.க. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தற்போது 2 கட்சிகளும் புதுவை மக்களிடையே நாடகமாடுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் சட்ட விதிகளின்படி கவர்னரின் அதிகாரத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்த சமயங்களில் மாநில வளர்ச்சி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

    ஆனால் வேறு, வேறு கட்சிகள் ஆட்சி செய்த போது அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகுவதால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்படுகிறது. கவர்னர், முதல்-அமைச்சர் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும்போது மாநில நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. ஜனநாயகமே கேள்விக்குறியாகிறது.

    இதை கருத்தில் கொண்டே 1998-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மாநில அந்தஸ்தை வலியுறுத்தினார். மத்திய அமைச்சரவையிலும் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மாநில அந்தஸ்து கிடைப்பது முடக்கப்பட்டது.

    மத்தியில் 15 ஆண்டாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தி.மு.க. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது 2 கட்சிகளும் புதுவை மக்களிடையே நாடகமாடுகின்றனர். மக்கள் நலன், அதிகாரம், ஜனநாயகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை அவசியமாக உள்ளது.

    இதை வலியுறுத்தி மீண்டும் பலகட்ட போராட்டங்கள் நடைபெற தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) புதுவை மாநிலத்தில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் பந்த் போராட்டம் நடைபெறும். அ.தி.மு.க. சார்பில் கட்சிகளுக்கு போராட்டத்தை ஆதரிக்கக்கோரி அழைப்பு அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×