என் மலர்
நீங்கள் தேடியது "Spiritual Tourism"
- ஒரு மாத காலத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
- ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி 3 நாட்கள் ராமேஸ்வரம் சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அம்மன் கோவில்களுக்கு அழைத்து சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
இந்த சுற்றுலா ஜூலை 18-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை ஒரு மாத காலத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் காளிகாம்பாள் கோவில், ராயபுரம்-அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் - வடிவுடையம்மன், பெரிய பாளையம்- பவானி அம்மன், புட்லூர்- அங்காள பரமேஸ்வரி, திருமுல்லைவாயில்- திருவுடையம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், வில்லிவாக்கம்- பாலியம்மன் கோவில்களில் தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சுற்றுலாவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.1000. மற்றொரு சுற்றுலா திட்டமான மைலாப்பூர் -கற்பகாம்பாள் கோவில், முண்டகண்ணி அம்மன் கோவில், கோலவிழியம்மன் கோவில், தேனாம்பேட்டை -ஆலயம்மன் கோவில், தி.நகர்- முப்பாத்தம்மன் கோவில், சைதாப்பேட்டை -பிடாரி இளங்காளி அம்மன் கோவில், பெசன்ட் நகர் - அஷ்டலட்சுமி கோவில், மாங்காடு - காமாட்சி அம்மன் கோவில்.
திருவேற்காடு - தேவி கருமாரியம்மன் கோவில், கீழ்ப்பாக்கம்- பாதாள பொன்னியம்மன் கோவில் ஆகிய கோவில்களை கண்டு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.800.
இதே போல மதுரையில் உள்ள அம்மன் கோவில்கள் ஒருநாள் சுற்றுலாவிற்கு ரூ.1,400, திருச்சியில் கோவில்களை தரிசிக்க ரூ.1100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு ரூ.1,400 கட்டணமாகும். இந்த சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோவில்களை ஆன்மீக சுற்றுலா பயணிகள் தரிசிக்கும் வகையில் 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி 3 நாட்கள் ராமேஸ்வரம் சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
ஆன்மீக சுற்றுலாக்களுக்கு https://ttdconline.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். மேலும் விவரங்களுக்கு 18004253111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை பயணக் காப்புறுதி திட்டம்
- அதிகாரிகள் தகவல்
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரெயில் சேவை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெயில்வே தென் மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் மற்றும் சென்னை மண்டல துணை மேலாளர் மாலதி ஆகியோர் காட்பாடி ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியன் ெரயில்வே சுற்றுலா பிரிவில், பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை புதியதாக அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 சிலிப்பர் பெட்டிகள், 1 பேண்ட்ரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் இந்த ரெயிலில் உள்ளது.
பாரத் கவுரவ் சுற்றுலா பிரிவு தென் மண்டலம் சார்பில், வருகிற ஜூலை மாதம் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் திட்டம் அறிமுகப்படுத்த பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வருகிற ஜூலை 1-ந் தேதி, இந்த சுற்றுப்பயணம் தொடங்குகிறது. 11 இரவுகள் மற்றும் 12 பகல்கள் அடங்கிய இந்த ஆன்மீக சுற்றுலா ஐதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவ தேவி (கட்ரா) அமிர்தசரஸ், புது டெல்லி ஆகிய இடங்கள் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரெயில் கொச்சு வேலி, நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் வழித்தடத்தில் செல்லும்.
இந்த ஆன்மீக சுற்றுலாவை கான ஒருவருக்கு சிலிப்பர் பெட்டிக்கு ரூ. 22 ஆயிரத்து 35-ம், குளிர் சாதன வசதி பெட்டிக்கு ரூ.40 ஆயிரத்து 380 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் இடங்களை பார்வையிடுவதற்கு போக்குவரத்து மற்றும் ரெயில் பயணத்தின் போது தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர் என சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை பயணக் காப்புறுதி திட்டமும் வழங்கப்பட உள்ளது.
இதில் மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரெயிலில் பயணித்தால், எல்.டி.சி. சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 440 பேர் தரிசனம்
- கிரிவலம் சென்றனர்
வேங்கிக்கால்:
ெரயில்வே சுற்றுலா மற்றும் உணவுத் துறை சார்பில் ஆன்மிக சுற்றுலா ரயில் செகந்திராபாத்தில் இருந்து நேற்று புறப்பட்டு இன்று காலை திருவண்ணாமலை ெரயில் நிலையம் வந்தடைந்தது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஆன்மிக பக்தர்கள் 440 பேர் சுற்றுலா ெரயிலில் வந்தனர்.
இவர்கள் அருணசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று அண்ணாமலையாரை தரிசித்து பின்னர் கிரிவலம் சென்றனர்.
இன்று இரவு 10 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் சுற்றுலா ெரயில் மதுரை மற்றும் ராமேஸ்வரம் செல்கிறது.
- வேளாங்கண்ணியில் தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
- வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
மேலூர்:
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிலர் வேனில் ஆன்மிக சுற்றுலா சென்றனர். இவர்கள் வேளாங்கண்ணியில் தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த மேலூர் அருகே தும்பைப்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த குமரி மாவட்டம் களியாக்க விளையைச் சேர்ந்த பயணி ஜஸ்டஸ் (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனின் இடிபாடுகளில் சிக்கி ஸ்மைலா (21), லேடிங் ஜான் (43), ஜல்சா மேரி(43), ராஜகுமாரி (43) உள்பட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்த மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், நெடுஞ்சாலை ரோந்து படை அதிகாரி கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.
அவர்களால் மீட்க இயலாமல் போகவே உடனடியாக மேலூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ஜஸ்டஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
- கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு.
- 3 அடுக்கு ஏ.சி.பெட்டியில் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
தஞ்சாவூர்:
கும்பகோணத்தில் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐ.ஆர். சி.டி.சி.) மற்றும் ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு ஐ.ஆர். சி.டி.சி. மேலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் சுற்றுலா திட்டம் மூலம் கார்த்திகை தீபம் அன்று சிவபெருமான் மற்றும் கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவிற்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை வழியாக அயோத்திக்கு செல்லும் ஸ்ரத்தா சேது எக்ஸ்பிரஸ் (22613) ரெயிலில் தனியாக 3 அடுக்கு ஏ.சி.பெட்டியில் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
இந்த ரெயில் காசி, கயா, பிரக்யாராஜ் ஆகிய பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 3 வேளை உணவு வழங்கப்படும். இந்த சுற்று லாவிற்கு முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 82879 31977 மற்றும் 8287932070 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இப்பட்டியலில் முதல் 3 இடங்களை பூரி, வாரணாசி, ஹரித்துவார் ஆகிய புனித நகரங்கள் பிடித்துள்ளன.
- பழனி மட்டும் தான் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழக நகரம் ஆகும்.
இந்தியாவில் தற்போது ஆன்மீக சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. அவ்வாறு இந்தியா முழுவதும் ஆன்மீக தளங்களை தேடி செல்வோர் தங்குவதற்கு அந்தந்த ஊர்களில் உள்ள ஓட்டல்களில் முன்னரே புக் செய்வது வழக்கம். அவ்வகையில் 2024 ஆம் ஆண்டில் ஒயோ ஆப்பில் அதிகமானோர் முன்பதிவு செய்த ஆன்மீக இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
OYO வெளியிட்டுள்ள "Travelopedia 2024' அறிக்கையின்படி இப்பட்டியலில் 6 நகரங்கள் இடம்பிடித்துள்ளது. இப்பட்டியலில் முதல் 3 இடங்களை பூரி, வாரணாசி, ஹரித்துவார் ஆகிய புனித நகரங்கள் பிடித்துள்ளன. அதற்கடுத்த வரிசையில் தியோகர், பழனி, கோவர்தன் நகரங்கள் இடம்பிடித்துள்ளன. பழனி மட்டும் தான் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழக நகரம் ஆகும்.
பூரி:
ஒடிஷா மாநிலத்தில் பூரி நகரத்தில் தான் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதிலும் இருந்து எண்ணற்ற பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறைகளின் தொலைந்துபோன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக இந்தாண்டு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி.கே. பாண்டியனை குறிப்பிட்டு தான் பிரதமர் மோடி இவ்வாறு கூறியதாக சொல்லப்படுகிறது.
வாரணாசி:
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள வாரணாசி நகரத்திற்கு எண்ணற்ற பக்தர்கள் வருடம்தோறும் வந்து செல்கின்றனர். முன்பு காசி என்று அழைக்கப்பட்ட இந்த இடத்திற்கு வருவது புண்ணியம் என்று பெரும்பாலான இந்துக்கள் நம்புகின்றனர்.
புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் கங்கை நதியில் குளித்து தங்களது பாவங்களை கழுவவும் எண்ணற்ற பக்தர்கள் வாரணாசிக்கு வருகை புரிகின்றனர்.
ஹரித்துவார்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் நகரத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவிற்கு எண்ணற்ற பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் இந்நகரத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் இங்கு வருகை தருகின்றனர்.
தியோகர்:
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் நகரத்தில் சிவனின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பைத்யநாத் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளனமான பக்தர்கள் தியோகர் நகரத்திற்கு வருகை புரிகிறார்கள்.
பழனி:
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாநிலத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது.
பழனியாண்டவரான முருகனை தரிசிக்க இந்தியா முழுவதிலும் இருந்து எண்ணற்ற பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.
கோவர்தன்:
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கோவர்தன் மலையை பகவான் கிருஷ்ணர் தூக்கியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கோவர்தன் நகரத்திற்கு நிறைய பக்தர்கள் வருடம்தோறும் பயணம் செய்கின்றனர்.
- திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும் வகையில் 3 நாட்கள் சிறப்பு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.
- ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படுகிறது.
சென்னை:
சென்னை, வாலாஜா சாலையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக சார்பில் சுற்றுலா வளாகத்தில் இருந்து திருச்செந்தூர், ராமேசுவரத்திற்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும் ராமேசுவரம், சென்று மீண்டும் திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும் வகையில் 3 நாட்கள் சிறப்பு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.
முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவில், ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலில், ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சாமி கோவிலில் சிறப்பு தரிசனம், 22 தீர்த்தங்கள் தொடர்ந்து தனுஷ்கோடியையும் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்ய www.ttdconline.com இணையதள பக்கத்திலும் அல்லது சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 180042531111 (கட்டணமில்லா தொலைபேசி எண்) மற்றும் 044-2533 3333 மற்றும் 044-2533 3444 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் கூறி உள்ளார்.
- பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு 48 பக்தர்களுடன் சொகுசு பேருந்து ஒன்று ஆன்மீக சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளது.
- கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குஜராத்தில் சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு 48 பக்தர்களுடன் சொகுசு பேருந்து ஒன்று ஆன்மீக சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளது.
இன்று காலை 4.15 மணியளவில் டாங் மாவட்டத்தில் சபுதாரா மலைப் பிரதேச சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 17 பேர் தீவிர காயங்களுடன் அஹ்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் லேசான காயங்களுடன் தப்பினர். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் வழங்கப்படுகிறது.
- கோவில் பிரசாதம், மதிய உணவும் வழங்கப்படுகிறது.
சென்னை :
தமிழகத்தில் பொதுமக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டு போற்றி வருவதோடு, ஒரே நாளில் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவதை பெருவிருப்பமாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு, இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் 'தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவ கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிக பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.
இதனை செயல்படுத்தும் வகையில், கடந்த ஆடி மாதம் புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன், இந்து சமய அறநிலையத்துறை இணைந்து ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சை ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைதோறும் குறைந்த கட்டணத்தில் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிக சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிக சுற்றுலாவை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
அதேபோல், 2-ம் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயல் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீர ராகவபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். இந்த 2 திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன். இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், சுற்றுலாத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, கூடுதல் கமிஷனர் சி.ஹரிப்ரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளர் பாரதி தேவி, இணை இயக்குனர் பி. புஷ்பராஜ், இணை கமிஷனர்கள் ஆர்.சுதர்சன், ந.தனபால், கே.ரேணுகா தேவி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நளன் குளத்தில் மாணவி தவறி விழுந்து பலியானார்.
- 34 பேர் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வந்தனர்.
புதுச்சேரி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி அடுத்த கோரலுக்குண்டா பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி. ஆட்டோ ஓட்டி வரும் இவரது மனைவி சுசீலா. இவர்க மகள் கீர்த்தனா (வயது12) இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்கரபாணி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட 34 பேர் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வந்தனர். நேற்று மாலை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வந்தவர்கள், முன்னதாக கோவில் அருகே உள்ள நளன் தீர்த்த குளத்தில் குளித்தனர். அப்போது கீர்த்தனா குளத்தில் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
- மதுரையில் இருந்து சீரடிக்கு ஆன்மீக சுற்றுலா ரெயில் 21-ந் தேதி புறப்படுகிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.
மதுரை
மதுரையில் இருந்து முதன் முதலாக பல்வேறு ஆன்மீக சுற்றுலா தலங்களை இணைத்து மதுரை-காசிக்கு ஆன்மீக சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-வது ஆன்மீக சுற்றுலா ரெயில் மதுரையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் வருகிற 21-ந்தேதி காலை 7.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படுகிறது. இது திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை, எழும்பூர் வழியாக ஐதராபாத் செல்கிறது. அங்கு சலர்ஜங் மியூசியம், சார்மினார், ராமானுஜர் சமத்துவ சிலை, கோல்கொண்டா கோட்டை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க உள்ளனர்.
பின்னர் வருகிற 24-ந்தேதி சீரடி சென்று சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்கின்றனர். மறுநாள் சனிசிங்னாபூர் சென்று, நாசிக்ந கரில் திரியம்பகேஷ்வர், பஞ்சவடி தரிசனம் செய்கின்றனர். வருகிற 27-ந் தேதி பண்டரிபுரம் பாண்டுரங்கர் கோவிலில் சாமி தரிசனம், 28-ந் தேதி மந்திராலயம் ராகவேந்திரர் தரிசனம், 29-ந் தேதி சுற்றுலா முடிவடைகிறது.
ஆன்மீக ரெயில் சுற்றுலாவில் தங்குமிடம், உணவு, உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் தங்கள் வசதிக்ற்பகே ரூ.30 ஆயிரம், ரூ. 24 ஆயிரம், ரூ. 16 ஆயிரத்து 900 ஆகிய 3 வகைகளில் கட்டணங்களில் பயணம் செய்யலாம்.
2-க்கும் மேற்பட்டோர் குடும்பமாக செல்லும் போது கட்டணம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த சுற்றுலாவுக்கு www.ularail.com இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம், அல்லது 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- ஆடி மாதத்தில் அம்மன் கோவில் தலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.
- காலை 8.30 மணிக்கு புறப்படும் இந்த ஆன்மிக சுற்றுலா இரவு 7.30 மணிக்கு நிறைவடையும்.
ஆடி மாதம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்தது. இதையடுத்து சென்னை மற்றும் மாநகர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் பக்தர்கள் வீடுகளில் கூழ் தயாரித்து அம்மனுக்கு படைத்து பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் இந்த மாதத்தில் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து அம்மன் கோவில் தலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.
மாங்காடு, திருவேற்காடு, திருமுல்லைவாயல், புட்டலூர், மயிலாப்பூர், திருவொற்றியூர், பெரிய பாளையம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 8.30 மணிக்கு புறப்படும் இந்த ஆன்மிக சுற்றுலா இரவு 7.30 மணிக்கு நிறைவடையும். மதியம் உணவு மாங்காடு அம்மன் கோவில் மற்றும் பெரிய பாளையம் அம்மன் கோவில்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
அம்மன் கோவில்களுக்கு ஒரே நாளில் அழைத்து செல்லப்படும் திட்டத்தில் பக்தர்கள் குவிகிறார்கள். 2 வகையான அம்மன் கோவில் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை-1 சுற்றுலா திட்டத்திற்கு ரூ.900, சென்னை-2 திட்டத்திற்கு ரூ.700 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அழைத்து செல்லப்படும் பக்தர்கள் சிறப்பு தரிசனத்தின் கீழ் அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. சுற்றுலா செல்லும் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3 நாட்கள் அம்மன் கோவில் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.
அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆன்லைனில் முன்பதிவு வேகமாக நடைபெறுவதால் இத்திட்டம் இந்த மாதம் முழுவதும் நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.






