search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flag hoisting"

    • பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நாளை காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.

    சென்னை:

    சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கான சித்திரைமாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாளில் தர்மாதி பீடத்தில் அருள்பாலிப்பதுடன், புன்னைமர வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷ வாகன வீதி உலா மற்றும் சிம்ம வாகன வீதி உலாவும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.

    வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூரிய பிரபை, சந்திர பிரபை, தொடர்ந்து வருகிற 27-ந்தேதி நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு சேவையும் நடைபெறுகிறது. 6-ம் நாள் திருவிழாவான வருகிற 28-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை 7 மணி அளவில் தேரோட்டம் வடம் பிடிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
    • பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றமும் நடந்தது.

    திருமலை:

    திருப்பதி மாவட்டம் சந்திரகிரி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணமும், நேற்று காலை 9.05 மணியில் இருந்து 10 மணி வரை விருஷப லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றமும் நடந்தது.

    அதைத்தொடர்ந்து ராமநவமியான நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை உற்சவர் கோதண்டராமர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் சீனிவாசலு, கோவில் ஆய்வாளர் ஹரிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 25-ந்தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது.

    திருவையாறு:

    திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இதில் தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    தேரோட்டம்

    விழாவில் வருகிற 18-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெறுகிறது. அன்று 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.

    22-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர்வீதி உலா வருகிறது. அப்போது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்படுகிறது.

    விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேர் நான்கு வீதி வந்து நிலையடி வந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    சப்தஸ்தான பெருவிழா

    விழாவில் 25-ந்தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது.

    பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி

    26-ந்தேதி தில்லைஸ்தானம் பல்லக்குகளுடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.

    விழா ஏற்பாடுகளை 27-வது தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) சூரிய, சந்திர மண்டல காட்சிகளும் 16-ந்தேதி அதிகார நந்தி, கிளிவாகன காட்சிகள், அன்னவாகன காட்சிகள் நடக்கிறது. 17-ந்தேதி கைலாச வாகன புஸ்ப விமானம் நிகழ்ச்சி நடக்கிறது.

    18-ந்தேதி இரவு 10 மணிக்கு மேல் கரிவரதராஜ பெருமாள் கோவில் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 63 நாயன்மார்கள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    19-ந்தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம், வெள்ள யானை வாகன காட்சி நடைபெற உள்ளது. 20-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 21-ந்தேதி சிறிது தொலைவு தேர் இழுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது.

    மீண்டும் 22-ந்தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்க்கப்படுகிறது. 23-ந்தேதி அம்மன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரோட்டம் நடைபெறுவதற்காக பெரிய தேர் மற்றும் சிறிய தேர்கள் அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.
    • சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மதுரை:

    தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வருடத்தின் 12 மாதங்களும் மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை மாதத்தில் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனைத்தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடக்கும்.

    மதுரையில் சைவமும், வைணவமும் இணையும் வகையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் லட்சக்கணக் கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (12-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக இன்று அதி காலை கோவில் நடை திறக் கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி சன்னதி முன் புள்ள தங்க கொடிமரம் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

     காலை 9.30 மணியளவில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்ம னும் கொடி மரம் முன்பு எழுந்தருளினர். அதனைதொடர்ந்து 9.55 மணி முதல் 10.19 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி-அம்பாள் முன்னிலையில் சித்திரை திருவிழா கொடி யேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் சிவ...சிவ.. கோஷமிட்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

    சித்திரை திருவிழா இன்று தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று இரவு கற்பக விருட்சக வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரே சுவரர் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும் 4 மாசி வீதிகளில் உலா வருகின்றனர்.

    2-ம் நாள் (13-ந்தேதி) திருவிழாவில் காலையில் சுவாமி-அம்பாள் தங்க சப்பரத்திலும், இரவு பூதம்-அன்னம் வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    14-ந் தேதி காலையில் 4 சப்பர வாகனங்களிலும், இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலிக்கின்றனர்.

    4-ம் நாள் திருவிழாவான 15-ந் தேதியன்று காலை 9 மணிக்கு தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி சின்னக்கடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். பின்னர் மாலை 6 மணிக்கு அங்கிருந்து சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்புகிறார்கள்.

    16-ந்தேதி காலையில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாய ணச்சாவடி, நவநீத கிருஷ்ணசுவாமி தேவஸ்தான மண்டகப்ப டியில் எழுந்தரு ளுகிறார்கள். இரவு 7 மணிக்கு அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப் பாடாகி கோவிலுக்கு சுவாமி-அம்பாள் திரும்பு கிறார்கள்.

    6-ம் நாள் (17-ந் தேதி) திருவிழாவில் காலையில் தங்க சப்பரத்திலும், இரவு தங்க ரிஷபம்-வெள்ளி ரிஷபம் வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 18-ந் தேதி காலை தங்கசப்பரத்தி லும், இரவு நந்திகேசு வரர்-யாளி வாகனத்திலும் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    விழாவில் 8-ம்நாளான 19-ந் தேதியன்று காலையில் தங்கப்பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. அன்று இரவு 7.35 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபி ஷேகம் நடைபெறும்.

    கோவில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கீரிடம் சாற்றி, செங்கோல் வழங்கி மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடக்கும். அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) வீதி உலா நடக்கும்.

    20-ந்தேதி காலை மர வர்ண சப்பரத்திலும் வீதி உலா நடக்கிறது. அன்று மாலை மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வந்து அஷ்டதிக்கு பாலகர்களை போரிட்டு வெற்றி கொள்ளும் வகையில் திக்கு விஜயம் நடக்கிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரே சுவரர் திருக்கல்யாணம் மறுநாள் (21-ந் தேதி) விமரி சையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக் கோலத் தில் சுவாமி-அம்பாள் யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.

    22-ந்தேதி காலை திருத்தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    சித்திரை திருவிழாவின் நடைபெறும் நாட்களில் தினமும் இரவு சுவாமி-அம்பாள் 4 மாசி வீதிகளில் உலா வருகிறார்கள். அப் போது சாலையின் இருபுற மும் பல்லாயிரக் கணக்கா னோர் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய் வார்கள். இதன் காரணமாக மாசி வீதிகள் மக்கள் வெள் ளத்தில் தத்தளிக்கும்.

    மீனாட்சி அம்மன்சித் திரை திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டும்போது பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. 21-ந் தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    22-ந்தேதி புதூரில் எதிர் சேவையும், 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடக்கிறது. சித்திரை திருவிழா தொடங்கியதையடுத்து மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    • கோவில் கருவறையில் பூஜையில் வைக்கப்படுகிறது.

    திருவட்டார்:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதனையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கொடிமரத்தில் ஏற்றுவதற்குரிய கொடிக்கயிறு ஆற்றூர் பள்ளிகொண்ட பள்ளிக்குழிவிளை தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. தொடர்ந்து மாலை தீபாராதனைக்கு முன்னதாக கோவில் கருவறையில் பூஜையில் வைக்கப்படுகிறது.

    பின்னர் நாளை அதிகாலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, காலை 8.45 மணி முதல் 9.30 மணிக்குள் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் விழா நாட்களில் தினமும் சுவாமி வாகனத்தில் பவனி வருதலும், விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    16-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 20-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் இறுதி நாளான 21-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆராட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்காக கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக சுவாமி ஊர்வலமாகச் சென்று ஆராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து சுவாமி மீண்டும் கோவிலுக்கு புறப்படுகிறார். நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம்:

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 3.15 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கொடிப்படம் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன் காலை 5.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நம்பெருமாள் காலை 6.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

    11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள், தாயார் சன்னதியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • ஆண்டாள் கோவில் 108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.
    • ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந் துள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திரத்தன்று நடக்கும் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

    பங்குனி உத்திர நாளன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரத்தில் ஆண்டாள் ரெங்க மன்னார் சன்னதியில் வீற்றியிருந்தனர். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு ரிஷப லக்னத்தில் கொடியேற்று விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் சுதர்சனம் பட்டர் கொடியேற்றி கொடிமரத்திற்கு அபிஷேகம் கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜைகளை நடத்தி வைத்தார்.

    தொடர்ந்து பூஜையை உடனிருந்து செய்த ரங்கராஜ் என்ற ரமேஷ் பட்டர், சுதர் சன பட்டர், ஐகிரி வாசன் பட்டர், கோபி பட்டர், முத்து பட்டர் சிறப்பாக பூஜைகள் செய்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள், ரெங்க மன்னாரை தரிசித்தனர்.

    இதனைத் தொடர்ந்து வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் கோவில் முன்பு உள்ள பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் நடைபெறுகிறது .

    திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு ஆண்டாளும் ரெங்கமன்னாரும் காலை மற்றும் இரவு வேலைகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது.
    • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகவும், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாகவும் அமைந்த சுவாமி நெல்லையப்பர் கோவில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது.

    இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று பங்குனி மாதம் பிறந்ததை யொட்டி அதன் ஒரு நிகழ்வாக இன்று பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. அங்கு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதையொட்டி அதி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடிப்பட்டம் வீதிஉலா நடைபெற்றது. கொடிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டதும் சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடா்ந்து கொடி மரத்துக்கு மாப்பொடி, மஞ்சள் வாசனைபொடி, பால், தயிர், இளநீா், அன்னம், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    விழாவில் திரளாக பக்தா்கள் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4-ம் திருநாளன்று ஆலயம் உருவான வரலாற்றுத் திருவிளையாடல் மற்றும் அன்று இரவு சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா வும், 10-ம் திருநாள் அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழாவும் நடைபெறும்.

    • 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • கருட வாகன வீதிஉலா மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று அதிகாலை மூலவரை துயிலெழுப்பி சுப்ரபாதம், கொலு, பஞ்சாங்க சிரவணம், மாலை அங்குரார்ப்பணம் நடந்தது.

    மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புண்யாஹவச்சனம், மிருதங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்ததும், சிறப்புப்பூஜைகள் செய்து புற்று மண் எடுத்து வந்து முளைப்பாரிக்காக விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளர் செங்கல்ராயுலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8.40 மணியில் இருந்து 9 மணிக்குள் மீன லக்னத்தில் பாரம்பரிய முறைப்படி பிரம்மோற்சவ விழா `கருட' கொடியேற்றம் நடக்கிறது.

    முன்னதாக இன்று காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது. வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், மீண்டும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் நடக்கிறது.

    வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழாவின் `சிகர' நிகழ்ச்சியாக கருடவாகன வீதிஉலா (கருட சேவை) மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

     விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்காக கோவில் புஷ்கரணி சுத்தம் செய்து தூய புனிதநீர் நிரப்பப்பட்டுள்ளது.

    • மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெருந்திருவிழா கொண்டாடப்படும்.
    • கொடி மரத்தில் கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    தென்காசி:

    தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டிற்கான மாசி மக பெருவிழா இன்று காலை சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

     முன்னதாக அதிகாலை கோவிலின் நடை திறக்கப்பட்டு கொடிப்பட்டம் ரத வீதி உலாவும், பின்னர் கொடி மரத்திற்கு 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு, வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது.

    விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நாளான வருகிற 21-ந்தேதி நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும், 28-ந் தேதி நடராஜருக்கு பச்சை சாத்தி ரத வீதி உலாவும் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நாளான வருகிற 23-ந்தேதி அன்று சுவாமி-அம்பாள் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்துள்ளனர்.

    • மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 4.52 மணிக்கு கோவில் செப்பு கொடி மரத்தில் மாசித்திரு விழா கொடியேற்றம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஓம் முருகா சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

     தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடை பெற்றது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

     நிகழ்ச்சியில் திருவாவடு துறை ஆதீனம் வேலப்ப தம்பி ரான் சுவாமிகள், இணை ஆணையர் கார்த்திக், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசு ராஜா, இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், சார்பு நீதிபதி வஷித்குமார்,ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் தக்கார் கருத்துப்பாண்டி நாடார், நகராட்சி துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், சைவ வேளாளர் ஐக்கிய சங்க முன்னாள் தலைவர் ஜெயந்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் முக்கிய விழாவான 5-ம் திருவிழாவான 18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவரு வாயில் தீபாராதனை நடக்கிறது.

    7-ம் திருநாளான 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை யும் நடக்கிறது. 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

    மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருநாளான 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    11-ம் திருநாளான 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    ×