என் மலர்
வழிபாடு

ஆடி முதல் ஞாயிறு - மங்கலம் அருளும் சுமங்கலி பூஜை
- சுமங்கலி பூஜையை நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
- பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களை சக்தியின் வடிவமாக கருதி, அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும்
'சுமங்கலி' என்றால் `மங்கலம் நிறைந்தவள்' என்று பொருள். திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும், திருமணமாகாத பெண்கள் திருமணத் தடை, தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும் நடத்தப்படும் பூஜையே, சுமங்கலி பூஜையாகும்.
சுமங்கலி பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நடத்துவதால் இது சக்தி வழிபாடாக பார்க்கப்படுகிறது. இந்த சுமங்கலி பூஜையை ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் ராகு காலம் இல்லாத நேரத்தில் நடத்தலாம். அன்றைய தினம் யோகம், திதி போன்றவையும் நல்லதாக இருக்க வேண்டும். கரிநாளாக இருக்கக்கூடாது. ஆடி மாதம், நவராத்திரி நாட்கள் ஆகியவை இந்த பூஜை நடத்த விசேஷமாகும். அதிலும் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சுமங்கலி பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
இந்த சுமங்கலி பூஜையை நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். சுமங்கலி பூஜை செய்பவர், தமது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாசலில் தோரணங்கள் கட்டி, மாக்கோலம் இட்டு வீட்டை அழகுப்படுத்த வேண்டும். பூஜை செய்பவர்கள், தங்களால் எத்தனை சுமங்கலி பெண்களை அழைக்க முடியுமோ அத்தனை பேரையும் அழைக்கலாம். முக்கியமாக வயதான பெரியவர்களை அழைப்பது அவசியம். ஏனென்றால் அவர்களது ஆசீர்வாதம் நமக்கு மிகுந்த பலனை தரும்.
பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களை சக்தியின் வடிவமாக கருதி, அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும். பூஜை நடத்துபவர் முதலில், சுமங்கலி பெண்களை நாற்காலியில் உட்கார வைத்து அவர்களது பாதங்களை தாம்பூலத் தட்டில் வைத்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு பாதத்துக்கு குங்குமம், சந்தனம் வைத்து மலர் தூவி வழிபட வேண்டும்.
அதன்பிறகு அவர்களின் கை, கால், முகங்களில் சந்தனம், குங்குமம் பூசி, தலையில் சூடிக்கொள்ள பூ கொடுக்க வேண்டும். மேலும் தங்கள் வசதிகேற்ப, தாம்பூலத் தட்டில் மஞ்சள், குங்குமம், மருதாணி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், புடவை, வளையல் போன்றவற்றை வைத்து கொடுக்கலாம். தொடர்ந்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்டி சுமங்கலி பெண்களுக்கும் காட்ட வேண்டும். பின்பு, அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பூஜையின் முடிவில், சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் கொடுத்து, மகிழ்ச்சியோடு அவர்களை வழி அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த சுமங்கலி பூஜையை கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து செய்வதே சிறப்பானதாகும். குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு, நம்பிக்கையுடனும், பய பக்தியுடனும் செய்ய வேண்டும். சுமங்கலி பூஜை செய்வதால் இல்லத்தில் செல்வம் பெருகும். துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும். தோஷங்கள் விலகும், குலவிருத்தி உண்டாகும்.
இந்த பூஜையை மிகவும் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றில்லை. நமது வசதிகேற்ப எளிமையாக நடத்தலாம். மிகுந்த இறைபக்தியோடு நடத்தினாலே போதுமானது.






