என் மலர்
வழிபாடு

ஆடி மாதத்தில் வரும் 2 கிருத்திகை- குழப்பத்தில் பக்தர்கள்
- ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும்.
- பெரும்பான்மையான பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு சென்று காவடி எடுத்தல், அலகு குத்துதல், அன்னதானம் செய்தல் முதலானவற்றை செய்வர்.
ஆடி மாதம் அம்மனுக்கு மட்டும் உகந்த மாதம் கிடையாது. தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உகந்த மாதம். கிருத்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது தான் எனினும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்த முக்கிய நாளாக இந்த நாளை தேர்வு செய்கிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி கிருத்திகை நாளன்று தான் தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் சூரனை அழிக்க சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தார். அதனால் தான் முருக பக்தர்கள் இந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர் . வாழ்வில் எல்லா வளமும் பெறுவதற்கு கந்தனின் கடை கண் பார்வை போதும் என்பார்கள். அந்த கந்தனின் அருளை முழுமையாக பெறுவதற்கு கிருத்திகை வழிபாடு செய்தாலே போதும். மாதாமாதம் வரும் கிருத்திகை வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஆண்டிற்கு மூன்று கிருத்திகையில் செய்தாலே போதும் என்பர். ஆடி கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை. தை கிருத்திகை இந்த மூன்று தெய்வீக தினங்களில் முறையாக விரதமிருந்து வழிபட்டாலே போதும் கந்தனின் பார்வை நம் மீது பட்டு எல்லா வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆடி கிருத்திகையில் பக்தர்கள் அனைவரும் உள்ளன்போடும், பக்தியோடும் தங்களது பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள். அன்றைய தினம் புண்ணீய தீர்த்தத்தில் நீராடி, கந்தர் அலங்காரம்,திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் முதலானவற்றை பாராயணம் செய்வார்கள். பெரும்பான்மையான பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு சென்று காவடி எடுத்தல், அலகு குத்துதல், அன்னதானம் செய்தல் முதலானவற்றை செய்வர். மற்ற முருகன் கோவில்களை விட திருத்தணி முருகன் கோவில் தான் ஆடி கிருத்திகைக்கு விசேஷமானது.
ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும். அன்றைய தினம் முருகனின் ஆறுபடை வீடுகளில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், ஹோமங்கள், தேர் பவனி ஆகியவை நடக்கும். இது தவிர நாடெங்கிலும் இருக்கும் முருகன் கோவிலில் விழாக்கோலம் கொண்டிருக்கும்.
இந்த ஆண்டு ஆடி கிருத்திகை கூடுதல் சிறப்பு. ஏனெனில், இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஜூலை 20 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய 2 தேதிகளில் ஆடி கிருத்திகை வருகிறது. இரண்டு கிருத்திகை வருவதால் இதில் எந்த நாளில் ஆடி கிருத்திகை விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் பக்தர்களிடையே நிலவுகிறது.
இருப்பினும் ஜூலை 20 தேதி வரும் கிருத்திகை ஆடி கிருத்திகையாக கணக்கில் கொள்ளக்கூடாது என்றும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமையன்று வரும் கிருத்திகை தான் ஆடிக் கிருத்திகை என்று கூறுகின்றனர். அன்றைய தினம் காலை 08.27 மணி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 06.49 மணிக்கு ஆடிக் கிருத்திகை நிறைவடைகிறது.
திருத்தணி முருகன் கோவிலில் 5 நாள் உற்சவ விழாவாக ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி அஸ்வினி கிருத்திகையும், ஆகஸ்ட் 15ம் தேதி பரணி கிருத்திகையும், ஆகஸ்ட் 16ம் தேதி ஆடிக் கிருத்திகையும் கொண்டாடப்படவுள்ளது. மேலும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் நாள் தெப்ப உற்சவமும், ஆகஸ்ட் 17ம் தேதி இரண்டாம் நாள் தெப்ப உற்சவமும், ஆகஸ்ட் 18ம் தேதி மூன்றாம் நாள் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






