search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரே வேட்பாளர்: பரூக் அப்துல்லா யோசனை
    X

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரே வேட்பாளர்: பரூக் அப்துல்லா யோசனை

    • அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது.
    • எதிர்க்கட்சிகள் ஒற்றுமை பற்றி என்னால் அவ்வளவு உறுதியாக கூற முடியவில்லை.

    ஸ்ரீநகர் :

    அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து போட்டியிட செய்யும் முயற்சி நடந்து வருகிறது. குறிப்பாக இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகள் ஒற்றுமை பற்றி என்னால் அவ்வளவு உறுதியாக கூற முடியவில்லை. ஆனால் பாராளுமன்ற மக்களவை தேர்தலை பொறுத்தமட்டில், மாநிலங்கள் இப்போது முக்கியம். எல்லா எதிர்க்கட்சிகளும் இதை உணர வேண்டும்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி வலுவாக இருக்கிறார் என்றால் அங்கே அவர் நல்லபடியாக செயல்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், ராஷ்டிரிய ஜனதாதளமும் வலிமையாக இருக்கிறபோது, அவர்களுக்கு தடைகளை உருவாக்கக்கூடாது. இதேபோன்று உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி நன்றாக இருக்கிறபோது, அவருக்கும் தடை ஏற்படுத்தக்கூடாது.

    மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, உண்மையிலேயே நீங்கள் அவர்களை (பா.ஜ.க.) தோற்கடிக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்களுக்கு எதிராக ஒரே வேட்பாளர்தான் எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறக்கப்பட வேண்டும்

    காங்கிரஸ் கட்சி எங்கே வெற்றி பெறுமோ, அங்கே மற்றொருவர் போட்டியிட வேண்டாம். எங்கே இன்னொரு கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதோ அங்கே அவர்களுக்கு விட்டுத்தரவேண்டும். இது அவர்களை (பா.ஜ.க.) தோற்கடிப்பதற்கான வழி ஆகும்.

    இதை எதிர்க்கட்சி தலைவர்கள் பரிசீலிக்க வேண்டும். இதை அவர்கள் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

    சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளும், வருமான வரித்துறையும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. மற்றவர்களும் இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் (பா.ஜ.க.) மற்றவர்களை விட 100 முறை அதிகமாக செய்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் அமையக்கூடிய அரசு, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கு இதைச் செய்யாது என நம்புகிறேன்.

    ஜனநாயக நாட்டில் இத்தகைய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது முற்றிலும் தவறானது. இதைச் செய்திருக்கக்கூடாது. நாட்டுக்கு எதிர்க்கட்சி தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×