search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    விதியின் சக்தி- ஆன்மிக கதை
    X

    விதியின் சக்தி- ஆன்மிக கதை

    • நம்முடைய வாழ்க்கையில் எது நடக்க வேண்டுமோ அது நடந்துதான் தீரும்.
    • வாழ்வின் முடிவை விதிவசம் ஒப்படைத்து, செய்வதை சிறப்புடன் செய்வோம்.

    ஒரு முறை கருட பகவான் ஓய்வாக ஒரு மரக்கிளையில் போய் அமர்ந்தார். அந்த மரத்தின் எதிரே இருந்த ஒரு மரத்தில், குருவி ஒன்று அமர்ந்து கிளைக்கு கிளை தாவி விளையாடிக்கொண்டிருந்தது. அந்தக் குருவியின் விளையாட்டில் லயித்துப் போய் இருந்த கருட பகவானுக்கு, அந்தக் குருவியை யாரோ, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரியவே, சுற்றும் முற்றும் தன்னுடைய பார்வையை சுழற்றினார். அப்போது குருவி இருந்த மரத்தின் அருகே இருந்த மற்றொரு மரத்தில் இருந்து எமதர்மன், அந்தக் குருவியையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இப்போதுவரை மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கும் இந்தக் குருவிக்கு, எமதர்மனின் பார்வையால் கேடு காலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். சற்றும் யோசிக்காத கருட பகவான், உடனடியாக பறந்து, குருவியை தன்னுடைய காலால் பற்றிக்கொண்டு, நொடிப் பொழுதில் பல்லாயிரம் மைல்கள் கடந்து, பசுமை போர்த்தி நின்ற பழங்கள் நிறைந்த ஒரு மரத்தின் கிளையில் போய் வைத்தார்.

    'அப்பாடா.. குருவியை, எமதர்மனிடம் இருந்து காப்பாற்றிவிட்டோம்' என்று கருடபகவான் நினைத்துக் கொண்டிருந்த அதே தருணத்தில், குருவி அமர்ந்திருந்த கிளையின் அருகில் இருந்த ஒரு மரப்பொந்தில் இருந்து வெளிப்பட்ட பாம்பு ஒன்று, சட்டென்று அந்த குருவியைக் கவ்வி விழுங்கியது. அதைப் பார்த்து திகைத்துப் போன கருட பகவான், 'குருவியை காப்பாற்ற நினைத்து, அதற்கு தானே எமனாக மாறிப்போய் விட்டோமே' என்று எண்ணி வருந்தினார்.

    அப்போது அங்கு வந்து சேர்ந்தார், எமதர்மன். அவரைப் பார்த்ததும் கருடன் தன்னுடைய தலையை தாழ்த்திக்கொண்டார். எமதர்மன் கருடனை பார்த்து "கருட தேவா.. நான் அந்தக் குருவியை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, நான் அதைக் கொல்லப் போகிறேன் என்று நீங்கள் கருதி விட்டீர்கள். அதனால்தானே.. அதை காப்பாற்றும் விதமாக இங்கு தூக்கி வந்தீா்கள்?" என்று கேட்டார்.

    அதற்கு 'ஆம்' என்பது போல் தலையை அசைத்தார் கருடன்.

    "நீங்கள் என்னை தவறாக புரிந்துகொண்டீர்கள். அந்தக் குருவியின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்பது உண்மைதான். ஆனால் ஒரு சில நொடியிலேயே அது வீற்றிருந்த மரக்கிளையில் இருந்து, பல ஆயிரம் மைல்கள் தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் பொந்தில் இருக்கும் பாம்பினால், அதற்கு ஆயுள் முடியும் என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் பறவை பறந்து சென்றால், பாம்பு இருக்கும் இடத்தை அடைய ஒரு சில நாட்களாவது பிடிக்கும். வேறு எந்தப் பறவை தூக்கிச் சென்றாலும் கூட அவ்வளவு காலம் தேவைப்படத்தான் செய்யும். ஆனால் அதன் ஆயுள் முடியப் போவதோ சில நொடிகளுக்குள் ஆயிற்றே என்ற ஆழ்ந்த சிந்தனையில்தான், அந்தக் குருவியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் விதிப் பயன் எப்படியும் நிறைவேறியேத் தீரும் என்பதை நான் உடனடியாகவே புரிந்துகொண்டேன். ஏனெனில் காற்றை விட வேகமாக பறக்கும் நீங்கள், அந்தக் குருவியை காப்பாற்றுவதாக நினைத்து, சில நொடிகளிலேயே, அதை பல ஆயிரம் தூரத்திற்கு கொண்டு சென்று வைத்துவிட்டீர்கள். அதனால் விதிப்படியே அனைத்தும் நடந்தேறி விட்டது" என்று சொல்லி முடித்தார்.

    ஆம்.. நம்முடைய வாழ்க்கையில் எது நடக்க வேண்டுமோ அது நடந்துதான் தீரும். அதுகுறித்து கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், இப்போது செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர செய்ய முடியாது. எனவே வாழ்வின் முடிவை விதிவசம் ஒப்படைத்து, செய்வதை சிறப்புடன் செய்வோம்.

    Next Story
    ×