search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்ரீரங்கம், ராமேசுவரம் கோவில்களுக்கு மோடி முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
    X

    ஸ்ரீரங்கம், ராமேசுவரம் கோவில்களுக்கு மோடி முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

    • ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது.
    • பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம்.

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. 108 திருப்பதிகளில் தானாய் தோன்றிய (சுயம்பு) திருப்பதிகள் 8 தான். அதிலும் முதல் திருப்பதி ஸ்ரீரங்கம் தான். வைகுண்டத்தின் தத்துவத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் கண்டு அனுபவிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இது பூலோக வைகுண்டம் எனப்படுகிறது.

    ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது, தெய்வீகமானது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்ரீராமரின் குலதெய்வம் ஆவார். மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே குலதெய்வம் என்று உள்ளது. அதேபோல மகாவிஷ்ணு மனிதராக ஸ்ரீராமராக அவதாரம் எடுத்தவர்.

    அயோத்தியில் அவர் வணங்கிய குல தெய்வம்தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் போது ராமரின் குலதெய்வ கோவிலான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திரங்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மண் அனுப்பி வைக்கப்பட்டது.

    பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்தவர் ஸ்ரீரங்கநாதர். ரெங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய பிரம்மா சூரியனை நியமித்தார்.

    பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு கொண்டு சென்று வழிபட்டார். "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்" ராமரின் வம்சமாகிய ரகுவம்சத்தின் குல தேய்வம். காலம்காலமாக அவர்கள் ரெங்கநாதரை வழிபட்டு வந்தனர். சூரிய வம்சத்தில் தசரதருக்கு மகனாக அவதரித்த ராமபிரான் தன் முன்னோர்கள் வழியில் ரெங்கநாதரை வணங்கி வந்தார். 67 தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே அஜன், திலீபன், தசரதன் என ராமபிரானின் முன்னோர்களால் வழிபட்டு வந்தவர் ரெங்கநாதர். அயோத்தியில் ராமர் தனது கரங்களால் ரங்கநாதருக்கு பூஜை செய்து வந்தார்.

    இந்த சூழலில் ராமர் வனவாசம் முடிந்து அயோத்தியில் மீண்டும் அரசாட்சி புரிந்தார். அவர் முடி சூட்டிக்கொண்ட பிறகு விபீஷணனுக்கு அவன் செய்த உதவிக்காக `ரங்க விமானம்' தருகிறார் ராமர். அதை விபீஷணன் இலங்கை போகும் வழியில் சந்திரபுஷ்கரினி என்னும் தடாகம் பகுதியில் வந்தபோது சிலையை கீழே இறக்கி வைக்க வேண்டாம் என்று கருதி, அங்கு வந்த சிறுவனிடம் கொடுத்துள்ளான்.

    ஆனால் காவிரியில் நீராடி விட்டு திரும்பி வருவதற்கு அந்த சிலையை சிறுவன் கீழே வைத்துவிட்டான். அதன்பிறகு சிலையை எடுக்க முடியவில்லை. கோபத்தில் விபீசணன் அந்த சிறுவனை தேடியபோது அவன் திருச்சி மலைக்கோட்டை உச்சியில் சென்று அமர்ந்து கொண்டான். சிறுவன் வடிவில் வந்தது உச்சிப்பிள்ளையார் என்றும், ரங்கநாதரை காவிரியில் அமர வைக்கவே அவர் இந்த திருவிளையாடலில் ஈடுபட்டுள்ளார். தர்மவர்மா என்ற அந்தப் பகுதி மன்னனின் பக்தியால் உருகி பெருமாள் அந்தத் தீவிலேயே தங்கி விடுகிறார். தர்மவர்மா ஆலயம் எழுப்பினான்.

    பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் இங்கு அருள்கிறார். இதனை `சயனக் கோலம்' என்பார்கள். திருச்சியில் காவிரியும் கொள்ளிடமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. `அரங்கம்' என்றால் ஆற்றிடைக்குறை என்று பொருள்படும். ஸ்ரீரங்கம் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 156 ஏக்கர். கோயில் சுவர்களின் மொத்த நீளம் 32,592 அடி. பெரியகோவில் 7 திருச்சுற்றுக்களோடு அமைந்துள்ளது. இந்தியாவிலேயே 7 சுற்றுக்களைக் கொண்ட கோவில் இதுமட்டுமே. பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். விபீஷணனுக்காக "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளி கொண்டுள்ளார் பெருமாள்.

    கருவறை விமானத்தில் 4 கலசங்கள் உள்ளன. இவை 4 வேதங்களைக் குறிக்கின்றன. சுந்தரபாண்டியன் விமானத்துக்குத் தங்கம் பதித்தான். அதனால் பொன்மேய்ந்த பெருமாள் என அழைத்தனர். பொன்னால் வேயப்பட்ட இந்த விமானம் ஓம் என்ற பிரணவ வடிவில் எழுந்தருளி உள்ளது. ரெங்கநா தனின் திருக்கண்கள் விபீஷணனால் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

    மூவேந்தர்கள் தொடங்கி விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் எல்லோருமே ரெங்கநாதரை வணங்கி கோவிலை வளர்த்தனர்.

    கம்பர் தனது ராமகாதையை கி.பி.885-ல் இங்குதான் அரங்கேற்றம் செய்தார். வால்மீகி ராமாயணத்தில் இல்லாத `இரண்ய வதைப்படலம்' எனும்பகுதியை கம்பர் தனது காவியத்தில் எழுதியதை சிலர் ஏற்க மறுத்தனர். ஆனால் மேட்டழகிய சிங்கர் என்ற நரசிம்மர் கர்ஜித்து ஏற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

    தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ள நான்குகால் மண்டபத்தில்தான் கம்பராமாயணம் அரங்கேறியதாம். இதன் சாட்சியாக திருவந்திக்காப்பு மண்டபத் தூணில் கம்பர் கைகூப்பி வணங்கும் சிற்பம் உள்ளது.

    பழைமையான தமிழ் வழிபாட்டு முறைகளில் ஒன்றான பெருமாள் வழிபாட்டில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பது ஸ்ரீரங்கம். ஒரு நாட்டின் மன்னனுக்கு நடப்பதுபோன்று பெருமாளுக்கு விழாக்கள் நடக்கின்றன. இதனால்தான், "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே" என்று கூறுகிறார்கள்.

    ஆசியா - பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளிலிருந்து கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017-ம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த கோவிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிசேகம் காணப்படும் இந்த சூழலில் ராமபிரானின் குல தெய்வமான ஸ்ரீரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ள ஸ்ரீரங்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. ராமரின் குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு, அதன்பிறகு அயோத்தியில் ராமரின் கோவிலை திறந்து வைப்பதே சரி என கருதி பிரதமர் மோடியின் ஸ்ரீரங்கம் வருகை இதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகமாக்கி உள்ளது.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை மாத பூபதி திருநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 19-ந்தேதி 4-ம் திருநாள் கருடசேவை தரிசனம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஸ்ரீரங்கம் வருவது மேலும் சிறப்பாகும்.

    Next Story
    ×