search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayakanth"

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ‘தி கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷியாவில் நடந்து வருகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    'தி கோட்' படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு 5, 6 முறை எங்கள் வீட்டுக்கு வந்து விஜய் நடித்து வரும் படத்தில் விஜயகாந்த் தோற்றம் இடம்பெறுவது பற்றி என்னிடம் அனுமதி கேட்டார்.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார். விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறி இருந்தார்.

    விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருந்து நான் யோசிக்க வேண்டும் அவர் இருந்திருந்தால் அவர் விஜய்க்கு என்ன சொல்லி இருப்பார்? செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும்.

    எஸ்.ஏ. சந்திரசேகர் மீதும் விஜய் மீதும் அவருக்கு எப்போதும் மிகப் பெரிய பாசம் உண்டு. எனவே ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் கேப்டனை படத்தில் கொண்டு வருவது குறித்து அவர்கள் கேட்கும் போது விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்து இருக்க மாட்டார்.

    விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவாக கூறுகிறேன் என்று சொன்னேன். வெங்கட் பிரபுவிடம் உனக்கும் விஜய்க்கும் என்னால் நோ சொல்ல முடியாது என்று அந்த நேர் காணலில் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமூக வலை தளங்களில் அவரை கேலிப் பொருளாக்கியவர்கள் எல்லாம் இப்போது புகழ் பாடுகிறார்கள்.
    • மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது எண்ணத்தை வரும் காலங்களில் நிச்சயம் செயல்படுத்துவோம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா மாலைமலருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:-பாராளுமன்ற தேர்தல் களம் எப்படி உள்ளது?

    பதில்:-தேர்தல் களம் எங்களுக்கு என்றும் புதிது இல்லை. 19 ஆண்டுகளாக பார்க்கும் அதே தேர்தல் களம்தான். தேர்தல் என்றாலே போர்தான். போர் களத்தில் போர் வீரர்கள் எப்படி சண்டை போடு வார்களோ அப்படித்தான் இருக்கும். தேர்தலில் பண பலம், அதிகார பலம் ஆகியவற்றோடுதான் வருவார்கள். அதையெல்லாம் சந்திக்க வேண்டியது தான்.

    மக்களிடம் இன்று மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வார்கள் என்று வாக்குறுதிகளை சொல்லி வருகிறோம். அடுத்தவர்களை குறை சொல்லி பேசாமல் தொகுதிக்கு நல்லது செய்வது பற்றியே மக்களிடம் பேசி வருகிறோம்.

    தேர்தல் களம் நிச்சயமாக நன்றாக உள்ளது. நாளை நமதே... 40-ம் நமதே.. எங்களது வேட்பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள். மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது. தொண்டர்கள் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். அதனால் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

    கேள்வி:-தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்கு எதிர்கால திட்டங்கள் என்ன வைத்துள்ளீர்கள்?

    பதில்:-தே.மு.தி.க.வில் உள்கட்சி தேர்தலை ஏற்கனவே நடத்தி முடித்துவிட்டோம். கேப்டன் மறைந்து 100 நாள்தான் ஆகிறது. அந்த சோகத்தில் இருந்து இன்னும் நாங்கள் வெளியே வரவில்லை. தேர்தல் என்கிற மிகப்பெரிய சவால் எங்கள் முன்பு இருப்பதால் அதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தேர்தல் பணிகள் முடிந்து முடிவுகள் வந்த பின்னர் கட்சியை மேலும் வலுப்படுத்த உள்ளோம்.

    கேப்டன் எப்படி மிகப்பெரிய வலிமையோடு கட்சியை நடத்தினாரோ, அதே போல மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து மக்களுக்காக உழைப்போம்.

    கேள்வி:-அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் சேர்ந்திருந்தால் மேலும் வலுவாக இருந்திருக்கும் என்கிற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஏற்கனவே 10 ஆண்டுகள் இருந்தோம். நீங்கள் குறிப்பிடும் கட்சியும் அப்போது கூட்டணியில் இருந்தது. ஆனால் பெரிய வெற்றி எதையும் பெற முடியவில்லையே.

    இந்த முறை எங்கள் மாவட்ட செயலாளர்கள் அனைவருமே அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றே கூறினார்கள். அதுவே அவர்களது முடிவாகவும் இருந்தது. அந்த வகையிலேயே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்கிற நிலைப்பாட்டை எடுத்தோம். அண்ணன் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு உரிய மரியாதையை அளித்தார்.

    ஆரம்பத்திலேயே எங்களை அணுகி பேசியதால் அ.தி.மு.க. கூட்டணி சிறப்பாக அமைந்துள்ளது. இது மக்கள் விரும்பும் கூட்டணியாக உள்ளது. தொண்டர்கள் விரும்பும் கூட்டணியாகவும் எங்கள் கூட்டணியை பார்க்கிறேன். அதனால் பெரிய வெற்றி எதிர் பார்க்கிறோம்.

    கேள்வி:-அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-அ.தி.மு.க.வில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இறந்த போது ஒரு பிளவு ஏற்பட்டது. அதன் பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் பிளவு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் இது ஒன்றும் புதிது அல்ல. இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வதை விட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதில் அளித்தால்தான் சரியாக இருக்கும்.

    அதே நேரத்தில் அது உள்கட்சி பிரச்சினை. சேருவதும், சேராததும் அவர்களது விருப்பம். எப்போதும் ஒன்றாக இருந்தால் அது நல்லது தானே? அதில் மாற்று கருத்து இல்லையே. இந்த விஷயத்தில் அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

    கேள்வி:-கூட்டணி விஷயத்தில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அணுகுமுறை எப்படி உள்ளது?

    பதில்:-மிக மிக சிறப்பாக உள்ளது. அதனை எல்லா கூட்டங்களிலுமே நீங்கள் பார்க்கலாம். எல்லா பிரசாரத்திலும் நான் சொல்லி வருகிறேன். அண்ணன் எடப்பாடி பழனிசாமி மிக மிக மரியாதையோடு கூட்டணியை வழி நடத்துகிறார். எப்போது போன் செய்தாலும் எடுத்து பேசுவார். அன்பாக கனிவாக பேசுவது, வழி நடத்துவது எல்லாமே மிக மிக அபாரமாக உள்ளது. பாராட்டுதலுக்குரிய எதிர்க்கட்சி தலைவராகவே எடப்பாடி பழனிசாமியை நான் பார்க்கிறேன்.

    கேள்வி:-விஜய பிரபாகரன் தேர்தல் களத்தில் புதிதாக இறங்கியுள்ளார். எதிர் காலத்தில் கட்சியில் அவரது பங்கு என்னவாக இருக்கும்?

    பதில்:-தேர்தல் களத்துக்குத்தான் விஜயபிரபாகரன் புதியவர். ஆனால் பிறந்ததில் இருந்தே அப்பாவையே பார்த்து வளர்ந்தவர் அவர். எனவே அவருக்கு எதுவும் புதிது அல்ல. அப்பாவோடும் என்னோடும் தேர்தல் பிரசாரத்துக்கு வந்துள்ளார். கட்சிக்குள் நடக்கும் அனைத்து விழாக்களிலும் அவர் பங்கேற்றுள்ளார். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். இதுவரை கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமலேயே உள்ளது. ஆனால் கட்சியில் அனைவரும் விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    கேப்டன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக தேர்தல் வந்ததால் சவாலுடன் எதிர்கொண்டுள்ளோம். அனைவரும் விஜயபிரபாகரன் போட்டியிட வேண்டும் என்றே விரும்பினார்கள். எனவே எங்களது பூர்வீக தொகுதியான விருதுநகர் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

    எங்களது மாமனார், மாமியர் பிறந்த ஊர் அங்குதான் உள்ளது. எங்கள் குல தெய்வமும் அங்கேதான் இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில்தான் எங்கள் திருமணம் நடந்தது. இப்படி எங்கள் வாழ்க்கையே விருதுநகரில்தான் தொடங்கியுள்ளது. எனவே விஜய பிரபாகரன் அங்கு நிற்க வேண்டும் என்று விருதுநகர் தொகுதி மக்களும் விரும்பினார்கள். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் விரும்பினார்கள். இப்படி அனைவரின் விருப்பத்துக்கும் இணங்கவே விருதுநகரில் அவர் போட்டியிடுகிறார்.

    தொகுதி மக்கள் விஜயபிரபாகரனை தங்களது செல்லப்பிள்ளையாகவே பார்க்கிறார்கள். தேர்தல் முடிநதவுடன் விஜய பிரபாகரனுக்கு வழங்கப்பட வேண்டிய பொறுப்பு பற்றி முடிவெடுத்து அறிவிக்க உள்ளோம்.

    கேள்வி:-விஜயகாந்த் மறைவில் இருந்து எப்படி மீண்டு வருகிறீர்கள்?

    பதில்:-கேப்டன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது மறைவில் இருந்து இன்னமும் மீண்டு வர முடியாமலேயே உள்ளோம். 3 மாதங்களாக வெளியில் எங்கும் செல்லாமலேயே இருந்தேன். அலுவல கம், வீட்டை தாண்டி எங்கேயும் போகவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீங்களும் பிரசாரத்துக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் கூட்டணி தர்மத்தை மதித்து பிரசாரம் செய்து வருகிறேன். கேப்டன் எங்களிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். கட்சியை எதிர்காலத்தில் நன்றாக வழிநடத்தி அவர் கண்ட கனவை எட்டுவதற்கு உழைப்போம்.

    எப்போதும் மக்களை பற்றியே சிந்தித்து வந்த அவர் முதல்-அமைச்சராகி நலத்திட்டங்களை செய்ய விரும்பினார். ஆனால் சமூக வலை தளங்களில் அவரை கேலிப் பொருளாக்கியவர்கள் எல்லாம் இப்போது புகழ் பாடுகிறார்கள்.

    விஜயகாந்தை முதல்-அமைச்சராக்காமல் விட்டுவிட்டோமே என்று மக்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது எண்ணத்தை வரும் காலங்களில் நிச்சயம் செயல்படுத்துவோம்.

    இவ்வாறு பிரேமலதா கூறினார்.

    • நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமானார்
    • விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைந்த நிலையில் அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்

    நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமான சூழலில் அவரது சமாதிக்கு தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைந்த நிலையில் அவரது நினைவிடத்தில் மகன் சண்முக பாண்டியனுடன் சென்ற பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த ஏராளமான பொதுமக்களுக்கு பிரேமலதா அன்னதானம் வழங்கினார்.

    இந்நிலையில் இன்றைய தினம் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தன்னுடைய 31வது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தின் டீசர் இன்றைய தினம் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது.

    சண்முக பாண்டியன் இந்த ஆண்டில் தன்னுடைய அப்பாவை இழந்து முதல் முறையாக அவர் இல்லாமல் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனால் அவரது பிறந்தநாள் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் சண்முக பாண்டியன் பிறந்தநாளை சிறப்பாக்கும் வகையில் அவரது அண்ணன் விஜய பிரபாகரன் தம்பிக்கு காஸ்ட்லியான Porsche கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.
    • முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.

    ரிஷிவந்தியம்:

    கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாணாபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    ரிஷிவந்தியம் வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு ரிஷிவந்தியம் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.

    நான் எந்த தொகுதிக்கு சென்றாலும் தைரியமாக பேசுவேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த இந்த பூமியை நிச்சயமாக என்னால் மறக்க முடியவில்லை. எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் செய்த திட்டங்கள் குறித்து பேசிய போது திடீரென அவர் தேம்பி, தேம்பி அழ தொடங்கினார். இதைப்பார்த்த அங்கிருந்த தொண்டர்களின் கண்களிலும் கண்ணீர் வரத் தொடங்கியது. பின்னர் அவர் தனது அழுகையை அடக்கிக் கொண்டு மீண்டும் தனது பேச்சை தொடங்கினார். முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.

    • வடிவேலுவின் திரை வாழ்க்கையிலும் கடும் பின்னடைவு ஏற்பட்டது.
    • கலைஞர் அருங்காட்சியகத்துக்கு சென்ற வடிவேலு அதனை புகழ்ந்து பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து விஜயகாந்த் போட்டியிட்டார்.

    அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின் போது விஜயகாந்தை வடிவேலு கடுமையாக விமர்சனம் செய்தார். தி.மு.க. கூட்டணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் விஜயகாந்த், அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தார். இந்த கூட்டணி வெற்றியும் பெற்றது.

    வடிவேலுவின் பிரசாரம் எடுபடாமல் போனது. தி.மு.க. கூட்டணி தோல்வியையே தழுவியது. இதன் பின்னர் வடிவேலுவின் திரை வாழ்க்கையிலும் கடும் பின்னடைவு ஏற்பட்டது. "இனி எனக்கு அரசியலே வேண்டாம்" என்று வடி வேலுவும் ஒதுங்கினார்.

    அரசியல் தொடர்பான கேள்விகளுக்கும் வடிவேலு காமெடியாகவே பதில் அளித்து விட்டு நழுவுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் வடிவேலு தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் வடிவேலு சமீப காலமாகவே தி.மு.க. வுடன் நெருக்கமாக உள்ளார். கருணாநிதி தொடர் பான நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மெரினாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்துக்கு சென்ற வடிவேலு அதனை புகழ்ந்து பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    இதைத் தொடர்ந்து வடிவேலு 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் அவருடன் பேசி வருவதாகவும் தெரிகிறது.

    இதன் மூலம் பாராளுமன்ற தேர்தல் களத்தில் வடிவேலு தி.மு.க.வை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அது போன்று வடிவேலு பிரசாரத்தில் ஈடுபடும் பட்சத்தில் மத்திய அரசையும் பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை விமர்சித்தும் வடிவேலு பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜயகாந்த் பற்றாளர்கள் இன்று விழாவிற்கு வந்திருந்தனர்.
    • அனைத்து மக்களும் கேப்டனின் அருள் பெற வேண்டுமென்ற நோக்கத்தில், அவருக்கு கோவில் வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டதாக கீதா தெரிவித்தார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் கிராமத்தில் காலஞ்சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருஉருவ சிலைக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காட்டாகரம் கிராமத்தை சேர்ந்தவர் கீதா. இவர் இக்கிராமத்தில் ஓம்சக்தி ஆலயம் கட்டி அதனை பராமரித்து வருகிறார்.

    யூ டியூபில் விடியோ பதிவிட்டு, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். இந்நிலையில் இவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல் கொண்ட பற்று காரணமாக அவரின் 5 அடி திருஉருவ சிலை நிறுவி, இன்று அச்சிலைக்கு கும்பாபிஷேகம் செய்தார்.

    காட்டாகரம் பகுதியில் விஜயகாந்துக்கு திருஉருவ சிலை அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உருவ சிலைக்கு கும்பாபிஷேகம் செய்து அதனை யூடியூபில் மட்டுமே வெளியிட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜயகாந்த் பற்றாளர்கள் இன்று விழாவிற்கு வந்திருந்தனர்.

    திருப்பூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

    கும்பாபிஷேக விழா மேள தாளங்களுடன் நிறைவடைந்த நிலையில், விஜயகாந்துக்கு கற்பூர தீபாராதனை செய்து தொண்டரகள் வழிபட்டனர். அனைத்து மக்களும் கேப்டனின் அருள் பெற வேண்டுமென்ற நோக்கத்தில், அவருக்கு கோவில் வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டதாக கீதா தெரிவித்தார்.

    • விஜயகாந்த் உடல் அக்கட்சி தலைமையகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
    • அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பொது மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர், முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து விஜயகாந்த் உடல் அக்கட்சி தலைமையகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

    இவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பொது மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவருக்கு மணி மண்டம் கட்ட வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

     


    இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் மறைந்து 67 நாட்களாகியும், அவர்மீது கொண்ட அன்பின் காரணமாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து, ஒவ்வொரு நாளும் விஜயகாந்த் கோவிலை காண மக்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

    அந்த வகையில் இன்று (மார்ச்-03) 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு சமபந்தி விருந்து (பிரியாணி) அளிக்கப்பட்டது. கடந்த ஏழு நாட்களாக தலைவாழை இலையில் காலை இட்லி வடை, பொங்கல் சட்னி, கேசரி, நண்பகல் சைவம் மற்றும் அசைவ உணவுகள், மாலை வெண்பொங்கல், கிச்சடி, சர்க்கரை பொங்கல் என மூன்று வேளையும் விஜயகாந்த் கோவிலுக்கு வருவோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    விஜயகாந்த் கோவிலை காண வரும் அனைவருக்கும் டேபிள் மற்றும் சேர் போட்டுக் சமபந்தி விருந்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    • தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசி வரும் நிலையில் தே.மு.தி.க. மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
    • பிரேமலதா தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு விரைவில் நியமிக்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

    எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்பது என்பது பற்றி மாவட்ட செயலாளர்கள் கருத்துக்களை கூறினார்கள். சிலர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் என்றும் ஒரு சிலர் பா.ஜ.க. உடன் இணைந்து தேர்தலில் போட்டியிடலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.

    ஆனாலும் அது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தே.மு.தி.க.வை அ.தி.மு.க.வும் பாரதீய ஜனதாவும் தங்கள் பக்கம் இழுக்க மறைமுகமான வேலைகளில் ஈடுபட்டனர். தங்கள் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மூலம் ரகசியமாக தே.மு.தி.க. தலைமை பொறுப்பாளரிடம் பேசி வருகின்றனர்.

    4 அல்லது 5 தொகுதிகள் வரை கூட்டணியில் ஒதுக்குவதாக பேசி வருகின்றனர். ஆனாலும் இது பற்றி தே.மு.தி.க. தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அ.தி.மு.க. அணியில் சேர்வதா? பா.ஜனதா அணியில் சேர்வதா? என்று முடிவெடுக்காமல் மதில் மேல் பூனையாக தே.மு.தி.க. இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசி வரும் நிலையில் தே.மு.தி.க. மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தே.மு.தி.க. எந்தவித சலசலப்பும் இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் இருப்பது ஏன் என்று அதன் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவரது விளக்கம் ஏற்புடையதாக இருந்தது. அவர் கூறியதாவது:-

    இந்த கட்சி ஒரு குடும்பத்தைப் போல கட்டி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 60 நாட்கள் கட்சியில் துக்க நாட்களாக பின்பற்றப்பட்டு வருவதால் தேர்தல் பணியில் இதுவரை ஈடுபடவில்லை.



    டிசம்பர் மாதம் 28-ந்தேதி விஜயகாந்த் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து 60 நாட்கள் கட்சியிலும் சரி குடும்பத்திலும் சரி எவ்வித முக்கிய காரியங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் துக்க நாட்கள் நாளையுடன் முடிகிறது.

    அதன் பின்னர்தான் தேர்தல் கூட்டணி, தொகுதிகள் பங்கீடு குறித்து பேசுவோம். வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் கட்சியின் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கப்படும் முதல் தேர்தல் என்பதால் யாருடன் கூட்டணி வைப்பது என்பதை முடிவு செய்வதோடு எத்தனை இடங்களில் போட்டி இடுவது என்பது பற்றியும் இறுதி செய்து எங்களது நிலைப்பாட்டிற்கு ஒத்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம். வெற்றி பெறுவோம். பாராளுமன்றத்தில் தே.மு.தி.க.வின் குரல் ஒலிக்கும். அது நிச்சயம் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜயகாந்த் மறைவு துக்க நாட்கள் அனுசரிப்பு நாளையுடன் முடிவதால் மார்ச் 1-ந்தேதி முதல் தேர்தல் பணிகளை தீவிரபடுத்த கட்சி தலைமை திட்டமிட்டு உள்ளது.

    பிரேமலதா தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு விரைவில் நியமிக்கப்படுகிறது. குழுவினரிடம் அ.தி.மு.க. பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். மேலும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிடம் விருப்ப மனுக்கள் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தேதியும் அறிவிக்கப்பட உள்ளன. மார்ச் முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் தே.மு.தி.க. அடுத்து வரும் சில நாட்களில் கூட்டணியை இறுதி செய்கிறது.

    • தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, ஒடிசா முன்னாள் கவர்னர் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
    • 2011ம் ஆண்டு சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் விஜயகாந்த் என்று புகழாரம் சூட்டினார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு இன்று தொடங்கியது.

    மறைந்த உறுப்பினர்கள் வடிவேலு, தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம், எஸ். ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

    தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, ஒடிசா முன்னாள் கவர்னர் ராஜேந்திரன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வெங்கட்ராமன், புகழ்பெற்ற கண் மருத்துவர் பத்ரிநாத் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    சட்டசபையில் தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    விஜயகாந்த் குறித்து சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், கேப்டன் என்று புகழ் பெற்றவர், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு பெற்றவர் விஜயகாந்த்.

    2006 முதல் 2016 வரை சட்டசபை உறுப்பினராக இருந்தவர் விஜயகாந்த். 2011ம் ஆண்டு சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் விஜயகாந்த் என்று புகழாரம் சூட்டினார்.

    தொடர்ந்து விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபை உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதையடுத்து 2வது நாளாக இன்று கூடிய சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது.

    • விஜயகாந்த் மீது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும் மிகுந்த பாசம் வைத்திருந்தனர்.
    • விஜயகாந்தின் எண்ணப்படியே பிரேமலதாவின் முயற்சியால் இந்த அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மரணமடைந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் தினமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    விஜயகாந்த் மீது அவரது கட்சியினரும் பொது மக்களும் வைத்திருக்கும் அளவு கடந்த பாசம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. விஜயகாந்த் மீது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும் மிகுந்த பாசம் வைத்திருந்தனர்.

    உடல் நலக்குறைவால் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வெடுத்து வந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜய காந்த்தை ஒரு தாய் போல இருந்து கவனித்துக் கொண்டார் என்றே கட்சியினர் அவரைப் பற்றி குறிப்பிடுவதுண்டு. விஜயகாந்தால் கடைசி காலத்தில் எந்த செயலையும் தனியாக செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.

    அப்போது அவருக்கு தோள் கொடுத்து துணையாக இருந்தது பிரேமலதாவும் அவரது குடும்பத்தினரும் தான்.

    விஜயகாந்த் உயிருடன் இருந்த போது அவருக்கு பணி விடைகள் செய்யும் வீடியோக்களையும் இதற்கு முன்பு பிரேமலதா வெளியிட்டுள்ளார். விஜய காந்த்துக்கு அவர் முடிவெட்டி டை அடித்து விடும் வீடியோ ஒன்று அவரது மரணத்திற்கு பிறகும் வைரலாக பரவியது. இப்படி விஜயகாந்தின் மீது வைத்திருந்த அன்பு, பாசம் காரணமாக அவரது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் தொடங்க இருப்பதாக பிரேமலதா அறிவித்து உள்ளார்.

    விஜயகாந்தின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் எண்ணப்படியே பிரேமலதாவின் முயற்சியால் இந்த அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பிரேம லதா தனது கணவர் விஜயகாந்தின் உருவத்தை வலது கையில் டாட்டுவாக வரைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    டாட்டூ கலைஞர் ஒருவர் பிரேமலதாவை அமர வைத்து அவரது வலது கையில் விஜயகாந்த் சிரித்த முகத்துடன் இருக்கும் உருவத்தை வரைந்துள்ளார். அதனை பிரேமலதா பார்த்து ரசிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

    இந்த வீடியோவை தே.மு.தி.க.வினரும் பொது மக்களும் தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார்கள் இதன் மூலமாக தனது கணவர் விஜயகாந்த் மீது பிரேமலதா வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு மீண்டும் வெளிப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் விஜயகாந்த் அண்மையில் காலமானார்.
    • இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகினார். இவர் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார்.


    இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் பல பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலர் தினந்தோறும் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகை ரம்பா மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    • நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    விஜயகாந்த் மரணம் அடைந்து ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் அவரது நினைவிடத்தில் தினமும் பொதுமக்களும் தே.மு.தி.க. தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விலை உயர்ந்த மாலைகளை வாங்கி வைத்து விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி அஞ்சலி செலுத்த வரும் பொது மக்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அதனை தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

    இதன் மூலம் விஜயகாந்த் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருவது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொடர்ச்சியாக பொதுமக்கள் நேரில் வந்து விஜயாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது எங்களுக்கு நெகழ்ச்சியாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.

    விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும் அதுதான் தற்போது வெளிப்பட்டு வருவதாகவும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×