search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farooq Abdullah"

    • நகரின் புறநகரில் உள்ள ராவல்போராவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார்.
    • தொகுதியில் சிறந்த வேட்பாளரை நிறுத்துவது கட்சியின் பொறுப்பாகும்.

    தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஸ்ரீநகரின் தற்போதைய எம்.பி.யுமான பரூக் அப்துல்லா (86) தனது உடல் நலப் பிரச்சனை காரணமாக வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டார் என அக்கட்சி இன்று தெரிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பை அவரது மகனும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா, நகரின் புறநகரில் உள்ள ராவல்போராவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார்.

    இதுகுறித்து உமர் அப்துல்லா கூறுகையில், " ஃபரூக் அப்துல்லா தனது உடல்நிலை காரணமாக இந்த முறை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அலி முகமது சாகர் மற்றும் பிற கட்சி உறுப்பினர்களிடம் அனுமதி பெற்றுள்ளார்.

    தற்போது அந்த தொகுதியில் சிறந்த வேட்பாளரை நிறுத்துவது கட்சியின் பொறுப்பாகும். டெல்லியில் மக்களின் குரலாக திகழும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் வெற்றிபெற வாக்காளர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

    • சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் பிரதமர் மோடி முதன்முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்தார்.
    • பல சதாப்தங்களாக, அரசியல் ஆதாயத்திற்காக சட்டப்பிரிவு 370 பெயரில் மக்களை தவறாக வழி நடத்தி வந்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றார்.

    அப்போது பல சதாப்தங்களாக, அரசியல் ஆதாயத்திற்காக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் சட்டப்பிரிவு 370 பெயரில் மக்களை தவறாக வழி நடத்தி வந்தனர். தற்போது இன்று அனைவருக்கும் சமமான உரிமை மற்றும் வாய்ப்புகளை பெற்றுள்ளோம். மக்களுக்கு உண்மை தெரியும்... அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டார்கள். நாம் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஜம்மு-காஷ்மீர் இது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த பரூக் அப்துல்லா "சட்டப்பிரிவு 370 மோசமானது என்றால், ஜம்மு காஷ்மீர் மாநிலம் எப்படி முன்னேற்றம் அடைந்தது.

    சட்டப்பிரிவு 370 இவ்வளவு மோசமாக இருந்தால், மாநிலங்களவையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இரண்டு மாநிலங்களை ஒப்பிட்டு பேசியதை பிரதமர் மீண்டும் கேட்க விரும்புகிறேன். சட்டப்பிரிவு 370 அமலில் இருந்தபோதுதான் குலாம் நபி ஆசாத் குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இடையிலான வளர்ச்சி குறித்து ஒப்பிட்டு பேசியுள்ளார்.

    தற்போாது சட்டப்பிரிவு மற்றும் வாரிசு அரசியல் பொறுப்பு என்றால், எப்படி வளர்ச்சி அடைந்தோம்? இது மக்களுடைய ஆட்சி. முதலமைச்சருக்கான தேர்தலில் தோல்வி அடைந்தேன். ஆகவே, வாரிசு ஆட்சி எங்கே இருக்கிறது?. வாரிசு ஆட்சி என்பதை நான் பொதுவாகவே பாராளுமன்றத்தில் கேட்டுள்ளேன். ஒவ்வொரு முறை பேசும்போதும், பிரதமர் மோடி இதன்மீது குறிப்பிட்ட தாக்குதலை வைக்கிறார்" என்றார்.

    • பிரதமர் மோடி, அமித் ஷாவை ரகசியமாக சந்தித்ததாக குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு.
    • தேவைப்பட்டால் பகலில் சந்திப்பேன். ஏன் இரவில் சந்திக்க வேண்டும்? என பரூப் அப்துல்லா பதிலடி.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மூத்த அரசியல்  தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ள குலாம் நபி ஆசாத், கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாடு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா இரவு நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷாவை ரகசியமாக சந்தித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இதற்கு பரூக் அப்துல்லா பதில் அளித்துள்ளார். குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டுக்கு பரூக் அப்துல்லா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    நான் பிரதமர் மோடி அல்லது உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க வேண்டும் என்றால், பகல் நேரத்தில் அவர்களை சந்திப்பேன். நான் அவர்களை ஏன் இரவு நேரத்தில் சந்திக்க வேண்டும். பரூப் அப்துல்லா பற்றி அவதூறாக நினைப்பது என்ன காரணம்?. யாரும் அவருக்கு மாநிலங்களை சீட் வழங்காதபோது, நான் அவருக்கு மாநிலங்களை சீட் கொடுத்தேன். ஆனால் இன்று அவர் இதையெல்லாம் பேசுகிறார்.

    அவர்கள் எனது இமேஜை கேவலப்படுத்தவும், ஒவ்வொரு விஷயத்திலும் எனது பெயரை இழுக்கவும் விரும்புகிறார்கள். பிரதமர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி வீட்டில் அமர்ந்திருக்கும் தங்களது முகவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும். அவர் மக்களுக்கு உண்மையைப் புரியும்படி சொல்ல வேண்டும்" என்றார்.

    • மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிகள் காங்கிரஸ்க்கு தொகுதிகள் கொடுக்க மறுப்பு.
    • உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிந்துள்ளது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. ஆனால், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் இணைந்து விட்டார்.

    காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. இதனால் மாநில கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்து கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் மேற்கு வங்காள மாநிலத்தில் மேற்கு வங்காளத்தில் இரண்டு தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என மம்தா அறிவித்தார். இதனால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது இந்திய கூட்டணிக்கு முதல் சறுக்கலாக கருதப்பட்டது.

    அதன்பின் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி டெல்லியில் காங்கிரஸ்க்கு ஒரு இடம்தான் என அறிவித்தது. மேலும், பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இது 2-வது சறுக்கலாக கருதப்படுகிறது.

    மேலும், ஆம் ஆத்மி குஜராத் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸிடம் சில தொகுதிகளை கேட்கிறது. நாங்கள் எங்களுடைய வாக்கு சதவீதம் அடிப்படையில்தான் தொகுதிகளை கேட்கிறோம் என்கிறது. இதனால் காங்கிரஸ்- ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா? என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தனித்து போட்டியிடும் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே, மம்தா பானர்ஜி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் கிடைப்பது கூட சந்தேகம்தான் என விமர்சனம் செய்திருந்தார். காங்கிரஸ்க்கு 40 இடங்களாவது கிடைக்க வேண்டிக் கொள்கிறேன் என பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பரூக் அப்துல்லா இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக கூறுகையில் "பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த வரம்புகளை கொண்டது. தேசிய மாநாடு, பிடிபி கட்சி இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளது. அது தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.

    80 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ்க்கு 11 இடங்களை வழங்கியுள்ளது சமாஜ்வாடி கட்சி. இதனை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.

    • நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம் என்றார் பரூக் அப்துல்லா.
    • ராகுலின் பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம் என தெரிவித்தார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியான பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம். பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம்.

    இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைக்கு செல்லாவிட்டால் காஷ்மீரில் (காசாவில் இருப்பதுபோல) மோசமான சூழ்நிலை ஏற்படலாம்.

    ஒரு பக்கம் பாகிஸ்தானும், மறுபுறம் சீனாவும் உள்ளன. போர் மூண்டால் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    நம் நண்பர்களை மாற்றலாம், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என அடல் பிகாரி வாஜ்பாய் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • நாம் பாகிஸ்தானுடன் ஏன் பேசத் தயாராக இல்லை? என கேள்வி எழுப்பினார்.
    • அடுத்த காசாவாக ஜம்மு காஷ்மீர் மாறிவிடும் என்றார் பரூக் அப்துல்லா.

    ஸ்ரீநகர்:

    தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியுமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

    நமது நண்பர்களை மாற்றலாம். ஆனால் அண்டை வீட்டாரை மாற்றமுடியாது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருந்தார்.

    அண்டை நாட்டுடன் நட்பாக இருந்தால் இருவரும் முன்னேற முடியும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடரவேண்டியது அவசியம். தற்போது நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் போகிறார்.

    நாங்கள் இந்தியாவுடன் பேசத் தயார் என சொல்கிறார்கள். பாகிஸ்தானுடன் பேச நாம் ஏன் தயாராக இல்லை?

    பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், இஸ்ரேலியப் படைகளால் குண்டுவீசித் தாக்கப்படும் காசாவிற்கு ஏற்பட்ட கதியை இந்தியா சந்திக்க நேரிடும். அடுத்த காசாவாக ஜம்மு காஷ்மீர் மாறிவிடும் என தெரிவித்தார்.

    • சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
    • லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரித்தது செல்லும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. ஒரு தரப்பினர் இந்த தீர்ப்பை வரவேற்ற போதிலும் ஜம்மு- காஷ்மீர் தலைவர் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். ஆனால், இதே உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் சட்டப்பிரிவு 370 நிரந்தரமானது எனத் தெரிவித்துள்ளனர். அது இன்னும் அப்படியே இருக்கிறதா? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். ஒருநாள் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லலாம். அதன்பின் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்று நாம் பார்க்க வேண்டும்.

    70 ஆண்களுக்குப் பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் 200 ஆண்டுகளில் இது மீண்டும் கொண்டு வரப்படலாம். யாருக்கு தெரியும்" என்றார்.

    உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஐந்து பேரில் மூன்று பேர் ஒரே தீர்ப்பையும் மற்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினார். ஒட்டுமொத்தமாக சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான். அதை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மற்றும் 2024 செப்டம்பர் மாதத்திற்குள் சடடமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. லடாக்கை யூனியன பிரதேசமாக அறிவித்தது செல்லும் எனவும் தெரிவித்தனர்.

    • காசாவில் அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது
    • காசாவில் ரத்தம் சிந்தப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்றார் ஃபரூக்

    பாலஸ்தீன காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது.

    காசா மீது வான்வழி மற்றும் தரைவழியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. காசாவில் குடிநீர், எரிபொருள், மருந்து, உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    இந்நிலையில், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் குப்கர் மக்கள் கூட்டணி தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து காசா பிரச்சனை குறித்து ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காசா மருத்துவமனைகளில் மருந்து, நீர், மின்சாரம் எதுவும் இல்லை. நம் நாட்டு மக்கள் காசா மக்களுக்கு ஆதரவாக துணை நின்று குரல் கொடுக்க வேண்டும். அங்கு அமைதி திரும்ப இந்தியா முயற்சி எடுக்க வேண்டும். அகிம்சையை போதித்த மகாத்மா காந்தி பிறந்த நாடு இந்தியா. காசாவில் ரத்தம் சிந்தப்படுவதை தடுக்க அனைத்து வழிகளையும் இந்தியா ஆராய வேண்டும்.

    இவ்வாறு ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

    • சூதாட்டக்காரர்களிடம் இருந்து பூபேஷ் பாகேல் ரூ.508 கோடி பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
    • மகாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு ஏன் தடை செய்யவில்லை என பிரதமருக்கு பாகேல் கேள்வி எழுப்பினார்.

    ஸ்ரீநகர்:

    சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் மகாதேவ சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து ரூ.508 கோடி பணம் கைமாறி உள்ளதாக சமீபத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

    மகாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு தற்போது வரை ஏன் தடை செய்யவில்லை என பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதற்கிடையே, அரசியலுக்காக மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கூறுகையில், "அவர்கள் (பா.ஜ.க.) பயத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஒருநாள் அவர்களும் அதேபோல் நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே ஜனநாயகம் வேண்டுமென்றால், எதிர்க்கட்சிகள் உயிர்ப்புடன் இருக்கவேண்டும். எதிர்க்கட்சிகளை அழிப்பதால் நாட்டைப் பலப்படுத்த முடியாது" என தெரிவித்தார்.

    • பாட்னாவில் 23-ந்தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது.
    • இந்த கூட்டத்தில் பங்கேற்க இதுவரை 18 கட்சிகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    பாட்னா :

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், இம்மாதம் 23-ந் தேதி, எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது.

    அதில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி (காங்கிரஸ்), தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), உத்தவ்தாக்கரே (சிவசேனா-உத்தவ்) ஆகியோர் பங்கேற்க ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இத்தகவலை ஐக்கிய ஜனதாதள தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன்சிங் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    இதுவரை 18 கட்சிகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    • பல ஆண்டுகளாக மோசமாக இருந்த சாலைகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளால்தான் ஜனநாயகம் வாழும்.

    ஸ்ரீநகர் :

    சமீபத்தில், காஷ்மீரில் ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில், நேற்று ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது, ஜி-20 நிகழ்ச்சி, காஷ்மீருக்கு பலன் அளித்துள்ளதா? என்று கேட்டதற்கு பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    ஆமாம். பல ஆண்டுகளாக மோசமாக இருந்த சாலைகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன. சுவருக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. தெரு விளக்குகள் எரிகின்றன. எனவே, பலன் கிடைத்துள்ளது.

    ஜி-20 நிகழ்ச்சியில் பங்கேற்ற நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்களா என்பது கேள்விக்குறி. காஷ்மீர் நிலைமை மேம்படும் வரை இது நடக்கப்போவதில்லை.

    காஷ்மீர் நிலைமை மேம்பட வேண்டுமென்றால், இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீரின் எதிர்காலத்துக்கு தீர்வுகாண வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளால்தான் ஜனநாயகம் வாழும். ஒரு கவர்னரும், ஆலோசகரும் சேர்ந்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் நிர்வகிக்க முடியாது.

    எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் அவரவர் தொகுதியை கவனித்துக்கொள்வார்கள்.

    5 ஆண்டுகளுக்கு ஒருதடவை அவர்கள் மக்களை சந்திக்க வேண்டி இருப்பதால், அவர்கள் நல்லது செய்யாவிட்டால் ஓட்டு கிடைக்காது. எனவே, தேர்தல் நடத்துவது அவசியம். எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    ஒடிசா ரெயில் விபத்து, உலகின் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாகும். அது எப்படி நடந்தது, அதற்கு பொறுப்பு யார் என்று விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது.
    • எதிர்க்கட்சிகள் ஒற்றுமை பற்றி என்னால் அவ்வளவு உறுதியாக கூற முடியவில்லை.

    ஸ்ரீநகர் :

    அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து போட்டியிட செய்யும் முயற்சி நடந்து வருகிறது. குறிப்பாக இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகள் ஒற்றுமை பற்றி என்னால் அவ்வளவு உறுதியாக கூற முடியவில்லை. ஆனால் பாராளுமன்ற மக்களவை தேர்தலை பொறுத்தமட்டில், மாநிலங்கள் இப்போது முக்கியம். எல்லா எதிர்க்கட்சிகளும் இதை உணர வேண்டும்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி வலுவாக இருக்கிறார் என்றால் அங்கே அவர் நல்லபடியாக செயல்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், ராஷ்டிரிய ஜனதாதளமும் வலிமையாக இருக்கிறபோது, அவர்களுக்கு தடைகளை உருவாக்கக்கூடாது. இதேபோன்று உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி நன்றாக இருக்கிறபோது, அவருக்கும் தடை ஏற்படுத்தக்கூடாது.

    மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, உண்மையிலேயே நீங்கள் அவர்களை (பா.ஜ.க.) தோற்கடிக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்களுக்கு எதிராக ஒரே வேட்பாளர்தான் எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறக்கப்பட வேண்டும்

    காங்கிரஸ் கட்சி எங்கே வெற்றி பெறுமோ, அங்கே மற்றொருவர் போட்டியிட வேண்டாம். எங்கே இன்னொரு கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதோ அங்கே அவர்களுக்கு விட்டுத்தரவேண்டும். இது அவர்களை (பா.ஜ.க.) தோற்கடிப்பதற்கான வழி ஆகும்.

    இதை எதிர்க்கட்சி தலைவர்கள் பரிசீலிக்க வேண்டும். இதை அவர்கள் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

    சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளும், வருமான வரித்துறையும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. மற்றவர்களும் இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் (பா.ஜ.க.) மற்றவர்களை விட 100 முறை அதிகமாக செய்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் அமையக்கூடிய அரசு, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கு இதைச் செய்யாது என நம்புகிறேன்.

    ஜனநாயக நாட்டில் இத்தகைய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது முற்றிலும் தவறானது. இதைச் செய்திருக்கக்கூடாது. நாட்டுக்கு எதிர்க்கட்சி தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×