search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spiritual story"

    • மாரியம்மனை தரிசிக்க பல லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.
    • பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பார்கள்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருநறையூர் என்னும் அழகிய ஊர். இந்த ஊரின் நாச்சியார் கோவிலின் முன்னர் வளையல் வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார். மாரியம்மன் பக்தரான அவர் வருடா வருடம் குறிப்பிட்ட நாளில் தவறாமல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு வளையல்கள் வைத்து வழிபாடு நடத்தி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை, உடல் நலம் குன்றியதால் அவரால் சமயபுரம் சென்று மாரியம்மனை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    அந்த வியாபாரி மாரியம்மனை தரிசிக்க முடியவில்லையே, அவளுக்கு வளையல்கள் அணிவிக்க முடியவில்லையே என மனம் வருந்தினார். பெருந்துயரத்தில் ஆழ்ந்த அவர், மாரியம்மனை பார்க்க வேண்டுமென வேண்டிக் கொண்டார். தன் பக்தனுக்காக ஆகாய மார்க்கமாய் சமயபுரத்தில் இருந்து புறப்பட்ட மாரியம்மன், திருநறையூருக்கு வந்து, அவன் முன்பு காட்சி அளித்தார். சாஷ்டாங்கமாக வணங்கிய வளையல் வியாபாரி, வளையலை மாரியம்மனுக்கு அணிவித்தார்.

    தனக்காக வந்த அம்பிகையிடம் வியாபாரி ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் அவர் இருக்கும் ஊரான திருநறையூர் என்னும் நாச்சியார்க்கோவிலுக்கு அம்பிகை வந்து மக்களுக்கு நல்லாசி புரியவேண்டும் என்று கோரிக்கையை வைத்தார். அம்பிகையும் அவ்வாறே ஆகட்டும் என வாக்குறுதி அளித்தாள். தன் பக்தனுக்கு செய்த சத்தியத்திற்காக அன்று முதல் ஒவ்வொரு வருடமும் சமயபுரத்தில் இருந்து ஆகாய மார்க்கமாய் இங்கே வந்து காட்சி கொடுத்து வருகிறாள் என்பது ஐதீகம்.

    ஆகாய மார்க்கமாக வருவதால், இவருக்கு ஆகாச மாரியம்மன் என்னும் பெயர் வந்தது. வளையல் வியாபாரிக்கு வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை அன்று மாரியம்மன் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மாரியம்மன் இந்த தலத்திற்கு வருவாள். அம்மன் வருகை தரும் தினத்தில் இருந்து உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடைபெறுகின்றது. இவள் வருகையின் போது ஊரே திருவிழாக்கோலம் பூண்டு களை கட்டுகிறது.

    10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசிக்க பல லட்சக்கணக்கான மக்கள் நாச்சியார்கோவிலுக்கு வருகிறார்கள். இந்த திருவிழாவிற்காக மாரியம்மனை தர்ப்பை புல்லால் ஒவ்வொரு வருடமும் புதியதாக உருவாக்குகின்றனர். சமயபுரம் மாரியம்மனை போல் சிவந்த முகம், கூரிய பற்கள், அகண்ட விழிகள் சர்வ ஆபரணங்களுடன் அம்மன் அலங்கரிக்கப்படுகிறாள். நாதஸ்வர மேளம் முழங்க, புஷ்ப பல்லக்கில் ஏறி அமர்ந்து செல்வாள்.

    அங்கு அவளை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பார்கள். திருநறையூருக்கு புடைசூழ வந்து 10 நாட்கள் அங்கேயே தங்கும் இந்த தர்ப்பையால் செய்யப்பட்ட மாரியம்மனுக்கு வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். இதில் அம்மனுக்கு சேஷசயன அலங்காரம், மதன கோபால அலங்காரம், லட்சுமி அலங்காரம், சரஸ்வதி அலங்காரம், வீற்றிருந்த திருக்கோலம், மகிஷாசுர மர்த்தினி, நின்றிருந்த திருக்கோலம், ராஜராஜேஸ்வரி அலங்காரம் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படும்.

    ஒரு பெண் குழந்தை படிப்படியாய் வளர்ந்தால் எப்படி அலங்காரம் செய்வோமோ அதேபோல் ஒவ்வொரு நாளும் அம்மன் வளர்ச்சி அடைவதுபோல் அலங்காரம் செய்வார்கள். முதல் நாளில் சிறிய திருமேனியுடன் காட்சியளிக்கும் மாரியம்மன் கடைசி நாளன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தி ன்போது வளர்ந்த திருமேனியுடன் காட்சியளிப்பாள். 10 நாள் திருவிழா முடிந்தவுடன், மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் சமயபுரம் புறப்படுவாள். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திருநறையூர் வருவதால், அவள் சமயபுரம் புறப்படும்போது மக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுக்கின்றனர். வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடியில் அம்பிகை காட்சியளிக்கிறாள்.

    • ராம நாமத்தை ஒருபோதும் விற்காதே.
    • ஆத்மாா்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்.

    அந்த வீதியில் ராம நாமத்தை சங்கீர்த்தனமான பாடியபடி, பஜனைக் குழு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஈடுபாடில்லாத ஒரு இளைஞனைக் கண்ட ஒரு ஞானி, அவருக்கு ராம நாமத்தை உபதேசித்து, "இந்த நாமத்தை ஒருபோதும் விற்காதே. அதை ஆத்மாா்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்" என்று கூறினார்.

    அவனும் ஒரே ஒரு முறை ஆத்மார்த்தமாக ராம நாமத்தை உச்சரித்தான். அதன் பிறகு அவன் அதை உச்சரிக்கவில்லை. கால ஓட்டத்தில் அவன் இறந்து போனான். எமலோகத்தில் இருந்து வந்த தூதர்கள், அவனது ஆத்மாவை கொண்டு போய், எமதர்மனின் முன்பாக நிறுத்தினர்.

    எமதர்மன், அவனுடைய பாவ- புண்ணிய கணக்கை பரிசீலித்துப் பார்த்தார். பின்னர் "நீ உன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் ராம நாமத்தை உச்சரித்திருக்கிறாய். அதற்காக என்ன வேண்டுமோ, அதைக் கேள்" என்றார்.

    அப்போது 'இந்த நாமத்தை ஒரு போதும் விற்காதே' என்று ஞானி சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. உடனே அவன், இன்னது வேண்டும் என்று கேட்காமல் "ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்" என்றான்.

    திகைத்துப்போன எமதர்மன், 'ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது' என்று நினைத்து, "இந்த விஷயத்தை இந்திரனிடம் கொண்டு போகலாம், என்னோடு வா" என்றார்.

    அதற்கு அவன், "நான் வருவதென்றால் பல்லக்கில்தான் வருவேன். அத்துடன் பல்லக்குத் தூக்குபவர்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டும்" என்றான்.

    ராம நாமத்திற்கு மதிப்பிட்டு சொல்லும் வரை அவன் சொன்னதை செய்துதான் ஆக வேண்டும் என்பதால், எமதர்மன் அதற்கு ஒப்புக்கொண்டார். அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.

    இந்திரனோ, "ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது. பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்" என்றார்.

    'எமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்' என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான்.

    அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.

    அவரும் "ராம நாம மகிமை சொல்ல என்னால் ஆகாது. வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம், வாருங்கள்" என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படி ஆயிற்று.

    அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை' என்றனர்.

    "இந்த ஆன்மாவைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே.. இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா?" என்று கூறி, பல்லக்கில் இருந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டாா், மகாவிஷ்ணு.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமை என்று நினைத்தால் சுமை.
    • பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம்.
    • இறைவனை முழுமையாக நம்புங்கள்.

    துவாரகையை ஆட்சி செய்து கொண்டிருந்த கிருஷ்ணரைப் பார்க்க ஒரு பெண் வந்திருந்தாள். அவள் கிருஷ்ணரின் மீது அளவற்ற பக்தி கொண்டவள். சொந்தம் என்று ஒருவரும் இல்லாத நிலையில், இறைவனே கதி என்று கிருஷ்ணரை நம்பிக் கொண்டிருப்பவள். அவள் கிருஷ்ணரைப் பார்த்து, "பகவானே.. உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர, எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?" என்றாள்.

    கிருஷ்ணர் தன்னிடம் பக்திப் பூர்வமாக ஏதாவது கேட்பார். அவருக்கு அதை சேவையாகச் செய்யலாம் என்று நினைத்துதான், அந்தப் பெண் அப்படிக் கேட்டாள். ஆனால் இறைவனின் திருவிளையாடலை யார்தான் அறிய முடியும்.

    கிருஷ்ணர் அந்தப் பெண்ணிடம் ஒரு கோணிப்பையைக் கொடுத்து, "நான் எங்கெல்லாம் செல்கிறேனோ, அங்கெல்லாம் இதைத் தூக்கிக்கொண்டு வா. அது போதும். நம் இருவர் கண்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த கோணிப்பை தெரியாது" என்றார்.

    கிருஷ்ணர், இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டையை தருவார் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாக இருந்தாலும், இறைவன் சொன்னதை சேவையாக செய்ய வேண்டும் என்ற நோக்கம் அவளிடம் இருந்ததால், கிருஷ்ணர் சொன்னபடியே அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அந்தக் கோணிப்பையை தூக்கிக்கொண்டு சென்றாள்.

    பாரம் மிகுந்த அந்த கோணிப்பைக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய அந்தப் பெண்ணிற்கு ஆசை இருந்தது. ஆனால் அவள் அதை அறிவதை கிருஷ்ணர் விரும்பவில்லை. எனவே அவள் அந்த ஆசையை கைவிட்டாள். சில காலம் இப்படியே கடந்தது. அவள் தூக்கித் திரிந்த கோணிப் பையின் பாரம் கூடிக்கொண்டே போனது. அவளால் ஒரு கட்டத்தில் அந்தப் பையை தூக்க முடியவில்லை.

    அவள் கிருஷ்ணரைப் பார்த்து, "இறைவா.. உன் கட்டளையை எதிர்பார்த்து உனக்கு பணி செய்ய வந்தேன். நீயோ சுமக்க முடியாத ஒரு அழுக்கு மூட்டையை என்னிடம் தந்து விட்டாய். கருணையே வடிவான உனக்கு இது அழகா?" என்று கேட்டாள்.

    "பெண்ணே.. உன் பலவீனத்தில்தான் என் பலம் இருக்கிறது. கவலைப்படாதே நான் உன் பக்கம்தான் இருக்கிறேன். தைரியமாக நான் சொல்லும் வரை என்னுடன் இந்தப் பையை சுமந்துவா. உனக்கு நான் உதவுகிறேன்" என்று சொன்ன கிருஷ்ணர், அந்தப் பெண் தடுமாறிய பல இடங்களில் அவளுக்கு கை கொடுத்து, சில நேரங்களில் அந்த கோணிப்பையை தானும் தூக்கி அருள்புரிந்தார்.

    ஒரு நாள் அவர்கள் சேரவேண்டிய இடம் வந்தது. அப்போது கிருஷ்ணர், "இந்த மூட்டையை நீ சுமந்தது போதும்.. கீழே இறக்கி வை" என்றவர், "இந்த மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய உனக்கு ஆசை இருந்தது அல்லவா? இப்போது அறிந்து கொள்ளலாமா?" என்று கூறியபடி அந்த மூட்டையை அவிழ்த்தார்.

    அந்த மூட்டையில் வைக்கோல் தென்பட்டது. அதை அகற்றியபோது, அதற்குள் அரிய வகை மாணிக்கங்களும், வைர வைடூரியங்களும், பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன. தேவலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் மட்டுமே தரக்கூடிய பொக்கிஷம் அவை.

    இப்போது கிருஷ்ணர், "இத்தனை காலமும் பொறுமையுடன், நான் அளித்த சுமையை சுமந்தபடி காத்திருந்ததற்காக என்னுடைய பரிசு இது, எடுத்துக்கொள்" என்றாா்.

    ஆனந்தத்திலும் வியப்பிலும் மூழ்கிப்போனால் அந்தப் பெண்.

    நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு சுமையும், அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும், அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் நம் கைகளில் தான் அது உள்ளது. நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும். அந்தஅளவு சுமை மட்டுமே கடவுள் தருவார். நாம் தடுமாறும் நேரங்களில், கைகொடுக்கவும் செய்வார். எனவே இறைவனை முழுமையாக நம்புங்கள்.

    • சிவபெருமானாலேயே பெயர் சூட்டப்பட்ட சித்தர், மச்சேந்திர நாதர்.
    • கோரக்கர் வரலாறு விரிவானது

    சிவபெருமானாலேயே பெயர் சூட்டப்பட்ட சித்தர், மச்சேந்திர நாதர். அந்த சித்தர் ஒரு வீட்டு வாசலில் நின்று, உணவு கேட்டார். உணவு கொண்டு வந்த பெண், சித்தரை வணங்கி, "சுவாமி! எனக்குப் பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும். ஆசி கூறுங்கள்!" என வேண்டி, பிட்சை இட்டாள். "உன் ஆசை நிறைவேறும்" என்ற சித்தர், விபூதியை மந்திரித்துப் பிரசாதமாக அளித்தார். "இதைச் சாப்பிடம்மா! உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்" எனக்கூறிச் சென்றார்.

    அதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரி, "இந்த மாதிரி ஆளுங்க, மயக்கி இழுத்துக்கிட்டுப் போயிடுவாங்க. பேசாம அந்த விபூதிய அடுப்புல போட்டுடு!" என்றாள். அதை நம்பிய பெண், சித்தர் மந்திரித்துத் தந்த விபூதியை அடுப்புச் சாம்பலுடன் கலந்து, கொல்லைப்பக்கம் குப்பை மேட்டில் கொட்டி விட்டாள்.

    ஒன்பது வருடங்கள் ஆயின. சித்தர் மறுபடியும் வந்தார். தான் ஏற்கனவே விபூதி தந்த பெண் வீட்டிற்குப் சென்று, "பெண்ணே! எங்கே உன் மகன்? நான் அவனைப் பார்க்க வேண்டும்" என்றார்.

    அவர் காலில் விழுந்து வணங்கிய பெண், "சுவாமி! மன்னியுங்கள்! பக்கத்து வீட்டுக்காரியின் பேச்சைக் கேட்டு, தாங்கள் தந்த விபூதிப் பிரசாதத்தைக் குப்பைமேட்டில் போட்டு விட்டேன்" என்றாள்.

    "சரிம்மா! அந்தக் குப்பைமேடு எங்கே இருக்கிறது?" எனக் கேட்டார் சித்தர். அவரை அழைத்துப்போய் குப்பை மேட்டைக் காட்டினாள் அந்தப் பெண். அங்கு போன சித்தர், "கோரக்கா!" என்றார்.

    "என்ன?" எனக்குரல் வந்தது, குப்பை மேட்டில் இருந்து. சித்தர் உத்தரவின் பேரில் குப்பை மேட்டை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றினார்கள். அங்கே குப்பை மேட்டின் அடியில், ஒன்பது வயதான ஆண் குழந்தை ஒன்று, தவம் செய்யும் நிலையில் இருந்தது.

    அந்தக் குழந்தைதான், கோரக்கர். இந்தக் கோரக்கரால் உருவானது தான் `கோரக்கர் மூலிகை'. இதன் மகிமையை 'அருளைக் கலம்பகம்' எனும் பழைமையான தமிழ்நூல் கூறுகிறது. கோரக்கர் வரலாறு விரிவானது.

    • நம்முடைய வாழ்க்கையில் எது நடக்க வேண்டுமோ அது நடந்துதான் தீரும்.
    • வாழ்வின் முடிவை விதிவசம் ஒப்படைத்து, செய்வதை சிறப்புடன் செய்வோம்.

    ஒரு முறை கருட பகவான் ஓய்வாக ஒரு மரக்கிளையில் போய் அமர்ந்தார். அந்த மரத்தின் எதிரே இருந்த ஒரு மரத்தில், குருவி ஒன்று அமர்ந்து கிளைக்கு கிளை தாவி விளையாடிக்கொண்டிருந்தது. அந்தக் குருவியின் விளையாட்டில் லயித்துப் போய் இருந்த கருட பகவானுக்கு, அந்தக் குருவியை யாரோ, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரியவே, சுற்றும் முற்றும் தன்னுடைய பார்வையை சுழற்றினார். அப்போது குருவி இருந்த மரத்தின் அருகே இருந்த மற்றொரு மரத்தில் இருந்து எமதர்மன், அந்தக் குருவியையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இப்போதுவரை மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கும் இந்தக் குருவிக்கு, எமதர்மனின் பார்வையால் கேடு காலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். சற்றும் யோசிக்காத கருட பகவான், உடனடியாக பறந்து, குருவியை தன்னுடைய காலால் பற்றிக்கொண்டு, நொடிப் பொழுதில் பல்லாயிரம் மைல்கள் கடந்து, பசுமை போர்த்தி நின்ற பழங்கள் நிறைந்த ஒரு மரத்தின் கிளையில் போய் வைத்தார்.

    'அப்பாடா.. குருவியை, எமதர்மனிடம் இருந்து காப்பாற்றிவிட்டோம்' என்று கருடபகவான் நினைத்துக் கொண்டிருந்த அதே தருணத்தில், குருவி அமர்ந்திருந்த கிளையின் அருகில் இருந்த ஒரு மரப்பொந்தில் இருந்து வெளிப்பட்ட பாம்பு ஒன்று, சட்டென்று அந்த குருவியைக் கவ்வி விழுங்கியது. அதைப் பார்த்து திகைத்துப் போன கருட பகவான், 'குருவியை காப்பாற்ற நினைத்து, அதற்கு தானே எமனாக மாறிப்போய் விட்டோமே' என்று எண்ணி வருந்தினார்.

    அப்போது அங்கு வந்து சேர்ந்தார், எமதர்மன். அவரைப் பார்த்ததும் கருடன் தன்னுடைய தலையை தாழ்த்திக்கொண்டார். எமதர்மன் கருடனை பார்த்து "கருட தேவா.. நான் அந்தக் குருவியை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, நான் அதைக் கொல்லப் போகிறேன் என்று நீங்கள் கருதி விட்டீர்கள். அதனால்தானே.. அதை காப்பாற்றும் விதமாக இங்கு தூக்கி வந்தீா்கள்?" என்று கேட்டார்.

    அதற்கு 'ஆம்' என்பது போல் தலையை அசைத்தார் கருடன்.

    "நீங்கள் என்னை தவறாக புரிந்துகொண்டீர்கள். அந்தக் குருவியின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்பது உண்மைதான். ஆனால் ஒரு சில நொடியிலேயே அது வீற்றிருந்த மரக்கிளையில் இருந்து, பல ஆயிரம் மைல்கள் தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் பொந்தில் இருக்கும் பாம்பினால், அதற்கு ஆயுள் முடியும் என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் பறவை பறந்து சென்றால், பாம்பு இருக்கும் இடத்தை அடைய ஒரு சில நாட்களாவது பிடிக்கும். வேறு எந்தப் பறவை தூக்கிச் சென்றாலும் கூட அவ்வளவு காலம் தேவைப்படத்தான் செய்யும். ஆனால் அதன் ஆயுள் முடியப் போவதோ சில நொடிகளுக்குள் ஆயிற்றே என்ற ஆழ்ந்த சிந்தனையில்தான், அந்தக் குருவியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் விதிப் பயன் எப்படியும் நிறைவேறியேத் தீரும் என்பதை நான் உடனடியாகவே புரிந்துகொண்டேன். ஏனெனில் காற்றை விட வேகமாக பறக்கும் நீங்கள், அந்தக் குருவியை காப்பாற்றுவதாக நினைத்து, சில நொடிகளிலேயே, அதை பல ஆயிரம் தூரத்திற்கு கொண்டு சென்று வைத்துவிட்டீர்கள். அதனால் விதிப்படியே அனைத்தும் நடந்தேறி விட்டது" என்று சொல்லி முடித்தார்.

    ஆம்.. நம்முடைய வாழ்க்கையில் எது நடக்க வேண்டுமோ அது நடந்துதான் தீரும். அதுகுறித்து கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், இப்போது செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர செய்ய முடியாது. எனவே வாழ்வின் முடிவை விதிவசம் ஒப்படைத்து, செய்வதை சிறப்புடன் செய்வோம்.

    • இவரை வணங்கினால் பல இன்னல்களில் இருந்து நம்மை விடுவிப்பார்
    • நாய் மீது அமர்ந்த படி மிகவும் பயங்கரமாக காட்சியளிப்பார்.

    இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் கால பைரவர் இல்லாத கோவில்களே இல்லை என்று கூறுமளவு மிகவும் பெருமை பெற்றவர் கால பைரவர். இவர் கைகளில் திரிசூலம், உடுக்கை மற்றும் வெட்டப்பட்ட ஒரு தலையுடன், உடலில் சாம்பல் பூசிக் கொண்டு, நாய் மீது அமர்ந்த படி மிகவும் பயங்கரமாக காட்சியளிப்பார்.

    இவரை வணங்கினால் பல இன்னல்களில் இருந்து நம்மை விடுவிப்பார் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. இவ்வளவு பெருமைமிக்க கால பைரவர் எப்படி அவதரித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு ஸ்கந்த புராணத்தில் கால பைரவர் தோன்றிய கதை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

    தேவலோகத்தில் உள்ள தெய்வங்கள் ஒரு முறை பல விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேவதை தெய்வங்களில் உத்தமமானவர் யார் எனக் கேட்க, பிரம்மா சிறிதும் தாமதிக்காமல், இதில் என்ன சந்தேகம் நான் தான் எனக் கூறினார். இதைக் கேட்ட விஷ்ணு பகவான் கோபம் கொண்டார். இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடைப்பெற்றது.

    விவாதம் முடிவது போன்று இல்லை. எனவே அவர்கள் வேத அதிபதிகளை அழைத்து, அவர்களின் கருத்தைக் கேட்டனர். வேத அதிபதிகளோ சற்றும் யோசிக்காமல், சிவபெருமான் தான் அனைவரையும் விட உத்தமமானவர் என்று கூறினர். அதைக் கேட்ட பிரம்மா மிகுந்த ஆத்திரம் கொண்டு, சிவபெருமானைக் குறித்து கண்ட படி பேசினார்.

    பிரம்மா ஆத்திரத்தில், "யார் அந்த சிவன்? உடல் முழுவதும் தூசி படிந்தவாறு சாம்பல் பூசிக்கெண்டு, கழுத்தில் பாம்பை சுற்றிக் கொண்டு, நீண்ட சடைமுடியுடன், ஒரு மாட்டின் மீது அமர்ந்து சுற்றுகின்றவரா, என்னை விட உத்தமமானவர்? என்று கூறி கொண்டிருக்கையில், கைலாயத்தில் உள்ள சிவனின் காதுகளில் அனைத்தும் விழ, சிவன் மிகுந்த கோபத்திற்கு உள்ளானார்.

    பிரம்மாவின் கூற்றைக் கேட்டு, விஷ்ணுவும், பிற கடவுள்களும் பிரமித்து நிற்கையில், மிகுந்த சப்தத்துடன் சிவன் ஒளி வெள்ளமாக தோன்ற, அந்த ஒளி வெள்ளத்தில் ஒரு மனிதன் தோன்றினான். பிரம்மா அம்மனிதனைக் கண்டு யார் நீ என்று கேட்க, அம்மனிதன் சிறு குழந்தையாக உருமாறி அழத் தொடங்கியது.

    'ஏய் குழந்தாய், நீ என் தலையில் இருந்து முளைத்ததோடு, என்னை சரணடைந்து அழுவதினால் உனக்கு ருத்ரா என பெயரிடுகிறேன் என்று கூறியதோடு, அழுவதை நிறுத்திவிட்டு உலகைப் படைக்கத் துவங்கு, நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன் என்று கூறினார் பிரம்மா.

    பிரம்மா அவ்வாறு கூறியதும், அக்குழந்தை ஒரு பயங்கரமான உருவத்துடன் உருமாறி, அவர் எதிரில் நின்றது. மீண்டும் பிரம்மா, "ஏய் மனிதா, இவ்வளவு பயங்கரமான உருவத்துடன் வந்து நிற்கும் உன்னை காலத்தைக் காக்கும் மனிதனாக நியமித்து, கால பைரவர் என பெயர் மாற்றுகிறேன்.

    நீ மக்களுடைய பாவங்களை ஏற்று, தீயவர்களை அழிப்பதோடு, இறந்தவர்கள் மோட்சம் அடையச் செல்லும் காசிக்கு சென்று காசிராஜனாக இரு என்று கூறி ஆசீர்வதித்தார்.

    பிரம்மாவின் கூற்றை இதுவரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த, அம்மனிதன் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றைத் துண்டித்து தன் கைகளில் ஏந்தினான். பின் சிவன் தன் உண்மையான உருவத்திற்கு மாறி, பிரம்மாவே உன்னுடைய எந்த தலை என்னை நிந்தித்து பாவத்தைப் பெற்றதோ, அந்த தலையை பைரவர் துண்டித்துவிட்டார் எனக் கூற, அப்போது தான் அனைவருக்கும் வந்திருப்பது சிவன் என்றே புரிய வந்தது. சிவனே தன் மற்றொரு அவதாரமான கால பைரவரைத் தோற்றுவித்துள்ளார்.

    பின் சிவன் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட கால பைரவனிடம் "நீ பிரம்மாவின் தலையைத் துண்டித்ததினால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க, பிரம்மாவின் தலையை ஏந்திக் கொண்டு மூவுலகையும் சுற்றி பிட்சை பெற்றுக் கொண்டவாறு காசியை அடையுமாறு " கூறினார்.

    அப்படி சிவன் கூறிக் கொண்டிருக்கையில், பயங்கரமான முகத்துடன் ரத்தம் கக்கிக் கொண்டிருந்த பெண் அங்கு தோன்றினாள். அவளிடம் சிவபெருமான், "நீ கால பைரவன் பின் பயமுறுத்திக் கொண்டே துரத்தி செல், அவன் காசியை அடைந்ததும் பயமுறுத்துவதை நிறுத்திவிடு, உன்னால் காசியில் இருக்க முடியாது என்றும் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியினால் தான் காசிக்கு சென்றால் மோட்சம் கிடைக்கும் என்ற பழமொழி வந்தது. இதன் காரணமாகத் தான் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்க காசியில் உள்ள கால பைரவரை அனைவரும் வணங்குகின்றனர்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • அவர் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அந்தந்த இடத்தில் கொடுத்தே ஆகவேண்டும்.
    • தலைகனம் என்பது யாருக்கும் இருக்கக் கூடாது.

    கர்வத்தோடு லிங்கத்தை தன் வாலாலேயே சுருட்டி தூக்கிவிட முயற்சித்தார். ஆனால் சிவலிங்கம் அந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை. கர்வத்தோடு ஆணவத்தோடு செய்யும் காரியம் எதுவுமே பலிக்காது என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

    தான் செய்த தவறை உணர்ந்த அனுமன், லிங்கத்திடம் மன்னிப்பு கேட்டு பூமியில் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை, ராமேஸ்வரத்திற்கு எடுத்து செல்லவேண்டும் என்ற படி வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால் சிவபெருமானோ நல்ல நேரத்தில் நான் இந்த இடத்தில் பிரதிஷ்டை ஆகி விட்டேன். உனக்கு தேவைப்பட்டால் திரும்பவும் காசிக்குச் சென்று இன்னொரு சுயம்புலிங்கத்தை எடுத்துக்கொள். என்றபடி ஆணையிட்டு விட்டார். என்ன செய்வது? அனுமன் திரும்பவும் காசிக்கு சென்றார்.

    என்ன ஆச்சரியம்? காசிக்கு திரும்பும்போது இயற்கை சூழல் அனைத்தும் சரியான முறையில் இயங்கியது. அனுமன் கண்டுபிடித்துவிட்டார். இவையெல்லாமே காலபைரவரின் சூழ்ச்சியினால் தான் நடந்துள்ளது என்பதை! காசிக்கு சென்றால் கங்கா நதியில் வினோதமான ஆச்சரியம் ஒன்று நிகழ்ந்தது. காசி நதிக்கரையில் ஒன்றுக்கு மேற்பட்ட பல லிங்கங்கள் இருந்தன. அதில் சுயம்புலிங்கம் எது என்று, பாவம் அனுமனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    அந்த சமயம் பார்த்து, கருடனும் பல்லியும் அனுமனுக்கு உதவி செய்தன. கருடன் ஒரு குறிப்பிட்ட லிங்கத்தின் மேல் சுற்றினார். அந்த சமயம் பல்லி சத்தம் போட்டது. இந்த சகுனத்தை கண்ட அனுமன் அந்த குறிப்பிட்ட லிங்கம் தான் சுயம்புலிங்கம் என்று கண்டுபிடித்து விட்டார். மறுபடியும் அந்த லிங்கத்தை எடுக்க முயன்றார்.

    ஆனால் பைரவரோ லிங்கத்தை எடுக்க விடவில்லை. காசி மாநகரை பாதுகாக்கும் என்னிடம் அனுமதி கேட்காமல் எப்படி லிங்கத்தை எடுக்கலாம்? என்று சொல்லி பைரவருக்கும், அனுமனுக்கும் போர் நிகழ்ந்தது. தன்னால் எவரையும் ஜெயித்து விட முடியும் என்ற ஆணவம் அனுமனுக்கு இருந்ததால், இந்த யுத்தத்தில் தோல்வியடைந்தார்.

    இந்த சம்பவங்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முனிவர்கள், பைரவரிடம் சென்று மன்னிப்பு கேட்டனர். ராமேஸ்வரத்தில், ராமபிரான் பூஜை செய்வதற்காக, இந்த லிங்கத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார். ஆகவே அந்த அவசரத்தில் தான் அனுமன், காசியின் காவல் தெய்வமான தங்களிடம் அனுமதி கேட்காமல் லிங்கத்தை எடுத்து விட்டார்.

    தாங்கள் காசியில் இருந்து லிங்கத்தை எடுத்துச் செல்ல அனுமதி தரவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மனம் குளிர்ந்த காலபைரவர், அனுமன் லிங்கத்தை எடுத்துச் செல்ல அனுமதித்தார்.

    காசி மாநகரை பாதுகாக்கும் பைரவர் 'என் அனுமதி இன்றி அனுமனுக்கு எப்படி சகுனம் சொல்லலாம்'? என்ற கோபத்தில், இனி இந்த காசி மாநகரத்தின் மேல் கருடன் பறக்கக் கூடாது என்றும், பல்லி சத்தம் போடக் கூடாது என்றும் சாபம் பிறப்பித்து விட்டார்.

    காசி மாநகரத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கும் காலபைரவர் இடம் அனுமன் சிவலிங்கத்தை எடுப்பதற்கு முன்பாக அனுமதி கேட்டு இருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. யாராக இருந்தாலும் சரி. எந்த இடத்தில் இருந்தாலும் சரி. அவர் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அந்தந்த இடத்தில் கொடுத்தே ஆகவேண்டும். தலைகனம் என்பது யாருக்கும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் தோல்வியைத் தழுவுவார்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த கதை.

    • சிவபுராணத்தில் எத்தனையோ கிளைக் கதைகள் உள்ளன.
    • சிவராத்திரி தரிசன பலனை விளக்கும் கதை இது.

    அக்காலத்தில் மதுரை மாநகரில் சம்பகன் என்றொரு திருடன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு கோவிலில் புகுந்து கொள்ளையடித்தான். கோவில் காவலர்களால் மற்றவர்கள் பிடிபட, சம்பகன் மட்டும் விலை உயர்ந்த சில ஆபரணங்களோடு தப்பியோடி விட்டான்.

    பின்னர், மாறு வேடம் பூண்டு சப்தஸ்தான தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத் துறையில் இருந்த சிவத்தலத்தை அடைந்து, பதுங்கி கொண்டான். அன்று மாசி மகா சிவராத்திரி. ஆலயத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்து கொண்டிருந்தன.

    பதுங்கி கொண்டிருந்த சம்பகன் அங்கே திருடவும் முடியாமல், வயிற்று பசிக்கு உணவுமில்லாமல் உறக்கமும் இல்லாமல் அன்றிரவு முழுவதும் கண் விழித்திருந்தான். நடு நிசியில், மகாசிவராத்திரியில் சிவதரிசனம் கண்டு மக்கள் இறைவனை துதித்து மகிழ்ந்தனர். விடியற் காலையில் சம்பகன் கோவிலை விட்டு வெளியேறி, காவிரி நதியில் நீராடினான். அன்று மதியம் பிச்சை எடுத்து உண்டான். அன்று முழுவதும் திருட்டு எதுவும் செய்யாமல் இருந்தான். காலப்போக்கில் உயிரும் துறந்தான். அவ்வாறு இறந்த அவன் உயிரை எமதூதர்கள் எமதர்மராஜனின் அவைக்கு இழுத்து சென்றனர்.

    எமதர்மன் தன் அமைச்சரான சித்ர குப்தரை நோக்கி, சம்பகனின் வரலாறு பற்றிக்கேட்க அவரும் அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் கூறிவிட்டுக் கடைசியில், பிரபு இவன் கடைசி காலத்தில் மகாசிவராத்திரியன்று சிவாலயத்தில் உணவும் உறக்கமும் இன்றி உபவாசம் இருந்து சிவபெருமானை தரிசித்தான். மறுநாள் காவிரியில் நீராடினான். பின்னர் பிச்சை எடுத்து உண்டான். இவ்வகையில் மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருக்கிறான் என்று சித்ரகுப்தன் சொல்லி முடிக்கும் முன்னரே சிவகணங்கள் விரைந்து வந்து சம்பகனை சிவலோகத்திற்கு அழைத்து சென்றனர்.

    சம்பகன் அவனையும் அறியாமல் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதால் செய்த பாவங்கள் நீங்கி முக்தி பெற்றான்.

    • நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    • சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    'அந்த காலத்தில் ராமபிரான் வனவாசம் செய்த தண்டகாரண்யம் காட்டுக்குப் பக்கத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் கமாலபுரம் என்று ஓர் ஊர் இருந்தது. அந்த ஊரில் இருந்த பொய்கைக்குக் கலசரஸ் என்று பெயர். அந்த குளத்தின் கரையில் நிறைய முனிவர்கள் ஆசிரமம் அமைத்து இறைவனை வழிபட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் வித்வஜிஹ்மர்.

    அவரைப் பார்க்க கவுஸ்திமதி என்ற ரிஷி வந்தார். வித்வஜிஹ்மர் அவரை மனம் மகிழ வரவேற்று உபசரித்தார்.

    'இந்தச் சிறிய வயதில் நீங்கள் துறவியாக இருப்பது கொஞ்சம் கூட சரியில்லை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா! முன்னோர்களுடைய சாபமும் வந்து சேரும். அதனால்தானே அகஸ்தியர் லோபமுத்திரையை உருவாக்கி மணந்து கொண்டார். அதனால் நீங்கள் என் மகள் வசுமதியை மணந்து கொள்ளுங்கள்' என்று வித்வஜிஹ்மரிடம் கேட்டார்.

    'சம்சாரங்கர பந்தத்தில் அகப்பட்டு என்னுடைய வாழ்வை வீணாக்க நான் விரும்பவில்லை. வீணாக ஏன் கவலைகளையும் துன்பங்களையும் நாமே வரவழைத்து அனுபவிக்க வேண்டும். குடும்பம் குழந்தை என்று கஷ்டப்பட விரும்பாமல் தானே நானே என்னுடைய அப்பாவான மரீச முனிவரைவிட்டு விலகி வந்து தவம் செய்கிறேன். ஆனாலும் என்னுடைய கர்மா விடவில்லையே என்றார் வித்வஜிஹ்மர்.

    'நமக்குத் தந்தை என்கிற அந்தஸ்தை ஒரு மகனால்தான் தர முடியும்! நம்மைப்படைத்து காத்துக் கொண்டிருக்கிற மும்மூர்த்திகளும் திருமணம் செய்திருக்கிறார்கள்.

    உங்களின் பாட்டனார் பரத்வாஜ முனிவர் மணம் செய்யாமல் இருந்தால் நீங்கள் உருவாகியிருக்க முடியுமா? அதோடு என் மகள் வசுமதியும் சாதாரண பெண் கிடையாது. கவுதம முனிவரின் பேரன் நான். சதாநந்த முனிவரின் பேத்தி வசுமதி. பதிவிரதைகளான பாஞ்சாலி, சீதை, அருந்ததி, அனுசுயா அவர்களுக்கு இணையானவள், என் மகள் வசுமதி.

    அதனால் நீங்கள் என் மகளை மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

    அதற்கு 'மார்க்கண்டேயர், துர்வாசர், சனத்குமாரர்கள், கண்வமகரிஷி, நாரதர், சுகர் ஆகியோர் திருமணம் செய்யாமல் வாழவில்லையா? அவர்கள் ஏன் கல்யாணம் செய்யாமல் வாழ்ந்தார்கள்?. அதற்கான சரியான காரணத்தை நீங்கள் எனக்குச் சொன்னால் நான் உங்கள் மகள் வசுமதியைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னார் வித்வஜிஹ்மர்.

    கவுஸ்திமதி முனிவர் தன்னுடைய தவ வலிமையைப் பயன்படுத்தி வைகுண்டத்துக்குப் போய் அந்த நாராயணைப் பார்த்து ஜிஹ்மரின் கேள்விகளைக் கேட்டார்.

    அதற்கு நாராயணன் 'நாரதனும் ஒருசமயம் என்னுடைய மாயையினால் பல குழந்தைகளைப் பெற்றிருக்கிறான். தமயந்தின் எனும் ஒருத்தியோடு கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கிறான். ஸ்ரீமதியுடைய சுயம்வரத்தில் ஆசையில்லாமலா கலந்து கொண்டான்.

    அதே போல சனத்குமாரர்கள் வம்சத்தை விருத்தி செய்யாத காரணத்தால் பிரம்மனுடைய சாபத்தை பெற்றிருக்கிறார்கள். காத்யாயனர் காத்யாயினியையும், கணவர் சகுந்தலையையும் வளர்த்தார்கள். பெண் குழந்தைகளை வளர்ப்பது கடினம் என்று அவர்கள் ஒருநாளும் நினைக்கவில்லையே! மார்க்கண்டேயரும் பூமாதேவியை வளர்த்து எனக்காகக் கொடுத்தார்.

    துர்வாசரும் குந்திக்குக் குழந்தை பாக்கியத்துக்கான 5 மந்திரங்களைத் தந்தாரே! அவர் என்ன பாவம் என்று நினைத்தாரா? மகாலட்சுமியுடைய கலைகள் பதினாறையும் பெண் வடிவமாக்கி இந்த முனிவர்களுக்குத் தரலாம் என்று பிரம்மா நினைத்தார்.

    லட்சுமி இதை விரும்பாத காரணத்தினால் நான்தான் அதைத் தடுத்துவிட்டேன். அதனால் பிரம்மா அவர்களுக்கு, ஞானத்தைப் போதித்து முனிவர்களாக்கி விட்டார்' என்று போய் ஜிஹ்மரிடம் சொல், அவர் வசுமதியைக் கல்யாணம் செய்யச் சம்மதம் சொல்வார் என்று சொல்லி அனுப்பினார்.

    பூலோகத்துக்குத் திரும்பிய கவுஸ்திமதி, அப்படியே சொல்லி ஜிஹ்மரிடம் அனுமதி வாங்கினார். வசுமதி திருமணம் சிறப்பாக நடந்தது.

    கவுஸ்திமதி ரிஷி, மகளை விட்டுப் பிரியும் போது பல்வேறு புத்திமதிகளைக் கூறினார். சீடர்களிடம் அன்னையாய் நடக்க வேண்டும். முனி பத்தினிகளிடம் தோழியாய்ப் பழக வேண்டும் என்று நிறைய புத்திமதிகளைக் கூறினார். வித்வ ஜிஹ்மரும் வசுமதியும் நன்றாக வாழ்ந்தார்கள்.

    அந்த வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேருக்கு நேராக பாத்திருக்கிறாள்.

    சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    • நமசிவாய மந்திரம் உச்சரித்தாலே மனம் இரங்கி அருள்புரியும் ஆபத்பாந்தவனல்லவா அந்த ஈசன்.
    • தேவர்களை காப்பதற்காக அந்த விஷத்தை சாப்பிட்டார் ஈசன்.

    ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்துகொண்டே இருந்தது. தேவர்கள் எல்லோரும் அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் பிரம்மனிடம் சென்று வழி கேட்டனர். பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்து சாப்பிட்டால் இறப்பில்லாத இளமையான வாழ்வை பெறலாம். பின்னர் அசுரர்களை சமாளிப்பது ரொம்ப சுலபம் என்று பிரம்மா வழி சொன்னார்.

    திருமாலிடம் அனுமதி வாங்கி விட்டு மந்திரமலையை மத்தாக்கினார்கள். சந்திரனை அசைத்தூணாக்கி வாசுகி என்ற பாம்பை கயிறாக அந்த மலையில் கட்டி தேவர்கள் ஒருபக்கமும், அசுரர்கள் ஒரு பக்கமும் இழுக்க தொடங்கினார்கள்.

    மலை ஒருபக்கமாக சரியத் தொடங்கியதால் திருமால் ஆமை வடிவம் எடுத்து அந்த மலை விழுந்துவிடாமல் தாங்கினார். அமுதம் உண்ணப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் தேவர்கள் வேகவேகமாக கடைந்தார்கள்.

    வாசுகி களைத்து துடித்தது. அதன் உடல் இறுக்கமாக இருந்ததால் உடலில் இருந்த விஷத்தை கக்கியது. அதோடு பாற்கடலில் இருந்தும் நிறைய விஷம் வெளிப்பட்டது. இரண்டும் சேர்ந்து ஆலகால விஷம் எனும் கொடிய நஞ்சாக மாறிவிட்டது. விஷத்தின் வீரியம் தாங்க முடியாமல் அவர்கள் சிவனிடம் போய் முறையிட்டார்கள். நமசிவாய மந்திரம் உச்சரித்தாலே மனம் இரங்கி அருள்புரியும் ஆபத்பாந்தவனல்லவா அந்த ஈசன்.

    தேவர்களை காப்பதாக உறுதியளித்தான். சுந்தரரை விஷத்தை கொண்டு வரும்படி பணித்தான். சுந்தரர் சென்று அவ்வளவு விஷத்தையும் உருட்டி உருண்டையாக நாவல்கனி போல் ஆக்கிக்கொண்டு வந்து சிவனிடம் கொடுத்தார். தேவர்களை காப்பதற்காக அந்த விஷத்தை சாப்பிட்டார் ஈசன். அன்னை சக்தி பதறிப்போனாள்.

    உலக ரட்சகனான தன் கணவனின் உடலுக்குள் விஷம் சென்றால் அனைத்து உயிர்களும் அழிந்து விடுமே என்று கண்டத்தில் கைவைத்தாள் அன்னை. விஷம் அன்னையின் கைபட்டு கழுத்து பகுதியில் அப்படியே நின்றது. ஈசன் திருநீலகண்டன் ஆனார்.

    அவரது உடலில் இருக்கும் விஷத்தின் உஷ்ணம் குறைவதற்காக பிரம்மா, திருமால், முப்பத்து முக்கோடி தேவர்கள், இந்திரன், முனிவர்கள், ரிஷிகள், அசுரர்கள் இவர்களுடன் பார்வதி தேவியும் சிவனை நினைத்து ஆறுகால பூஜை செய்து வழிபட்ட தினம் தான் சிவராத்திரி.

    அப்படி சிவபெருமான் அனைத்து உயிர்களையும் காப்பதற்காக ஆலகால விஷத்தை அமுது போல் எண்ணி அருந்தியதை நமக்கு இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பது தான் சிவராத்திரி.

    • காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தங்கம், வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • பக்தர்கள் அதைத் தொட்டு வணங்கிச் சென்றால் சகல தோஷங்களும் விலகும்.

    ஸ்ரீஸ்ருங்கி பேரர் என்ற முனிவரின் இரண்டு மகன்கள், கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். கவுதமருக்கு அனைத்து பணிவிடைகளையும் இவ்விருவருமே செய்து வந்தனர். ஒருநாள் ஆசிரமத்தில் கௌதமர் பூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அந்நேரம் பூஜைக்கு இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி இறந்து மிதந்து கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதமர், ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் மகன்கள் இருவரையும் பல்லிகளாக போகக் கடவீர்களாக என சபித்தார்.

    தவறை உணர்ந்து விட்டோம் சுவாமி. எங்களை மன்னித்து அருள வேண்டும் சுவாமி, நாங்கள் சாப விமோசனம் பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு கவுதமர், நீங்கள் இருவரும் சத்திய விரத க்ஷேத்திரமான காஞ்சிக்கு சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் வரதராஜப் பெருமாளை வழிபட்டால் சாப விமோசனம் பெறலாம். அதோடு உங்களுக்கு மோட்சமும் கிட்டும் என்று கூறினார்.

    இதையடுத்து ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் மகன்கள் இருவரும் காஞ்சிபுரம் வந்து வரதராஜப் பெருமாளை வழிபட்டனர். அவர்களின் பக்தியை மெச்சிய வரதராஜப் பெருமாள் அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தார். மேலும், இருவரின் ஆத்மா வைகுண்டம் செல்லும். அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்ச உலோகங்களாக எனக்கு பின்புறம் இருக்கட்டும்.

    என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்கப் பெறுவார்கள் என்றும் அருளினார். அதன்படி இந்த ஆலயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் பஞ்ச உலோகங்களால் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுக்கு தங்க முலாமும், மற்றொன்றுக்கு வெள்ளி முலாமும் பூசப்பட்டுள்ளது. பக்தர்கள் அதைத் தொட்டு வணங்கிச் சென்றால் சகல தோஷங்களும் விலகும்.

    ஒரு முறை காஞ்சி மகாப் பெரியவர் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு விஜயம் செய்தார். பெருமாளை தரிசித்து விட்டு திரும்புகையில் கோயிலின் இரண்டாவது பிரகாரத்தில் வைத்து அவரது உச்சந்தலை மேல் பல்லி விழுந்தது. பின்னால் வந்த அவரது சீடர் ஒருவர் அதைத் தட்டிவிட்டார். உடனே உடன் வந்த ஊர் பிரமுகர்கள் சுவாமி. உச்சந்தலையில் பல்லி விழுந்தால் மரணம் என்று பல்லி சாஸ்திரம் கூறுகிறதே, இதற்கு பரிகாரம் ஏதும் செய்யக்கூடாதா என்று கேட்டதற்கு. இது சத்திய விரத க்ஷேத்திரம் (காஞ்சிபுரம்). இந்த மண்ணில் பல்லி தோஷம் என்பதே கிடையாது என்று அருளியது குறிப்பிடத்தக்கது.

    திருமூலா் அருளிய திருமந்திரம் பாடல்களை பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் பாடிய திருமுகப்பாசுரம் உள்ளிட்ட 12 போ் அருளிய பிரபந்தங்களை பதினொன்றாம் திருமுறையாகவும் சோ்த்தார்.
    கடலூர் மாவட்டம் திருநாரையூர் என்ற ஊரில் சவுந்தரநாதா் என்ற திருக்கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில், 33-வது தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு மூலவராக சிவபெருமான் இருந்தாலும், பொள்ளாப் பிள்ளையார் தான் பிரசித்திப் பெற்ற தெய்வமாக இருக்கிறார்.

    இவா் பல அற்புதங்களைச் செய்தவா் ஆவார். இந்த ஆலயத்தின் அர்ச்சகராக இருந்தவா் அனந்தேசா். இவா் ஒரு முறை வெளியூர் செல்ல நோ்ந்ததால், தனது சிறுவயது மகனை அழைத்து, விநாயகருக்கு நைவேத்தியம் வைத்து பூஜை செய்யும்படி கூறிச் சென்றார். அந்தச் சிறுவனின் பெயா் நம்பியாண்டார் நம்பி. அவனுக்கு உண்மையிலேயே நைவேத்தியத்தை விநாயகா் சாப்பிடுவார் என்ற எண்ணம் இருந்தது. அதனால் பூஜை வழிபாடுகளை முடித்து விட்டு, நைவேத்தியத்தை சாப்பிடும்படி விநாயகரிடம் கூறினான்.

    தந்தை பூஜை செய்தால்தான் சாப்பிடுவாரா விநாயகா், நான் நைவேத்தியம் வைத்து பூஜித்தால் ஏற்றக்கொள்ளமாட்டாரா என்று மனம் வருந்திய அந்தச் சிறுவன், விநாயகரின் கல்சிலை மீது தன் தலையை மோதிக்கொண்டான். அறியாமை என்றாலும் அவன் கொண்ட பக்திக்கு இரங்கிய விநாயகா், அவன் முன்பாகத் தோன்றி, அவன் படைத்த நைவேத்தியத்தை உண்டு, நம்பியாண்டார் நம்பிக்கு ஞானத்தையும் வழங்கினார். இந்தச் செய்தி நாடெங்கும் பரவி, நம்பியாண்டார் நம்பியின் புகழ் பரவக் காரணமாக அமைந்தது.

    சில காலம் கழித்து, சோழா்களில் சிறந்தவனான ராஜராஜசோழனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தேவாரப்பாடல்களும், திருத்தொண்டா்கள் வரலாறும் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதை பிற்கால சந்ததியா் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்று நினைத்தான். ஆனால் தேவாரப்பாடல்கள் எங்கிருக்கிறது என்பது தொியவில்லை. அப்போது நம்பியாண்டார் நம்பியைப் பற்றி அறிந்த ராஜராஜ சோழன், அவரிடம் வந்து தேவாரப்பாடல்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இதையடுத்து நம்பியாண்டார் நம்பி, தான் எப்போதும் வணங்கும் பொள்ளாப் பிள்ளையாரிடம் இதுபற்றி கேட்டார்.

    அவை அனைத்தும் தில்லையில் ஒரு அறையில், மூவா் கை முத்திரையுடன் வைக்கப்பட்டிருப்பதை, நம்பியாண்டார் நம்பிக்கு, விநாயகா் கூறியருளினார். அதன்பிறகு தில்லை எனப்படும் சிதம்பரத்திற்குச் சென்று, அங்கிருந்த தேவாரப் பாடல்கள், திருத்தொண்டா்கள் வரலாறு அடங்கிய ஓலைச்சுவடிகளை ராஜராஜசோழனும், நம்பியாண்டார் நம்பியும் மீட்டனா்.

    பின்னா் அந்த பாடல்களை, நம்பியாண்டார் நம்பி ‘திருமுறைகள்’ என்ற பெயரில் தொகுத்தார்.

    திருமுறைகள் 12 இருக்கிறது, அதில் 11 திருமுறைகளை தொகுத்தவா், நம்பியாண்டார் நம்பி. திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களை முதல் மூன்று திருமுறையாகவும், திருநாவுக்கரசா் பாடிய தேவாரப் பாடல்களை 4 முதல் 6 திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரத்தை ஏழாம் திருமுறையாகவும் தொகுத்தார். பின்னா் சமயக்குரவா்களில் நாலாவதாக இருக்கும் மாணிக்கவாசகா் அருளிய திருவாசகம் மற்றும் திருக்கோவையாரை எட்டாம் திருமுறையாக சோ்த்தார்.

    திருமாளிகைத்தேவா் முதலான சிலா் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவற்றை ஒன்பதாம் திருமுறையாக இணைத்தார். திருமூலா் அருளிய திருமந்திரம் பாடல்களை பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் பாடிய திருமுகப்பாசுரம் உள்ளிட்ட 12 போ் அருளிய பிரபந்தங்களை பதினொன்றாம் திருமுறையாகவும் சோ்த்தார். பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களில், நம்பியாண்டார் நம்பி பாடிய பிரபந்தங்களும் அடங்கியிருக்கிறது.
    ×