search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சிவன் சக்திக்குள் அடங்கும் மாதம் ஆடி
    X

    சிவன் சக்திக்குள் அடங்கும் மாதம் ஆடி

    • ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
    • ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.

    தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.

    சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

    மழைக் காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் கூழும் அம்மனுக்கு விருப்பமானவைகளே. இவை உடல் நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

    ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப்பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.

    ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச்சீர் செய்து மாப்பிள்ளை - பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.

    ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத் தான் இவை). இதை இன்னமும் பின்பற்றுகின்றனர். இதனால் 'ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.

    ஆடி மாதப் பழமொழிகள் பல. 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக்குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்'.

    ஆடிச் செவ்வாய்

    ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆடிச் செவ்வாய் ஒளவையாருக்குச் செய்யும் விரத பூஜையாகும். ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.

    பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து உப்பில்லாமல் செய்யும் கொழுக்கட்டைதான் நோன்பின் சிறப்பு பிரசாதமாகும். இதைப் பெண்கள் மட்டும்தான் செய்வார்கள். அன்று இரவு 10.00 மணியளவில் வீட்டில் உள்ள மூத்த வயதான பெண் தலைமையில் அத்தெருவில் உள்ள பெண்கள் அவர் வீட்டில் கூடுவார்கள். அதற்கு முன் ஆண்கள் - சிற ஆண்பிள்ளைகள் உட்பட வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் பார்க்கவோ, கேட்கவோ, பிரசாதம் சாப்பிடவோ கூடாது.

    பின் பூஜை நடைபெறும். ஒளவையார் கதையையும் அம்மன் கதையையும் வயதான பெண்மணி கூறுவார். சிறு பெண் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவரும் கலந்து கொண்டு பூஜை முடிப்பார்கள். பின் கொழுக்கட்டைகளை மீதமின்றி சாப்பிட்டு முடித்து, வீட்டைத் தூய்மைப்படுத்திய பின்தான் காலையில் ஆண்கள் அங்கு வர வேண்டும். இதுதான் ஒளவை நோன்பு.

    ஆடி வெள்ளி

    அன்றைய தினம் வாசலில் கோலமிட்டு பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.

    ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும். சில வருடங்களில் இது ஆவணியிலும் அமைந்துவிடும். இவ்வாண்டு ஆவணி முதல் வெள்ளியில் வரலட்சுமி விரதம் வருகிறது.

    பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.

    Next Story
    ×