search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi perukku"

    • அருள் வந்த பூசாரி தேங்காய்களை பக்தர்களின் தலையில் உடைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும், மக்கள் நலம் பெறவும் வேண்டி காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே உள்ள காவேரி ஆற்றில் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    கூடச்சேரி, பில்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் கோவில்களில் இருந்த பழைய ஆயுதங்களை காவிரி ஆற்றுக்கு கொண்டு வந்து அதனை காவிரியில் சுத்தம் செய்தனர். பின்னர் ஆயுதங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    அதனை தொடர்ந்து பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அருள் வந்த பூசாரி தேங்காய்களை பக்தர்களின் தலையில் உடைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மாலை 5 மணியளவில் வேலூர் சோழன் பாய்ஸ் ஏ. இயக்க மீனவர் சங்கம் சார்பில் பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் 26-ம் ஆண்டு தொடர் பரிசல் போட்டி நடைபெற்றது.

    இதில், பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோவில் காவிரி கரையில் இருந்து மறுகரையில் உள்ள கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி வரை சென்று மீண்டும் காசி விஸ்வநாதர் கோவில் பகுதியை வந்தடைந்தது.

    இதில் முதல் பரிசை பெற்ற பரமத்திவேலூரைச் சேர்ந்த ராஜாவுக்கு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு பெற்ற கணேசனுக்கு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு பெற்ற விஸ்வாவுக்கு ரூ.5 ஆயிரம், 4-ம் பரிசு பெற்ற முட்டி என்கிற கணேசனுக்கு ரூ. 3 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    பரிசு தொகையினை டி.எஸ்.பி ராஜமுரளி வழங்கி பாராட்டினார்.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும், மக்கள் நலம் பெறவும் வேண்டி காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக காசி விஸ்வநாதர் கோவிலில் மோட்ச தீபத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பரிசல் மூலம் காவிரி ஆற்றின் மத்திய பகுதிக்கு சென்று விடப்பட்டது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில், வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம், நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நாளை கிடாய் வெட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கொல்லபட்டி கிராமம் ஜி.குரும்பபட்டியில் பழமையான மகாலட்சுமி அம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த இருந்த பக்தர்கள் நீண்டவரிசையில் நின்றனர். அவர்களை கோவில் பூசாரி சாட்டையால் அடித்தார். அதனைதொடர்ந்து கோவில் முன்பு அமரவைக்கப்பட்ட பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைக்கப்பட்டது.

    இந்த திருவிழாவை காண சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை கிடாய் வெட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு பத்திரப்பதிவு செய்ய 200 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும்.
    • அலுவலகம் முன்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது.

    குன்றத்தூர்:

    குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட குன்றத்தூர், மலையம்பாக்கம், நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லசேரி, கோவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுடைய நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தை நாடுவது வழக்கம், வழக்கமாக குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு பத்திரப்பதிவு செய்ய 200 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும்.

    அதில் அதிகபட்சமாக 100 முதல் 120 வரை பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம்.

    நிலம் வாங்குபவர்கள் ஆடிப்பெருக்கன்று பத்திரப்பதிவு செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை முதலே அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர். அலுவலகம் முன்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது.

    நேற்று ஒரு நாள் மட்டும் பத்திரப்பதிவு செய்ய 214 டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. அதில் 160 பேர் பத்திரப்பதிவு செய்தனர்.

    • கோவிலில் இருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.
    • நம்பெருமாள் அணிந்திருந்த மாலை, புடவை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் காவிரியில் விடப்பட்டது.

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி நதி பாயும் பகுதிகள் முழுவதும் பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கி வழிபடுவது வழக்கம். அதேபோல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாள், காவிரித் தாயாருக்கு ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் அம்மா மண்டபம் படித்துறையில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார்.

    அவ்வகையில் ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள், காவிரி தாய்க்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 4 மணிவரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதன்பின்னர் நம்பெருமாள் அணிந்திருந்த மாலை, புடவை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளங்கள் முழங்க காவிரி படித்துறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சீர்வரிசை பொருட்களை காவிரி தாய்க்கு வழங்கும் வகையில், காவிரி ஆற்றில் விடப்பட்டு, சீர்வரிசை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி தாயையும், நம்பெருமாளையும் தரிசனம் செய்தனர்.

    பின்னர் நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    • தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு பல ஆயிரம் பேர் வந்து குவிந்திருந்தனர்.
    • அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே பொது மக்கள் முண்டியடித்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அனைவரது வாழ்விலும் காவிரி போல மகிழ்ச்சியும், வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று ஆடிப்பெருக்கு நன்னாளில் காவிரிக்கு படையிலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். மேலும் காவிரி கரையோர மக்கள் கோவிலில் உள்ள சாமி சிலைகளையும் காவிரி ஆற்றுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து நீராட்டி மீண்டும் மேள தாளங்கள் முழங்க கோவிலுக்கு எடுத்து செல்வார்கள்.

    அந்த வகையில், காவிரி கரையோர மக்கள் இன்று அதிகாலை முதலே மேட்டூர் காவிரிக்கு சாரை சாரையாக வர தொடங்கினர். இதனால் காவிரி கரையோர பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. பெரும்பாலான பக்தர்கள் மேட்டூர் காவிரியில் நீராடி மகிழ்ந்தனர்.

    மேலும் பக்தர்கள் தங்களது குல தெய்வங்களை தலையில் சுமந்த படி மேள தாளங்கள் முழங்க மேட்டூருக்கு பக்தர்கள் புடை சூழ நடந்தே வந்தனர். அவர்கள் சாமி சிலைகளை காவிரியில் நீராட்டி மீண்டும் தங்களது கிராமங்களுக்கு மேளதாளங்களுடன் எடுத்து சென்றனர்.

    புதுமண தம்பதியர் தங்களது திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து வழிபட்டு காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். இதற்காக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு பல ஆயிரம் பேர் வந்து குவிந்திருந்தனர்.

    மேட்டூருக்கு வந்த பக்தர்களில் சிலர் ஆடு, கோழிகளை பலியிட்டு மேட்டூர் அணைக்கட்டு முனியப்பனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆடு, கோழிகளை சமைத்து அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினர்.

    அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே பொது மக்கள் முண்டியடித்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி மேட்டூரில் பூங்கா சாலை, கொளத்தூர் சாலைகள் உள்பட பல்வேறு சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காட்சி அளித்தது. அணை பூங்காவிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

    பொது மக்கள் நீராட காவிரி பாலப்பகுதியில் உள்ள 2 படித்துறைகள், மட்டம் பகுதியில் உள்ள 3 படித்துறைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதிகளில் அதிக அளவில் பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர். காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் மற்ற பகுதிகளில் குளிக்க அனுமதி அளிக்கவில்லை.

    மேட்டூர் நகராட்சி சார்பில் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக உடை மாற்றும் அறைகள், கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம், டி.எஸ்.பி. மரியமுத்து ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் 20 பேர் காவிரி கரையில் படகுகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். மேலும் 5 பரிசல்கள், ரப்பர் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்காலிக புறக்காவல் நிலையம், முதல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இது தவிர 12 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு காவல் உதவி மையத்தில் இருந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    திருடர்கள், குற்றவாளிகளை கண்காணிக்க சாதாரண உடையில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆடிப்பெருக்கு விழாவவையொட்டி ஏராளமான தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • இந்தாண்டு ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    பின்னர் மாலை காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார். அதன்படி இந்தாண்டு ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்காக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிவரை நம்பெருமாள் அங்கு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதனை தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • படையலுக்கு தீபாராதனையை காண்பித்த பின்னர் ஆற்றை நோக்கி காவிரி தாய்க்கும், சூரிய பகவானுக்கும் காண்பித்து வழிபட்டனர்.
    • மஞ்சள் கயிற்றை பூஜைக்கு பின் சுமங்கலி பெண்கள் மற்ற சுமங்கலி பெண்களின் கழுத்திலும், திருமணமாகாத இளம்பெண்களின் கழுத்திலும் கட்டி விட்டனர்.

    திருச்சி:

    திருச்சி, கரூர் மாவட்டங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    இங்கு அதிகாலை முதல் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். காலையில் சற்று கூட்டம் குறைவாக காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல கூட்டம் அலைமோதியது.

    திருச்சி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மா மண்டபம் படித்துறையில் திரண்டிருந்தனர். வழக்கமாக ஆடிப்பெருக்கின்போது காவிரியில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்படும்.

    அதேபோன்று இன்றைய தினமும் 10 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இதனால் காவிரியில் பாய்ந்தோடிய தண்ணீரை கண்டு பூரிப்படைந்தனர். பின்னர் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் புனித நீராடி காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்தனர்.

    அதன் பின்னர் வாழை இலை விரித்து அதில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து, தேங்காய், பழம், வெல்லம், ஏலக்காய் கலந்த அரிசி, கரும்பு துண்டு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் ஆகியவற்றினை வைத்தும், மஞ்சள், குங்குமம், கருகமணி போன்ற மங்கல பொருட்களை வைத்தும் படையலிட்டனர்.

    பின்னர் வீட்டின் மூத்த சுமங்கலி பெண்கள் அந்தப் படையலுக்கு கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். அப்போது வீட்டில் உள்ள இதர குடும்ப உறுப்பினர்கள் பயபக்தியுடன் விநாயகரை வழிபட்டனர்.

    படையலுக்கு தீபாராதனையை காண்பித்த பின்னர் ஆற்றை நோக்கி காவிரி தாய்க்கும், சூரிய பகவானுக்கும் காண்பித்து வழிபட்டனர்.

    இதில் மஞ்சள் கயிற்றை பூஜைக்கு பின் சுமங்கலி பெண்கள் மற்ற சுமங்கலி பெண்களின் கழுத்திலும், திருமணமாகாத இளம்பெண்களின் கழுத்திலும் கட்டி விட்டனர். குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களுக்கு கையில் மஞ்சள் கயிறு கட்டப்பட்டது. பின்னர் தங்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி இறைவனை மனதுருகி வேண்டிக்கொண்டனர்.

    வாழ்வில் வளமும் செல்வமும் பெருக, தொழில், வியாபாரம் விருத்தி அடைய, விவசாயம் செழிக்க வேண்டிக்கொண்டனர்.

    புதுமண தம்பதிகள் தாலிச்சரடுகளை மாற்றிக்கட்டி வீட்டில் உள்ள மூத்த சுமங்கலி பெண்களிடம் ஆசி பெற்றனர்.

    பூஜைக்கு பின்னர் படையலில் வைத்தவற்றில் சிலவற்றை ஒரு பையில் எடுத்து வைத்துவிட்டு 2 பழம், பத்தி, மஞ்சள், பிள்ளையார், வெற்றிலை பாக்கு, திருமண மாலைகள் ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்தும் அதில் காணிக்கையாக காசு மற்றும் ரூபாய் நோட்டுகளை வைத்து ஆற்றில் விட்டனர்.

    அம்மா மண்டபம் படித்துறையில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தீயணைப்பு படை வீரர்கள் ரப்பர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருந்த காரணத்தால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியபடி அம்மா மண்டபம் தவிர்த்து அய்யாளம்மன் படித்துறை, கருடா மண்டபம், கீதாபுரம், சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை காந்தி படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு, கம்பரசம் பேட்டை( தடுப்பணை), முருங்கைப்பேட்டை,

    முத்தரசநல்லூர், அக்ரஹார படித்துறை, பழுர் படித்துறை, அல்லூர் மேல தெரு படித்துறை, திருச்செந்துறை, வெள்ளாளர் தெரு படித்துறை, அந்தநல்லூர் படித்துறை, திருப்பராய்த்துறை, மேலூர் அய்யனார் படித்துறை, பஞ்சகரை படித்துறை ஆகிய இடங்களிலும் ஆடிப்பெருக்கு வழிபாடுகள் நடந்தன.

    கரூர் மாவட்டத்தில் நொய்யல், தவிட்டுப்பாளையம், நன்செய் புகளூர், கடம்பன்குறிச்சி, என்புதூர், வாங்கல், மாயனூர் கதவணை, மகாதானபுரம், குளித்தலை ஆகிய காவிரி கரையோரப்பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இதே போன்று பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு தண்ணீர் போதுமான அளவுக்கு வந்ததால் ஆடிப்பெருக்கு விழாவை பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    • பள்ளியின் செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம் கலந்து கொண்டார்.
    • பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டன

    திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் ஆடிபெருக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கிட்ஸ் கிளப் பள்ளியின் செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம் கலந்து கொண்டார். மாணவர்கள் முளைப்பாரி வைத்து, கும்மிபாட்டு, கோலாட்டம், பட்டிமன்றம் போன்ற நிகழச்சிகளை நடத்தினர். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    • ஒலிபெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தி வருகிறார்கள்

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சங்கமேஸ்வரர் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைந்த சிறப்பை பெற்ற கோவிலாகும்.

    அதேபோல் இந்த கோவிலுக்கு பின்பகுதி உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுது நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார ஸ்தலம் முக்கூடல் சங்கமம் சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இதனால் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.

    மேலும் இங்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் மேற்கொண்டு செல்வது வழக்கம். இங்கு அமாவாசை, பவுர்ணமி, ஆடிப்பெருக்கு மற்றும் முக்கிய நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் பொதுமக்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுவார்கள்.

    இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்ட த்தில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக திருமண தம்பதிகள் புனித நீராடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் திருமணமான புதுமண தம்பதிகள் ஏராளமானோர் கூடுதுறைக்கு அதிகாலை முதலே வந்த வண்ணம் உள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் ஆற்றில் புனித நீராடி தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர். மேலும் பலர் புது தாலி மாற்றி கொண்டனர். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் தீயணைப்புத்துறை சார்பில் ரப்பர் படகில் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போல் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் ஒலிபெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் கோவில் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் பலர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுதல் பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இதையொட்டி போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே புதுமண தம்பதிகள் பலர் வந்து புனித நீராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

    மேலும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் பலர் வந்து திருமண தடை நீங்கவும், திருமணம் தடையின்றி நடக்கவும் பரிகார பூஜைகள் செய்தனர். இதேபோல் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தரிப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    மேலும் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கையொட்டி இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள். அதே போல் பக்தர்கள் பலர் காவிரி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.

    இதே போல் ஆடிப்பெருக்கையொட்டி ஈரோட்டில் பல பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் படையல் போட்டு தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு படையலில் உணவு வைத்து அதில் இறந்தவர்களுக்கு பிடித்த உணவு மற்றும் தின்பண்டங்களை வைத்து படைத்து வழிபாடு நடத்தினர்.

    இதையடுத்து அவர்கள் படையலின் பகுதியை முன்னோர்களை நினைத்து காகத்துக்கு வைத்தனர். மற்றொரு பகுதியை தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிட்டனர். முன்னதாக அவர்கள் முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    • ஆற்றங்கரையில் மக்கள் கூடியும், கோயில்களில் வழிபாடு செய்தும் மகிழ்வார்கள்.
    • விதைத்தலுக்கு முன்னர் ஆனி மாதம் பெய்யும் மழை, பயிர் வளர்ச்சிக்கு ஏற்றது.

    உத்திராயண காலமான தை மாதம் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயண காலமான ஆடி மாதம் சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருப்பதை தமிழ் முன்னோர்கள் அறிந்திருந்தனர். வேளாண் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் ஆறுகள் பாயும் கரையோரப் பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைந்துள்ள படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் பெருகும் ஆற்று வெள்ளம் காரணமாக அந்த 18 படிகளும் மூழ்கிவிடும். அந்த புது வெள்ளத்தை வரவேற்று, விழாவாக கொண்டாடப்படும் தமிழர் பண்பாடு ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு நாள் ஆகும்.

    விதை, விதைத்து நாற்று நட்டுப் பயிர் வளர்க்கும் நாள்களின் அடிப்படையில் அமைந்த விழா ஆடிப்பெருக்கு. நிலத்தில் நாற்று நடப்படுவதற்கு முன்னர் நீரோட்டம் என்ற ஆற்றுப்பெருக்கு கணக்கிடப்படுகிறது. தென்மேற்குப் பருவக்காற்றினால் மழை பொழிந்து, ஆற்றில் நீர் கரைபுரண்டு வரும்போது புதுப்புனலை வரவேற்க ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்றாகத் திரண்டு நீராடி மகிழும் விழா ஆடிப்பெருக்கு நாள்.

    ஒகேனக்கல் முதல் காவிரிப்பூம்பட்டினம் வரை காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் பொதுமக்கள் ஆடி மாதம் பதினெட்டாம் நாளில் விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பயிர் செய்ய உற்ற துணையான நீரை வணங்கி, விதைக்க ஆரம்பிக்கும் ஆடிப்பெருக்கு விழா சங்க காலம் முதல் இந்த நாள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது. நீரை பயன்படுத்திப் பயிர் வளர்க்கும் வழிகளோடும், மழையையும் அதைப் பயன்படுத்துவதை நினைவுகூரும் நாளாகவும் ஆடிப்பெருக்கு அமைகிறது.

    அந்த நல்ல நாளில் நீர் நிலைகள், ஆறுகள் அருகே பொதுமக்கள் ஒன்றாக கூடி, தண்ணீரை வணங்கி, வயலில் விதைக்கும் பணிகளை ஆரம்பிப்பர். அதை கொண்டாடும் வகையில் கிராமப்புற சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்வார்கள்.

    ஆற்றங்கரையில் மக்கள் கூடியும், கோயில்களில் வழிபாடு செய்தும் மகிழ்வார்கள். பெண்கள் ஆற்றங்கரையில், சாணத்தால் மெழுகி கோலமிட்டு, படையலிட்டு செழிப்பான விளைச்சலைத் தருவதற்காக இயற்கையை போற்றும் விதமாக அகல் விளக்கேற்றி வாழை மட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டு வழிபடுவர். பின்னர் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த தேங்காய், தக்காளி, எலுமிச்சை, தயிர், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து உண்டு மகிழ்வர்.

    ஆடிப்பெருக்கு நாளில் இயற்கை மற்றும் கடவுளை வழிபடுவதன் மூலம், ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல, மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.

    சூரியன் இயக்கம், காற்றின் போக்கு, நிலத்தின் பக்குவம் ஆகியவற்றிற்கேற்ப நீரைப் பயன்படுத்தி பயிர் வளர்க்கும் நமது வேளாண் பண்பாட்டில், விதைப்பு செய்யும் காலமாக ஆடி மாதம் அமைகிறது. நாற்று விட்டு, நடவுக்கு முன் ஆடி பதினெட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. நட்ட பயிர் வளர்வதற்கேற்ற நீர்வளம் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கிடைக்கிறது.

    விதைத்தலுக்கு முன்னர் ஆனி மாதம் பெய்யும் மழை, பயிர் வளர்ச்சிக்கு ஏற்றது. பயிர் மழையைத் தாங்கி நிற்கும் ஐப்பசி மழை, குளிரும் வெப்பமுமான சூழலில் பயிர் வளர்ச்சி, பின் தை மாதம் அறுவடை என பெய்யும் மழையை ஒட்டியே பயிர் வளர்க்கப்பட்டது.

    நீர் மேலாண்மை செய்ய சூரியன் இயக்கத்தை ஒட்டி ஆறு, குளங்கள் சீரமைக்கப்பட்டு, நீரின் அருமை அறிவுறுத்தப்படும் நாள் ஆடிப்பெருக்கு ஆகும். கடவுளையும், இயற்கை வழிபாட்டையும் இணைத்து மேற்கொள்ளப்படும் ஆடிப்பெருக்கு நாள், தற்சார்பு விவசாய வழிமுறைகளை வெளிப்படுத்தும் வகையில் காலம்காலமாக நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

    • நாளை ஆடிப்பெருக்கு என்பதால் பூக்கள் விலை சற்று அதிகரித்து உள்ளது.
    • வழக்கமாக தினசரி 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்து வரும். இன்று 25 வாகனங்களில் மட்டும் பூக்கள் வந்தது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக தினசரி 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்து வரும். இன்று 25 வாகனங்களில் மட்டும் பூக்கள் வந்தது.

    இந்த நிலையில் நாளை ஆடிப்பெருக்கு என்பதால் பூக்கள் விலை சற்று அதிகரித்து உள்ளது. கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்டது.

    தற்போது சாமந்திப்பூவின் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அதன் விலையும் அதிகரித்து ரூ.180 வரை விற்பனை ஆகிறது.

    ஆடிப்பெருக்கையொட்டி பூ விற்பனை பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிகாலை முதலே மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்து பூ விற்பனை மந்தமாகவே நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை விபரம் (கிலோவில்)வருமாறு :-

    சாமந்தி-ரூ.120 முதல் ரூ.180 வரை

    மல்லி- ரூ.450

    ஐஸ் மல்லி- ரூ.350

    கனகாம்பரம்- ரூ.600

    முல்லை- ரூ.300

    ஜாதி- ரூ.300

    பன்னீர்ரோஸ்- ரூ.50 முதல் ரூ.80 வரை

    சாக்லேட் ரோஸ் - ரூ.100 முதல் ரூ.120 வரை

    அரளி - ரூ.200

    சம்பங்கி -ரூ.120

    சென்டு மல்லி - ரூ.50முதல் ரூ.60வரை

    • நாளை ஆடி 18-ந்தேதியையொட்டி ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • வார சந்தைக்கு இன்று அதிகாலை முதலே சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். வழக்கமாக இந்த சந்தையில் ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகும்.

    அதன்படி, இன்று உளுந்தூர்பேட்டையில் வாரச்சந்தை நடைபெற்றது. வார சந்தைக்கு இன்று அதிகாலை முதலே காட்டுசெல்லூர், வடகுரும்பூர், கிளியூர், சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

    இந்நிலையில் நாளை ஆடி 18-ந்தேதியையொட்டி ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஆடு சந்தையில் விற்பனை களை கட்டியது. காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கினர்.

    இது தவிர சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆடுகளை வாங்க குவிந்தனர். இந்த சந்தையில் ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனையானது. காலை 10 மணி நிலவரப்படி ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    ×