search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி பெருக்கு விழா
    X

    ஆடி பெருக்கு விழா

    • ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் நீர்ப்பெருக்கெடுத்து வருதையே ஆடிப் பெருக்கு என ஆவலுடன் அழைக்ககின்றனர்.
    • மங்கலப் பெண்ணொருத்தி மஞ்சள் தடவிய நூல் கயிற்றை அங்கு வந்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் ஆளுக்கொன்றாக எடுத்துக் கொடுப்பாள்.

    காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளிலே ஆடிப் பெருக்கு என்னும் இவ்விழா சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தஞ்சை, திருச்சி மாவட்ட மக்களின் பங்கேற்பு இவ்விழாவில் மிகுதி. இவ்விழாவினைப் பற்றிய செய்திகள் பழைய நூற்கள் சிலவற்றிலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சோழன் கரிகால் பெருவளத்தானின் மகளாகிய ஆதி மந்தியின் கணவனாகிய ஆட்டனத்தியைப் பிரிந்து பேதுற்றதும் இவ்வாடிப் பெருக்கு விழாவில் தான் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகின்றனர்.

    உழவிற்கு ஆதாரமாக இருப்பது நீர். அந்நீரினைப் போற்றிக்கொண்டாடுவதே இவ்விழா. ஆதலால் இவ் விழாவினை நீர் விழா என அழைப்பதிலும் தவறில்லை.

    ஒவ்வோராண்டும் ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காவிரியாற்றில் இருகரை தழும்ப நீர் பெருக்கெடுத்து வரும். அதே போல் காவிரியாற்றின் கிளை ஆறுகளான வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரசலாறு, கல்லணைக் கால்வாய் போன்றவற்றிலும் நீர் மிகுதியான அளவிற்குத் திறந்து விடப்படும். இங்ஙனம், ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் நீர்ப்பெருக்கெடுத்து வருதையே ஆடிப் பெருக்கு என ஆவலுடன் அழைக்ககின்றனர்.

    விழா முறை

    இவ்விழாவில், ஆண்களின் பங்கேற்பை விடப் பெண்களின் பங்கேற்ப மிகுதி. இவ்விழா, ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் வருவதை அனைவரும் அறிந்திருப்பதால் பெண்கள் பத்து நாட்களுக்கு முன்னதாகவே முளைப் பாலிகைக்கு ஏற்பாடு செய்வர். ஒன்பதுவகைத் தானியங்களையும் ஒரு தட்டிலோ தாம்பாளத்திலோ எருவுடன் தூவி நீர் தெளித்து மூடி வைத்து வளர்ப்பர். அது வெள்ளை வெளேர் என்று நீண்டு செழிப்புடன் வளர்ந்திருக்கும். இதற்குத் தான் முளைப்பாலிகை என்பது பெயர்.

    கன்னிப்பொங்கலன்று பெண்கள் அனைவரும் ஒன்று கூடி ஊர்வலமாகச் சென்று கும்மி கொட்டுவதைப்போல இதற்கும் ஒன்று கூடி ஊர்வலமாக செல்வர். இதில் கன்னிப்பெண்களனறித்திருமணம் ஆனவர்களும் கலந்து கொள்வர். பெண்கள் தான் வளர்த்திருந்த முளைப்பாலிகையை ஒரு கையில் ஏந்தி வரிசையாக ஆற்றங்கரை நோக்கி அணிவகுத்துச் செல்லுங்காட்சி, கண் கொள்ளாக்காட்சியாகும்.

    செல்லும் போது நாற்சந்திகளிலும் மற்றும் குறிபிட்ட முக்கிய இடங்களிலும், வட்டமாக நின்ற கும்மியடித்துச் செல்வதும் உண்டு. இங்ஙமான இரண்டு மணிக்குப்புறப்பட்ட ஊர்வலம் ஆற்றகரையை அடைவதற்கு ஏறத்தாழ நான்கு அல்ல ஐந்து மணி ஆகும். அங்கே, சமதரையாக உள்ள ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துச்சாணத்தால் மெழுகுவர் அவ்விடத்தில் சாணி உருண்டையாக உருவாக்கப்பட்ட பிள்ளையாரே வைப்பர்.

    பிள்ளையார் கிழக்கு நோக்கிய வண்ணம் இருக்கும். அதற்கு எதிரே தாம் கொண்டு சென்றிருக்கும் முளைப் பாலிகைத் தட்டுக்களை எல்லாம் வரிசையாக அடுக்கி வைப்பர். நாற்றங்கால் ஒன்று நடந்து வந்து அவ்விடத்தில் இளைப்பாறி இருப்பது போல் அக்காட்சி தோன்றும்.

    பின்னர்த்தாம் கொண்டு சென்றிருக்கும் பச்சரிசியை நீர் தெளித்துச் சர்க்கரையுடன் கலந்து வரிசையாக அடுக்குவர். அதன் பிறகு கற்பூரம் ஊதுவத்தி ஆகியவற்றைக் கொளுத்தி, சாம்பிராணி புகைப்பர் அனைத்துப்பெண்களும் பிள்ளையாரைப் பயபக்தியுடன் கீழே விழுந்து வணங்குவர். மங்கலப் பெண்ணொருத்தி மஞ்சள் தடவிய நூல் கயிற்றை அங்கு வந்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் ஆளுக்கொன்றாக எடுத்துக் கொடுப்பாள். வாங்கிக் கொள்ளும் சிலர் கழுத்தில் அணிந்து கொள்வார். சிலர் தம் கையன்றில் கட்டிக் கொள்வர்.

    இந்நிகழ்ச்சிகளுக்குப் பிறகு கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களைப் நிகழ்த்துவர். ஒரு பெண் வெளியில் நின்று நல்ல இராகத்தோடு பாட, ஏனையோரும் அதனையே பாடி ஆடுவர். இது நீண்ட நேரம் நீடிக்கும். பின்னர்ப் பெண்கள் எல்லாம் தாம் கொண்டு வந்த முளைப்பாலிகைத் தட்டினை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குள் இறங்குவர். அப்படியே அதனைத் தண்ணீரில் பிய்த்து விடுவர். அத்துடன் காதோலை, கருகமணி போன்றவற்றையும் ஆற்றில் மிதக்க விடுவர். காதோலைசியைச் செய்விப்பர். இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் ஆற்றின் கரையிலேயே நடைபெறும்.

    சுவாமிமலையின் கண் ஓடும் காவிரியாற்றின் கரையில் ஒவ்வோர் ஆடிப்பெருக்கன்றும் ஏராளமான புத்தம் புதிய மணமக்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வருவதை இன்றும் காணலாம்.

    காவிரியாற்றில் நீர் பெருகுவதைப் போல இவர்களது வாழ்விலும் வளம் பெருகும் என்னும் நம்பிக்கையால் இந் நிகழ்ச்சியை ஆடிப்பெருக்கன்று வைத்துக் கொள்கின்றனர். இந்த ஆடிப்பெருக்கைச் சிலர் பதினெட்டாம் பெருக்கு எனவும் கூறி வருகின்றனர். இவர்கள் ஆடித்திங்களுக்குக் கொடுக்கும் மதிப்பினைவிடப்பதினெட்டாம் நாளுக்குக் கொடுக்கும் மதிப்பே அதிகம் எனத் தெரிகின்றது. ஏன் அந்தப் பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர் என்பது புதிராகவே உள்ளது.

    Next Story
    ×