search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி பெயர் வந்தது எப்படி?
    X

    ஆடி பெயர் வந்தது எப்படி?

    • ஆடி மாதம் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும்.
    • சிவன் திரி சூலத்தால் கொன்று அரக்கனை அழித்தார்.

    பவுர்ணமி தினத்தன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திரமே மாதங்களின் பெயராக அமைந்திருக்கும். சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாகத்திலும், ஆனியில் அனுஷத்திலும் பவுர்ணமி அமையும்.

    ஆடி மாதம் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும். ஆஷாடத்தில் இரண்டு உண்டு. முதலில் வருவது பூர்வ ஆஷாடம், பூர்வ ஆஷாடம் என்பது `பூராடம்' என்றும், உத்தர ஆஷாடம் என்பது `உத்தராடம்' என்றும் சொல்லப்படுகிறது.

    உத்திர ஆஷாடத்தில் பவுர்ணமி வரும் ஆடி மாதத்தை வட மொழியில் `ஆஷாடீ' என்று சொல்வார்கள். அதுவே தமிழில் `ஆடி' என்று மருவி விட்டது. ஆடி மாதம் தோன்றியதற்கு இன்னொரு கதையும் கூறப்படுகிறது.

    ஆடி என்னும் அரக்கன் ஒருமுறை அம்பிகை இல்லாத நேரத்தில் சிவபெருமான் உறைந்துள்ள கயிலாய மலைக்கு வந்தான். பார்வதியின் தோழியான உத்தாலகுசுமை அப்போது அங்கு காவலுக்கு இருந்தாள். அவளது காவலை மீறி கயிலாய மலை உள்ளே நுழைவது கடினம் என்பதை அறிந்து, பாம்பு வடிவில் புகுந்தான்.

    சிவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் அந்த ஆடி அரக்கன் பார்வதியாக உருமாறினான். எல்லாம் அறிந்த சிவன், அசுரன் வந்திருப்பதை அறிந்தாலும், ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார்.

    அன்பு மொழி பேசி அருகில் அழைத்தார். அரக்கன் சிவனை நெருங்கியதும். திரி சூலத்தால் கொன்று அரக்கனை அழித்தார். சிவ மகாபுராணத்தில் இந்த அரக்கனின் வரலாறு இடம் பெற்றுள்ளது.

    தன்னுடைய உருவ வடிவில் வந்தவன் என்பதால், தேவி அவனிடம் இரக்கம் கொண்டு நற்கதி வழங்கினாள். இதனால் அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே `ஆடி' என்ற பெயர் ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் அம்பிகை மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்ற வழக்கம் ஏற்பட்டது.

    Next Story
    ×