search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வளையல் வியாபாரிக்கு காட்சி அளித்த சமயபுரத்தாள்
    X

    வளையல் வியாபாரிக்கு காட்சி அளித்த சமயபுரத்தாள்

    • மாரியம்மனை தரிசிக்க பல லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.
    • பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பார்கள்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருநறையூர் என்னும் அழகிய ஊர். இந்த ஊரின் நாச்சியார் கோவிலின் முன்னர் வளையல் வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார். மாரியம்மன் பக்தரான அவர் வருடா வருடம் குறிப்பிட்ட நாளில் தவறாமல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு வளையல்கள் வைத்து வழிபாடு நடத்தி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை, உடல் நலம் குன்றியதால் அவரால் சமயபுரம் சென்று மாரியம்மனை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    அந்த வியாபாரி மாரியம்மனை தரிசிக்க முடியவில்லையே, அவளுக்கு வளையல்கள் அணிவிக்க முடியவில்லையே என மனம் வருந்தினார். பெருந்துயரத்தில் ஆழ்ந்த அவர், மாரியம்மனை பார்க்க வேண்டுமென வேண்டிக் கொண்டார். தன் பக்தனுக்காக ஆகாய மார்க்கமாய் சமயபுரத்தில் இருந்து புறப்பட்ட மாரியம்மன், திருநறையூருக்கு வந்து, அவன் முன்பு காட்சி அளித்தார். சாஷ்டாங்கமாக வணங்கிய வளையல் வியாபாரி, வளையலை மாரியம்மனுக்கு அணிவித்தார்.

    தனக்காக வந்த அம்பிகையிடம் வியாபாரி ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் அவர் இருக்கும் ஊரான திருநறையூர் என்னும் நாச்சியார்க்கோவிலுக்கு அம்பிகை வந்து மக்களுக்கு நல்லாசி புரியவேண்டும் என்று கோரிக்கையை வைத்தார். அம்பிகையும் அவ்வாறே ஆகட்டும் என வாக்குறுதி அளித்தாள். தன் பக்தனுக்கு செய்த சத்தியத்திற்காக அன்று முதல் ஒவ்வொரு வருடமும் சமயபுரத்தில் இருந்து ஆகாய மார்க்கமாய் இங்கே வந்து காட்சி கொடுத்து வருகிறாள் என்பது ஐதீகம்.

    ஆகாய மார்க்கமாக வருவதால், இவருக்கு ஆகாச மாரியம்மன் என்னும் பெயர் வந்தது. வளையல் வியாபாரிக்கு வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை அன்று மாரியம்மன் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மாரியம்மன் இந்த தலத்திற்கு வருவாள். அம்மன் வருகை தரும் தினத்தில் இருந்து உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடைபெறுகின்றது. இவள் வருகையின் போது ஊரே திருவிழாக்கோலம் பூண்டு களை கட்டுகிறது.

    10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசிக்க பல லட்சக்கணக்கான மக்கள் நாச்சியார்கோவிலுக்கு வருகிறார்கள். இந்த திருவிழாவிற்காக மாரியம்மனை தர்ப்பை புல்லால் ஒவ்வொரு வருடமும் புதியதாக உருவாக்குகின்றனர். சமயபுரம் மாரியம்மனை போல் சிவந்த முகம், கூரிய பற்கள், அகண்ட விழிகள் சர்வ ஆபரணங்களுடன் அம்மன் அலங்கரிக்கப்படுகிறாள். நாதஸ்வர மேளம் முழங்க, புஷ்ப பல்லக்கில் ஏறி அமர்ந்து செல்வாள்.

    அங்கு அவளை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பார்கள். திருநறையூருக்கு புடைசூழ வந்து 10 நாட்கள் அங்கேயே தங்கும் இந்த தர்ப்பையால் செய்யப்பட்ட மாரியம்மனுக்கு வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். இதில் அம்மனுக்கு சேஷசயன அலங்காரம், மதன கோபால அலங்காரம், லட்சுமி அலங்காரம், சரஸ்வதி அலங்காரம், வீற்றிருந்த திருக்கோலம், மகிஷாசுர மர்த்தினி, நின்றிருந்த திருக்கோலம், ராஜராஜேஸ்வரி அலங்காரம் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படும்.

    ஒரு பெண் குழந்தை படிப்படியாய் வளர்ந்தால் எப்படி அலங்காரம் செய்வோமோ அதேபோல் ஒவ்வொரு நாளும் அம்மன் வளர்ச்சி அடைவதுபோல் அலங்காரம் செய்வார்கள். முதல் நாளில் சிறிய திருமேனியுடன் காட்சியளிக்கும் மாரியம்மன் கடைசி நாளன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தி ன்போது வளர்ந்த திருமேனியுடன் காட்சியளிப்பாள். 10 நாள் திருவிழா முடிந்தவுடன், மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் சமயபுரம் புறப்படுவாள். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திருநறையூர் வருவதால், அவள் சமயபுரம் புறப்படும்போது மக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுக்கின்றனர். வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடியில் அம்பிகை காட்சியளிக்கிறாள்.

    Next Story
    ×