search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aanmiga kalanjiyam"

    • அன்னதானம் ஒருவரை உச்ச நிலைக்கு நிச்சயம் கொண்டு செல்லும்.
    • ஆடிப்பெருக்கன்று காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    ஆடி 18-ம் நாள் புது சக்தி தரும் நாளாக மாறுவதாக கணித்துள்ளனர். அதாவது அன்று புத்துணர்ச்சி பன் மடங்கு பெருகும். எனவே எந்த செயலை செய்தாலும் அது பெருகும் என்பது ஐதீகம்.

    புண்ணியத்தை அதிகரிக்க செய்யும் ஆடி பெருக்கு தினத்தன்று அன்னதானம் செய்வது குடும்பத்தை மேம்படுத்தி செழிக்க வைக்கும். பொதுவாகவே எந்த ஒரு தானத்துக்கும் உரிய பலன் கிடைக்கும்.

    அதிலும் அன்னதானத்துக்கு ஈடு, இணையே கிடையாது. காக்காவுக்கு சாதம் வைப்பதில் இருந்து வயிறு நிறைய உணவு வழங்குவது வரை அன்னதானம் ஒருவரை உச்ச நிலைக்கு நிச்சயம் கொண்டு செல்லும்.

    இத்தகைய அன்னதானத்தை, இரட்டிப்பு பலன் தரும் ஆடி பெருக்கு தினத்தன்று செய்தால் வாழ்வு மங்களகரமாக மாறும். ஆடிப்பெருக்கு தினத்தன்று எந்த நட்சத்திரம், திதி அமைகிறதோ, அதற்கு ஏற்பவும் நமக்கு பலன்கள் கிடைக்கும்.

    சதயம் நட்சத்திரம் என்பது முழுமையான ராகு பகவான் நட்சத்திரமாகும். 7 மணிக்கு பிறகு தொடங்கும் பூரட்டாதி நட்சத்திரம் குருவுக்குரிய நட்சத்திரமாகும்.

    தனி ஆலயத்தில் காவிரி தாய்

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் திருச்சேறை என்ற ஊர் உள்ளது. இங்கு சாரப்புட்கரணி என்ற குளத்தின் தென்மேற்கு கரையில் காவிரி தாய்க்கு தனிக்கோவில் உள்ளது. இங்கு காவிரி தாய் தனது மடியில் கிருஷ்ணனை வைத்தபடி காட்சி தருகிறாள். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    கும்பகோணம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் மங்களாம்பிகை கோவில் உள்ளது. இங்கு உள் பிரகாரத்தில் காவிரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ஆடிப்பெருக்கன்று காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். திருமணம் ஆன புதுமண தம்பதிகள் தாலிச்சரடை வைத்து பூஜை செய்து அணிந்து கொள்வர். வெற்றிலை, பாக்கு, பூ மாலை ஆகியவற்றை தண்ணீரில் விடுவார்கள்.

    • ஆடி மாதம் வானில் `அகத்தியர்' என்ற நட்சத்திரம் தோன்றும்.
    • காவிரி டெல்டா பகுதியில் விவசாய பணிகளை தொடங்குவார்கள்.

    ஆடி மாதம் புனிதமான மாதம். தெய்வீக உணர்வை அதிகரிக்க செய்யும் மாதம். அதனால் தான் மற்ற எந்த மாதத்தையும் விட இந்த மாதத்தில் நிறைய வழிபாடுகள் உள்ளன.

    ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி சுவாதி, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடி பதினெட்டாம் பெருக்கு என்று மாதம் முழுவதும் மங்களகரமாக இருக்கும்.

    இந்த பண்டிகை நாட்களில் `ஆடிப்பெருக்கு' எனும் ஆடி பதினெட்டாம் பெருக்கு மகத்துவமும், தனித்துவமும் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் மிகச்சரியாக ஆடி 18-ந் தேதியன்று இந்த விழா நடைபெறும்.

    சங்க கால தமிழர்கள் ஆடிபெருக்கு தினத்தை, மற்ற எந்த விழாக்களையும் விட மிக, மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். அதற்கு முக்கிய காரணம் காவிரி நதியை நம் முன்னோர்கள் தெய்வமாக, தாயாக கருதியது தான்.

    சங்க காலத்தில் ஆடி பெருக்கு தினத்தன்று காவிரி நதியில் புதுவெள்ளம் கரை புரண்டோடும். பொதுவாக காவிரி நதி பாயும் பகுதிகளில் மக்களின் பயன்பாட்டுக்காக படித்துறைகள் அமைத்து இருப்பார்கள்.

    அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் இந்த 18 படிகளும் மூழ்கி விடும் அளவுக்கு வெள்ளம் ஓடும். அந்த புது வெள்ளத்தை வணங்கி, வரவேற்க தமிழர்கள் `ஆடி பதினெட்டு' விழாவை கொண்டாடியதாக குறிப்புகள் உள்ளன.

    ஆடி மாதம் வானில் `அகத்தியர்' என்ற நட்சத்திரம் தோன்றும். இது மலைப்பகுதிகளில் பலத்த மழையை பெய்யச்செய்து காவிரியில் வெள்ளப்பெருக்கை உண்டாக்கும். உடனே காவிரி டெல்டா பகுதியில் விவசாய பணிகளை தொடங்குவார்கள்.

    இந்த சமயத்தில் நெல், கரும்பு பயிரிட்டால் தான், தை மாதம் அறுவடை செய்ய முடியும் என்பதை கணக்கிட்டு நம் முன்னோர்கள் செயல்பட்டார்கள்.

    அதன் தொடக்கமாகத்தான் ஆடிப்பெருக்கை பெரும் விழாவாக கொண்டாடினார்கள். சங்க காலத்தில் இந்த விழா எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா?

    ஆடி 18-ந் தேதி காலையில், ஒவ்வொரு குடும்பத்தினரும் குளித்து, புத்தாடை அணிந்து அலை, அலையாக நதி கரைக்கு வந்த விடுவார்கள். முதலில் காவிரித்தாய்க்கு வழிபாடு நடத்துவார்கள்.

    காவிரி கரையோரம் வாழை இலை விரித்து அதில் புது மஞ்சள், புது மஞ்சள் கயிறு, குங்குமம், புத்தாடை மற்றும் மங்கல பொருட்கள் வைத்து தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை காவிரித்தாயை கங்கா தேவியாக நினைத்து, ஆராதனை செய்து வழிபடுவார்கள்.

    பிறகு சுமங்கலி பூஜை நடத்துவார்கள். குடும்பத்தில் வயது முதிர்ந்த பெண் ஒருவர் தம் குடும்பத்து சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக்கயிற்றை எடுத்துக் கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.

    பிறகு திருமணம் ஆகாத பெண்களும், காவிரி அன்னையை வணங்கி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்வார்கள். அப்படி செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

    புதுமணத்தம்பதிகள் அதிகாலையிலேயே காவிரி கரைக்கு சென்று அங்கு அரசு, வேம்பு மரத்தை சுற்றி வலம் வந்து வணங்கி மஞ்சள் நூலை கட்டுவர். அரசமரமும், வேப்ப மரமும், சிவசக்தி அம்சமாக கருதப்படுகிறது. அரச மரத்தை விருட்சராஜன் என்றும், வேப்ப மரத்தை விருட்ச ராணி என்றும் அழைப்பர்.

    சக்தி ரூபமாக திகழும் வேப்ப மரத்தை சுற்றி பெண்கள் மஞ்சள் நூலை கட்டுகிறார்கள். இவ்வாறு செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் நல்ல கணவர் கிடைப்பார் என்றும், திருமணமான பெண்களுக்கு சந்தானலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

    தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி, காவிரி டெல்டாவின் கடை மடை பகுதி வரை இந்த கொண்டாட்டம் அந்தந்த பகுதி மண்வாசனைக்கு ஏற்ப இருக்கும். காவிரி கரையோரங்களில் மட்டுமின்றி வைகை, தாமிரபரணி நதிக்கரைகளிலும் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஒரு காலத்தில் கோலாகலமாக நடந்தது.

    நதிக்கு பூஜை செய்து முடித்ததும், கரையோரங்களில் அமர்ந்து புளியோதரை, பொங்கல், தயிர் சாதம், வடை மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிடுவார்கள். நாள் முழுவதும் இந்த கொண்டாட்டம் இருக்கும்.

    ஆனால் இன்று ஆடி பெருக்கு விழா காவிரி கரையோரங்களில் சில இடங்களில் மட்டும், ஓரிரு மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது. சாதாரண விழா போல மாறிவிட்டது. காவிரியை நாம் வெறும் நதியாக பார்ப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் நம் முன்னோர்கள் காவிரியை தெய்வமாக, தாயாக கருதினார்கள். காவிரியை ஈசன் மனைவி பார்வதியாக கருதினார்கள். காவிரித் தாய்க்கு மசக்கை ஏற்பட்டதாக நினைத்தனர்.

    பஞ்ச பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி தன் சபதம் நிறைவேறியதும் காவிரியில் புனித நீராட வந்ததால், காவிரி பெருக்கெடுத்து ஓடுவதாக நம்பினார்கள். அது மட்டுமல்ல, ராமபிரான் அசுரர்களை கொன்ற பாவம் நீங்க காவிரியில் நீராடி புனிதம் பெற்றதாக நம்பினார்கள்.

    காவிரி நதியில் 66 கோடி தீர்த்தங்கள் இருப்பதாக சங்க கால தமிழர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். எனவே அவர்கள் காவிரியை கடவுளாக பார்த்தனர்.

    காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடும்போது, கடவுள் உற்சாக பெருக்குடன் வந்து தங்களை வாழ்த்துவதாக கருதினார்கள். அந்த சமயத்தில் காவிரி கரையோரம் வழிபாடு செய்தால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்று மக்கள் மனதில் ஆழமான நம்பிக்கை இருந்தது.

    அன்றைய தினம் எந்த புதிய முயற்சியைத் தொடங்கினாலும், அது ஆடி பெருக்கு போல பெருக்கெடுக்கும் என்று கருதினார்கள்.

    * புதிய தொழில் தொடங்கலாம்.

    * புதிய வாகனம் வாங்கலாம்.

    * சேமிப்பை ஆரம்பிக்கலாம்.

    * காய்கறி தோட்டம் போடலாம்.

    * நகை வாங்கலாம்.

    * புதிய பொருட்கள் வாங்கலாம்.

    இப்படி ஆடிப்பெருக்கு தினத்தன்று நீங்கள் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது இரட்டிப்பு பலன்களைத் தரும். அன்றைய தினம் காலை காவிரியில் நீராடுவது, எல்லா தோஷங்களையும் நீங்கச் செய்யும்.

    ஆடிப்பெருக்கு தினத்தன்று மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ரங்கநாத பெருமாள் காவிரிக் கரைக்கு எழுந்தருளி காவிரித் தாய்க்கு சீர்வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்வார். இதை கண்டால் `கோடி புண்ணியம் கிடைக்கும்' என்பது ஐதீகமாகும்.

    • ஆடி மாதம் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும்.
    • சிவன் திரி சூலத்தால் கொன்று அரக்கனை அழித்தார்.

    பவுர்ணமி தினத்தன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திரமே மாதங்களின் பெயராக அமைந்திருக்கும். சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாகத்திலும், ஆனியில் அனுஷத்திலும் பவுர்ணமி அமையும்.

    ஆடி மாதம் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும். ஆஷாடத்தில் இரண்டு உண்டு. முதலில் வருவது பூர்வ ஆஷாடம், பூர்வ ஆஷாடம் என்பது `பூராடம்' என்றும், உத்தர ஆஷாடம் என்பது `உத்தராடம்' என்றும் சொல்லப்படுகிறது.

    உத்திர ஆஷாடத்தில் பவுர்ணமி வரும் ஆடி மாதத்தை வட மொழியில் `ஆஷாடீ' என்று சொல்வார்கள். அதுவே தமிழில் `ஆடி' என்று மருவி விட்டது. ஆடி மாதம் தோன்றியதற்கு இன்னொரு கதையும் கூறப்படுகிறது.

    ஆடி என்னும் அரக்கன் ஒருமுறை அம்பிகை இல்லாத நேரத்தில் சிவபெருமான் உறைந்துள்ள கயிலாய மலைக்கு வந்தான். பார்வதியின் தோழியான உத்தாலகுசுமை அப்போது அங்கு காவலுக்கு இருந்தாள். அவளது காவலை மீறி கயிலாய மலை உள்ளே நுழைவது கடினம் என்பதை அறிந்து, பாம்பு வடிவில் புகுந்தான்.

    சிவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் அந்த ஆடி அரக்கன் பார்வதியாக உருமாறினான். எல்லாம் அறிந்த சிவன், அசுரன் வந்திருப்பதை அறிந்தாலும், ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார்.

    அன்பு மொழி பேசி அருகில் அழைத்தார். அரக்கன் சிவனை நெருங்கியதும். திரி சூலத்தால் கொன்று அரக்கனை அழித்தார். சிவ மகாபுராணத்தில் இந்த அரக்கனின் வரலாறு இடம் பெற்றுள்ளது.

    தன்னுடைய உருவ வடிவில் வந்தவன் என்பதால், தேவி அவனிடம் இரக்கம் கொண்டு நற்கதி வழங்கினாள். இதனால் அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே `ஆடி' என்ற பெயர் ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் அம்பிகை மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்ற வழக்கம் ஏற்பட்டது.

    • ஆடி பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார்.
    • வெற்றிலையை அடுக்கடுக்காக தைத்து மாலை போல் சூட்டுவர்.

    சக்தி தலங்களில் முதன்மையான தலங்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு சித்திரை மாதம் தொடங்கி ஆடி மாதம் வரை நான்கு மாதங்கள் அம்பிகை பட்டத்தரசியாக மூடி சூட்டிக் கொண்டு ஆட்சி செய்வதாக ஐதீகம்.

    ஆடியில் மீனாட்சியம்மனுக்குரிய தனி விழாவாக முளைக்கொட்டுத் திருவிழா நடக்கும். இந்த விழா பத்து நாட்கள் நடக்கும். கோவிலுக்குள் இருக்கும் ஆடி வீதியில் மீனாட்சியம்மன் தினமும் வாகனத்தில் பவனி வருவதை தரிசிக்கலாம்.

    விழா நடக்கும் மாதத்தின் பெயரையே இந்த வீதிக்கு சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆடி பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் சடங்கு உற்சவம் (பூப்புனித நீராட்டு) நடத்துவார்கள்.

    வெற்றிலை அலங்காரம்

    ஆடிப்பூரம் அம்மனுக்கு மட்டுமல்ல வீரபத்திரருக்கும் சிறப்பான ஒரு தினமாகும். வீரபத்திரருக்குரிய அலங்காரங்களுள் ஒன்று வெற்றிலையைக் கொண்டு செய்யப்படுகிறது. அதாவது வெற்றிலையை அடுக்கடுக்காக தைத்து மாலை போல் சூட்டுவர்.

    சில ஆலயங்களில் வெற்றிலைக்குள் பாக்கு வைத்து சுருட்டி, அந்தச் சுருளை மாலையாக்கி அணிவிப்பார்கள்.

    பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர் தெய்வங்களாக, வெற்றிக் கடவுளாகத் திகழ்ந்தாலும் வீரபத்திரருக்கு மட்டுமே வெற்றிலைப்படல் உற்சவம் உண்டு. ஆடிப்பூரமே அதற்குரிய விசேஷ நாள். அன்று சென்னை அருகே அனுமந்தபுரத்தில் உள்ள வீரபத்திரருக்கு 12,800 வெற்றிலைகளால் அணிவித்து வழிபடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது.

    • ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அவ்வையார் விரதம் இருப்பர்.
    • ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை.

    ஆடி வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும். சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும். இது கூடுதல் பலன்களை தரும்.

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப் பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும்.

    வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும் என்பது ஐதீகம். இதை சுக்கிர வார விரதம் என்று அழைப்பார்கள்.

    ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றிருந்தாலும், பாவக்கிரகம் பார்வையினால், சுக்கிரன் பலமிழந்து இருந்தாலும் இவ்விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும். இது முருகனையும், அம்பாளையும் நோக்கி இருக்கும் விரதம் ஆகும்.

    சூரிய உதயத்திற்கு முன் குளித்து வெளிர் நீல ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்கு சென்று வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இவர்கள் வைரக்கல் மோதிரம் அணிந்தால் நலன் பயக்கும்.

    ஆடி செவ்வாய் விரதம்

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் அவர்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அவ்வையார் விரதம் என்றொரு விரதம் இருப்பார்கள். குறிப்பிட்ட நாளில் இரவு சுமார் 10.30 மணிக்கு மேலே அல்லது ஆண்களும் குழந்தைகளும் உறங்கிய பின்னரோ விரதம் இருக்கும் பெண்கள் யாராவது ஒருவர் வீட்டில் ஒன்று கூடுவார்கள்.

    மூத்த சுமங்கலி வழிகாட்ட, இளம் பெண்கள் விரதத்தை தொடங்குவர். பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர். அந்த கொழுக்கட்டையின் வடிவம் பல்வேறு உருவ அமைப்பு-களில் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போடமாட்டார்கள்.

    அனைத்தும் தயாரானதும் அவ்வையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள். பிறகு அவ்வையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர்.

    இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே சாப்பிடுவார்கள். இந்த விரதத்தில் ஆண் குழந்தைகள் உள்பட ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மை படுத்திவிடுவார்கள்.

    இந்த விரதம் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஒவ்வொருவர் வீட்டில் நடத்துவர். இப்படி விரதம் அனுசரித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், திருமணம் கைக்கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    தை, மாசி செவ்வாய்க் கிழமைகளிலும் அவ்வையார் விரதம் மேற்கொள்வ துண்டு, இதனை மறந்தா மாசி, தப்பினா தை, அசந்தா ஆடி, என்று சொல்வார்கள். இவ்விரதம் மேற்கொள்ளும் கன்னியருக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்பது ஐதீகம்.

    • பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது.
    • காவிரி தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவம் சிறப்பு.

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையத்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்குக்கு ஒரு வாரம் முன்பும், ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் பின்பும், தினமும் காலை 8 முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை பக்தர்கள் கண்டுகளிக்கிறார்கள்.

    பூக்கள் நிரப்பும் விழா

    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    தலைப்பாகை அணியும் அகத்தியர்

    ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒரு நாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது.

    கல்லுமடை மீனாட்சியம்மன்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கல்லுமடை இங்கு 1300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருநாகேசுவர முடையார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பவுணர்மி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது.

    பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இங்கு ஆடி மாத விழாக்களில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    காவிரி தாயாருக்கு சீர்வரிசை!

    ஸ்ரீ ரங்கத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாக பெருக்கெடுத்து ஓடும். இதனை காண அரங்கள், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்!

    ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரி தாயாருக்கு மாலை, தாலி, பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்படும். காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தை காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாக கூடி பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!

    • கவாய தீர்த்தம் - மனவலிமை பெறலாம். கவாட்ச தீர்த்தம் - தேக ஆரோக்கியம் உண்டாகும்.
    • சிவ தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். சர்வ தீர்த்தம் - அனைத்து யோகங்களும் கைகூடும்.

    ராவணனை கொன்றதால் ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை விரட்ட ராமேசுவரத்தில் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து ராமர் விடுபட்டார். இங்கு தான் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

    22 புண்ணிய தீர்த்தங்களும், நீராடினால் கிடைக்கும் பலன்களும்:-

    மகாலட்சுமி தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்கள் பெருகும்.

    சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்கள் - சடங்குகளை செய்யாதவர்களும், சந்ததி இல்லாதவர்களும் நற்கதி பெறலாம்.

    சங்கு தீர்த்தம் - நன்றி மறந்த பாவம் நீங்கும்.

    சக்கர தீர்த்தம் - தீராத நோயும் தீரும்.

    சேது மாதவ தீர்த்தம் - செல்வம் கொழிக்கும்.

    நள தீர்த்தம் - இறையருளைப் பெற்று சொர்க்கத்தை அடையலாம்.

    நீல தீர்த்தம் - யாகப் பலன் கிட்டும்.

    கவாய தீர்த்தம் - மனவலிமை பெறலாம்.

    கவாட்ச தீர்த்தம் - தேக ஆரோக்கியம் உண்டாகும்.

    கந்தமான தீர்த்தம் - தரித்திரம் அகலும்.

    பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், பில்லி சூனியப் பிரச்சினைகள் விலகும்.

    சந்திர தீர்த்தம் - கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

    சூரிய தீர்த்தம் - ஞானம் பெறலாம்

    சாத்யாம்ருத தீர்த்தம் - தேவதைகளின் கோபத்தில் இருந்து விடுபடலாம்.

    சிவ தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.

    சர்வ தீர்த்தம் - அனைத்து யோகங்களும் கைகூடும்.

    கயா, யமுனா மற்றும் கங்கா தீர்த்தங்கள் - பிறவிப்பயனை அடையலாம்.

    கோடி தீர்த்தம் - ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது. சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இது. இந்த 22 தீர்த்தங்களையும் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம், இதில் நீராடிவிட்டே ஆலய தரிசனத்துக்குச் சென்று 22 தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

    • ஜீவ நதி என்றால் `நதிகளுக்கு உயிர் இருக்கிறது' என்று அர்த்தமாகும்.
    • புனித நீராட உதவுவது தீர்த்தம் எனப்படும் திருக்குளமாகும்.

    ஒரு ஊருக்கு பெருமை தருவது, அந்த ஊரில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் தெய்வமே. அந்த மூர்த்தி தினமும் புனித நீராட உதவுவது தீர்த்தம் எனப்படும் திருக்குளமாகும்.

    இதனால்தான் ஒரு ஆலயம் என்று எடுத்துக் கொண்டால் `மூர்த்தி, தலம், தீர்த்தம்' மூன்றையும் உன்னிப்பாகப் பார்ப்பார்கள். இந்த மூன்றும் சிறப்புற அமைந்துள்ள ஆலயம் எல்லா வகையிலும் சிறப்பு பெற்று தனித்துவத்துடன் திகழும்.

    `மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றை முறையாய் வணங்குவோர்க்கு வார்த்தை சொல்ல குரு வாய்க்கும் பராபரமே' என்று தாயுமான சுவாமிகள் பாடியுள்ளார். எனவே ஒரு ஆயலத்தில் மூர்த்திக்கு இணையான சிறப்பும், மகிமையும் தீர்த்தத்துக்கு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழ்நாட்டில் 90 சதவீத பக்தர்கள் திருக்குளங்களை கண்டு கொள்வதே இல்லை. அவற்றுக்கு உரிய மரியாதையையும் கொடுப்பது இல்லை. மாறாக புனித தீர்த்தங்களை மாசுபடுத்துகிறார்கள்.

    இதனால் தமிழ் நாட்டில் பெரும்பாலான ஆலயங்களில் திருக்குளங்கள் நல்ல நிலையில் இல்லை. ஒரு கோவிலுக்கு சென்றால் அங்குள்ள புனித நீரில் நீராட வேண்டும். கை, கால், அலம்பி, வாய் கொப்பளித்து, ஆசமனம் செய்து கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

    ஆனால் ஆலய திருக்குளங்கள் இதையெல்லாம் செய்யக்கூடிய நிலையிலா உள்ளன? சில ஆலயங்களில் மட்டுமே தீர்த்தப்பகுதி நன்கு பேணப்படுகிறது. அந்த ஆலய தீர்த்தங்கள் மிக, மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தண்ணீரில் இருந்துதான் இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் தோன்றின. தண்ணீர்தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவாதாரமாக உள்ளது. `நீரின்றி அமையாது உலகு'. திருவள்ளூவர் சொன்னது இதனால் தான்.

    இத்தகைய சிறப்பு மிக்க தண்ணீரை ஆன்மீகவாதிகள் `தீர்த்தம்' என்று உயர்வாகக் கொண்டாடுகிறார்கள். இந்த மரபு இன்று நேற்று ஏற்பட்டதல்ல.

    சங்க காலத்துக்கும் முன்பே தண்ணீர் பிரவாகமெடுத்து வரும் நதிகளை, வெறும் பயன்பாட்டுக்கு மட்டுமில்லாமல், அவற்றை தெய்வமாக கருதி வழிபடும் வழக்கம் இருந்தது. அதுவும் ஒவ்வொரு நதிக்கும் ஒரு பெயரிட்டு போற்றி வழிபட்டனர்.

    அதோடு இந்த புனித நதிகளை ஜீவநதி என்று சொன்னார்கள். ஜீவ நதி என்றால் `நதிகளுக்கு உயிர் இருக்கிறது' என்று அர்த்தமாகும்.

    குறிப்பிட்ட நாட்களில் நதிகளில் புனித நீராடினால் நோய்கள் குணமாகும். மூளை சுறு சுறுப்பாக செயல்படும். உடலுக்கு புதுதெம்பு கிடைக்கும்.

    சில நதிக்கரைகளில் நம் கண்ணுக்குப் புலப்படாத மகான்கள், முனிவர்கள், சித்தர்கள் கடும் தவம் இருப்பார்கள். அவர்களது தவ வலிமையின் சில துகள்கள் நதி தண்ணீரில் பரவி வரும். அந்த நதியில் நாம் புனித நீராடும் பாக்கியம் கிடைத்தால் நமது இந்த பிறவியில் மட்டுமல்ல முந்தையப் பிறவிகளிலும் சேர்ந்த பாவ மூட்டைகள், தோஷங்கள் நம்மிடம் இருந்து விலகி ஓடிவிடும்.

    நாம் ஒரு புது மனிதனாக நம் ஆத்மாவை மேம்படுத்திக் கொள்ள முடியும். பவுர்ணமி தோறும் நதிகளில் புனித நீராடினால் இந்த அபூர்வ பலன் நிச்சயம் கிடைக்கும்.

    தியில் புனித நீராடுவதற்கு என்று சில நியதிகள் உள்ளன. எப்போதும் ஓடும் நதியில் நீராடுவதே நல்லது. நதி எங்கிருந்து உற்பத்தியாகி வருகிறதோ, அந்த திசை நோக்கி நீராடுதல் வேண்டும்.

    இரவு நேரங்களில் நீராடும் போது கிழக்கு திசை நோக்கி கும்பிட்டு நீராடுவது நல்லது. வடக்கு நோக்கியும் வணங்கி நீராடலாம்.

    நதிகளில் நீராட தொடங்கும் முன்பு முதலில் காலை நீட்டி இறங்கக் கூடாது. நதியில் கால் பதிக்கும் முன்பு தலையில் அந்த புனித நீரை எடுத்துத் தெளித்துக் கொள்ள வேண்டும்.

    அது நமது உடல் உஷ்ண நிலையை, நதியின் நீர் நிலைக்கு ஏற்ப மாற்றும். அதன் பிறகே நதியில் கால் வைக்க வேண்டும். கடவுளை நினைத்தப்படி புனித நீராட வேண்டும்.

    தீர்த்தமாடல் என்பதற்கு பரிசுத்தம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. நாம் நதிகளில் தீர்த்தமாட, தீர்த்தமாட நாம் பரிசுத்தமாகி விடுவோம். இதை அடிப்படையாகக் கொண்டே ஆலயங்களில் தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ஏராளமான நதிகள் உள்ள போதிலும் புனித தீர்த்தமாடுவதற்கு மிகவும் ஐதீகமானதாக காவிரி, தாமிரபரணி நதிகள் கருதப்படுகின்றன. இந்த நதிகளில் பல இடங்களில் தீர்த்த கட்டங்கள் உள்ளன.

    காவிரி நதி எந்த ஊரையெல்லாம் தொடுகிறதோ, அங்கெல்லாம் தீர்த்தக் கட்டம் இருக்கும். தாமிரபரணி நதியில் பானை தீர்த்தம், நாதாம்புஜம் (சேரன் மகாதேவி) பிரமாரணியம், (ஸ்ரீவைகுண்டம்) ராமபுரம் (ஆழ்வார் திருநகரி) கோட்டீசுவரம் (ஊர்க்காடு) வேனுவனம் (நெல்லை) நதிப்புரம் (ஆத்தூர்) என பல தீர்த்த கட்டங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்கள் எல்லாம் இம்மைக்கும், மறுமைக்கும் நற்கதி அளிக்க வல்லவை.

    சில தீர்த்தங்கள் நோயில் இருந்து நம்மை காப்பாற்றக் கூடியவை. சில நம் வாழ்வில் வளம் சேர்க்கும். சில தீர்த்தங்கள் பித்ரு பூஜை செய்ய உதவுகின்றன. பொதுவாக பார்த்தால் இந்த தீர்த்தங்களை அதன் சிறப்பை உணர்ந்து பயன்படுத்தினால் நாம் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

    மனிதனை பக்குவப்படுத்தும் தீர்த்தங்கள் நதிகளில் மட்டுமல்ல மலைகளிலும், கடலோரங்களிலும் நிரம்ப உள்ளன. தற்போதும் பொதிகை மலையில் உள்ள 32 தீர்த்த கட்டங்கள் ரிஷிகள் நீராடும் தீர்த்தமாக உள்ளன.இவை தரும் பலன்கள் அளவிட முடியாதவை.

    இந்த தீர்த்த கட்டங்கள் தரும் நன்மைகளை ஒருங்கேப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் தீர்த்த யாத்திரை செல்லும் பழக்கத்தை வைத்திருந்தனர்.

    இந்த தீர்த்தங்களையும் விட மேன்மையானது ஆலயங்களில் ஒரு பகுதியாக உள்ள திருக்குளங்களாகும். ஆலயங்கள் எந்த கால கட்டத்தில் தோன்றியதோ, அதே காலத்தில் திருக்குளமான புஷ்கரணியும் வந்து விட்டது.

    கோவில் கட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் ஏற்பட்ட பள்ளம்தான் நம் முன்னோர்களால் புஷ்கரணியாக மாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது. பிறகு அது அத்தலத்தின் இறைவன் நீராடும் இடமாக மாறியது.

    அர்ச்சகர் தினமும் அந்த குளத்தில் நீராடி, நீர் எடுத்து வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்யும் பழக்கமும் உருவானது. தீர்த்தவாரி, ஆராட்டுத் திருவிழாக்கள் தோன்றிய பிறகு தீர்த்தங்களின் மகத்துவம் அதிகரித்தது.

    இதையடுத்து தீர்த்தங்களுக்கான வரலாறு உருவானது. ஒரு தலத்தில் சூரியன் குளம் ஏற்படுத்தி, நீராடி ஈசனை வழிபட்டு பேறு பெற்றால், அத்தீர்த்தம் சூரிய தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது.

    ராவணனை கொன்ற பாவம் நீங்க ராமர் நீராடி வழிபட்ட இடங்கள் எல்லாம் ராமதீர்த்தமாக இன்றும் உள்ளன.

    சில தீர்த்தங்கள் மற்ற தீர்த்தங்களை விட தனித்துவம் பெற்றிருக்கும். கும்பகோணத்தில் உள்ள மகாமக தீர்த்தக்குளம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சங்கு உற்பத்தியாகும் சங்கு தீர்த்தம், திருச்செந்தூரில் கடலோரத்தில் உள்ள நாழிக்கிணறு தீர்த்தம், சிதம்பரம் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தம், தமிழகத்திலேயே மிகப்பெரிய புஷ்கரணியான திருவாரூர் கமலாலயம் போன்ற தீர்த்தங்கள் பல்வேறு மகத்துவங்களைக் கொண்டதாகும்.

    கும்பகோணத்தில் உள்ள மகாமக தீர்த்தகுளம் 6.2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பாற்கடலில் இருந்து கடைந்து எடுக்கப்பட்ட அமுத்ததில் ஒரு பகுதி இங்கு விழுந்து விட்டதாக புராணக் குறிப்புகள் உள்ளதால் இந்த தீர்த்தம் அமுத தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    சில ஆலய தீர்த்தங்கள் மூலவரின் கருவறையுடன் தொடர்பு கொண்டிருக்கும். மூலவருக்கு செய்யப்படும் அபிஷேகம் `கோமுக தீர்த்தம்' வழியாக வந்து நேரடியாக குளத்துக்கு வந்து விடும்.

    திருப்பதி - திருமலையில் இத்தகைய அமைப்புதான் உள்ளது.

    ஏழுமலையானுக்கு செய்யப்படும் அபிஷேக நீர், நேரடியாக புஷ்கரிணி தீர்த்த குளத்துக்கு வந்து விடும். வராக சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள இந்த தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் விலகி சுபம் உண்டாகும் என்பது ஐதீகமாகும்.

    திருப்பதி மலையில் 300-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருந்தாலும் இந்த புஷ்கரணியே உயர்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ் நாட்டில் உள்ள பழமையான ஆலயங்களின் வரலாறை நீங்கள் விரிவாகப் படித்தால் ஒவ்வொரு தலத்திலும் குறைந்தது 10-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருந்ததற்கான குறிப்புகள் இருப்பதை காணலாம்.

    பெரும் பாலான ஆலயங்களில் 90 சதவீத தீர்த்தங்கள் கால ஓட்டத்தில் துரதிர்ஷ்ட வசமாக காணாமலேயே போய் விட்டன.

    விரல் விட்டு எண்ணக் கூடிய ஆலயங்களில் தான் சங்க காலத்தில் தோன்றிய தீர்த்தங்கள் இன்னமும் அப்படியே உள்ளன. இந்த தீர்த்தங்களில் பழமை சிறப்புடன் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது.

    • உங்கள் பாவத்தை தல மரம் உள்வாங்கி கிரகித்துக் கொள்ளும்.
    • மரக்கன்று பூத்து, காய்க்கும் போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாக துவங்கும்.

    உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை, நீங்களே உங்கள் கையால் நட்டு, நீரூற்றி வளர்த்தால் அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வில் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் உண்டாகும்.

    உங்கள் பாவத்தை அந்த தல மரம் உள்வாங்கி கிரகித்துக்கொள்ளும். அது மட்டுமல்ல உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும்.

    சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது. உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ அல்லது ஆன்மீக தலங்களில் உள்ள வனப்பகுதியில் (சதுரகிரி, திருவண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமிமலை) தென்மேற்குப் பகுதியில் சூரிய கதிர்கள் படும் இடத்தில் நட வேண்டும். அந்த மரக்கன்றை அவரர் தங்களது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நல்லது.

    பிறகு நவதானியங்களை ஊற வைத்த தண்ணீரை அச்செடிக்கு விட்டு விட வேண்டும். நன்றாக ஊறிய நவதானியங்களை அந்த மரக்கன்றுக்கு உரமாகப் போட வேண்டும்.

    அந்த மரம் வளர, வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும். அதுமட்டுமின்றி அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்து விடும்.

    அம்மரக்கன்று பூத்து, காய்க்கும் போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும். அதாவது அவரது கர்ம வினைகள் நீங்கி இருக்கும். கர்ம வினைகளை விரட்ட விருட்ச சாஸ்திரத்தில் இப்படி ஒரு சிறப்பான வழிபாடு உள்ளது.

    வாய்ப்பு கிடைக்கும் போது இந்த பரிகாரத்தை செய்தால் தல விருட்சத்துக்குரிய ஒரு மரத்தை வளர்த்த புண்ணியம் கிடைக்கும். அதோட நம் வினைகளும் விலகி ஓடி விடும்.

    இந்த வழிபாட்டை செய்ய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த விருட்சங்கள் வருமாறு:-

    அஸ்வினி - விருட்சம், பரணி - நெல்லி, கார்த்திகை - அத்தி, ரோகிணி - நாவல், மிருகசீரிஷம் - கருங்காலி, திருவாதிரை- செங்கருங்காலி, புனர்பூசம்-மூங்கில், பூசம் - அரசு, ஆயில்யம்- புன்னை மரம், மகம்- ஆலமரம், பூரம்- பலாசு, உத்திரம்-அலரி, அஸ்தம்-அத்தி, சித்திரை- வில்வம், சுவாதி- மருதை மரம், விசாகம்- விளாமரம், அனுஷம்- மகிழ மரம், கேட்டை- பராய்முருட்டு, மூலம்- மாமரம், பூராடம்- வஞ்சிமரம், உத்திராடம்- பலாமரம், திருவோணம்- எருக்கு, அவிட்டம்- வன்னி, சதயம்- கடம்புமரம், பூரட்டாதி- தேமா, உத்திரட்டாதி- வேம்பு, ரேவதி- இலுப்பை.

    • தமிழர்கள் தல விருட்ச வழிபாடு முறையை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.
    • மாரியம்மனுக்கு `வேப்பிலைக்காரி' என்ற பெயர் உண்டு.

    ஆலயம் தோறும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி, அதை புனிதமாக கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே.

    உலகிலேயே வேறு எந்த மதத்தினரிடமும் இத்தகைய வழிபாடு இல்லை.

    சங்க காலத்துக்கும் முந்தைய தமிழர்கள் தல விருட்ச வழிபாடு முறையை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம் மரங்கள், மனிதர்களின் வாழ்வில் அன்று முதல் இன்று வரை பின்னி பிணைந்து இருப்பதுதான்.

    மரங்கள் இல்லாவிட்டால் நாம் இல்லை. மனிதன் உயிர் வாழ பிராண வாயு தேவை. மரங்கள் காற்றில் உள்ள கரியமல வாயுவை (கார்பன் - டை - ஆக்சைடு) எடுத்துக் கொண்டு பிராண வாயுவை (ஆக்ஜிசன்) வெளியிடுகின்றன.

    இந்த ஆக்ஜிசன் தான் மனிதர் உள்ளிட்ட உயிரினங்களை தொடர்ந்து உயிர்த்துடிப்புடன் வாழச் செய்கின்றன. இதை உணர்ந்தே நம் முன்னோர்கள் தலங்கள் தோறும் மரத்தை வைத்து போற்றினார்கள்.

    ஒவ்வொரு தல விருட்சத்துக்கும் பின்னணியில் நிச்சயம் ஏதாவது ஒரு கதை இருக்கும். இதன் மூலம் மரங்களை சிவரூபமாகவும், விஷ்ணு ரூபமாகவும், சக்தி ரூபமாகவும் வழிபடும் வழக்கம் தோன்றியது.

    அரச மரம் சிவ ரூபம் வேப்ப மரத்தை சக்தி வடிவம் என்பார்கள். அதனால் தான் அரசும், வேம்பும் ஒரே இடத்தில் ஒன்றொடொன்று இணைந்து வளர்ந்திருக்கும் இடத்தை சிவசக்தி உறையும் இடமாக கருதி வணங்கி வழிபாடு செய்கிறோம்.

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வேப்ப மரத்தை மாரியம்மனாகவே கருதி வழிபடும் வழக்கம் உள்ளது. மாரியம்மனுக்கு `வேப்பிலைக்காரி' என்ற பெயர் ஏற்பட்டதே இதனால் தான்.

    இதே போல ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு ஆற்றல் உண்டு.

    குறிப்பாக மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வம், வன்னி, மகிழ் - போன்ற மரங்களை - தற்காலத்தில் கோவிலைத் தவிர வேறு இடங்களில் பார்ப்பதே அரிதாக இருக்கின்றது. தமிழிலக்கியங்கள் போற்றும் கொன்றையும், மருதமும் எத்தனை மகத்துவம் நிறைந்தவை!..

    தெய்வாம்சமும் பேரருளும் பெற்ற கொன்றை மரங்களும், மருத மரங்களும் நம் தமிழகத்திற்கே உரித்தான மரங்கள். கோவில்களில் தல விருட்சங்களாக விளங்கி சகல துன்பங்களையும் நீக்கி, எந்த நோயும் வராமல் காப்பவை. பிள்ளையார் பட்டியிலும் திருஇடைமருதூரிலும் தலமரமாக விளங்குவது மருத மரம்.

    கொன்றை, வில்வம், ஆல், வன்னி, மகிழ் - ஆகியன சிவபெருமானின் அம்சங்கள். இம்மரங்களின் கீழிருந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். வில்வ இலைகளால் சிவபெருமானைப் பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.

    பந்தநல்லூர், அச்சிறுபாக்கம் முதலிய தலங்களின் தலமரம் - கொன்றை. ஸ்ரீரங்கத்தில் மஹாலட்சுமியின் சந்நிதிக்கு அருகில் வில்வம் உள்ளது.

    திருவையாறு, தஞ்சை ராமேஸ்வரம், திருவெண்காடு, திருவைகாவூர் - இன்னும் பல சிவ தலங்களின் தலமரம் - வில்வம். பெரும்பான்மையான கோவில்களில் வில்வம் முதலிடம் பெற்று விளங்குகிறது.

    திருஆலங்காடு, திருஆலம்பொழில், திருப்பழுவூர் - முதலிய திருத்தலங்களின் தலமரமாக ஆல மரம் உள்ளது. திருப்பூந்துருத்தி, திருவான்மியூர், தஞ்சை ஆகிய தலங்களின் தலமரம் - வன்னி.

    வில்வத்திற்கு அடுத்து அதிக தலங்களில் விளங்கும் பெருமையை உடையது - வன்னியே. குளிர்ந்த நிழலையும் மணம் கமழும் மலர்களையும் உடையது மகிழ் மரம். இது வகுளம் எனவும் புகழப்படுகிறது.

    திருவண்ணாமலை, திருவொற்றியூர், தஞ்சை ஆகிய தலங்களில் மகிழ மரம் தல விருட்சமாக விளங்குகின்றது. சந்தன மரம், அத்தி மரம் - விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் இன்றி சுபகாரியங்களும், பூஜைகளும் ஏது!.. சந்தன மரத்திலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றன என்கின்றனர்.

    ஸ்ரீ வாஞ்சியத்தில் தலமரமாக - சந்தனமரம் உள்ளது. காஞ்சி வரதர் அத்தி மரத்தினால் ஆனவர். மயிலாடுதுறையை அடுத்த கோழி குத்தி வானமுட்டிப் பெருமாளும் அத்தி மரத்தில் விளங்குபவரே!.. வீடுகளில் சுபகாரியங்கள் நிகழும் போது - கட்டப்படும் மாவிலைத் தோரணங்களின் அழகே அழகு! மா மரம் - காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் - திருத்தலங்களின் தலமரமாக திகழ்கிறது.

    நெல்லி மரத்தின் கீழிருந்து தானம் செய்தால், தானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும் என்பார்கள். நெல்லி - திருநெல்லிகா, திருநெல்வாயில், பழையாறை முதலிய திருத்தலங்களின் தலமரமாகும். மாதுளை மரத்தின் கீழ் விளக்கேற்றி வைத்து - இளந்தம்பதியர் வலம் வந்து வணங்க தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு அகலாது இருப்பர். திருவாவடுதுறை, திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களின் தலமரம் -அரசு. அரச மரத்தின் வேர்களில் மஞ்சள் நீர் ஊற்றி நெய்தீபம் ஏற்றி வர புத்ர தோஷம் நீங்கும்.

    இலுப்பை எண்ணெய் கொண்டு ஆலயத்தில் தீபம் ஏற்றுவதன் மூலம் காரிய சித்திகள் பல கைவரப் பெறும் என்பது அசைக்க முடியாத உண்மை. இலுப்பை மரம், தலமரமாக விளங்கும் திருத்தலம் - திருச்செங்கோடு ஆகும்.

    புளிய மரம், கருவேல மரம், எட்டி மரம் - ஆகியன தீய அதிர்வுகளை வெளிபடுத்தக்கூடியன. இவற்றின் நிழல் - உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும். இதனாலேயே - இந்த மரங்களை வீட்டுக்கு எதிரில் வளர்ப்பதில்லை. இந்த மரங்களுக்கு மருத்துவ குணங்கள் இருப்பினும் - காய் மற்றும் வேர்களை தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகளுக்கு இம்மரங்களே அடைக்கலம் கொடுக்கும் என்பார்கள்.

    லிங்கத்தின் மீது நாகம் குடை பிடித்தாற்போல அற்புத வடிவம் கொண்டு திகழ்வது நாகலிங்கப் பூவாகும். இந்த நாகலிங்க மரம் சுற்றுப்புற காற்றில் உள்ள தூசியை வடிகட்டி தூய்மையாக்கும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை - புலியூர் பரத்வாஜேஸ்வரர் ஆலய தல விருட்சமாக நாகலிங்க மரம் உள்ளது.

    சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் எனும் நால்வருக்கும் சிவபெருமான் யோக நிலையில் குருமூர்த்தியாக வீற்றிருந்து ஞானோபதேசம் செய்வித்தது ஆலமர நிழலில்! அந்த எம்பெருமான் அளந்த ஒரு நாழி நெல்லினைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது இயற்றியவளாய் அம்பிகை தவமிருந்தது - மாமர நிழலில்! திருத்தலம் - மாங்காடு! அம்பிகை கம்பை ஆற்றின் கரையில் மாமர நிழலில் - மணலில் சிவலிங்க ஸ்தாபனம் செய்து வழிபட்ட திருத்தலம் - காஞ்சி!

    அம்பிகை மயில் வடிவாக எம்பெருமானைப் பூஜித்தது புன்னை வனத்தில்!.. அந்த புன்னை வனமே திருமயிலை!.. அம்பிகை - ஐயனை வழிபட்ட தலங்களுள் சிறப்பானது திருவானைக்காவல் ஆகும். இங்கே - தல விருட்சமாக - நாவல் மரம் உள்ளது. விக்னங்களைத் தீர்த்தருளும் விநாயகப்பெருமானுக்கு உகந்தவை அருகம் புல்லும் எருக்கம்பூவும்!.. சுந்தரர் - சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, நான் உன்னைப் பிரியேன் என்று சங்கிலியாரிடம் வாக்களித்தது திருவொற்றியூர் மகிழ மரத்தின் கீழாகும்.

    சீர்காழியில் - பாரிஜாதம், திருநெல்வேலியில் - மூங்கில் தலமரங்களாக உள்ளன. பஞ்ச பாண்டவர்கள் - தமது அஞ்ஞாத வாசத்தின் போது ஆயுதங்களையும் மந்த்ராஸ்திரங்களையும் பொதிந்து வைத்த மரம் -வன்னி மரமாகும். எமதர்மன் பணி செய்து வணங்கும் திருப்பைஞ்ஞீலியில் தலமரமாக -வாழை உள்ளது. இந்த வாழை மரம் திருமண தோஷத்தை விரட்டக் கூடியது.

    பட்டுக்கோட்டையில் இருந்து கிழக்கே முத்துப்பேட்டை சாலையில் தாமரங்கோட்டை கிராமத்திற்கு அடுத்ததாக இருக்கும் பரக்கலக்கோட்டை கிராமத்தில் ஆல மரமே கடவுளாக வழிபடப்படுகிறது. தாமரங்கோட்டையிலிருந்து வடக்கே - இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் அத்திவெட்டி பிச்சினிக்காடு.

    இந்த கிராமத்தில்- ஆவாரங்காட்டுக்குள் ஒற்றைப் பனைமரம் உள்ளது. பனையின் கீழ் சிறு கொட்டகை மட்டுமே.. மற்றபடி மாலை சந்தனம் குங்குமம் எல்லாம் -ஒற்றைப் பனைக்கே!..

    இந்த ஒற்றைப் பனையில் - சத்தியத்தின் வடிவாக - குடிகொண்டு அருள்பவர் - ஸ்ரீவைரவர். நம் பக்கம் நியாயம் இருந்து, வைரவா!.. நீ கேள்!.. என்று முறையிட்டால் போதும் தலவிருட்சம் உதவும் என்கிறார்கள்.

    மதுக்கூரில் புகழ் பெற்ற பெரமையா சுவாமி கொலு இருப்பது மரக் கூட்டங்களில் தான்!. அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்ரீ காளி குடி கொண்டிருப்பது - உடை மரம் எனும் ஒருவகை அபூர்வ மரத்திலாகும்.

    திருமழபாடியில் - பனை ஆடுதுறையில் - தென்னை மரங்கள் தல விருட்சகமாக உள்ளன. அபிராம வல்லியும் அமிர்தகடேஸ்வ உறையும் திருக்கடவூரில் தலவிருட்சம் - முல்லைக் கொடியாகும்.

    முருகன் பாதங்கள் பதிய நடந்தருளிய திருத்தலம் திருவிடைக் கழி. இங்கே, தல விருட்சம் - குரா மரம்.

    தல விருட்சம் இருந்த இடங்கள் ஒரு காலத்தில் அந்தந்த மரங்களுக்குரிய வனமாக இருந்ததாக சொல்வார்கள். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் பஞ்ச வனதலங்கள் உள்ளன. அவை வருமாறு:-

    திருக்கருகாவூர் - முல்லை வனம்

    திருஅவளிவ நல்லூர் - பாதிரி வனம்

    திருஅரதைப் பெரும்பாழி (ஹரித்வார மங்கலம்) - வன்னி வனம்

    திருஇரும்பூளை (ஆலங்குடி) - பூளை வனம்

    திருக்கொள்ளம்பூதூர் - வில்வ வனம்..

    சைவ வைணவ சமயங்களும், புத்த சமயமும் அரச மரத்தைப் புனிதமாகக் கருதுகின்றன. இது பிப்பலாச விருட்சம், அரணி, அஷ்வதா - என்று பலவாறு அழைக்கப்படுகின்றது. இது ஆலமரம், அத்திமரம் போன்று புனிதத் தன்மை கொண்டது.

    சரஸ்வதி நதியானது நான்முகனின் கமண்டலத்தில் இருந்து தோன்றி பலாசம் எனும் அரச மரத்தினுள் ஊடுருவி வெளிப்பட்டு இமாசல மலையில் வழிந்து ஓடிவருகின்றது - என கந்த புராணம் குறிப்பதாக சான்றோர்கள் கூறுகின்றனர்.

    வாழ்வின் அர்த்தம் தேடி - அரண்மனையின் சுக போகங்களைத் துறந்து ஞானம் தேடிப் புறப்பட்ட சித்தார்த்தர் - ஒருநிலையில் ஞானம் எய்தி, கவுதம புத்தர் ஆனார் என்பது வரலாறு.

    சித்தார்த்தர் அமர்ந்து தியானம் செய்தது - அரச மரத்தின் நிழலில் தான். சைவத்தில் - அரச மரம், ஞான விருட்சம் எனக் குறிக்கப்படுகின்றது.

    நாயன்மார்களுள் ஒருவராகத் திகழும் திருமூலர்- மூலன் எனும் இடையனின் உடம்பிற் புகுந்த சிவயோகியார். இவர் கயிலை மாமலையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர். இவரே மகத்தான திருமந்திரம் அருளியவர்.

    திருவாவடுதுறைத் திருக்கோயிலை வழிபட்டு அங்குள்ள அரசமரத்தின் நீழலில் பல்லாண்டுகள் இவர் சிவயோகத்தில் அமர்ந்திருந்தவராவார்.

    புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த அரசின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய முடியும் என்பர். அரச மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் தெய்வ சிந்தனை ஊற்றெடுக்கும். ஞானம் கிட்டும்.

    ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில் அவதரித்து - பதினாறு ஆண்டு காலம் - சடகோபன் என தவமிருந்து - நம்மாழ்வார் என ஞான பேரொளியாக வெளிப்பட்டது புளியமரத்தின் அடியிலாகும்.

    இப்படி தல விருட்சத்தின் மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்த வாரம் ஆலயத்தின் முக்கிய பகுதியான தீர்த்தம் பற்றி பார்க்கலாம்.

    • கர்ப்பகிரகத்துக்குள் அங்காள பரமேசுவரி சிவபெருமானுடன் அமர்ந்துள்ளாள்.
    • அங்காளம்மனின் உருவம் சிவபெருமான் உருவ அமைப்பை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ளது.

    மேல்மலையனூரில் அங்காளம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறாள். ஆங்காரமாகவும அகோரமாகவும் இருந்த அன்னை திருவண்ணாமலை சென்று புனித நீராடி தன் சுயஉருவம் பெற்று மீண்டும் மேல்மலையனூர் வந்து அமர்ந்தாள் என்பது புராண வரலாறாகும்.

    அதனால் தானோ என்னவோ தமிழ்நாட்டில் உள்ள மற்ற சக்தி தலங்களை விட இத்தலத்தில் அங்காள பரமேஸ்வரி சற்று வித்தியாசமாக காணப்படுகிறாள். அங்காளம்மனை நன்கு உன்னிப்பாக பார்த்தால் அவள் ஆவேசத்துடன் இருப்பது போல தோன்றும்.

    பொதுவாக வடக்கு திசை நோக்கி இருக்கும் கடவுள்கள் ஆவேசத்துடன் காணப்படுவார்கள் என்று சொல்வார்கள். அதை உறுதிப்படுத்துவது போல அங்காள பரமேசுவரி தோற்றம் அமைந்துள்ளது.

    நாம் மகிழ்ச்சியுடன் பார்த்தால் அவளும் நம்மை மகிழ்ச்சியுடன் பார்ப்பது போல இருக்கும் என்றார். அது உண்மை தான் என்பதை கருவறை அருகில் சென்று வரும் ஒவ்வொரு பக்தரின் அனுபவமாக உள்ளது.

    கர்ப்பகிரகத்துக்குள் அங்காள பரமேசுவரி சிவபெருமானுடன் அமர்ந்துள்ளாள். பொதுவாக சிவசக்தி ஒருங்கே காணப்படும் போது அம்பாள் அருகில் ஈசனை லிங்க வடிவில் தான் வைத்திருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் மட்டும் அம்பிகை அருகில் ஈசன் மானிட உருவில் இருக்கிறார்.

    இத்தகைய சிவசக்தி அமைப்பு தமிழ்நாட்டில் மேல்மலையனூரில் மட்டுமே இருப்பதாக சொல்கிறார்கள். இத்தலத்தின் சிறப்புகளில் இந்த கருவறை அம்சம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.

    அம்மன் சிம்ம வாகனத்தில் சற்று பின்னோக்கி மல்லாந்த நிலையிலும் ஈசன் ரிஷப வாகனத்திலும் உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒரே பீடத்தில் அமர்ந்துள்ளனர். அங்காள பரமேசுவரி இந்த அமைப்பில் மல்லார்ந்த பார்வையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

    அங்காள பரமேஸ்வரி தன் இடது காலை மடித்து வலது காலை பிரம்மன் தலை மீது வைத்திருப்பது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் காலடியில் மேலும் 4 தலைகள் உள்ளது. அரக்கர்களை அங்காளம்மன் தன் காலில் மிதித்து வைத்திருப்பதாக இது உணர்த்துகிறது.

    அங்காள பரமேஸ்வரிக்கு முழுமையான மலர் மாலை அலங்காரம் செய்து விடுவதால் பக்தர்களுக்கு இந்த வடிவ அமைப்பு தெரிய வாய்ப்பில்லை.

    அங்காளம்மனின் உருவம் சிவபெருமான் உருவ அமைப்பை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ளது. அவளது 4 கரங்களில் முன் கரங்களில் கத்தி, கபாலம் வைத்துள்ளாள். பின் கரங்களில் உடுக்கையும் சூலமும் தரித்துள்ளாள். தலையில் நாக மகுடம் சூடி இருக்கிறாள். இவற்றையெல்லாம் கண்டு உள்ளம் உருக வழிபட்டால் மனதில் உள்ள கவலைகள் நீங்கி மனம் லேசாகி விடும்.

    திருமணம் கைக்கூடும்

    நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்பெண்ணெய் இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை சம அளவு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் இந்த கூட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

    இந்த தீபத்துக்கு புதிய சிவப்பு நிறத்துணியை திரியாக பயன்படுத்த வேண்டும். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும். அதன்பிறகு 108 அங்காளம்மன் போற்றி சொல்ல வேண்டும். அது முடிந்ததும் அங்காள பரமேசுவரிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.

    • கருவறையில் இருந்து எடுத்து தரப்படும் குங்குமத்துக்கு அளவற்ற சக்தி உண்டு.
    • பெண்களின் தலை வகிட்டு நுனியில் லட்சுமி இருப்பதாக ஐதீகம்.

    மேல்மலையனூர் அங்காள பரமேசுவரியை பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்களது குலதெய்வமாக போற்றி வழிபடுகிறார்கள். அவர்கள் அடிக்கடி இத்தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றாலும் ஆடி மாதம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வந்து வழிபடுவதையே சிறப்பாகவும் புண்ணியம் தருவதாகவும் கருகிறார்கள்.

    குறிப்பாக ஆடி மாதம் செவ்வாய் கிழமைகளில் இத்தலத்துக்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவதை கடமையாக கொண்டுள்ளனர். இதனால் ஆடி மாதம் முழுவதும் மேல்மலையனூரில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைகளாகவே உள்ளன. கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வருகிறார்கள்.

    ஆலய வளாகத்துக்குள் நுழைவு வாயிலின் அருகே பொங்கல் வைப்பதற்கு என்றே பிரத்தியேகமாக ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அங்கு பெண்கள் பொங்கலிடுகிறார்கள்.

    பொங்கல் தயாரானதும் அதன்மீது மூடியில் பச்சரிசி மாவை பிசைத்து மாவிளக்கில் தீபம் ஏற்றி உள்ளே எடுத்துச் செல்வார்கள். அந்த பொங்கலை அப்படியே அங்களம்மனுக்கு தீபாராதனையாக காட்டி வழிபடுகிறார்கள். ஆடி மாதம் முழுவதும் இந்த காட்சியை அதிகமாக இத்தலத்தில் காணலாம்.

    மங்கலம் தரும் குங்குமம்

    அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் கருவறையில் இருந்து எடுத்து தரப்படும் குங்குமம் பிரசாதத்துக்கு அளவற்ற சக்தி உண்டு.

    ஆத்மார்த்தமாக யார் ஒருவர் அந்த குங்குமத்தை தம் நெற்றியில் பூசிக் கொள்கிறார்களோ அவர்களுக்கு அங்காளம்மனின் மகத்துவம் புரியும். பொதுவாகவே குங்குமம் என்பது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் மங்கலத்தை தரக்கூடியது.

    பெண்களின் தலை வகிட்டு நுனியில் லட்சுமி இருப்பதாக ஐதீகம். அதில் குங்குமம் வைப்பது பெண்களுக்கு மங்கலத்தை உண்டாக்கும்.

    மேல்மலையனூரில் குங்கும பிரசாதம் பெறும்போது மிகவும் பணிவாக பவ்வியமாகப் பெற வேண்டும். பிறகு அதை வலது கை மோதிர விரலால் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். இது எல்லா வித நன்மைகளையும் தரும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    கட்டை விரலால் குங்குமம் அணிந்தால் தைரியம் பிறக்கும். ஆள்காட்டி விரலால் குங்குமம் பூசினால் நிர்வாகத்திறமை மேம்படும். நடுவிரலால் குங்குமம் வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.

    அங்காளம்மன் காயத்ரி

    ஓம் காளிகாயை வித்மஹே மாதாஸ்வ ரூபாயை தீமஹி தன்னோ அங்காளி ப்ரசோதயாத்

    என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.

    ×