என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குடும்பத்தினருக்கு பதவி- தே.மு.தி.க.வில் 'திடீர்' உள்கட்சி மோதல்- கட்சியில் இருந்து விலகப் போவதாக நிர்வாகி கடிதம்
- மாநில அளவில் துணைச்செயலாளர் பதவிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- அனகை முருகேசன் விஜயகாந்த் மன்றத்தை தொடங்கிய காலத்தில் இருந்து அவரோடு பயணித்து வந்தவர் ஆவார்.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் தே.மு.தி.க. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து தே.மு.தி.க.வில் புதிய நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளரான பிரேமலதா நியமித்துள்ளார்.
மீண்டும் பொதுச்செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பொருளாளராக எல்.கே. சுதீஷ், செயலாளராக பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளராக விஜய காந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாநில அளவில் துணைச்செயலாளர் பதவிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், இந்த புதிய பதவிகள் நியமனத்தால் இரண்டு தே.மு.தி.க. முன்னாள் எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது.
தே.மு.தி.க. செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக இருந்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன் விஜயகாந்த் மன்றத்தை தொடங்கிய காலத்தில் இருந்து அவரோடு பயணித்து வந்தவர் ஆவார்.
விஜயகாந்த் தே.மு.தி.க. தலைவராக இருந்தபோது பொருளாளர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
இந்த நிலையில் மாவட்ட செயலாளராக இருந்து வரும் அவருக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் பொறுப்பு வகித்து வந்த அவர் இந்த முறை மீண்டும் அதுபோன்ற ஒரு பதவி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அதுபோன்ற பதவி எதுவும் வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக அனகை முருகேசன் கட்சியிலிருந்து விலகி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இது பற்றி அனகை முருகேசனை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:-
கேப்டன் மன்றம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே நான் பணியாற்றி வருகிறேன். 43 ஆண்டுகளுக்கும் மேலாக மன்றம் மற்றும் தே.மு.தி.க. பணிகளில் ஈடுபட்டு கட்சிக்காக விசுவாசத்தோடு செயல்பட்டு வருகிறேன். விஜயகாந்த் தலைவராக இருந்த போது பொருளாளராகவும் தலைமை நிலைய செயலாளராகவும் இருந்திருக்கிறேன்.
தற்போது மாநில அளவில் பொறுப்புகளில் இருப்பவர்கள் என்னைவிட இளையவர்கள்தான்.
மாநில அளவில் பொறுப்பு கிடைக்காததில் எனக்கு சிறிய மனம் வருத்தம் உள்ளது. என்னுடன் பயணிக்கும் தே.மு.தி.க.வினருக்கும் அந்த வருத்தம் உள்ளது.
இதற்கெல்லாம் கட்சி வேண்டாம் என்று வெளியில் செல்வதற்கு நான் தயாராக இல்லை. தே.மு.தி.க.விலேயே தொடர்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான நல்ல தம்பியும் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர் வகித்து வந்த இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நல்ல தம்பிக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பதவியை நல்ல தம்பி ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதாவுக்கு நல்ல தம்பி பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
தர்மபுரியில் நடந்த பொதுக்குழுவில் நாமெல்லாம் நீண்ட நாள் எதிர்பார்த்த கேப்டனின் மறுஉருவமும் கேப்டனின் நிழலாகவும் இருக்கின்ற அன்புதம்பி விஜயபிரபாகரனை கழக இளைஞரணி செயலாளராக அறிவித்தமைக்கு என்னுடைய உளமாற வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தம்பியின் குரல் தமிழக சட்டசபையில் கழக தலைவர் கேப்டனின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழ்த்தி மகிழ்கிறேன்.
எனவே எங்களின் காவல் தெய்வம் அண்ணியின் கவனத்திற்கு அறிந்தோ அறியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்தில் இருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை, என்றைக்கும் நான் கழகத்தின் கடைக்கோடித் தொண்டன் எனபதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும்.
நீங்கள் வெளியிட்ட அறிவிப்பில் எனக்கு கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி விடுவிக்காதபட்சத் தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் எந்தவித மனவருத்தத்திலும் கூறவில்லை. மன மகிழ்ச்சியோடுதான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நல்லதம்பி கூறியுள்ளார்.
தே.மு.தி.க.வில் 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தே.மு.தி.க.வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தே.மு.தி.க.வில் இருந்து ஏற்கனவே பலர் விலகி மாற்று கட்சிகளில் சேர்ந்துள்ள நிலையில் 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.