search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rama"

    • ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது.
    • பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம்.

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. 108 திருப்பதிகளில் தானாய் தோன்றிய (சுயம்பு) திருப்பதிகள் 8 தான். அதிலும் முதல் திருப்பதி ஸ்ரீரங்கம் தான். வைகுண்டத்தின் தத்துவத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் கண்டு அனுபவிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இது பூலோக வைகுண்டம் எனப்படுகிறது.

    ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது, தெய்வீகமானது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்ரீராமரின் குலதெய்வம் ஆவார். மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே குலதெய்வம் என்று உள்ளது. அதேபோல மகாவிஷ்ணு மனிதராக ஸ்ரீராமராக அவதாரம் எடுத்தவர்.

    அயோத்தியில் அவர் வணங்கிய குல தெய்வம்தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் போது ராமரின் குலதெய்வ கோவிலான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திரங்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மண் அனுப்பி வைக்கப்பட்டது.

    பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்தவர் ஸ்ரீரங்கநாதர். ரெங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய பிரம்மா சூரியனை நியமித்தார்.

    பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு கொண்டு சென்று வழிபட்டார். "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்" ராமரின் வம்சமாகிய ரகுவம்சத்தின் குல தேய்வம். காலம்காலமாக அவர்கள் ரெங்கநாதரை வழிபட்டு வந்தனர். சூரிய வம்சத்தில் தசரதருக்கு மகனாக அவதரித்த ராமபிரான் தன் முன்னோர்கள் வழியில் ரெங்கநாதரை வணங்கி வந்தார். 67 தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே அஜன், திலீபன், தசரதன் என ராமபிரானின் முன்னோர்களால் வழிபட்டு வந்தவர் ரெங்கநாதர். அயோத்தியில் ராமர் தனது கரங்களால் ரங்கநாதருக்கு பூஜை செய்து வந்தார்.

    இந்த சூழலில் ராமர் வனவாசம் முடிந்து அயோத்தியில் மீண்டும் அரசாட்சி புரிந்தார். அவர் முடி சூட்டிக்கொண்ட பிறகு விபீஷணனுக்கு அவன் செய்த உதவிக்காக `ரங்க விமானம்' தருகிறார் ராமர். அதை விபீஷணன் இலங்கை போகும் வழியில் சந்திரபுஷ்கரினி என்னும் தடாகம் பகுதியில் வந்தபோது சிலையை கீழே இறக்கி வைக்க வேண்டாம் என்று கருதி, அங்கு வந்த சிறுவனிடம் கொடுத்துள்ளான்.

    ஆனால் காவிரியில் நீராடி விட்டு திரும்பி வருவதற்கு அந்த சிலையை சிறுவன் கீழே வைத்துவிட்டான். அதன்பிறகு சிலையை எடுக்க முடியவில்லை. கோபத்தில் விபீசணன் அந்த சிறுவனை தேடியபோது அவன் திருச்சி மலைக்கோட்டை உச்சியில் சென்று அமர்ந்து கொண்டான். சிறுவன் வடிவில் வந்தது உச்சிப்பிள்ளையார் என்றும், ரங்கநாதரை காவிரியில் அமர வைக்கவே அவர் இந்த திருவிளையாடலில் ஈடுபட்டுள்ளார். தர்மவர்மா என்ற அந்தப் பகுதி மன்னனின் பக்தியால் உருகி பெருமாள் அந்தத் தீவிலேயே தங்கி விடுகிறார். தர்மவர்மா ஆலயம் எழுப்பினான்.

    பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் இங்கு அருள்கிறார். இதனை `சயனக் கோலம்' என்பார்கள். திருச்சியில் காவிரியும் கொள்ளிடமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. `அரங்கம்' என்றால் ஆற்றிடைக்குறை என்று பொருள்படும். ஸ்ரீரங்கம் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 156 ஏக்கர். கோயில் சுவர்களின் மொத்த நீளம் 32,592 அடி. பெரியகோவில் 7 திருச்சுற்றுக்களோடு அமைந்துள்ளது. இந்தியாவிலேயே 7 சுற்றுக்களைக் கொண்ட கோவில் இதுமட்டுமே. பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். விபீஷணனுக்காக "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளி கொண்டுள்ளார் பெருமாள்.

    கருவறை விமானத்தில் 4 கலசங்கள் உள்ளன. இவை 4 வேதங்களைக் குறிக்கின்றன. சுந்தரபாண்டியன் விமானத்துக்குத் தங்கம் பதித்தான். அதனால் பொன்மேய்ந்த பெருமாள் என அழைத்தனர். பொன்னால் வேயப்பட்ட இந்த விமானம் ஓம் என்ற பிரணவ வடிவில் எழுந்தருளி உள்ளது. ரெங்கநா தனின் திருக்கண்கள் விபீஷணனால் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

    மூவேந்தர்கள் தொடங்கி விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் எல்லோருமே ரெங்கநாதரை வணங்கி கோவிலை வளர்த்தனர்.

    கம்பர் தனது ராமகாதையை கி.பி.885-ல் இங்குதான் அரங்கேற்றம் செய்தார். வால்மீகி ராமாயணத்தில் இல்லாத `இரண்ய வதைப்படலம்' எனும்பகுதியை கம்பர் தனது காவியத்தில் எழுதியதை சிலர் ஏற்க மறுத்தனர். ஆனால் மேட்டழகிய சிங்கர் என்ற நரசிம்மர் கர்ஜித்து ஏற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

    தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ள நான்குகால் மண்டபத்தில்தான் கம்பராமாயணம் அரங்கேறியதாம். இதன் சாட்சியாக திருவந்திக்காப்பு மண்டபத் தூணில் கம்பர் கைகூப்பி வணங்கும் சிற்பம் உள்ளது.

    பழைமையான தமிழ் வழிபாட்டு முறைகளில் ஒன்றான பெருமாள் வழிபாட்டில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பது ஸ்ரீரங்கம். ஒரு நாட்டின் மன்னனுக்கு நடப்பதுபோன்று பெருமாளுக்கு விழாக்கள் நடக்கின்றன. இதனால்தான், "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே" என்று கூறுகிறார்கள்.

    ஆசியா - பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளிலிருந்து கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017-ம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த கோவிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிசேகம் காணப்படும் இந்த சூழலில் ராமபிரானின் குல தெய்வமான ஸ்ரீரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ள ஸ்ரீரங்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. ராமரின் குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு, அதன்பிறகு அயோத்தியில் ராமரின் கோவிலை திறந்து வைப்பதே சரி என கருதி பிரதமர் மோடியின் ஸ்ரீரங்கம் வருகை இதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகமாக்கி உள்ளது.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை மாத பூபதி திருநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 19-ந்தேதி 4-ம் திருநாள் கருடசேவை தரிசனம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஸ்ரீரங்கம் வருவது மேலும் சிறப்பாகும்.

    • விபீஷணனுக்கு ராமன் `சிரஞ்சீவி’ வரம் அளித்தார்.
    • யாரேனும் ராமஜெயம் சொல்ல, அதை நான் காதுகுளிர கேட்க வேண்டும்.

    அனுமனுக்கு `சிரஞ்சீவி' வரம் அளித்தார் ராமன். அதேபோல ராவண வதத்திற்குப் பிறகு, இலங்கைக்கு அரசனான விபீஷணனுக்கு முடிசூட்டி வைத்த ராமன் அவனுக்கும் `சிரஞ்சீவி' வரம் அளித்தார். அப்போது ராமருக்கு ஒரு சந்தேகம் உண்டானது. `தான் மட்டும் தான் சிரஞ்சீவி' என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனுமன், தற்போது விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டதை நினைத்து வருந்துவானோ' என்று நினைத்த ராமர், அது பற்றி அனுமனிடம் கேட்கவும் செய்தார்.

    அதற்கு பதில் அளித்த அனுமன். `எங்கே நான் ஒருவன் மட்டுமே சிரஞ்சீவியாக இருந்து விடுவேனோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளையாக விபீஷணனையும் சிரஞ்சீவியாக்கி விட்டீர்கள். எனக்கு சந்தோஷம் தான் ராமா' என்று பணிவுடன் பதில் சொன்னார் அனுமன்.

    `அதெப்படி, உனக்கு சந்தோஷம்?' என்று ராமன் கேட்டார்.

    `நான் சிரஞ்சீவி என்றால் இந்த உலகம் முற்றிலும் அழிந்த பிறகும் நான் நிலைத்திருப்பேன் என்பதுதானே? நான் தனி ஒருவனாக இருந்தால், என் காதுகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடுமே. யாரேனும் ராமஜெயம் சொல்ல, அதை நான் காதுகுளிர கேட்க வேண்டும் என்ற என் ஆசை, நான் தனித்து நிற்கும் போது ஈடேறாது அல்லவா? தற்போது விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டதால் அவர் `ராம' நாமம் உச்சரித்துக் கொண்டே இருப்பார், நான் கேட்டுக் கொண்டே இருப்பேன். இந்தப் பேறு நான் தனிஆளாக இருந்தால் கிடைக்காதே" என்று பணிவுடன் சொன்னார், அனுமன்.

    • கவாய தீர்த்தம் - மனவலிமை பெறலாம். கவாட்ச தீர்த்தம் - தேக ஆரோக்கியம் உண்டாகும்.
    • சிவ தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். சர்வ தீர்த்தம் - அனைத்து யோகங்களும் கைகூடும்.

    ராவணனை கொன்றதால் ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை விரட்ட ராமேசுவரத்தில் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து ராமர் விடுபட்டார். இங்கு தான் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

    22 புண்ணிய தீர்த்தங்களும், நீராடினால் கிடைக்கும் பலன்களும்:-

    மகாலட்சுமி தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்கள் பெருகும்.

    சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்கள் - சடங்குகளை செய்யாதவர்களும், சந்ததி இல்லாதவர்களும் நற்கதி பெறலாம்.

    சங்கு தீர்த்தம் - நன்றி மறந்த பாவம் நீங்கும்.

    சக்கர தீர்த்தம் - தீராத நோயும் தீரும்.

    சேது மாதவ தீர்த்தம் - செல்வம் கொழிக்கும்.

    நள தீர்த்தம் - இறையருளைப் பெற்று சொர்க்கத்தை அடையலாம்.

    நீல தீர்த்தம் - யாகப் பலன் கிட்டும்.

    கவாய தீர்த்தம் - மனவலிமை பெறலாம்.

    கவாட்ச தீர்த்தம் - தேக ஆரோக்கியம் உண்டாகும்.

    கந்தமான தீர்த்தம் - தரித்திரம் அகலும்.

    பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், பில்லி சூனியப் பிரச்சினைகள் விலகும்.

    சந்திர தீர்த்தம் - கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

    சூரிய தீர்த்தம் - ஞானம் பெறலாம்

    சாத்யாம்ருத தீர்த்தம் - தேவதைகளின் கோபத்தில் இருந்து விடுபடலாம்.

    சிவ தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.

    சர்வ தீர்த்தம் - அனைத்து யோகங்களும் கைகூடும்.

    கயா, யமுனா மற்றும் கங்கா தீர்த்தங்கள் - பிறவிப்பயனை அடையலாம்.

    கோடி தீர்த்தம் - ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது. சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இது. இந்த 22 தீர்த்தங்களையும் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம், இதில் நீராடிவிட்டே ஆலய தரிசனத்துக்குச் சென்று 22 தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

    • ராம நாமத்தை ஒருபோதும் விற்காதே.
    • ஆத்மாா்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்.

    அந்த வீதியில் ராம நாமத்தை சங்கீர்த்தனமான பாடியபடி, பஜனைக் குழு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஈடுபாடில்லாத ஒரு இளைஞனைக் கண்ட ஒரு ஞானி, அவருக்கு ராம நாமத்தை உபதேசித்து, "இந்த நாமத்தை ஒருபோதும் விற்காதே. அதை ஆத்மாா்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்" என்று கூறினார்.

    அவனும் ஒரே ஒரு முறை ஆத்மார்த்தமாக ராம நாமத்தை உச்சரித்தான். அதன் பிறகு அவன் அதை உச்சரிக்கவில்லை. கால ஓட்டத்தில் அவன் இறந்து போனான். எமலோகத்தில் இருந்து வந்த தூதர்கள், அவனது ஆத்மாவை கொண்டு போய், எமதர்மனின் முன்பாக நிறுத்தினர்.

    எமதர்மன், அவனுடைய பாவ- புண்ணிய கணக்கை பரிசீலித்துப் பார்த்தார். பின்னர் "நீ உன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் ராம நாமத்தை உச்சரித்திருக்கிறாய். அதற்காக என்ன வேண்டுமோ, அதைக் கேள்" என்றார்.

    அப்போது 'இந்த நாமத்தை ஒரு போதும் விற்காதே' என்று ஞானி சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. உடனே அவன், இன்னது வேண்டும் என்று கேட்காமல் "ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்" என்றான்.

    திகைத்துப்போன எமதர்மன், 'ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது' என்று நினைத்து, "இந்த விஷயத்தை இந்திரனிடம் கொண்டு போகலாம், என்னோடு வா" என்றார்.

    அதற்கு அவன், "நான் வருவதென்றால் பல்லக்கில்தான் வருவேன். அத்துடன் பல்லக்குத் தூக்குபவர்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டும்" என்றான்.

    ராம நாமத்திற்கு மதிப்பிட்டு சொல்லும் வரை அவன் சொன்னதை செய்துதான் ஆக வேண்டும் என்பதால், எமதர்மன் அதற்கு ஒப்புக்கொண்டார். அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.

    இந்திரனோ, "ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது. பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்" என்றார்.

    'எமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்' என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான்.

    அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.

    அவரும் "ராம நாம மகிமை சொல்ல என்னால் ஆகாது. வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம், வாருங்கள்" என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படி ஆயிற்று.

    அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை' என்றனர்.

    "இந்த ஆன்மாவைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே.. இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா?" என்று கூறி, பல்லக்கில் இருந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டாா், மகாவிஷ்ணு.

    • கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது.
    • அவரது வடிவழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

    தமிழ்நாட்டில் உள்ள ராமர் கோவில்களில், வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் பிரசித்திப்பெற்றது. தட்சிண அயோத்தி என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது வடிவழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

    'மையோ! மரகதமோ! மழை முகிலோ, அலை கடலோ! ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையோன் என்றும் கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியானை கண்டோம்' என்று அனுபவிக்கும் படியாய், ஸ்ரீ கோதண்டராமர் சீதாப்பிராட்டி, லட்சுமணன், அனுமனுடன் திவ்யதரிசனம் தருகிறார். ஸ்ரீ ராமநவமி விழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை பார்ப்பவர்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    தல வரலாறு : இதிகாச நாயகனான ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் அவர் நடமாடி வந்தபோது, அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர். அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அதற்கு முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமன் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார்.

    முனிவர்கள் மறுமுறை ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமன் செய்த விக்ரகத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டு செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர். அப்போது ராமன் நான் வேண்டுமா? அல்லது ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா? என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமன் அங்கே எழுந்தருளிவிட்டார்.

    அந்த விக்ரகத்தை திருக்கண்ணப்புரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் திருக்கண்ணப்புரம் பெருமாளை பாடிய குலசேகர ஆழ்வார், இந்த ராமனை மனதில் கொண்டு, தனது பெருமாள் திருமொழியில் 'மன்னுபுகழ் என்ற எட்டாம் திருமொழியில், சிலை வளைத்தாய், சிலைவலவர், ஏமருவுஞ்சிலை வலவா, வளையவொரு சிலை அதனால், ஏவரி வெஞ்சலை வலவா' என பாடியுள்ளார்.

    ஸ்ரீ சவுரி ராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவிலில் கிளைச்சன்னிதியில் ராமன் இருந்ததால் இப்பதிகத்தை அவர்பாடினார். இந்த ராமர் விக்ரகம் ஒரு காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் மரத்தடியில், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்களுடன் மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டது.

    பல ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னரின் கனவில், பெருமாள் சென்று தான் தலைஞாயிறு அருகே மண்ணுக்கடியில் புதையுண்டு கிடப்பதாகவும், அதை வெளியில் எடுத்து கோவில்கட்டி, ஆராதனை செய்யும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தார்.

    அப்போது அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, சிலைகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே லட்சுமணன், பரதன், சிலைகளை மன்னர் அவர்களிடம் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி, ஸ்ரீ கோதண்டராமர், சீதை, அனுமன் சிலைகளை பல்லக்கில் எடுத்துக்கொண்டு வந்தார். அந்த சிலைகளை தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணி கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. அங்கு தங்கி இளைப்பாறி, விக்ரகங்களை வடுவூர் கோவிலில் வைத்து இருந்தார்.

    இந்த எழிலார்ந்த விக்ரகங்களை கண்ட அவ்வூர் மக்கள் அவற்றை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் கேட்டுக்கொண்டனர். விக்ரகங்களை மன்னர் மீறி எடுத்து சென்றால், தாங்கள் அனைவரும் உயிரை மாய்த்து கொள்வதாக கூறினர். உடனே மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். பின்னர் லட்சுமணன் விக்ரகத்தையும் புதிதாக செய்தனர்.

    சரயுபுஷ்கரணி :

    தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் பறவைகள் சரணாலயமான வடுவூர் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது. கிழக்கு பார்த்த கோவிலின் முகப்பில் 61 அடி உயரமுள்ளதும், 5 அடுக்குகளும் கொண்ட ராஜகோபுரம் உள்ளது.

    கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் தாயார் எழுந்தருளி சேவை தருவது வழக்கம். ஆடிப்பூரம், கனுப்பண்டிகை நாட்களில் தாயார் ஊஞ்சல் உற்சவம் இங்கு நடக்கும். இந்த மண்டபத்தின் தெற்கில் உள்ள சன்னிதியில் லட்சுமி, ஹயக்கிரீவர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். பிரபையில் காளிங்கநர்த்தன கண்ணபிரான் உபய நாச்சியாருடன் விளங்குகிறார். பெருமாள் சன்னிதிக்கு நேர் எதிரில் கண்ணாடி அறையும் பெரிய திருவடி (கருட) சன்னிதியும் மேற்கு நோக்கி உள்ளன.

    மகாமண்டபத்தின் வடக்குப்பக்கம் சுவரையொட்டி வரிசையாக மூலவர்களாக விக்னேசுவரர், ஆதிசேஷன், ஆண்டாள், உடையவர் முதலியன ஆழ்வார்கள் உள்ளனர். இதையொட்டியுள்ள தெற்கு நோக்கிய சன்னிதிக்குள் வாசுதேவன், ஸ்ரீதேவி, பூதேவி, செங்கமலத்தாயாருடன் மூலவராகவும், ஸ்ரீ கோபாலன் ருக்மணி சத்யபாமாவுடன், உற்சவராகவும் காட்சி தருகிறார். அர்த்த மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் பெரிய நிலைக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

    அந்த கண்ணாடியினுள்ளே கோதண்டராமரின் பிரதிபிம்ப சேவை கிடைக்கும். ஆலய தல விருட்சம் வகுள மரம் ஆகும். இந்த ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் அட்சயதிரிதியை, ஆடிமாதம் ஆற்றங்கரையில் தீர்த்தவாரி, புரட்டாசியில் தேசிகன் உற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தை அமாவாசை தீர்த்தவாரி, மாசிமகம், பங்குனி மாதம் ஸ்ரீ ராமநவமியையொட்டி புனர்பூச நட்சத்திரத்தில் தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    அமைவிடம் : வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் பஸ்சில் சென்றால் 40 நிமிட பயண தூரத்தில் வடுவூரை அடையலாம்.

    • பத்ராசல ராமர் ஆலயம் மலைமேல் அமைந்துள்ளது.
    • மலை அடிவாரத்தில் கோதாவரி நதி தவழ்கிறது.

    தெலுங்கானாவில் கொத்தகூடம் மாவட்டம் பத்ராத்ரியில் பத்ராசலம் அமைந்துள்ளது. நம்மம் சாலையிலிருந்து பத்ராசலம் செல்ல ரயில்வசதி உண்டு. பத்ராசலம் சாலையிலிருந்து 15 நிமிடத்திற்கு ஒருமுறை பஸ் செல்கிறது. பத்ராசலம் மலைமீது ஸ்ரீ சீதா ராமசந்திரமூர்த்தி ஆலயம் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் கோதாவரி நதி தவழ்கிறது. ராமாயணத்தில் நடந்த சம்பவங்கள் இத்தலத்தை ஒட்டி அமைந்ததால் உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர்.

    மேரு-மேனகாவின் புதல்வரான பத்ரா, ராமபிரான் அருளைப் பெற தண்டகாரண்யக் காட்டில் கோதாவரி நதிக்கரையில் கடுந்தவம் செய்தார். பின் ராமனை பத்ரகிரி மலைமேல் அமரக் கேட்டபோது, ஸ்ரீராமன், தான் சீதையைத் தேடிச் செல்வதால், சீதையைக் கண்டுபிடித்து இராவணனை வதம் செய்தபிறகு உன் விருப்பம் நிறைவேறும் என்றார். ஆனால், ராமனால் வாக்குத் தந்தபடி ராமாவதாரத்தில் அதனை நிறைவேற்ற இயலாததால், பத்ரமுனி யாகத்தைக் மிகத் தீவிரமாகச் செய்ய ஆரம்பித்தார். அதன்பின் மஹாவிஷ்ணு வைகுந்த இராமனாக, வலது கையில், சங்கு, இடது கையில் சக்ரம் ஏந்தி, சீதை, லட்சுமணருடன் விரைந்து வந்து காட்சி தந்தார். ராமர் தனது வனவாசத்தின்போது சீதை, லட்சுமணனுடன் இங்கு தங்கியதாகவும், பத்ரமுனியின் வேண்டுகோளுக்கிணங்கி பத்ரமலையின் உச்சியில் அமர்ந்து காட்சி தந்ததால் இத்தலம் 'பத்ராசலம்' எனப்பட்டது.

    17ம் நூற்றாண்டில் வாழ்ந்த போகலா தம்மக்கா என்ற ராமர் பக்தை, பத்ரரெட்டி பாலம் என்னும் இடத்தில் வாழ்ந்து வந்தாள். ராமர், லட்சுமணர், சீதை உருவச் சிலைகளைக் கண்டாள். ஒருநாள் ராமர், அவள் கனவில் தோன்றி, "முனிவர்களும், யோகிகளும் பத்ரகிரியில் எனது உருவச் சிலையை பூஜித்தார்கள். அதைத் தேடியெடுத்துப் பூஜை செய்" எனச் சொல்ல, அதன்படி மறுநாள் அவள் சிலையைத் தேடிச் செல்லும்போது எறும்புமலை என்னுமிடத்தில் உருவச் சிலைகள் மறைந்து இருந்ததைக் கண்டு, கோதாவரி நீரை, குடங்களில் எடுத்து, அதன் மேல் ஊற்றியதும் சிலைகள் கண்ணுக்குத் தெரிந்தன. தினசரி இப்படிச் செய்து பக்கத்தில் இருந்த மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து நைவேத்யம் செய்துவந்து, பின்னர் உள்ளூர் கிராமத்தினர் உதவியோடு மண்டபம் கட்டி வழிபட ஆரம்பித்தனர். ஸ்ரீராமர் சிறிதுகாலத்திற்குப் பின் "எனது பக்தன் இவ்விடத்தில் கோவிலைக் கட்டுவான்" என தம்மக்கா தேவியிடம் தெரிவித்தார். அந்த பக்தர்தான் பக்த ராமதாசர்.

    17வது நூற்றாண்டில் காஞ்சல்லா கோபண்ணா என்ற தாசில்தாரால் கோவில் கட்டப்பட்டது. கிராமத்து மக்கள் கோவில் கட்டப் பணம் வழங்கினார்கள். பணம் போதவில்லை. அதனால் நிஜாமின் அனுமதியின்றி கஜானாவிலிருந்து பணத்தை எடுத்து அவர் உபயோகித்தார். செய்தி அறிந்த நிஜாம் சினமுற்று அவரைச் சிறையில் அடைத்துவிட்டார். கோபண்ணா மனந்தளராமல் ராமபிரானைப் பிரார்த்தித்தார். நிஜாம் ஆலயப் பொறுப்பை ஏற்றார். தனது பக்தனுக்காக ராம, லட்சுமணர், ராமோஜி, லட்சுமணாஜி எனக் கூறிக் கொண்டு கோபண்ணாவின் விடுதலைக்காக 6 லட்சம் மோகராக்களை நிஜாமிடம் கட்டினார்கள். கட்டியதற்காக வாங்கிய ரசீதை, கோபண்ணா அறியாமல், அவரது தலையணைக்குக் கீழே வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

    காலையில் எழுந்த நிஜாம் தானிஷா, இரவில் வந்து பணம் செலுத்தியது ராம, லட்சுமணர்கள் தான் என்பதை இறையருளால் உணர்ந்து கொண்டார். கோபண்ணாவை விடுதலை செய்தார். ராம, லட்சுமணர் அளித்த பணத்தில் இரண்டு மோகராக்களை மட்டும் அடையாளமாக எடுத்துக்கொண்டார். அந்தக் காசுகள் இன்றும் ஸ்ரீசீதா ராமச்சந்திர ஸ்வாமி தேவஸ்தானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோபண்ணா தனது சிறைத் தண்டனையின்போது இடைவிடாமல் ராமனைத் துதித்துப் பாடிய 'தாசரதி சதகம்' என்னும் கீர்த்தனைகள் இன்றளவும் இசைக்கப்பட்டு வருகின்றன. பக்த ராமதாஸ் பாடல்களால் ஈர்க்கப்பட்டு, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் நேரில் பத்ராசல ராமரைத் தரிசித்துச் சில பாடல்களை இயற்றியுள்ளார்.

    பத்ராசல ராமர் ஆலயம் மலைமேல் அமைந்துள்ளது. மூலவர் ஸ்ரீ சீதாராமசுவாமி. ராமரின் இடதுபக்கம் மடியில் சீதை அமர்ந்த வண்ணம் ராமனுடனும் லட்சுமணனுடன் தெய்வீக அழகுடன் காட்சி அளிப்பதை பக்தர்கள் நேரில் தரிசிக்கும்போது உணரமுடியும். மண்டபத்தின் நான்கு தூண்களிலும் அஷ்டலக்ஷ்மி, 18 விதத் தோற்றங்களில் சிவன், தசாவதாரம் மற்றும் பன்னிரு ஆழ்வார்கள் சிலா வடிவங்களைக் காணலாம். கர்ப்பக்கிரகத்தின் மேல் மூன்றடுக்கு விமானம், அதன் மறுபக்கம் மஹாவிஷ்ணுவின் 48 விதத் தோற்றங்கள், கருடன், சிம்மம், ஸோமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி அழகிய சிலைகளைக் காணலாம். விமானத்தின் சிகரம் ஒரே சலவைக்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் சம்க்ஷிப்த ராமாயணம், தாசரதி சதகம் அதை எழுதிய ராமதாசர் சிலையின் எதிரில் பொறிக்கப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சீதாராம கல்யாண தினத்தன்று உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்கின்றனர். பக்த ராமதாசர் சிறந்த பாடகர் ஆனதால் 'வாக்கேயக்காரர் உற்சவம்' மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி, தெப்போத்ஸவம், தசாவதார உற்சவம், அத்யயன உற்சவம் எனப் பல உற்சவங்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    செல்லும் வழி

    பத்ராச்சலம் நகரமானது ஐதராபாத்தில் இருந்து கிழக்கே 325 கிலோ மீட்டர் தூரத்திலும் கம்பம் நகரத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

    முகவரி:

    பத்ராச்சலம் கோவில் சாலை,

    பத்ராசலம்,

    தெலுங்கானா - 507111.

    • மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ராம அவதாரம் மிகவும் முக்கியமானது.
    • புரட்டாசி மாதம் முழுவதும் வீடுகளில் ராமாயணம் படிப்பது விசேஷம்.

    வாரந்தோறும் சனிக்கிழமை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மகாவிஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

    மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ராம அவதாரம் மிகவும் முக்கியமானது. ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என்று வாழ்ந்தவர் அவர். புரட்டாசி மாதம் முழுவதும் வீடுகளில் ராமாயணம் படிப்பது விசேஷம். இல்லத்து பூஜை அறையில் ராமபிரானின் பட்டாபிஷேக படம் வைத்து, அதன் முன்பாக அமர்ந்து ராமாயணத்தை படிக்க வேண்டும்.

    இப்படி ராமாயணம் படிப்பவர்களும், அதை கேட்பவர்களும் ராமபிரானின் அருளைப் பெற்று சிறப்புற வாழ்வர். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வந்தால், நல்லவை அனைத்தும் நடைபெறும்.

    எந்த பெருமாள் கோவில்களில், இறைவனுக்கு நீராட்டல் என்னும் திருமஞ்சனம் நடைபெற்றாலும், அங்கு அந்த நீராக சபரியே இருக்கிறாள் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம்.
    சபரி, ஒரு வேடுவ குலத்தைச் சேர்ந்த பெண். அவள், தன் வாழ்நாளில் ஒரு முறையாவது ராமபிரானைப் பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து வந்தவள். நினைவு தெரிந்த நாளில் இருந்து அந்த தருணத்திற்காகவே காத்திருப்பவள். காலம் கடகடவென்று ஓடியதில், இப்போது தள்ளாத வயதை எட்டியிருந்தாள், சபரி. ஆனாலும் அவளுக்கு, தான் ராமபிரானைப் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் குறையவில்லை.

    கைகேயி பெற்ற வரத்தின் காரணமாக, ராமபிரான் தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனோடு காட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. அப்படி வசித்த போது, ராவணனால் சீதை கடத்திச் செல்லப்பட்டு விட்டாள். சீதையைத் தேடி வனம் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள், ராமனும், லட்சுமணனும். அப்படி அவர்கள் சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில்தான், சபரியின் குடிசையைத் தேடி அவர்கள் வந்தனர்.

    தனக்காகவே காத்திருக்கும் சபரிக்கு, ராமபிரான் இப்போது நேரடியாக காட்சிக்கொடுத்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தும் செய்வதறியாது திகைத்த, அந்த மூதாட்டிக்கு எப்படி அவரை உபசரிப்பது என்று கூடத் தெரியவில்லை. அவ்வளவு பதற்றம், தன் மனதில் நிறைந்த இறைவனைக் கண்ட காரணத்தால் ஏற்பட்ட பதற்றம் அது.

    சபரியிடம் ஒரு செய்கை இருந்தது. ராமபிரானை என்றாவது ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில் அவள், தினமும் வனத்தில் இருந்த பழ மரங்களில் இருந்து பழங்களைப் பறித்து பாதுகாப்பாள். அதுவும், எந்த கனி சுவையாக இருக்கிறது என்பதைக் கடித்துப் பார்த்து, அதில் சுவை மிகுந்த கனியை பத்திரப்படுத்தி வைப்பாள். அவளது அதீத அன்பின் காரணமாக, அந்தக் கனிகள் அனைத்தும் இன்று கனிந்ததுபோலவே இருந்தன. அந்த கனிகளையெல்லாம் எடுத்து வந்து, ராமருக்கும், லட்சுமணனுக்கும் உண்ணக் கொடுத்தாள்.

    அந்த கனிகளின் சுவையில் மெய்மறந்து போனார், ராமபிரான். அதில் கனியின் சுவை மட்டுமா இருந்தது. காலம் காலமாக சபரி சேர்த்து வைத்திருந்த அன்பும் அல்லவா கலந்திருந்தது. சபரியின் அன்பில் நெகிழ்ந்து போன ராமபிரான், “தாயே.. தங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள். நீங்கள் கேட்பதை நான் தருவேன்” என்றார்.

    அப்போது அந்த மூதாட்டி, “இறைவா.. நான் எப்போதும் உங்களுடனேயே இருக்க வேண்டும். தினமும் என்னுடைய அன்பால் உங்களை நீராட்ட வேண்டும். அந்த பாக்கியத்தை எனக்கு அருளுங்கள்” என்றாள்.

    அப்படியே ஆகட்டும் என்று கூறிய ராமபிரான், “எனக்கு செய்யப்படும் வழிபாட்டின்போது என்னை நீராட்டும், தீர்த்தமாக நீயே இருப்பாய்” என்று அருளினார்.

    ஆம் எந்த பெருமாள் கோவில்களில், இறைவனுக்கு நீராட்டல் என்னும் திருமஞ்சனம் நடைபெற்றாலும், அங்கு அந்த நீராக சபரியே இருக்கிறாள் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம்.

    புல்லாங்குழலாக மாறிய சபரி

    ராமபிரான், சபரிக்கு இன்னொரு வரத்தையும் தர விரும்பினார். அதையும், சபரியே கேட்கும்படி பணித்தார். அதற்கு சபரி, “இறைவா... நான் உங்கள் மீது கொண்ட அன்பை புரிந்து கொண்டு எனக்கு காட்சி தர இவ்வளவு தூரம் வந்தீர்கள். நான் எச்சில் படுத்தி வைத்திருந்த கனிகளைக் கூட, எந்தச் சலனமும் இல்லாமல் உண்டு மகிழ்ந்தீர்கள். நானும் மறுபிறவியில் உங்கள் எச்சில்படும் பொருளாக இருக்க ஆசைப்படுகிறேன்” என்றாள்.

    அதன்படியே அடுத்த அவதாரத்தில் கண்ணனான அவதரித்த திருமால், தன்னுடைய கைகளில் புல்லாங்குழலாக சபரியை ஏந்திக் கொண்டார். அதை இசைப்பதன் மூலம், கண்ணபிரானின் எச்சில் சபரியின் மீது பட்டு, அவளைப் புனிதப்படுத்திக் கொண்டே இருந்தது.
    வைணவத் திருத்தலங்களில் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த ஆலயம் பற்றி சில தகவல்கள் இங்கே பார்க்கலாம்.
    வைணவத் திருத்தலங்களில் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் சிறப்பு வாய்ந்தது. ராமநாதபுரம் அருகில் இருக்கிறது திருப்புல்லாணி திருத்தலம். இந்த பெருமாள் கோவில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் சேதுக்கரை அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் பற்றி சில தகவல்கள் இங்கே பார்க்கலாம்.

    சமுத்திர ராஜன் உருவம்

    ராமபிரான், கடலில் பாலம் கட்ட அனுமதி வேண்டி நின்றான். ஆனால் கடல் அரசன், ராமர் முன்பாக தோன்றவில்லை. எனவே ராமர், கடலின் மீது பாணம் எய்த முயன்றார். இதனால் பயந்து போன சமுத்திர ராஜன், தன் மனைவியுடன் அங்கு தோன்றி ராம பிரானை சரணடைந்தான். இதை நினைவூட்டும் விதமாக, இந்த ஆலயத்தில் சயனராமர் சன்னிதி முன் மண்டபத்தில், சமுத்திர ராஜனும், சமுத்திர ராணியும் வீற்றிருக்கின்றனர். அருகில் ராமருக்கு உதவிய விபீஷணனும் இருக்கிறார்.

    சயன ராமர்

    கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி வேண்டி, மூன்று நாட்கள் காத்திருந்தார், ராம பிரான். அந்த மூன்று நாட்களும் தர்ப்பைப் புல்லின் மீது சயனம் கொண்டார். அதன் அடிப்படையில் இந்த ஆலயத்தில் ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து சயனித்த நிலையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம் என்பதால் இங்கு சீதை இல்லை. ஆதிசேஷன் இருப்பதால், அவரது வடிவமான லட்சுமணனும் இங்கு இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். கருவறை சுவரில், கடலில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள்.

    குழந்தை வரம்

    குழந்தை பாக்கியத்திற்காக தசரதர், புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் இருந்து தேவதூதன் ஒருவன் அளித்த பாயசத்தை தனது மூன்று மனைவிகளுக்கும் வழங்கினார். அவர்கள் அதை சாப்பிட்டனர். அதன் பலனாக அவர்களுக்கு ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகியோர் பிறந்தனர்.

    இத்தலம் அருகில் உள்ள சேதுக்கரையில் நீராடி விட்டு, கோவிலுக்கு வந்து நாகர் சிலைக்கு முன்பாக கணவனும் மனைவியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நாக பிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக பால் பாயசம் தரப்படும். இதனை அருந்தினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
    சுக்ரீவனுக்கு ராமனின் நட்பு கிடைத்தது, சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்ட ராமர் உதவிய கதையை அறிந்து கொள்ளலாம்.
    கிஷ்கிந்தையை ஆட்சி செய்து வந்த வானர அரசன் வாலியின் சகோதரன் சுக்ரீவன். ஒருமுறை வாலி, அசுரன் துன்துபி என்பவனோடு சண்டையிட்டான். ஒரு குகைக்குள் சென்ற அந்த அசுரனை பின் தொடர்ந்து சென்றான் வாலி. அப்போது வெளியே தம்பி சுக்ரீவனை காவலுக்கு வைத்தான். நீண்ட நாள் ஆகியும் வாலி வெளியில் வரவில்லை.

    அதனால் அண்ணன் இறந்து விட்டதாக கருதி, பெரிய பாறையால் அந்த குகையை மூடிவிட்டு அரண்மனை திரும்பினான் சுக்ரீவன். பின்னர் அரசனாக பதவி ஏற்று நாட்டை ஆட்சி செய்து வந்தான். இந்த நிலையில் அந்தக் குகையில் இருந்து வெளியே வந்த வாலி, தன் தம்பி அரசாட்சி செய்வதை அறிந்து, அவன் தன்னை வேண்டுமென்றே ஏமாற்றிவிட்டதாக கருதி, நாட்டை விட்டே துரத்தி விட்டான். அதோடு சுக்ரீவனின் மனைவியையும் தன்னோடு வைத்துக் கொண்டான்.

    பின்னாளில் சுக்ரீவனுக்கு ராமனின் நட்பு கிடைத்தது. அவர் மூலமாக வாலியை அழிக்க சுக்ரீவன் எண்ணினான். அதன்படியே வாலியை சண்டைக்கு அழைக்கும்படி சுக்ரீவனிடம், ராமன் கூறினார். இருவரும் வெட்ட வெளியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த ராமர், வாலியின் மீது அம்பு விட்டு அவனை கொன்றார். அதன்பிறகு, சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். பின்னர் நன்றிக் கடனாக தன்னுடைய சேனைகளை ராமனுக்குக் கொடுத்து ராவண யுத்தத்திற்கு துணை நின்றான்.
    ராமபிரானுக்கு விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
    ராமாயணத்தின் நாயகனாகவும், மனித உருவில் வாழ்ந்த தெய்வமாகவும் போற்றப்படுபவர், ராமபிரான். இவர் சித்திரை மாதம் வளர்பிறையான நவமி திதியில் பிறந்தவர். அதைத் தான் ‘ராம நவமி’ என்ற பெரும் விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். எந்த ஒரு காரியத்தை அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் செய்யாமல், மக்கள் தவிர்த்து விடுவார்கள். இதனால் அந்த இரண்டு திதிகளும் மிகவும் வருத்தம் கொண்டன. அவை தங்களின் கவலையை, மகா விஷ்ணுவிடம் சென்று வெளிப்படுத்தின.

    “இறைவா! நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களை மட்டும் மற்ற திதிகளைப் போல் பார்க்காமல், மக்கள் ஒதுக்கி வைக்கிறார்களே. எங்களுக்கு இதில் இருந்து விமோசனம் இல்லையா?” என்றனர்.

    அதைக் கேட்டு மனம் இரங்கிய மகாவிஷ்ணு, “மக்கள் உங்கள் இருவரையும் போற்றித் துதிக்கும் நாள் ஒன்று வரும். நான் உலக நன்மைக்காக பூமியில் அவதரிக்கும் போது, உங்களின் இந்த வருத்தம் மறைந்து போகும்” என்று அருள்புரிந்தார்.

    அதன்படியே தசரதர்- கவுசல்யா தம்பதியருக்கு, நவமி திதியில் ராமனாக அவதரித்தார், மகாவிஷ்ணு. அதே போல் மற்றொரு அவதாரத்தில் வசுதேவர்-தேவகி தம்பதியருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணராக பிறந்தார். இந்த இரண்டு அவதாரங்களின் மூலமாக, அஷ்டமி மற்றும் நவமி திதிகள் பெரும் பேறு பெற்றன. இறைவனின் அவதாரங்கள் உதித்த அந்த இரண்டு நாட்களையும் மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    நவமியில் பிறந்த ராமபிரான், இலங்கையை ஆட்சி செய்து வந்த ராவணனை வதம் செய்வதற்காகவே அவதரித்தவர். சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் பல சக்திவாய்ந்த வரங்களைப் பெற்றிருந்த ராவணன், அந்த வரங்களைக் கொண்டு, முனிவர்களையும், தேவர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யம் இன்றி துன்புறுத்தினான்.

    கர்மவினையின் பயனாக, ராம அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக ராமபிரான் வனவாசம் செல்ல நேர்ந்தது. அவரோடு சீதையும், லட்சுமணரும் உடன் சென்றனர். வனத்தில் இருந்தபோது, சீதையின் அழகு பற்றி அறிந்த ராவணன், அவளைக் கடத்திச் சென்றான். இதனால் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் வந்தது. வானர வீரர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு, கடலில் பாலம் அமைத்து, இலங்கை சென்ற ராமர், ராவணனை அழித்து சீதையை மீட்டார். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்டது.

    ராமபிரான் அவதரித்த நாளில் விரதம் இருப்பது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. இந்த விரதமானது, இரண்டு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சித்திரை மாதம் வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்களுக்கு கடைப் பிடிக்கும் விரதத்திற்கு ‘கர்ப்போஸ் தவம்’ என்று பெயர். நவமி திதியில் இருந்து அடுத்துவரும் ஒன்பது நாட்களுக்கு கடைப்பிடிக்கப்படுவது ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர்.

    விரதம் இருப்பதற்கு முன்தினம் வீட்டை சுத்தம் செய்துவிட வேண்டும். விரத தொடக்க நாள் முதல், ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும். விரதம் இருக்கும் ஒன்பது நாட்களும் ராம நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். ஒன்பது நாட்களும் ராமபிரானுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம் என நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வணங்குங்கள். ஒன்பது நாட்களும் நைவேத்தியம், மாலை அணிவிக்க முடியாதவர்கள், ராமநவமி அன்று மட்டுமாவது அதைச் செய்வது நல்லது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
    ராம நவமி அன்று விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும்.
    ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை.

    இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

    விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.

    இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.

    ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

    ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. இன்று ராமபிரானை விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். அனுமன் வழிபாட்டால் தம்பதியர் ஒற்றுமை உருவாகும். 
    ×