search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசியில் பெருமாள் கோவில் ஆன்மிக சுற்றுலா: அமைச்சர்கள்  தொடங்கி வைத்தனர்
    X

    சேகர்பாபு, மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    புரட்டாசியில் பெருமாள் கோவில் ஆன்மிக சுற்றுலா: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

    • பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் வழங்கப்படுகிறது.
    • கோவில் பிரசாதம், மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    சென்னை :

    தமிழகத்தில் பொதுமக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டு போற்றி வருவதோடு, ஒரே நாளில் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவதை பெருவிருப்பமாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு, இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் 'தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவ கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிக பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.

    இதனை செயல்படுத்தும் வகையில், கடந்த ஆடி மாதம் புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன், இந்து சமய அறநிலையத்துறை இணைந்து ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சை ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைதோறும் குறைந்த கட்டணத்தில் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிக சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிக சுற்றுலாவை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    அதேபோல், 2-ம் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயல் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீர ராகவபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். இந்த 2 திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன். இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், சுற்றுலாத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, கூடுதல் கமிஷனர் சி.ஹரிப்ரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளர் பாரதி தேவி, இணை இயக்குனர் பி. புஷ்பராஜ், இணை கமிஷனர்கள் ஆர்.சுதர்சன், ந.தனபால், கே.ரேணுகா தேவி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×