search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா-பாகிஸ்தான் பேச்சு நடத்தும் வரை காஷ்மீர் நிலைமை முன்னேறாது: பரூக் அப்துல்லா
    X

    இந்தியா-பாகிஸ்தான் பேச்சு நடத்தும் வரை காஷ்மீர் நிலைமை முன்னேறாது: பரூக் அப்துல்லா

    • பல ஆண்டுகளாக மோசமாக இருந்த சாலைகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளால்தான் ஜனநாயகம் வாழும்.

    ஸ்ரீநகர் :

    சமீபத்தில், காஷ்மீரில் ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில், நேற்று ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது, ஜி-20 நிகழ்ச்சி, காஷ்மீருக்கு பலன் அளித்துள்ளதா? என்று கேட்டதற்கு பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    ஆமாம். பல ஆண்டுகளாக மோசமாக இருந்த சாலைகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன. சுவருக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. தெரு விளக்குகள் எரிகின்றன. எனவே, பலன் கிடைத்துள்ளது.

    ஜி-20 நிகழ்ச்சியில் பங்கேற்ற நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்களா என்பது கேள்விக்குறி. காஷ்மீர் நிலைமை மேம்படும் வரை இது நடக்கப்போவதில்லை.

    காஷ்மீர் நிலைமை மேம்பட வேண்டுமென்றால், இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீரின் எதிர்காலத்துக்கு தீர்வுகாண வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளால்தான் ஜனநாயகம் வாழும். ஒரு கவர்னரும், ஆலோசகரும் சேர்ந்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் நிர்வகிக்க முடியாது.

    எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் அவரவர் தொகுதியை கவனித்துக்கொள்வார்கள்.

    5 ஆண்டுகளுக்கு ஒருதடவை அவர்கள் மக்களை சந்திக்க வேண்டி இருப்பதால், அவர்கள் நல்லது செய்யாவிட்டால் ஓட்டு கிடைக்காது. எனவே, தேர்தல் நடத்துவது அவசியம். எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    ஒடிசா ரெயில் விபத்து, உலகின் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாகும். அது எப்படி நடந்தது, அதற்கு பொறுப்பு யார் என்று விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×