என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadi Perukkku"

    • ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர்.
    • திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள்.

    ஆடி மாதத்தில் வரும் 18-ந் தேதியை ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது. இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கிறோம். பொதுவாக தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படியாக கொண்டு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இந்த ஆடிப்பெருக்கு விழா மட்டும் ஆடி மாதம் 18-வது நாள் என நாளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

    குறிப்பாக காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. தென்மேற்கு பருவத்தில் பெய்யும் மழையினால் அனைத்து ஆறுகளும் நிரம்பி வழியும். இதையே ஆற்றுப்பெருக்கு என்பர். இதனால் உழவர்கள் நம்பிக்கையுடன் விதை விதைப்பர். இந்த சமயத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தான், தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இதற்காக நதிகளை தெய்வமாக கருதி போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து, பின் உழவு வேலையை தொடங்குகின்றனர். இதனால் தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் உருவானது.

    இந்த விழா தமிழ் பண்பாட்டின் சிறப்புவாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர். அன்றைய தினம் மக்கள் ஆற்றில் குளித்துவிட்டு, ஆற்றங்கரையில் பூஜை செய்வதற்கு ஒரு இடத்தை பிடித்துக்கொள்கின்றனர். அந்த இடத்தை பசு சாணத்தால் மெழுகி சுத்தம் செய்து, அதன்மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.

     

    மேலும் வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம், பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காண்பித்து வழிபடுகின்றனர். தங்களுக்கு தடங்கல் இல்லாத விளைச்சல் வேண்டி நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டில் பலவிதமான கலப்பு உணவுகளை தயார் செய்து வந்து, ஆற்றங்கரையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியோடு உணவை உண்பார்கள்.

    ஆடிப்பெருக்கு அன்று புதிதாக திருமணமானவர்கள், தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கி விட்டு, புதிய மஞ்சள் கயிற்றை தன் கணவன் கையால் கட்டிக்கொள்வர். இதன்மூலம் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பதும், வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த ஆடி மாதத்திற்குள் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் என்கிறார்கள்.

    திருச்சி திருவரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும். ஆடிப்பெருக்கு நாளன்று திருவரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு, அம்மா மண்டபம் படித்துறைக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்கலப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

    தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைப் பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அறப் பளீசுவரரை தொழுவது வழக்கம். பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.

    • ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம்.
    • ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார்.

    ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப பழைய காலத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆனி இந்த மூன்று மாதங்களில் இருக்கக் கூடிய காய்ச்சல் முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழைபொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் வரும். இந்த புது வெள்ளத்துடன் வரக்கூடியதுதான் ஆடிப்பெருக்கு.

    சங்க நூல்களில்பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப்பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேடமானது. பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப்பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

    ஆடி 18-ம்பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.

    இதனால்தான் இந்த நாட்களில் இது போன்றெல்லாம் செய்வது செய்ய வேண்டிய பழக்கத்தை நம் மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை

    ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும்.

    அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள்,பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது.

    இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணுபற்றிய நூல்களைபடிக்கலாம்.

    இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம்பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று 'பாரணை' என்னும் விரதத்தை மேற்கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

    ×