search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய பிரபாகரன்"

    • நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமானார்
    • விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைந்த நிலையில் அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்

    நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமான சூழலில் அவரது சமாதிக்கு தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைந்த நிலையில் அவரது நினைவிடத்தில் மகன் சண்முக பாண்டியனுடன் சென்ற பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த ஏராளமான பொதுமக்களுக்கு பிரேமலதா அன்னதானம் வழங்கினார்.

    இந்நிலையில் இன்றைய தினம் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தன்னுடைய 31வது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தின் டீசர் இன்றைய தினம் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது.

    சண்முக பாண்டியன் இந்த ஆண்டில் தன்னுடைய அப்பாவை இழந்து முதல் முறையாக அவர் இல்லாமல் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனால் அவரது பிறந்தநாள் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் சண்முக பாண்டியன் பிறந்தநாளை சிறப்பாக்கும் வகையில் அவரது அண்ணன் விஜய பிரபாகரன் தம்பிக்கு காஸ்ட்லியான Porsche கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 9 மற்றும் 10-ந் தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், 11-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, 12-ந் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்.
    • 13-ந் தேதி கரூர், நாமக்கல், தேனி, 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மதுரை, தென்காசி, விருதுநகர், 17-ந் தேதி மாலை அவர் விருதுநகரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பிரேமலதாவின் தே.மு.தி.க. இடம்பெற்றுள்ளது. 5 பாராளுமன்றத் தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா 20 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.

    பிரேமலதாவின் சுற்றுப் பயண திட்டத்தை இன்று (புதன்கிழமை) காலை தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டது. பிரேமலதா எந்தெந்த தேதிகளில் எந்தெந்த ஊர்களில் பிரசாரம் செய்கிறார் என்ற விவரம் வருமாறு:-

    29-ந்தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, 30-ந்தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், 31-ந்தேதி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரம், 1-ந்தேதி பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி.

    2-ந் தேதி திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், 3 மற்றும் 4-ந் தேதி திருவள்ளூர் , காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 5 மற்றும் 6-ந் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, 7 மற்றும் 8-ந் தேதி கடலூர்.

    9 மற்றும் 10-ந் தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், 11-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, 12-ந் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்.

    13-ந் தேதி கரூர், நாமக்கல், தேனி, 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மதுரை, தென்காசி, விருதுநகர், 17-ந் தேதி மாலை அவர் விருதுநகரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

    பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். அவரை ஆதரித்து கடைசி 2 அல்லது 3 நாட்கள் மட்டும் பிரேமலதா பிரசாரம் செய்வார் என்று தெரிகிறது.

    • முதல் நாளான நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
    • அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல் நாளான நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். விருப்ப மனுவை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் விஜய பிரபாகரன் வழங்கினார்.

    முன்னதாக, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெற நாம் கடுமையாக உழைப்போம்.
    • வருகிற தேர்தலிலும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் களம் காண்போம்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எருமலைநாயக்கன் பட்டியில் நடந்த தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று விஜய பிரபாகரன் பேசியதாவது:-

    தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்து பணத்தை சுரண்டி வளமாக வாழ்ந்து வருகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெற நாம் கடுமையாக உழைப்போம்.

    பொருளாதார வசதி இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம். அமைச்சர் உதயநிதியின் தாத்தா முன்னாள் முதல்வர் கருணாநிதி பல முறை முதலமைச்சராக இருந்தவர்.


    உதயநிதியின் தந்தை ஸ்டாலின் முன்னாள் மேயர், தற்போதைய முதலமைச்சராக உள்ளார். அண்ணாமலைக்கு பா.ஜ.க. கட்சி உள்ளது. ஆனால் இது போன்ற எந்த பின்புலமும் இல்லாமல் விஜயகாந்த் மக்களை நம்பியே தேர்தலை சந்தித்தார். அதே போல் வருகிற தேர்தலிலும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் களம் காண்போம். நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். தயவு செய்து ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். நான் தேனி அல்லது விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு உள்ளது. தேனி தொகுதி கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். யார் போட்டியிடுவார் என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜய பிரபாகரன் மைக்கை எடுத்து பேசத் தொடங்கியதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியில் சிறிது நேரம் அருகில் இருந்த நிர்வாகிகளிடம் இந்த நேரத்தில் மின் தடை ஏற்படுமா எனக் கேட்டார். மின் தடை ஏற்படாது என்று தொண்டர்கள் தெரிவித்தனர். நான் பேச ஆரம்பிக்கும் நேரத்தை அறிந்து மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இது போன்ற பல இடையூறுகள் ஏற்படுத்தினாலும் நாம் சோர்ந்து விடக்கூடாது என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

    • விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம்
    • திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

    தேமுதிகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், விஜயகாந்தின் மனைவியும் தேமுதிகவின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய பிரபாகரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் விருப்பங்களை தெரிவித்தனர். பின்னர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

    • நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.
    • இவர் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். இந்த கூட்டணியின் மூலம் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்-இல் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான 50 சென்ட் கலந்து கொள்கிறார்.


    விஜய பிரபாகரன்

    சர்வதேச அளவில் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன். தன்னிகரற்ற பாடல் வரிகளை எழுதுவதில் புகழ்பெற்ற 50 சென்ட், முதன் முதலில் வெளியிட்ட "Get Rich or Die Tryin" பட்டித்தொட்டி எங்கும் சென்றடைந்து. இந்த ஆல்பம் இவரது புகழை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்தது. இந்த ஆல்பத்தில் உள்ள "In da club", "p.i.m.p" மற்றும் "candy shop" போன்ற பாடல்கள் ரசிகர்களை இன்றும் கவர்ந்து வருகிறது.

    இவரது உலகளாவிய இசைக்கச்சேரி "The Final Lap Tour 2023" இந்தியாவில் நவம்பர் 25 -ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நடைபெற உள்ளது. இதனை விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் வி.ஜெ.பி. (VJP) மற்றும் டராக்டிகல் (Tracktical) கான்சர்ட்ஸ் என்ற இரு முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைந்து 50 சென்ட்-இன் வரலாறு, பிரபல பாடல்கள் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாடல்கள் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    இந்த நிகழ்ச்சி குறித்து விஜய பிரபாகரன் கூறும்போது, திரை மற்றும் கலை உலகில் எனது தந்தை விஜயகாந்திற்கு ஒரு தனி அடையாளம் உள்ளது. அதை முன் எடுத்துச் செல்லும் வழியில் எனது இந்த முயற்சி புதிதாகவும், கலை துறையில் ஒரு மாறுபட்ட தொடக்கமாக இருக்கும் என்று கூறினார்.

    • திராவிட மாடல் ஆட்சி அறிக்கை வடிவில் மட்டுமே உள்ளது.
    • அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் உட்பட விவகாரங்களில் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது.

    குழித்துறை:

    மார்த்தாண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகருக்கு மார்த்தாண்டம், தக்கலை, ஞாறாம்விளை, திக்குறிச்சி உட்பட பல பகுதிகளில் தே.மு.தி.க.வினர் வரவேற்பு அளித்தனர். அப்போது விஜய் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சி அறிக்கை வடிவில் மட்டுமே உள்ளது. அது செயல் பாட்டில் வந்தால் வர வேற்கலாம். அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் உட்பட விவகாரங்களில் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது. குற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்த் உடல் நிலை நன்றாக இருக்கிறது. குமரி மாவட்டம் உட்பட அண்டை மாவட்டங்களில் இருந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கனிமவள கடத்தல் நடைபெற்ற போது வழக்கு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியவர்கள் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கனிமவள கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்த வரை கட்சியும் ஆரோக்கியத்துடன் காணப்பட்டது.
    • நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிக மோசமான தோல்வியை தழுவியது.

    சென்னை:

    தமிழக அரசியல் களத்தில் விஜயகாந்தின் வருகையும் தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சியும் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் நடந்தது நேர்மாறாக அமைந்துவிட்டது.

    திரை உலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்த விஜயகாந்த் அரசியலிலும் கருப்பு எம்.ஜி.ஆர். என்ற அறிமுகத்தோடு வந்தார்.

    2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை அவர் தொடங்கியதும் அவர் அறிவித்த திட்டங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. மாற்று அரசியலுக்கான துவக்கமாகவே மக்கள் எதிர்பார்த்தார்கள்.

    2006-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார்கள். விருதாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.

    அதேநேரம் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உருவானது. 2009 பாராளுமன்ற தேர்தலிலும் அனைத்து தொகுதியிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. ஆனால் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

    அரசியல் களத்தை உணர்ந்த விஜயகாந்த் 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால் அ.தி.மு.க.வுடன் அமைக்கப்பட்ட கூட்டணி நீடிக்கவில்லை.

    அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வென்றது.

    அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைமையில் மக்கள் நல கூட்டணி உருவானது. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனாலும் அந்த கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார்கள். அதுவும் கைகொடுக்கவில்லை.

    இதற்கிடையில் விஜயகாந்தின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. சரியாக பேச முடியவில்லை. எழுந்து நிற்கவும் சிரமப்பட்டார். வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் எதிர்பார்த்த பலன் இல்லாமல் போனது.

    அதைதொடர்ந்து கட்சியில் பொருளாளராக இருக்கும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியை வழிநடத்தினார். அவரது மகன் விஜயபிரபாகரனும் கட்சி பணியில் இறங்கினார்.

    நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிக மோசமான தோல்வியை தழுவியது. சுமார் ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றது. விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்த வரை கட்சியும் ஆரோக்கியத்துடன் காணப்பட்டது.

    மீண்டும் கட்சியை வலிமைப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள்.

    பிரேமலதாவை கட்சியின் செயல் தலைவராகவும், விஜயபிரபாகரனுக்கு இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பு வழங்கியும் கட்சியை முன்னெடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்துகிறார்கள். விரைவில் கூட்டப்பட இருக்கும் பொதுக்குழுவில் இதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

    தே.மு.தி.க. பா.ஜனதா கூட்டணியில் இருந்து இதுவரை வெளியேறவில்லை. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியா? தி.மு.க. கூட்டணியா? என்று யோசித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்கோளாறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார்.
    • விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.

    அந்த வகையில் தே.மு.தி.க.வும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய தே.மு.தி.க. தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது.

    தேர்தல் களத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வரும் தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கேற்ப முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்துக்கான தேதி பொங்கலுக்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதியை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அடுத்த வாரம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள் இப்போதே மேற்கொண்டு வருகிறார்கள்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்கோளாறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார். தற்போது பொருளாளராக பதவி வகித்து வரும் பிரேமலதாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதையொட்டி தே.மு.தி.க.வில் செயல் தலைவர் பதவி என்கிற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதில் பிரேமலதா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறார். அவரை இளைய கேப்டன் என கட்சியினர் அழைத்து வருகிறார்கள். தே.மு.தி.க.வில் இளைஞர் அணியில் விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவியை வழங்குவது பற்றியும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் எந்த மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த கட்சி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • தே.மு.தி.க.வினரின் இல்ல நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் விஜயபிரபாகரன் நேரில் செல்ல தயக்கம் காட்டுவதே இல்லை.
    • தே.மு.தி.க. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் எழுச்சி என்பது கேள்வி குறியாகவே உள்ளது என அரசியல் நிபுணர்கள் கணித்து வருகிறார்கள்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சி தொடர்பான கூட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார். கட்சியில் பிரேமலதாவுக்கு முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    அதே நேரத்தில் விஜயபிரபாகரனையும் அவர்கள் மறந்து விடவில்லை. இளைஞர் அணியை வழிநடத்தி செல்லும் பொறுப்பை விஜயபிரபாகரனிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப இளைஞர் அணியில் மாநில தலைமை பொறுப்பை அவரிடமே வழங்க வேண்டும் என்றும் தே.மு.தி.க.வினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். விரைவில் நடைபெற உள்ள தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது ஒரு புறம் இருக்க... விஜயபிரபாகரனோ... கட்சி பொறுப்புகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடமையே கண்ணாக பணியாற்றி வருகிறார். தே.மு.தி.க.வினரின் இல்ல நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் விஜயபிரபாகரன் நேரில் செல்ல தயக்கம் காட்டுவதே இல்லை. காது குத்து முதல் கல்யாணம் வரை வரிசை கட்டி நிற்கும் எல்லா நிகழ்ச்சிகளிலுமே விஜயபிரபாகரன் தவறாமல் ஆஜராகி விடுகிறார்.

    கட்சியினர் மனம் மகிழும் வகையில் நடந்து கொள்ளும் அவர் அந்த நிகழ்ச்சிகளில் பேசும்போது, இது நமது குடும்ப விழா. நீங்கள் எல்லாம் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்பதை தவறாமல் சுட்டிக்காட்டிட மறப்பது இல்லை. இது கட்சியினர் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் விஜயபிரபாகரனை இளைய கேப்டன் என்றும், எழுச்சி நாயகன் என்றும் தே.மு.தி.க.வினர் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

    எதிர்காலத்தில் தே.மு.தி.க.வை வழி நடத்தி செல்லும் அத்தனை தகுதிகளும் விஜயபிரபாகரனிடம் உள்ளன என்றும், எனவே நிச்சயம் அரசியலில் நாங்கள் குறிப்பிடுவது போல எழுச்சி நாயகனாகவே அவர் ஒருநாள் மாறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    தே.மு.தி.க. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் எழுச்சி என்பது கேள்வி குறியாகவே உள்ளது என அரசியல் நிபுணர்கள் கணித்து வருகிறார்கள். ஆனால் தே.மு.தி.க.வினரோ இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதில் இருந்தும் மீண்டு வருவோம். இதற்கான அடித்தளம்தான் விஜயபிரபாகரனின் இந்த "வீட்டு சுற்றுப்பயணம்" என்றும் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

    ×