search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கணிக்க என்னிடம் மந்திர விளக்கு இல்லை: பரூக் அப்துல்லா
    X

    எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கணிக்க என்னிடம் 'மந்திர விளக்கு' இல்லை: பரூக் அப்துல்லா

    • 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
    • காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துமாறு தேசிய மாநாடு கட்சி பிச்சை கேட்காது.

    ஜம்மு :

    அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு வருகின்றன.

    இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார்.

    இந்த நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது நிதிஷ் குமாரின் இந்த கூட்டணி முயற்சி வெற்றி பெறுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி ஒற்றுமை உருவாகுமா? என்பதை கணிக்க என்னிடம் மந்திர விளக்கு எதுவும் இல்லை. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள், நல்ல உணர்வு மேலோங்கும் என்று நம்புகிறோம்.

    காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கூட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள எதிர்க்கட்சி ஒற்றுமை ஏற்பட வேண்டும் என கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சிகள் உணர்வார்கள் என நம்புகிறேன். ஜனநாயகத்தை பாதுகாக்க அவர்கள் இணைந்து பாடுபடுவார்கள்.

    காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துமாறு தேசிய மாநாடு கட்சி பிச்சை கேட்காது. ஏனெனில் அவர்கள் (பா.ஜனதா) ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டார்கள்.

    இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் நீங்கள் மக்களின் உரிமையை மறுக்கிறீர்கள்.

    ஆனால் உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலோ அல்லது சட்டசபை தேர்தலோ, இவை எப்போது நடந்தாலும் அதில் போட்டியிட தேசிய மாநாடு கட்சி தயாராக உள்ளது.

    எனினும் இங்கு ஏதோ நடக்கிறது, அதற்காக கடவுளுக்கு நன்றி. குறைந்தபட்சம் பஞ்சாயத்து தேர்தலாவது நடக்கும் என நினைக்கிறேன். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் எந்த தேர்தலையும் விடமாட்டோம்.

    சட்டசபை தேர்தல் எப்போது நடைபெறும் என்று கவலை இல்லை. அதை எப்போது நடத்துவது? என அவர்கள் முடிவு செய்யட்டும். நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.

    Next Story
    ×