என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadi"

    • ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர்.
    • திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள்.

    ஆடி மாதத்தில் வரும் 18-ந் தேதியை ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது. இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கிறோம். பொதுவாக தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படியாக கொண்டு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இந்த ஆடிப்பெருக்கு விழா மட்டும் ஆடி மாதம் 18-வது நாள் என நாளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

    குறிப்பாக காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. தென்மேற்கு பருவத்தில் பெய்யும் மழையினால் அனைத்து ஆறுகளும் நிரம்பி வழியும். இதையே ஆற்றுப்பெருக்கு என்பர். இதனால் உழவர்கள் நம்பிக்கையுடன் விதை விதைப்பர். இந்த சமயத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தான், தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இதற்காக நதிகளை தெய்வமாக கருதி போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து, பின் உழவு வேலையை தொடங்குகின்றனர். இதனால் தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் உருவானது.

    இந்த விழா தமிழ் பண்பாட்டின் சிறப்புவாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர். அன்றைய தினம் மக்கள் ஆற்றில் குளித்துவிட்டு, ஆற்றங்கரையில் பூஜை செய்வதற்கு ஒரு இடத்தை பிடித்துக்கொள்கின்றனர். அந்த இடத்தை பசு சாணத்தால் மெழுகி சுத்தம் செய்து, அதன்மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.

     

    மேலும் வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம், பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காண்பித்து வழிபடுகின்றனர். தங்களுக்கு தடங்கல் இல்லாத விளைச்சல் வேண்டி நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டில் பலவிதமான கலப்பு உணவுகளை தயார் செய்து வந்து, ஆற்றங்கரையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியோடு உணவை உண்பார்கள்.

    ஆடிப்பெருக்கு அன்று புதிதாக திருமணமானவர்கள், தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கி விட்டு, புதிய மஞ்சள் கயிற்றை தன் கணவன் கையால் கட்டிக்கொள்வர். இதன்மூலம் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பதும், வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த ஆடி மாதத்திற்குள் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் என்கிறார்கள்.

    திருச்சி திருவரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும். ஆடிப்பெருக்கு நாளன்று திருவரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு, அம்மா மண்டபம் படித்துறைக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்கலப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

    தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைப் பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அறப் பளீசுவரரை தொழுவது வழக்கம். பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.

    • கலச சொம்பில் நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
    • ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது நன்மை தரும்.

    உலகில் உள்ள உயிர்களை காப்பதற்காக அன்னை பராசக்தி பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதம் தான் ஆடி மாதம். அந்த ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும் ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச் சிறப்பு பெற்றது தான். ஏனென்றால் இந்த ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதம் தொடங்கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. ஆடி மாத முதல் வெள்ளியில் அம்பிகையை எவ்வாறு வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

    அதிகாலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு வாசல் தெளித்து மாக்கோலமிட்டு வீட்டை துடைக்க வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்தபின், எல்லா சாமி படங்களையும் துடைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். வேப்பிலையை நிலை வாசலில் கட்ட வேண்டும்.

    கலச சொம்பில் நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர், நீர் நிரம்பிய கலசத்தை பூஜை அறையின் மத்தியில் மனைக்கோலம் போட்டு அதன் நடுவே வைக்க வேண்டும். அந்த கலச நீரில் அன்னையானவள் அம்பிகை எழுந்தருள வேண்டும் எல்லா வளங்களையும் வழங்க வேண்டும் என மனதுருகி வேண்டிக்கொள்ள வேண்டும். குல தெய்வத்திற்கும், இஷ்ட தெய்வத்திற்கும் தீபாராதனை காட்டி, சர்க்கரைப் பொங்கலை நிவேதனமாக படைக்க வேண்டும். முடிந்தால் ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது நன்மை தரும்.

    கணவருக்கு தொழிலில் மேன்மை ஏற்படுவதற்கு ஆடி வெள்ளியன்று மாலைப் பொழுதில், ஆதிபராசக்தி, புவனேஷ்வரி, அம்பிகை, அகிலாண்டேஷ்வரி என உங்கள் மனம் விரும்பும் எந்த அம்பிகையாக இருந்தாலும் சரி , பூச்சரங்களால் அலங்கரித்து வழிபட வேண்டும். தொழில் மேன்மை மட்டுமின்றி மாங்கல்ய பாக்யமும் தழைக்கும். கூடுதலாக குத்துவிளக்கு பூஜை செய்தால், அதாவது சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், பழம்,தேங்காய் முதலானவற்றை கொடுக்கலாம். இப்படி செய்தால் எல்லா நன்மைகளும் உங்கள் வீடு தேடி வரும் என்பார்கள்.

    ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழைகளிலும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையிலாவது வழிபாடு செய்யலாம். திருமணத் தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய தோஷம் முதலானவை நீங்கி நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வல்லமையை அன்னை பராசக்தி அருளிடுவாள்.

    ஆடி வெள்ளி நாளான நாளை ராகுநேரம் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. அதனால் வழிபாடு மேற்கொள்பவர்கள் காலை 09.15 மணி முதல் 10.15 வரையும், மாலையில் 04.45 மணி முதல் 05.45 மணி வரையும் வழிபாடு செய்யலாம் .

    • குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது.
    • ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு.

    வருடத்தில் எல்லா மாதமும் சிறப்பு வாய்ந்தது தான் என்றாலும் ஆடி மாதம் தனிச் சிறப்பு பெற்றது. ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று தான் அழைப்பார்கள். ஏன் என்று தெரியுமா? ஆடி என்பதே ஒரு தேவ மங்கையின் பெயர் தான். தேவ மங்கை ஒரு சாபத்தால் வேப்பமரமாக மாறி பின் அம்பிகைக்கு உகந்த விருக்ஷமாக மாறியவள். அதனால் தான் ஆடி மாதத்தையும் அம்மனையும் வேம்பையும் பிரிக்க முடியாது என்று சொல்வார்கள்.

    நாளை ஆடி முதல் நாள். குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது. ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. இந்த பதிவில் ஆடி மாத முதல் நாள் வழிபாடு பற்றி பார்க்கலாம்.

    ஆடி முதல் நாள் காலை எழுந்ததும் வாசல் தெளித்து மாக்கோலமிட்டு, வீடு, வாசல் துடைத்து, பூஜை அறையில் சாமி படங்களுக்கு பூ போட வேண்டும். பின்னர் ஒரு கலச சொம்பில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மலரால் அலங்கரித்து வைக்க வேண்டும். அதன் பின்னர் காமாட்சி அம்மன் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் மனதார வணங்க வேண்டும். ஆடி மாதத்தில் மேற்கொள்ளும் விரதங்கள் முழுமையடைய வேண்டும். வேண்டிய வரங்களெல்லாம் கிடைக்க வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் எங்களோடு துணை நிற்க வேண்டும் தாயே ! என்றும் அந்த அம்பிகையின் அருள் வேண்டும் என மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

    இறுதியாக அம்பிகைக்கு நைவேத்தியமாக வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், பாயசம் என உங்களால் முடிந்ததை படைக்கலாம். வழிபாட்டின் போது அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம் அல்லது உங்களுக்கு தெரிந்த அம்மன் மந்திரங்களை அல்லது பாடல்களை பாடலாம். எதுவுமே தெரியவில்லை என்றாலும் குறையில்லை. அந்த அன்னையின் அருள் வேண்டி மனதார வேண்டினாலே போதும். கேட்டதை மட்டுமல்ல நம் தேவையறிந்து கேட்காததையும் அன்னை நமக்கு அருளிடுவாள்.

    • ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும்.
    • பெரும்பான்மையான பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு சென்று காவடி எடுத்தல், அலகு குத்துதல், அன்னதானம் செய்தல் முதலானவற்றை செய்வர்.

    ஆடி மாதம் அம்மனுக்கு மட்டும் உகந்த மாதம் கிடையாது. தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உகந்த மாதம். கிருத்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது தான் எனினும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்த முக்கிய நாளாக இந்த நாளை தேர்வு செய்கிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஆடி கிருத்திகை நாளன்று தான் தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் சூரனை அழிக்க சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தார். அதனால் தான் முருக பக்தர்கள் இந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர் . வாழ்வில் எல்லா வளமும் பெறுவதற்கு கந்தனின் கடை கண் பார்வை போதும் என்பார்கள். அந்த கந்தனின் அருளை முழுமையாக பெறுவதற்கு கிருத்திகை வழிபாடு செய்தாலே போதும். மாதாமாதம் வரும் கிருத்திகை வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஆண்டிற்கு மூன்று கிருத்திகையில் செய்தாலே போதும் என்பர். ஆடி கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை. தை கிருத்திகை இந்த மூன்று தெய்வீக தினங்களில் முறையாக விரதமிருந்து வழிபட்டாலே போதும் கந்தனின் பார்வை நம் மீது பட்டு எல்லா வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்த ஆடி கிருத்திகையில் பக்தர்கள் அனைவரும் உள்ளன்போடும், பக்தியோடும் தங்களது பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள். அன்றைய தினம் புண்ணீய தீர்த்தத்தில் நீராடி, கந்தர் அலங்காரம்,திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் முதலானவற்றை பாராயணம் செய்வார்கள். பெரும்பான்மையான பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு சென்று காவடி எடுத்தல், அலகு குத்துதல், அன்னதானம் செய்தல் முதலானவற்றை செய்வர். மற்ற முருகன் கோவில்களை விட திருத்தணி முருகன் கோவில் தான் ஆடி கிருத்திகைக்கு விசேஷமானது.

    ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும். அன்றைய தினம் முருகனின் ஆறுபடை வீடுகளில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், ஹோமங்கள், தேர் பவனி ஆகியவை நடக்கும். இது தவிர நாடெங்கிலும் இருக்கும் முருகன் கோவிலில் விழாக்கோலம் கொண்டிருக்கும்.

    இந்த ஆண்டு ஆடி கிருத்திகை கூடுதல் சிறப்பு. ஏனெனில், இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஜூலை 20 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய 2 தேதிகளில் ஆடி கிருத்திகை வருகிறது. இரண்டு கிருத்திகை வருவதால் இதில் எந்த நாளில் ஆடி கிருத்திகை விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் பக்தர்களிடையே நிலவுகிறது.

    இருப்பினும் ஜூலை 20 தேதி வரும் கிருத்திகை ஆடி கிருத்திகையாக கணக்கில் கொள்ளக்கூடாது என்றும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமையன்று வரும் கிருத்திகை தான் ஆடிக் கிருத்திகை என்று கூறுகின்றனர். அன்றைய தினம் காலை 08.27 மணி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 06.49 மணிக்கு ஆடிக் கிருத்திகை நிறைவடைகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் 5 நாள் உற்சவ விழாவாக ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி அஸ்வினி கிருத்திகையும், ஆகஸ்ட் 15ம் தேதி பரணி கிருத்திகையும், ஆகஸ்ட் 16ம் தேதி ஆடிக் கிருத்திகையும் கொண்டாடப்படவுள்ளது. மேலும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் நாள் தெப்ப உற்சவமும், ஆகஸ்ட் 17ம் தேதி இரண்டாம் நாள் தெப்ப உற்சவமும், ஆகஸ்ட் 18ம் தேதி மூன்றாம் நாள் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அம்மன் நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நம்மை நல்வழிப்படுத்தும் அற்புத மாதம் தான் இந்த ஆடி மாதம்.
    • ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியும், செவ்வாயும் பெண்களுக்குப் பொன்னான திருவிழா தான்!

    ஆடி மாதத்தை பண்டிகைகளின் தொடக்க மாதம்.. பக்தி மாதம் என்றே சொல்லலாம் ! பூமாதேவி அவதரித்த உன்னத மாதம். அதனால் தான் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும் பண்டிகைகளின் தொடக்க மாதமாகவும் கொண்டாடப்படுகிறது. அம்மன் நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நம்மை நல்வழிப்படுத்தும் அற்புத மாதம் தான் இந்த ஆடி மாதம்.

    இந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியும், செவ்வாயும் பெண்களுக்குப் பொன்னான திருவிழா தான்! இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதம் நாளை மறுநாள் 17-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 16-ந்தேதி வரை உள்ளது. அம்மனுக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விசேஷ நாட்கள் என்ன, விரத நாட்கள் என்ன, அவை எந்தெந்த தேதியில் வருகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    2025 ஆடி மாத விசேஷ நாட்கள் :

    ஜூலை 24- ஆடி அமாவாசை

    ஜூலை 28- ஆடிப்பூரம்,நாக சதுர்த்தி

    ஜூலை 29- கருட பஞ்சமி ,நாக பஞ்சமி

    ஆகஸ்ட் 03- ஆடிப்பெருக்கு

    ஆகஸ்ட் 07- ஆடித்தபசு

    ஆகஸ்ட் 08- வரலட்சுமி விரதம்

    ஆகஸ்ட் 09- ஆவணி அவிட்டம்

    ஆகஸ்ட் 10- காயத்ரி ஜபம்

    ஆகஸ்ட் 12)- மகா சங்கடஹர சதுர்த்தி

    ஆகஸ்ட் 16- கோகுலாஷ்டமி

    ஆடி மாத விரத நாட்கள்:

    ஜூலை 20 -கிருத்திகை

    ஜூலை 21- ஏகாதசி

    ஜூலை 22- பிரதோஷம்

    ஜூலை 23- சிவராத்திரி

    ஜூலை 24- அமாவாசை

    ஜூலை 28- சதுர்த்தி

    ஜூலை 30- சஷ்டி

    ஆகஸ்ட் 05- ஏகாதசி

    ஆகஸ்ட் 06- பிரதோஷம்

    ஆகஸ்ட் 08- திருவோணம்,பெளர்ணமி

    ஆகஸ்ட் 12- சங்கடஹர சதுர்த்தி

    ஆகஸ்ட் 14- சஷ்டி

    ஆகஸ்ட் 16- கிருத்திகை

    ஆடி மாத அஷ்டமி, நவமி மற்றும் கரி நாட்கள்:

    ஜூலை 17-அஷ்டமி

    ஆகஸ்ட் 01-அஷ்டமி

    ஆகஸ்ட் 16-அஷ்டமி

    ஜூலை 18-நவமி

    ஆகஸ்ட் 02-நவமி

    ஜூலை 18-கரி நாட்கள்

    ஜூலை 26-கரி நாட்கள்

    ஆகஸ்ட் 05-கரி நாட்கள்

    ஜூலை 27 ஆம் தேதி வாஸ்து நாள். அன்றைய தினத்திற்கான வாஸ்து நேரம் காலை 07.44 முதல் 05.20 வரை .

    2025 ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை நட்சத்திரங்கள் அமைந்துள்ளது. இதனால் இந்த வருடம் நாம் 2 ஆடி கிருத்திகை கொண்டாட இருக்கிறோம்.

    • ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம்.
    • ‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான திருவிழாக்களும் நடைபெறும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, கிராம தெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, திருமால் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு என அனைத்து தெய்வ வழிபாட்டிற்கும் இந்த மாதம் ஏற்றதாகும்.

    ஆடி மாதத்தில்தான் தட்சணாயனம் தொடங்குகிறது. தட்சணாயனம் என்பது சூரிய பகவான் வடதிசையில் இருந்து தென் திசை நோக்கி பயணம் செய்யும் காலமாகும். இது ஆடி மாதம் தொடங்கி மார்கழி வரை ஆறு மாதங்களை கொண்டதாகும். இந்தக் காலம் முழுவதும் தேவர்களுக்கு இரவு பொழுதாக கருதப்படுகிறது. இந்த புண்ணிய காலத்தில் நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை போன்ற சிறப்பு வாய்ந்த நாட்கள் வருகின்றன.

    ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். அன்றைய தினம் திருவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் நந்தவனத்துக்கு எழுந்தருள்வார். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாடி வழிபட வேண்டும். இதனால் நாம் வேண்டிய அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும். அதுபோல ஆடி பவுர்ணமி தினத்தில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே அன்றைய தினம் வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டால் அன்னையின் மனம் குளிர்ந்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.

    சிலர் ஆடி மாதத்தை 'பீடை மாதம்' என்று சொல்வார்கள். இது அவர்களது அறியாமையால் கூறுவதாகும். உண்மையில் 'பீட மாதம்' என்றுதான் அதற்குப் பெயர். அதாவது இறைவனை நமது மனமாகிய பீடத்தில் வைத்து வழிபட வேண்டிய மாதம் என்பதே இதன் உண்மையான பொருள்.

    பொதுவாக வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த தினமாகும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். அம்மனை வழிபடும்போது லலிதா சகஸ்ர நாமம் சொல்லி வழிபட வேண்டும். ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை அள்ளித் தரும்.

    'ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது பழமொழி. அதாவது பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமணப் பாக்கியம், குழந்தை பாக்கியம், செல்வம் மற்றும் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிய வேண்டும். பின்பு சூரிய உதயத்துக்கு முன்பாக சாணத்தைப் பிள்ளையாராக பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அருகம்புல் கொண்டு பிள்ளையாரை பூஜிக்க வேண்டும். வாழை இலையில் நெல் பரப்பி, அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட்டால் செல்வம் செழிக்கும்.

    ஆடி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, கருப்பு ஊமத்தம் பூமாலை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எத்தகைய பகைமையும் விலகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.

    • சுமங்கலி பூஜையை நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
    • பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களை சக்தியின் வடிவமாக கருதி, அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும்

    'சுமங்கலி' என்றால் `மங்கலம் நிறைந்தவள்' என்று பொருள். திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும், திருமணமாகாத பெண்கள் திருமணத் தடை, தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும் நடத்தப்படும் பூஜையே, சுமங்கலி பூஜையாகும்.

    சுமங்கலி பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நடத்துவதால் இது சக்தி வழிபாடாக பார்க்கப்படுகிறது. இந்த சுமங்கலி பூஜையை ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் ராகு காலம் இல்லாத நேரத்தில் நடத்தலாம். அன்றைய தினம் யோகம், திதி போன்றவையும் நல்லதாக இருக்க வேண்டும். கரிநாளாக இருக்கக்கூடாது. ஆடி மாதம், நவராத்திரி நாட்கள் ஆகியவை இந்த பூஜை நடத்த விசேஷமாகும். அதிலும் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சுமங்கலி பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

    இந்த சுமங்கலி பூஜையை நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். சுமங்கலி பூஜை செய்பவர், தமது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாசலில் தோரணங்கள் கட்டி, மாக்கோலம் இட்டு வீட்டை அழகுப்படுத்த வேண்டும். பூஜை செய்பவர்கள், தங்களால் எத்தனை சுமங்கலி பெண்களை அழைக்க முடியுமோ அத்தனை பேரையும் அழைக்கலாம். முக்கியமாக வயதான பெரியவர்களை அழைப்பது அவசியம். ஏனென்றால் அவர்களது ஆசீர்வாதம் நமக்கு மிகுந்த பலனை தரும்.

    பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களை சக்தியின் வடிவமாக கருதி, அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும். பூஜை நடத்துபவர் முதலில், சுமங்கலி பெண்களை நாற்காலியில் உட்கார வைத்து அவர்களது பாதங்களை தாம்பூலத் தட்டில் வைத்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு பாதத்துக்கு குங்குமம், சந்தனம் வைத்து மலர் தூவி வழிபட வேண்டும்.

    அதன்பிறகு அவர்களின் கை, கால், முகங்களில் சந்தனம், குங்குமம் பூசி, தலையில் சூடிக்கொள்ள பூ கொடுக்க வேண்டும். மேலும் தங்கள் வசதிகேற்ப, தாம்பூலத் தட்டில் மஞ்சள், குங்குமம், மருதாணி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், புடவை, வளையல் போன்றவற்றை வைத்து கொடுக்கலாம். தொடர்ந்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்டி சுமங்கலி பெண்களுக்கும் காட்ட வேண்டும். பின்பு, அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பூஜையின் முடிவில், சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் கொடுத்து, மகிழ்ச்சியோடு அவர்களை வழி அனுப்பி வைக்க வேண்டும்.

    இந்த சுமங்கலி பூஜையை கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து செய்வதே சிறப்பானதாகும். குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு, நம்பிக்கையுடனும், பய பக்தியுடனும் செய்ய வேண்டும். சுமங்கலி பூஜை செய்வதால் இல்லத்தில் செல்வம் பெருகும். துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும். தோஷங்கள் விலகும், குலவிருத்தி உண்டாகும்.

    இந்த பூஜையை மிகவும் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றில்லை. நமது வசதிகேற்ப எளிமையாக நடத்தலாம். மிகுந்த இறைபக்தியோடு நடத்தினாலே போதுமானது.

    • ஒரு மாத காலத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
    • ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி 3 நாட்கள் ராமேஸ்வரம் சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அம்மன் கோவில்களுக்கு அழைத்து சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளது.

    இந்த சுற்றுலா ஜூலை 18-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை ஒரு மாத காலத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் காளிகாம்பாள் கோவில், ராயபுரம்-அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் - வடிவுடையம்மன், பெரிய பாளையம்- பவானி அம்மன், புட்லூர்- அங்காள பரமேஸ்வரி, திருமுல்லைவாயில்- திருவுடையம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், வில்லிவாக்கம்- பாலியம்மன் கோவில்களில் தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சுற்றுலாவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.1000. மற்றொரு சுற்றுலா திட்டமான மைலாப்பூர் -கற்பகாம்பாள் கோவில், முண்டகண்ணி அம்மன் கோவில், கோலவிழியம்மன் கோவில், தேனாம்பேட்டை -ஆலயம்மன் கோவில், தி.நகர்- முப்பாத்தம்மன் கோவில், சைதாப்பேட்டை -பிடாரி இளங்காளி அம்மன் கோவில், பெசன்ட் நகர் - அஷ்டலட்சுமி கோவில், மாங்காடு - காமாட்சி அம்மன் கோவில்.

    திருவேற்காடு - தேவி கருமாரியம்மன் கோவில், கீழ்ப்பாக்கம்- பாதாள பொன்னியம்மன் கோவில் ஆகிய கோவில்களை கண்டு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.800.

    இதே போல மதுரையில் உள்ள அம்மன் கோவில்கள் ஒருநாள் சுற்றுலாவிற்கு ரூ.1,400, திருச்சியில் கோவில்களை தரிசிக்க ரூ.1100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு ரூ.1,400 கட்டணமாகும். இந்த சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இது தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோவில்களை ஆன்மீக சுற்றுலா பயணிகள் தரிசிக்கும் வகையில் 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி 3 நாட்கள் ராமேஸ்வரம் சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.

    ஆன்மீக சுற்றுலாக்களுக்கு https://ttdconline.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். மேலும் விவரங்களுக்கு 18004253111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆடி மாதம் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும்.
    • சிவன் திரி சூலத்தால் கொன்று அரக்கனை அழித்தார்.

    பவுர்ணமி தினத்தன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திரமே மாதங்களின் பெயராக அமைந்திருக்கும். சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாகத்திலும், ஆனியில் அனுஷத்திலும் பவுர்ணமி அமையும்.

    ஆடி மாதம் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும். ஆஷாடத்தில் இரண்டு உண்டு. முதலில் வருவது பூர்வ ஆஷாடம், பூர்வ ஆஷாடம் என்பது `பூராடம்' என்றும், உத்தர ஆஷாடம் என்பது `உத்தராடம்' என்றும் சொல்லப்படுகிறது.

    உத்திர ஆஷாடத்தில் பவுர்ணமி வரும் ஆடி மாதத்தை வட மொழியில் `ஆஷாடீ' என்று சொல்வார்கள். அதுவே தமிழில் `ஆடி' என்று மருவி விட்டது. ஆடி மாதம் தோன்றியதற்கு இன்னொரு கதையும் கூறப்படுகிறது.

    ஆடி என்னும் அரக்கன் ஒருமுறை அம்பிகை இல்லாத நேரத்தில் சிவபெருமான் உறைந்துள்ள கயிலாய மலைக்கு வந்தான். பார்வதியின் தோழியான உத்தாலகுசுமை அப்போது அங்கு காவலுக்கு இருந்தாள். அவளது காவலை மீறி கயிலாய மலை உள்ளே நுழைவது கடினம் என்பதை அறிந்து, பாம்பு வடிவில் புகுந்தான்.

    சிவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் அந்த ஆடி அரக்கன் பார்வதியாக உருமாறினான். எல்லாம் அறிந்த சிவன், அசுரன் வந்திருப்பதை அறிந்தாலும், ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார்.

    அன்பு மொழி பேசி அருகில் அழைத்தார். அரக்கன் சிவனை நெருங்கியதும். திரி சூலத்தால் கொன்று அரக்கனை அழித்தார். சிவ மகாபுராணத்தில் இந்த அரக்கனின் வரலாறு இடம் பெற்றுள்ளது.

    தன்னுடைய உருவ வடிவில் வந்தவன் என்பதால், தேவி அவனிடம் இரக்கம் கொண்டு நற்கதி வழங்கினாள். இதனால் அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே `ஆடி' என்ற பெயர் ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் அம்பிகை மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்ற வழக்கம் ஏற்பட்டது.

    • ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது.
    • "ஆடி செவ்வாய் தேடிக் குளி" என்பது பழமொழி.

    தமிழ் வருடங்கள் 60, தமிழ் மாதங்கள் 12.

    இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.

    பல மாதங்களுக்கு பழமொழிகளும் உண்டு.

    தை பிறந்தால் வழி பிறக்கும், புரட்டாசியில் மண் உருக மழை பெய்யும், பொன் உருக வெயில் காயும், ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழிகள் உள்ளன.

    ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது.

    அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது.

    இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும்.

    காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    "ஆடி செவ்வாய் தேடிக் குளி" என்பது பழமொழி.

    அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால்,

    பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும்.

    ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

    • ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.
    • 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

    ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும்.

    இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

    அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது.

    புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.

    அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம்.

    திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

    ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.

    விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள்.

    'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் தபசு விழா இந்த மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும்.

    • ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
    • பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம்.

    தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம்.

    அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது.

    பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம்.

    பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.

    சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.

    இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    ×