search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adi Villi"

    • ஆடி மாதம் வானில் `அகத்தியர்' என்ற நட்சத்திரம் தோன்றும்.
    • காவிரி டெல்டா பகுதியில் விவசாய பணிகளை தொடங்குவார்கள்.

    ஆடி மாதம் புனிதமான மாதம். தெய்வீக உணர்வை அதிகரிக்க செய்யும் மாதம். அதனால் தான் மற்ற எந்த மாதத்தையும் விட இந்த மாதத்தில் நிறைய வழிபாடுகள் உள்ளன.

    ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி சுவாதி, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடி பதினெட்டாம் பெருக்கு என்று மாதம் முழுவதும் மங்களகரமாக இருக்கும்.

    இந்த பண்டிகை நாட்களில் `ஆடிப்பெருக்கு' எனும் ஆடி பதினெட்டாம் பெருக்கு மகத்துவமும், தனித்துவமும் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் மிகச்சரியாக ஆடி 18-ந் தேதியன்று இந்த விழா நடைபெறும்.

    சங்க கால தமிழர்கள் ஆடிபெருக்கு தினத்தை, மற்ற எந்த விழாக்களையும் விட மிக, மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். அதற்கு முக்கிய காரணம் காவிரி நதியை நம் முன்னோர்கள் தெய்வமாக, தாயாக கருதியது தான்.

    சங்க காலத்தில் ஆடி பெருக்கு தினத்தன்று காவிரி நதியில் புதுவெள்ளம் கரை புரண்டோடும். பொதுவாக காவிரி நதி பாயும் பகுதிகளில் மக்களின் பயன்பாட்டுக்காக படித்துறைகள் அமைத்து இருப்பார்கள்.

    அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் இந்த 18 படிகளும் மூழ்கி விடும் அளவுக்கு வெள்ளம் ஓடும். அந்த புது வெள்ளத்தை வணங்கி, வரவேற்க தமிழர்கள் `ஆடி பதினெட்டு' விழாவை கொண்டாடியதாக குறிப்புகள் உள்ளன.

    ஆடி மாதம் வானில் `அகத்தியர்' என்ற நட்சத்திரம் தோன்றும். இது மலைப்பகுதிகளில் பலத்த மழையை பெய்யச்செய்து காவிரியில் வெள்ளப்பெருக்கை உண்டாக்கும். உடனே காவிரி டெல்டா பகுதியில் விவசாய பணிகளை தொடங்குவார்கள்.

    இந்த சமயத்தில் நெல், கரும்பு பயிரிட்டால் தான், தை மாதம் அறுவடை செய்ய முடியும் என்பதை கணக்கிட்டு நம் முன்னோர்கள் செயல்பட்டார்கள்.

    அதன் தொடக்கமாகத்தான் ஆடிப்பெருக்கை பெரும் விழாவாக கொண்டாடினார்கள். சங்க காலத்தில் இந்த விழா எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா?

    ஆடி 18-ந் தேதி காலையில், ஒவ்வொரு குடும்பத்தினரும் குளித்து, புத்தாடை அணிந்து அலை, அலையாக நதி கரைக்கு வந்த விடுவார்கள். முதலில் காவிரித்தாய்க்கு வழிபாடு நடத்துவார்கள்.

    காவிரி கரையோரம் வாழை இலை விரித்து அதில் புது மஞ்சள், புது மஞ்சள் கயிறு, குங்குமம், புத்தாடை மற்றும் மங்கல பொருட்கள் வைத்து தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை காவிரித்தாயை கங்கா தேவியாக நினைத்து, ஆராதனை செய்து வழிபடுவார்கள்.

    பிறகு சுமங்கலி பூஜை நடத்துவார்கள். குடும்பத்தில் வயது முதிர்ந்த பெண் ஒருவர் தம் குடும்பத்து சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக்கயிற்றை எடுத்துக் கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.

    பிறகு திருமணம் ஆகாத பெண்களும், காவிரி அன்னையை வணங்கி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்வார்கள். அப்படி செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

    புதுமணத்தம்பதிகள் அதிகாலையிலேயே காவிரி கரைக்கு சென்று அங்கு அரசு, வேம்பு மரத்தை சுற்றி வலம் வந்து வணங்கி மஞ்சள் நூலை கட்டுவர். அரசமரமும், வேப்ப மரமும், சிவசக்தி அம்சமாக கருதப்படுகிறது. அரச மரத்தை விருட்சராஜன் என்றும், வேப்ப மரத்தை விருட்ச ராணி என்றும் அழைப்பர்.

    சக்தி ரூபமாக திகழும் வேப்ப மரத்தை சுற்றி பெண்கள் மஞ்சள் நூலை கட்டுகிறார்கள். இவ்வாறு செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் நல்ல கணவர் கிடைப்பார் என்றும், திருமணமான பெண்களுக்கு சந்தானலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

    தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி, காவிரி டெல்டாவின் கடை மடை பகுதி வரை இந்த கொண்டாட்டம் அந்தந்த பகுதி மண்வாசனைக்கு ஏற்ப இருக்கும். காவிரி கரையோரங்களில் மட்டுமின்றி வைகை, தாமிரபரணி நதிக்கரைகளிலும் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஒரு காலத்தில் கோலாகலமாக நடந்தது.

    நதிக்கு பூஜை செய்து முடித்ததும், கரையோரங்களில் அமர்ந்து புளியோதரை, பொங்கல், தயிர் சாதம், வடை மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிடுவார்கள். நாள் முழுவதும் இந்த கொண்டாட்டம் இருக்கும்.

    ஆனால் இன்று ஆடி பெருக்கு விழா காவிரி கரையோரங்களில் சில இடங்களில் மட்டும், ஓரிரு மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது. சாதாரண விழா போல மாறிவிட்டது. காவிரியை நாம் வெறும் நதியாக பார்ப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் நம் முன்னோர்கள் காவிரியை தெய்வமாக, தாயாக கருதினார்கள். காவிரியை ஈசன் மனைவி பார்வதியாக கருதினார்கள். காவிரித் தாய்க்கு மசக்கை ஏற்பட்டதாக நினைத்தனர்.

    பஞ்ச பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி தன் சபதம் நிறைவேறியதும் காவிரியில் புனித நீராட வந்ததால், காவிரி பெருக்கெடுத்து ஓடுவதாக நம்பினார்கள். அது மட்டுமல்ல, ராமபிரான் அசுரர்களை கொன்ற பாவம் நீங்க காவிரியில் நீராடி புனிதம் பெற்றதாக நம்பினார்கள்.

    காவிரி நதியில் 66 கோடி தீர்த்தங்கள் இருப்பதாக சங்க கால தமிழர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். எனவே அவர்கள் காவிரியை கடவுளாக பார்த்தனர்.

    காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடும்போது, கடவுள் உற்சாக பெருக்குடன் வந்து தங்களை வாழ்த்துவதாக கருதினார்கள். அந்த சமயத்தில் காவிரி கரையோரம் வழிபாடு செய்தால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்று மக்கள் மனதில் ஆழமான நம்பிக்கை இருந்தது.

    அன்றைய தினம் எந்த புதிய முயற்சியைத் தொடங்கினாலும், அது ஆடி பெருக்கு போல பெருக்கெடுக்கும் என்று கருதினார்கள்.

    * புதிய தொழில் தொடங்கலாம்.

    * புதிய வாகனம் வாங்கலாம்.

    * சேமிப்பை ஆரம்பிக்கலாம்.

    * காய்கறி தோட்டம் போடலாம்.

    * நகை வாங்கலாம்.

    * புதிய பொருட்கள் வாங்கலாம்.

    இப்படி ஆடிப்பெருக்கு தினத்தன்று நீங்கள் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது இரட்டிப்பு பலன்களைத் தரும். அன்றைய தினம் காலை காவிரியில் நீராடுவது, எல்லா தோஷங்களையும் நீங்கச் செய்யும்.

    ஆடிப்பெருக்கு தினத்தன்று மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ரங்கநாத பெருமாள் காவிரிக் கரைக்கு எழுந்தருளி காவிரித் தாய்க்கு சீர்வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்வார். இதை கண்டால் `கோடி புண்ணியம் கிடைக்கும்' என்பது ஐதீகமாகும்.

    • ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவிலில் பெண்கள் குவிந்தனர்.
    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை

    தமிழ் மாதங்களில் அம்ம–னுக்கு மிகவும் உகந்த மாத–மாக கருதப்படுவது ஆடி மாதமாகும். ஆடி மாதங்க–ளில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடை–பெறும். அதில் ஆலயங்களில் கூழ்வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல் உள் ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்.

    இன்று ஆடி முதல் வெள் ளிக்கிழமை என்பதால் மது–ரையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்க–ளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவி–லில் காலையில் நீண்ட வரி–சையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோவில்,

    மறவர் சாவடி தசகாளி–யம்மன் கோவில், முடக்கு சாலை காளியம்மன் கோவில், சொக்கலிங்க நகர் சந்தன மாரியம்மன் கோவில், பழங்காநத்தம் நேரு நகர் அங்காள ஈஸ்வரி கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் அம்ம–னுக்கு சிறப்பு அலங்கா–ரங்கள் செய்யப்பட்டு தீபா–ராதனை காண்பிக்கப்பட்டது.

    அழகர்கோவில் நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலில் அம்மன் பல் வேறு வண்ண மலர்க–ளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித் தார்.

    இதனால் இக்கோவில்க–ளில் கூட்டம் அலைமோதி–யது. திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்ம–னுக்கு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலிலுக்கு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி சங்க–ரன்கோவில், திருவேங்கடம் தூத்துக்குடி, விளாத்தி குளம், கோவில்பட்டி போன்ற பல ஊர்களில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் வந்திருந்தனர்.

    அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், அம்ம–னுக்கு தீச்சட்டி, அங்கப்பி–ரதட்சணம், பால்குடம், ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில், மாவி–ளக்கு போன்ற நேர்த்திக்க–டனை எடுத்து செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில், காரைக்குடி கொப்பு டையம்மன் கோவில், மடப்புரம் காளி–யம்மன் கோவில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
    • ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.

    தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.

    சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

    மழைக் காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் கூழும் அம்மனுக்கு விருப்பமானவைகளே. இவை உடல் நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

    ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப்பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.

    ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச்சீர் செய்து மாப்பிள்ளை - பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.

    ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத் தான் இவை). இதை இன்னமும் பின்பற்றுகின்றனர். இதனால் 'ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.

    ஆடி மாதப் பழமொழிகள் பல. 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக்குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்'.

    ஆடிச் செவ்வாய்

    ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆடிச் செவ்வாய் ஒளவையாருக்குச் செய்யும் விரத பூஜையாகும். ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.

    பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து உப்பில்லாமல் செய்யும் கொழுக்கட்டைதான் நோன்பின் சிறப்பு பிரசாதமாகும். இதைப் பெண்கள் மட்டும்தான் செய்வார்கள். அன்று இரவு 10.00 மணியளவில் வீட்டில் உள்ள மூத்த வயதான பெண் தலைமையில் அத்தெருவில் உள்ள பெண்கள் அவர் வீட்டில் கூடுவார்கள். அதற்கு முன் ஆண்கள் - சிற ஆண்பிள்ளைகள் உட்பட வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் பார்க்கவோ, கேட்கவோ, பிரசாதம் சாப்பிடவோ கூடாது.

    பின் பூஜை நடைபெறும். ஒளவையார் கதையையும் அம்மன் கதையையும் வயதான பெண்மணி கூறுவார். சிறு பெண் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவரும் கலந்து கொண்டு பூஜை முடிப்பார்கள். பின் கொழுக்கட்டைகளை மீதமின்றி சாப்பிட்டு முடித்து, வீட்டைத் தூய்மைப்படுத்திய பின்தான் காலையில் ஆண்கள் அங்கு வர வேண்டும். இதுதான் ஒளவை நோன்பு.

    ஆடி வெள்ளி

    அன்றைய தினம் வாசலில் கோலமிட்டு பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.

    ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும். சில வருடங்களில் இது ஆவணியிலும் அமைந்துவிடும். இவ்வாண்டு ஆவணி முதல் வெள்ளியில் வரலட்சுமி விரதம் வருகிறது.

    பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.

    ×