என் மலர்
நீங்கள் தேடியது "ஆடிப்பெருக்கு"
- பெண்கள் படித்துறையில் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர்.
- வாழை மட்டையில் தீபத்தை வைத்து காவிரி ஆற்றில் மிதக்கவிட்டனர்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அதில் ஆடி மாதத்திற்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. குலதெய்வ வழிபாடும், அம்மன் வழிபாடும் ஆடி மாதத்தில் தான் செய்யப்படுகிறது.
பொதுவாக உலகின் நாகரிகங்கள் நதிக்கரையில் தோன்றியதாக கூறுவார்கள். நதிகள் தான் மனித வாழ்க்கையின் ஆதாரம். விவசாயம் தோன்றியது நதிக்கரையில் தான். அதனால் தான் நதிகளை தமிழர்கள் அன்னையாய், தெய்வமாய் போற்றுகிறார்கள். அப்படி சிறப்பு வாய்ந்த நதியின் கரையில் கொண்டாடப்படுவது தான் ஆடிப்பெருக்கு விழா.
அதன்படி இன்று காவிரி கரையோரப்பகுதிகளில் ஆடி மாதம் 18-ந் தேதி எனப்படும் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி கரைகளில் வெகு விமர்சையாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியை பெண்ணாக, தாயாக பாவித்து வணங்கி போற்றும் ஆடிப்பெருக்கு என்னும் மங்கள விழா கொண்டாடப்பட்டது.
தஞ்சையை அடுத்த திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்ய மண்டப படித்துறைக்கு இன்று காலை முதலே பெண்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்தனர். காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
பின்னர் பெண்கள் படித்துறையில் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். மேலும் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, வளையல், அரிசி, வெல்லம், பேரிக்காய், கொய்யா, மாதுளை, விளாம்பழம் ஆகியவற்றை வைத்து விளக்கேற்றினர்.
தொடர்ந்து மா விளக்கு, அரிசி, வெல்லம் கலந்த காப்பு அரிசி ஆகியவற்றை வைத்து சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட வாசனைபொருட்களை ஏற்றி வழிபாடு செய்ததுடன் மஞ்சள் பிள்ளையாருக்கும், காவிரி தாய்க்கும் தாம்பூலத்தட்டில் கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர்.
மஞ்சள் கயிறு வழிபாடு முடிந்தவுடன் புத்தாடை அணிந்து வந்திருந்த புதுமண தம்பதியினர் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து திருமணத்தின்போது தாங்கள் அணிந்து இருந்த மாலைகளை பைகளில் பத்திரமாக கொண்டு வந்து அவற்றை காவிரி ஆற்றில் புதுமண தம்பதியினர் விட்டனர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டனர்.
அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், நல்ல மணமகன் கிடைக்க வேண்டியும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். திருமணமாகாத ஆண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி மஞ்சள் கயிற்றை கைகளில் கட்டிக்கொண்டனர்.

புதுப்பெண்களுக்கு தாலியை பிரித்து கட்டும் நிகழ்வும் காவிரி படித்துறையில் நடந்தது. திருமணத்தின்போது கட்டப்பட்டிருந்த தாலிகயிறுக்கு பதிலாக புது தாலி கயிற்றை அணிந்து கொண்டனர். பின்னர் வாழை மட்டையில் தீபத்தை வைத்து காவிரி ஆற்றில் மிதக்கவிட்டனர்.
தொடர்ந்து படித்துறை அருகில் உள்ள வேப்பமரம், அரசமரங்களை மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி பெண்கள் சுற்றி வந்து நாகர் சிலைகளுக்கு மஞ்சள், குங்குமத்தை வைத்து மஞ்சள் கயிற்றை கட்டி விட்டு, நாகர், சந்தான கணபதி, சோமசுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பின்னர் சாமிக்கு படைக்கப்பட்ட வெல்லம் கலந்த பச்சரிசி மற்றும் பழ வகைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். சிறுவர்கள் சிறிய சப்பரங்களை இழுத்து வந்து மகிழ்ந்தனர்.
ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கோலாகலமாக கொண்டாடினர்.
தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள படித்துறை, வெண்ணாறு படித்துறை, எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கல்லணைக்கால்வாய் படித்துறை, வடவாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் புதுஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவிப்பு பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம், திருவிடைமருதூர், சுவாமிமலை, பாபநாசம், திருப்பனந்தாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சிறுவர்கள் காவிரி ஆற்றங்கரைகளில் சப்பரத்தில் சுவாமி படங்களை வைத்து அலங்கரித்து இழுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் மீண்டும் சப்பரத்தை வீட்டுக்கு இழுத்து வந்தனர்.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி படித்துறைகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு வீரர்களும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- ஆடிப்பெருக்கு நன்னாளில் நீர்நிலைகளில் நீராடி வணங்க வேண்டும்.
- காவிரியை போல் அந்த பெண்ணின் வாழ்வும் சிறக்கும்.
'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்றொரு பழமொழி உண்டு. இது வெறும் பழமொழி அல்ல. நீரின்றி அமையாது உலகு என்பதுதானே உண்மை. அதேபோல், நம் வாழ்வில், எல்லா சடங்கு சாங்கிய நிகழ்வுகளின் போதும் தண்ணீருக்கும் நமக்குமான பந்தம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அப்படியொரு உணர்வுபூர்வமான நன்னாள்தான் ஆடிப்பெருக்கு விழா!
ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள், ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும். கோடைக் காலம் முடிந்து, அந்த வெயிலில் மண்ணெல்லாம் பாளம் பாளமாக வெடித்து, ஆடிக் காற்றில் அந்த மண்ணுக்குள் காற்று நிரம்பியிருக்க, ஆடி மாதத்தில் சாகுபடிக்கு பூமியே தயாராக இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல, காவிரி முதலான நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். விவசாயம் அதன் பின்னர், சீரும் சிறப்புமாக செழிக்கும். தானியம் பெருகும்.
முக்கியமாக, ஆடிப்பெருக்கு நன்னாளில் நீர்நிலைகளில் நீராடி வணங்க வேண்டும். நீறை வணங்க வேண்டும். தாம்பத்ய வாழ்வு சிறக்கும். இந்த நாளில், வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் நீர்நிலைகளில் நீராடுவார்கள் வணங்குவார்கள்.
வீட்டிலிருந்தபடியே காவிரித்தாயை வணங்குவோம். காலையில் புதிதாகத் திருமணமான பெண்கள் அணிந்திருக்கும் தாலியை மாற்றிக் கொள்ளும் வைபவமும் இந்தநாளில்தான் நடைபெறும்.
எனவே, அதிகாலையில் நீராடுங்கள். மனதில் காவிரியை நினைத்துக்கொண்டு நீராடினால், அந்த காவிரியானது நம் வீட்டில் தண்ணீரில் கலந்து விடுவதாகவும் ஐதீகம்.
புதிய மஞ்சள் சரடுடன் புதிய தாலியை பெண்கள் அணிந்து கொள்ளுங்கள், கன்னிப் பெண்களுக்கும் வேண்டிக்கொண்டு, புதிய மஞ்சள் அணிவிப்பதும் வழக்கம். இதனால் காவிரியை போல் அந்த பெண்ணின் வாழ்வும் சிறக்கும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்பது ஐதீகம்.
தம்பதிக்குள் பிரிவினை ஏற்பட்டாலும், கருத்து வேறுபாடுகளை களைந்து மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதை வலியுறுத்தவே புதுமணத் தம்பதியை அந்த ஒருமாதத்தில் பிரித்து வைப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. புதிதாக திருணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்ற தனது பெண்ணை, இந்த மாதத்தில் பெண்ணை பெற் தாயார் சீர் செய்து தன் வீட்டுக்கு அதாவது பெண்ணின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வருவார்.
ஆடி மாதமான இந்த மாதத்தில் தன் தாய் வீட்டில் இருக்கும் பெண், அனைத்து சாஸ்திர - சம்பிரதாயங்களையும் கற்றறிவாள். சடங்கு சாங்கியத்தை எப்படி மேற்கொள்வது, எல்லோரையும் அனுசரித்து குடும்பம் நடத்துவது எப்படி என்பதையெல்லாம் அறிவாள். அதன்படி புகுந்த வீட்டில் பெயரெடுத்து வாழ்வாள். பெருமைபட வாழ்வாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
- பூஜை முடிந்தவுடன் புது கயிரை எடுத்து தங்கள் கணவரின் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும்.
- ஆடிப்பெருக்கன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
ஆடிப்பெருக்கு அன்று அனைவரும் நீர் நிலைகளுக்கு சென்று விரதமிருந்து பூஜைகள் செய்வார்கள். அப்படி நீர் நிலைகளுக்கு சென்று பூஜை செய்ய முடியாதவர்கள் வீட்டிலிருந்தே விரதமிருந்து பூஜை செய்து கடவுளின் அருளைப் பெறலாம். தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஆடிப்பெருக்கு தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து வாசல் தெளித்து வீட்டைத் துடைத்து மாக்கோளமிட்டு, நீராட வேண்டும். பூஜையறையில் சாமி படங்களை பூக்களால் அலங்கரித்து புது மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், பழம், பத்தி, கற்பூரம், வெற்றிலை பாக்கு, தேங்காய் முதலான பூஜைக்குத் தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு நிறைகுடத்தில் இருந்து கலச சொம்பில் நீர் எடுத்து அரைத்து வைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். அந்த கலச நீரை விளக்கேற்றி அதன் முன் வைத்து, தீபாராதனை செய்து, கங்கை, யமுனை, சரஸ்வதி, வைகை, காவிரி உள்ளிட்ட புனித நதிகளை மனதில் நினைத்து மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு முடிந்த பின்னர் அந்த தீர்த்தத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தலையில் தெளித்துக்கொண்டு, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். எஞ்சிய நீரை வீட்டிலுள்ள மரம், செடிகளுக்கு ஊற்றி விடலாம்.

பூஜை முடிந்தவுடன் புது கயிரை எடுத்து தங்கள் கணவரின் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறை தாலியாக பாவித்து கட்டிக்கொள்ள அடுத்த ஆடிக்குள் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வசதி இருப்பின் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து அவர்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், இரவிக்கைத் துண்டு, கொஞ்சம் இனிப்பு சேர்த்து கொடுக்கலாம். இந்த பூஜையின் போது நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம். நீர்நிலைகளுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், வீட்டிலிருந்த படியே கடவுளை வழிபட்டு அதன் பலன்களைப் பெறலாம்.
ஆடிப்பெருக்கன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் அரிசி, பருப்பு முதலான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆடிப் பெருக்கென்று புதிய தொடக்கம் வளர்ச்சியைத் தரும் என்பது நம்பிக்கை.
- ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர்.
- திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள்.
ஆடி மாதத்தில் வரும் 18-ந் தேதியை ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது. இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கிறோம். பொதுவாக தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படியாக கொண்டு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இந்த ஆடிப்பெருக்கு விழா மட்டும் ஆடி மாதம் 18-வது நாள் என நாளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. தென்மேற்கு பருவத்தில் பெய்யும் மழையினால் அனைத்து ஆறுகளும் நிரம்பி வழியும். இதையே ஆற்றுப்பெருக்கு என்பர். இதனால் உழவர்கள் நம்பிக்கையுடன் விதை விதைப்பர். இந்த சமயத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தான், தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இதற்காக நதிகளை தெய்வமாக கருதி போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து, பின் உழவு வேலையை தொடங்குகின்றனர். இதனால் தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் உருவானது.
இந்த விழா தமிழ் பண்பாட்டின் சிறப்புவாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர். அன்றைய தினம் மக்கள் ஆற்றில் குளித்துவிட்டு, ஆற்றங்கரையில் பூஜை செய்வதற்கு ஒரு இடத்தை பிடித்துக்கொள்கின்றனர். அந்த இடத்தை பசு சாணத்தால் மெழுகி சுத்தம் செய்து, அதன்மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.

மேலும் வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம், பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காண்பித்து வழிபடுகின்றனர். தங்களுக்கு தடங்கல் இல்லாத விளைச்சல் வேண்டி நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டில் பலவிதமான கலப்பு உணவுகளை தயார் செய்து வந்து, ஆற்றங்கரையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியோடு உணவை உண்பார்கள்.
ஆடிப்பெருக்கு அன்று புதிதாக திருமணமானவர்கள், தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கி விட்டு, புதிய மஞ்சள் கயிற்றை தன் கணவன் கையால் கட்டிக்கொள்வர். இதன்மூலம் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பதும், வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த ஆடி மாதத்திற்குள் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் என்கிறார்கள்.
திருச்சி திருவரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும். ஆடிப்பெருக்கு நாளன்று திருவரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு, அம்மா மண்டபம் படித்துறைக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்கலப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைப் பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அறப் பளீசுவரரை தொழுவது வழக்கம். பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.
- ஆடி மாதத்தில் பொதுவாக பத்திரப்பதிவுகள் குறைவாக இருக்கும்.
- இந்த முறை ஆடிப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமையான நாளை வருகிறது.
சென்னை
ஆடி மாதத்தில் பொதுவாக பத்திரப்பதிவுகள் குறைவாக இருக்கும். ஆனால் ஆடிப்பெருக்கு தினத்தன்று (ஆகஸ்டு 3-ந்தேதி) மிகுந்த நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடக்கும்.
அந்த மாதத்தின் இதர நாட்கள் மூலம் கிடைக்கும் மொத்த பத்திரப்பதிவு வருமானத்தை விட, அன்றைய தினம் நடக்கும் பத்திரப்பதிவின் வருமானம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த முறை ஆடிப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமையான நாளை வருகிறது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் பத்திரப்பதிவுகள் நடக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக முகூர்த்த மற்றும் நல்ல நாட்களில் அதிகளவு பத்திரப்பதிவுகள் நடக்கும் என்பதால் அன்றைய தினங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறப்பதற்கு பத்திரப்பதிவுத்துறை முன்பு திட்டமிட்டது.
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முகூர்த்த நாளன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் அன்றைய தினம் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் அன்றைய தினம் பணிக்கு வரவில்லை. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு வேண்டாம் என்று பத்திரப்பதிவு துறை முடிவு செய்துவிட்டது. அந்த அடிப்படையில்தான் ஆடிப்பெருக்கு நாளன்றும் பதிவுகள் கிடையாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் 3,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஆடுகளை வாங்கி சென்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு மங்களூர், பெரியநெசலூர், காட்டுமயில், கழுதூர், சிறுப்பாக்கம், கொத்தனூர், வேப்பூர், தியாகதுருவம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் 3,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆடிப்பெருக்கு நாளைமறுநாள் (3-ந்தேதி) கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது. வாரச்சந்தையில் சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஆடுகளை வாங்கி சென்றனர்.
இதில் கொடிஆடு, கருப்பாடு, வெள்ளாடு, ஜமுனா பூரி, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளாடு உள்ளிட்ட 8 விதமான ஆட்டுரகங்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. கடந்த வாரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமான நிலையில், ஆடிப்பெருக்கையொட்டி இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தை விட கூடுதலாக ஆடுகளை வாங்கி குவித்தனர்.
- வெள்ளாடு, செம்மறி ஆடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடுகளும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள இந்த சந்தை வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு தியாகதுருவம், திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆடிப்பெருக்கு வருகின்ற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது.
இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய வாரச்சந்தையில் சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தை விட கூடுதலாக ஆடுகளை வாங்கி குவித்தனர்.
இதில் வெள்ளாடு, செம்மறி ஆடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடுகளும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.
கடந்த வாரம் சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆன நிலையில், ஆடிப்பெருக்கையொட்டி இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
- சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிளாம்பாக்கம்:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1-ந்தேதி வெள்ளிக்கிழமை, 2-ந் தேதி சனிக்கிழமை மற்றும் 3-ந்தேதி ஞாயிறுக்கிழமை ஆடிப்பெருக்கு (ஆடி-18) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 1-ந்தேதி வெள்ளிக்கிழமை 340 பஸ்களும், 2-ந்தேதி சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 1-ந்தேதி 55 பஸ்களும் 2-ந் தேதி (சனிக்கிழமை) 55 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்தில் இருந்து 1-ந்தேதி 20 பஸ்களும், 2-ந் தேதி 20 பஸ்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 6,224 பயணிகளும் சனிக்கிழமை 2,892 பயணிகளும் மற்றும் ஞாயிறு 6,695 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம்.
- ‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான திருவிழாக்களும் நடைபெறும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, கிராம தெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, திருமால் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு என அனைத்து தெய்வ வழிபாட்டிற்கும் இந்த மாதம் ஏற்றதாகும்.
ஆடி மாதத்தில்தான் தட்சணாயனம் தொடங்குகிறது. தட்சணாயனம் என்பது சூரிய பகவான் வடதிசையில் இருந்து தென் திசை நோக்கி பயணம் செய்யும் காலமாகும். இது ஆடி மாதம் தொடங்கி மார்கழி வரை ஆறு மாதங்களை கொண்டதாகும். இந்தக் காலம் முழுவதும் தேவர்களுக்கு இரவு பொழுதாக கருதப்படுகிறது. இந்த புண்ணிய காலத்தில் நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை போன்ற சிறப்பு வாய்ந்த நாட்கள் வருகின்றன.
ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். அன்றைய தினம் திருவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் நந்தவனத்துக்கு எழுந்தருள்வார். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாடி வழிபட வேண்டும். இதனால் நாம் வேண்டிய அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும். அதுபோல ஆடி பவுர்ணமி தினத்தில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே அன்றைய தினம் வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டால் அன்னையின் மனம் குளிர்ந்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.
சிலர் ஆடி மாதத்தை 'பீடை மாதம்' என்று சொல்வார்கள். இது அவர்களது அறியாமையால் கூறுவதாகும். உண்மையில் 'பீட மாதம்' என்றுதான் அதற்குப் பெயர். அதாவது இறைவனை நமது மனமாகிய பீடத்தில் வைத்து வழிபட வேண்டிய மாதம் என்பதே இதன் உண்மையான பொருள்.
பொதுவாக வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த தினமாகும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். அம்மனை வழிபடும்போது லலிதா சகஸ்ர நாமம் சொல்லி வழிபட வேண்டும். ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை அள்ளித் தரும்.
'ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது பழமொழி. அதாவது பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமணப் பாக்கியம், குழந்தை பாக்கியம், செல்வம் மற்றும் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிய வேண்டும். பின்பு சூரிய உதயத்துக்கு முன்பாக சாணத்தைப் பிள்ளையாராக பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அருகம்புல் கொண்டு பிள்ளையாரை பூஜிக்க வேண்டும். வாழை இலையில் நெல் பரப்பி, அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட்டால் செல்வம் செழிக்கும்.
ஆடி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, கருப்பு ஊமத்தம் பூமாலை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எத்தகைய பகைமையும் விலகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.
- சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி.
- ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும்.
ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒருநாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது ஆடிப்பெருக்கில்...
காவிரி நீர் அபிஷேகம்!
நாமக்கல்லில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மோகனூர். இந்த தலத்தில் உள்ள சுவாமியின் திருநாமம் ஸ்ரீ அசலதீபேஸ்வரர். மூலவரின் சன்னதியில் எப்போதும், அசையாமல் ஒளிர்ந்தபடி இருக்குமாம் தீபம்; ஆகவே இந்தத் திருநாமம் ஈசனுக்கு!
இந்தத் தலத்தின் சிறப்பு... சுவாமியை தரிசித்தபடி அப்படியே திரும்பினால், காவிரித்தாயை தரிசிக்கலாம். காவிரி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் தலம் இது என்பர்! எனவே காசிக்கு நிகரான திருத்தலம் எனப்போற்றுவர். ஆடிப்பெருக்கு நாளில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு, காவிரி நீரால் அபிஷேகித்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
சூரிய பூஜை காணும் முருகன்
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையத்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் முன்பும், ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் பின்பும், தினமும் காலை 8 முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை பக்தர்கள் கண்டுகளிக்கிறார்கள்.
பூக்கள் நிரப்பும் விழா
சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.
காவிரித் தாயாருக்கு சீர்வரிசை!
ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும். இதனைக் காண அரங்கன், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்!
ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரித் தாயாருக்கு மாலை, தாலிப்பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும்.
காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தைக் காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாகக் கூடி, பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!
- வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பக்தி, கற்பூரம் காட்டி தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர்.
- காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால்தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் விளைந்தது.
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கை கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோவில்களுக்கு சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன்மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.
வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பக்தி, கற்பூரம் காட்டி தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர்வளம் பெருகியதுபோல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பலவிதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரதது கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.
பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் மட்டுமாவது அணைகளை திறந்து விட்டு நீர்பெருக்கெடுத்து ஒடச் செய்கின்றனர்.
- தமிழர்கள் 18 என்ற எண்ணை மிகவும் புனிதமானதாகப் போற்றுகின்றனர்.
- ஆன்மீகத்திலும் 18 என்ற எண் புனிதமானது.
பயிர்கள் நன்றாக வளர்வதற்காக நீர்வளம் அருளும் காவிரித்தாயை முதன்மையாக கொண்ட ஆறுகள் அனைத்தையும் போற்றி வழிபடுவது 'ஆடிப்பெருக்கு'.
ஆறுகள் ஓடுகின்ற எல்லா ஊர்களிலும், நகரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுகிறது. ஆனால், காவிரி ஆடிப்பெருக்கு சற்றுக்கூடுதலான சிறப்புடையது.
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு பெண்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கின்போது பராசக்தியை வழிபடுவதைப் போலவே காவிரித்தாயை வழிபடுகின்றனர்.
தமிழர்கள் 18 என்ற எண்ணை மிகவும் புனிதமானதாகப் போற்றுகின்றனர்.
ஆன்மீகத்திலும் 18 என்ற எண் புனிதமானது. காவிரி படித்துறைகளில் 18 படிகளை அமைத்திருக்கின்றனர். ஆடி பதினெட்டாம் நாள், வெள்ளப்பெருக்கு அந்தப் பதினெட்டாம் படியைத் தழுவிச் செல்கிறபோது 'ஆடி பதினெட்டு' என்ற திருவிழாவைக் கொண்டாடுகின்றன.
ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா பெண்களுக்கே சிறப்பாக உரியது. அன்று பெண்கள் காலைப் பொழுதில் கரைகளில் வந்து கூடிக் காவிரித்தாயை வழிபடுவார்கள். இதற்கென்றே படித்துறைகள் பல உள்ளன.
அம்மன் வழிபாட்டுக்கு உகந்த காதோலை, கருகமணி முதலியவற்றை வைத்து வழிபட்டு அவற்றை ஆற்றோடு செலுத்துவார்கள்.
மாலை நேரம் தயிரன்னம், புளிசாதம், சர்க்கரை பொங்கல் வகைகளை சமைத்து காவிரித் தாய்க்குப் படைப்பார்கள். பின்னர் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக பொழுதை போக்குவார்கள்.
சிறுவர்கள் சப்பரங்களையும், தேர்களையும் உருவாக்கி அவற்றில் அம்மன் படத்தை வைத்து வழிபடுவார்கள்.
கன்னிப்பெண்கள், தமக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று நேர்ந்துகொண்டு காவிரித்தாயை வழிபடுவார்கள்.
இதற்காக அம்மன் முன் படைத்த மஞ்சள் கயிறுகளை ஒருவரது கழுத்தில் மற்றொருவர் சூட்டுவது வழக்கம். மஞ்சள் கயிற்றைச் சகோதரர் கையில் கட்டுவார்கள். இது காப்புக்கயிறு.
பிரார்த்தனை பலித்து, திருமணம் முடிந்த பின் புதுமணத் தம்பதிகள் காவிரித்தாயை நன்றியுடன் போற்றுவதுண்டு. சிலர் தாலி மஞ்சள் கயிறுகளை மாற்றிப்புது மஞ்சள் கயிறுகளை அணிவார்கள். பழைய மஞ்சள் கயிறுகளை அருகிலுள்ள மரங்களில் கட்டுவார்கள்.






