search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அங்காளம்மனின் கருணை தோற்றம்
    X

    அங்காளம்மனின் கருணை தோற்றம்

    • கர்ப்பகிரகத்துக்குள் அங்காள பரமேசுவரி சிவபெருமானுடன் அமர்ந்துள்ளாள்.
    • அங்காளம்மனின் உருவம் சிவபெருமான் உருவ அமைப்பை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ளது.

    மேல்மலையனூரில் அங்காளம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறாள். ஆங்காரமாகவும அகோரமாகவும் இருந்த அன்னை திருவண்ணாமலை சென்று புனித நீராடி தன் சுயஉருவம் பெற்று மீண்டும் மேல்மலையனூர் வந்து அமர்ந்தாள் என்பது புராண வரலாறாகும்.

    அதனால் தானோ என்னவோ தமிழ்நாட்டில் உள்ள மற்ற சக்தி தலங்களை விட இத்தலத்தில் அங்காள பரமேஸ்வரி சற்று வித்தியாசமாக காணப்படுகிறாள். அங்காளம்மனை நன்கு உன்னிப்பாக பார்த்தால் அவள் ஆவேசத்துடன் இருப்பது போல தோன்றும்.

    பொதுவாக வடக்கு திசை நோக்கி இருக்கும் கடவுள்கள் ஆவேசத்துடன் காணப்படுவார்கள் என்று சொல்வார்கள். அதை உறுதிப்படுத்துவது போல அங்காள பரமேசுவரி தோற்றம் அமைந்துள்ளது.

    நாம் மகிழ்ச்சியுடன் பார்த்தால் அவளும் நம்மை மகிழ்ச்சியுடன் பார்ப்பது போல இருக்கும் என்றார். அது உண்மை தான் என்பதை கருவறை அருகில் சென்று வரும் ஒவ்வொரு பக்தரின் அனுபவமாக உள்ளது.

    கர்ப்பகிரகத்துக்குள் அங்காள பரமேசுவரி சிவபெருமானுடன் அமர்ந்துள்ளாள். பொதுவாக சிவசக்தி ஒருங்கே காணப்படும் போது அம்பாள் அருகில் ஈசனை லிங்க வடிவில் தான் வைத்திருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் மட்டும் அம்பிகை அருகில் ஈசன் மானிட உருவில் இருக்கிறார்.

    இத்தகைய சிவசக்தி அமைப்பு தமிழ்நாட்டில் மேல்மலையனூரில் மட்டுமே இருப்பதாக சொல்கிறார்கள். இத்தலத்தின் சிறப்புகளில் இந்த கருவறை அம்சம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.

    அம்மன் சிம்ம வாகனத்தில் சற்று பின்னோக்கி மல்லாந்த நிலையிலும் ஈசன் ரிஷப வாகனத்திலும் உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒரே பீடத்தில் அமர்ந்துள்ளனர். அங்காள பரமேசுவரி இந்த அமைப்பில் மல்லார்ந்த பார்வையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

    அங்காள பரமேஸ்வரி தன் இடது காலை மடித்து வலது காலை பிரம்மன் தலை மீது வைத்திருப்பது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் காலடியில் மேலும் 4 தலைகள் உள்ளது. அரக்கர்களை அங்காளம்மன் தன் காலில் மிதித்து வைத்திருப்பதாக இது உணர்த்துகிறது.

    அங்காள பரமேஸ்வரிக்கு முழுமையான மலர் மாலை அலங்காரம் செய்து விடுவதால் பக்தர்களுக்கு இந்த வடிவ அமைப்பு தெரிய வாய்ப்பில்லை.

    அங்காளம்மனின் உருவம் சிவபெருமான் உருவ அமைப்பை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ளது. அவளது 4 கரங்களில் முன் கரங்களில் கத்தி, கபாலம் வைத்துள்ளாள். பின் கரங்களில் உடுக்கையும் சூலமும் தரித்துள்ளாள். தலையில் நாக மகுடம் சூடி இருக்கிறாள். இவற்றையெல்லாம் கண்டு உள்ளம் உருக வழிபட்டால் மனதில் உள்ள கவலைகள் நீங்கி மனம் லேசாகி விடும்.

    திருமணம் கைக்கூடும்

    நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்பெண்ணெய் இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை சம அளவு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் இந்த கூட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

    இந்த தீபத்துக்கு புதிய சிவப்பு நிறத்துணியை திரியாக பயன்படுத்த வேண்டும். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும். அதன்பிறகு 108 அங்காளம்மன் போற்றி சொல்ல வேண்டும். அது முடிந்ததும் அங்காள பரமேசுவரிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.

    Next Story
    ×