என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி முதல் வெள்ளி: வழிபாட்டு முறையும் நன்மையும்
    X

    ஆடி முதல் வெள்ளி: வழிபாட்டு முறையும் நன்மையும்

    • கலச சொம்பில் நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
    • ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது நன்மை தரும்.

    உலகில் உள்ள உயிர்களை காப்பதற்காக அன்னை பராசக்தி பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதம் தான் ஆடி மாதம். அந்த ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும் ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச் சிறப்பு பெற்றது தான். ஏனென்றால் இந்த ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதம் தொடங்கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. ஆடி மாத முதல் வெள்ளியில் அம்பிகையை எவ்வாறு வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

    அதிகாலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு வாசல் தெளித்து மாக்கோலமிட்டு வீட்டை துடைக்க வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்தபின், எல்லா சாமி படங்களையும் துடைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். வேப்பிலையை நிலை வாசலில் கட்ட வேண்டும்.

    கலச சொம்பில் நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர், நீர் நிரம்பிய கலசத்தை பூஜை அறையின் மத்தியில் மனைக்கோலம் போட்டு அதன் நடுவே வைக்க வேண்டும். அந்த கலச நீரில் அன்னையானவள் அம்பிகை எழுந்தருள வேண்டும் எல்லா வளங்களையும் வழங்க வேண்டும் என மனதுருகி வேண்டிக்கொள்ள வேண்டும். குல தெய்வத்திற்கும், இஷ்ட தெய்வத்திற்கும் தீபாராதனை காட்டி, சர்க்கரைப் பொங்கலை நிவேதனமாக படைக்க வேண்டும். முடிந்தால் ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது நன்மை தரும்.

    கணவருக்கு தொழிலில் மேன்மை ஏற்படுவதற்கு ஆடி வெள்ளியன்று மாலைப் பொழுதில், ஆதிபராசக்தி, புவனேஷ்வரி, அம்பிகை, அகிலாண்டேஷ்வரி என உங்கள் மனம் விரும்பும் எந்த அம்பிகையாக இருந்தாலும் சரி , பூச்சரங்களால் அலங்கரித்து வழிபட வேண்டும். தொழில் மேன்மை மட்டுமின்றி மாங்கல்ய பாக்யமும் தழைக்கும். கூடுதலாக குத்துவிளக்கு பூஜை செய்தால், அதாவது சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், பழம்,தேங்காய் முதலானவற்றை கொடுக்கலாம். இப்படி செய்தால் எல்லா நன்மைகளும் உங்கள் வீடு தேடி வரும் என்பார்கள்.

    ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழைகளிலும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையிலாவது வழிபாடு செய்யலாம். திருமணத் தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய தோஷம் முதலானவை நீங்கி நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வல்லமையை அன்னை பராசக்தி அருளிடுவாள்.

    ஆடி வெள்ளி நாளான நாளை ராகுநேரம் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. அதனால் வழிபாடு மேற்கொள்பவர்கள் காலை 09.15 மணி முதல் 10.15 வரையும், மாலையில் 04.45 மணி முதல் 05.45 மணி வரையும் வழிபாடு செய்யலாம் .

    Next Story
    ×