search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edappadi Palaniswami"

    • ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடகச் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
    • ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிடவும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவந்த விடியா திமுக அரசு, தொடர்ந்து நாங்கள் ஏழை, எளிய, தொழிலாளர்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்றும், எங்கள் ஆட்சியில் வழங்கியதைப் போன்று தரமான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில், இன்று சென்னை ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடகச் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

    இந்தியாவில் உள்ள மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்திற்கு வருகை தந்து அம்மா உணவகங்கள் இயங்குவதையும், தங்களது மாநிலங்களிலும், நாடுகளிலும் உடனடியாக அம்மா உணவகங்களை திறப்போம் என்று சொல்லி வரும் நிலையில், வெளி நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கும் விடியா திமுக முதலமைச்சர்

    மு.க.ஸ்டாலின் உடனடியாக ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிடவும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 2021-ம் ஆண்டு பெய்த பருவ மழைக்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது.
    • சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் மீது, தனியார் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் தி.மு.க. அரசு, தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் வழக்குப்பதிவு செய்து உள்ளது.

    தி.மு.க. அரசின் அமைச்சர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஊழல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், 2021 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அடித்த அந்தர் பல்டியைப் பார்த்த சென்னை உயர்நீதிமன்றமே, தன்னிச்சையாக இவ்வழக்குகளை மீண்டும் விசாரித்து வருவதில் இருந்தே, முதலமைச்சரின் ஏவல் துறை எப்படி செயல்பட்டு வருகிறது என்பதைத் தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

    எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    மழைநீர் சேகரிப்பின் காரணமாக சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததை சென்னை மாநகர மக்கள் நன்கு அறிவார்கள். அனைத்து மழைநீர் வடிகால் கால்வாய்களும் பருவ மழைக்கு முன்பே தூர் வாரப்பட்டதன் காரணமாகவும், சென்னை சாலைகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு அமைக்கப்பட்டதன் காரணமாகவும், கன மழையின்போது சென்னை சாலைகளில் மழைநீர் தேங்குவது பெரிய அளவு குறைந்தது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 2021-ம் ஆண்டு பெய்த பருவ மழைக்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது. விரைவில் பருவ மழையை சென்னை மாநகரம் எதிர் கொள்ள உள்ளது. கடந்த 40 மாத கால தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் பணிகள், தூர் வாருதல் பணிகள் மற்றும் சாலைகளை சீரமைத்தல் பணிகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டதாகக் கூறும் தங்களது வேஷம் கலைந்துவிடுமோ என்றும், தி.மு.க. ஆட்சியின் மீது கூறப்படும் 4 ஆயிரம் கோடி ரூபாய் பற்றிய புகார்கள் மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் பேசப்படுமோ! தங்களின் ஊழல்கள் அம்பலப்பட்டு விடுமோ! என்ற பயம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.

    "மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப் பதிவு கட்டண உயர்வு உள்ளிட்ட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு, உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் கடுமையான விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய பெருமை" என்று தி.மு.க. அரசின் மீது கோபத்தின் உச்சியில் இருக்கும் தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப, தனது கண் அசைவுக்கு தாளம் போடும் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி விட்டிருக்கிறார் தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஸ்டாலின். இது போன்ற தகிடுதத்தங்களால் அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வை முடக்கிவிடலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.

    தி.மு.க. ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள் தான். நாட்கள் எண்ணப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.
    • பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.

    சென்னை

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் பகுதியில், மொத்தம் உள்ள 6 வார்டுகளில், 65, 66, 69, 70 ஆகிய வார்டுகளில் கழகத்தைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியாற்றி வரும் நிலையில், பொதுமக்களிடையே கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் எவ்விதப் பணிகளையும் செய்து தராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசும், மாநகராட்சி நிர்வாகமும் அலைக்கழித்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    கழக ஆட்சியில், மாடம்பாக்கம் மற்றும் சிட்லபாக்கம் பேரூராட்சிகளாக இருந்தபோது, குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாடம்பாக்கம் ஏரியில் பெரிய கிணறுகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மாடம்பாக்கம்-சிட்லபாக்கம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மக்கள் பயன்பெற்று வந்தனர்.

    மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, தி.மு.க. ஆட்சியில் கடந்த ஒரு வருட காலமாக குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.

    மாடம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட சாலைகளில் இரவு நேரத்தில் எண்ணற்ற மாடுகளும், தெரு நாய்களும் சுற்றித் திரிவதால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    மக்கள் நலன் கருதி, மாடம்பாக்கம் பகுதியில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடைத் திட்டத்தைக் கொண்டுவந்து செயல்படுத்திட வேண்டும்.

    மாடம்பாக்கம் உள்ளிட்ட தாம்பரம் மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தராமல், அவசர கதியில் புதிய மாநகராட்சி உருவாக்கப்பட்டுவிட்டதாக அறிவித்துவிட்டு, அனைத்து விதமான வரிகளையும் பல மடங்கு உயர்த்தி உள்ளதோடு, குடிநீர் இணைப்பே இல்லாத வீடுகளுக்கும் குடிநீர் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

    கழக ஆட்சிக் காலத்தில் மாடம்பாக்கம் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டித் தரப்பட்டது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் எவ்வித பராமரிப்பும் இல்லாத காரணத்தால் வகுப்பறைகள் பாழ்பட்டுள்ளதோடு, மழைக் காலத்தில் மாணவ, மாணவியர் வகுப்பறைகளுக்கு உள்ளே செல்ல முடியாத அளவிற்கு இருப்பதாகத் தெரிவித்து, இப்பள்ளியில் அனைத்துவித பழுதுகளையும் உடனடியாக சரிசெய்து, கூடுதலாக புதிய வகுப்பறைகளைக் கட்டித் தர வேண்டும் என அப்பகுதிவாழ் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

    தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்வதற்கு சிறிதும் அக்கறை இல்லாமல், மக்களை பெருந்துயரத்திற்கு ஆளாக்கி உள்ள தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் பகுதியில், கழகத்தைச் சேர்ந்தவர்கள் மாமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 65, 66, 69, 70 ஆகிய வார்டுகளில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றித் தராத தி.மு.க. அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மாடம்பாக்கம் பகுதிக் கழகத்தின் சார்பில், 26.9.2024 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், அண்ணாநகர்-மாடம்பாக்கம் பிரதான சாலையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சின்னையா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்ட விடியா திமுக அரசு.
    • லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    சென்னை:

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,

    "ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய்" என்ற ரீதியில், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்ட விடியா திமுக அரசு, அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    "தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்" என்றும் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தொகுப்பில் 20000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இத்தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • 35 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது.
    • தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டை அடித்து இழிவுபடுத்துவது என இலங்கை அரசின் எதேச்சதிகாரப் போக்கு கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசு தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், இலங்கை நீதிமன்றம் அவர்களுக்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழை எளிய மீனவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதும், அதீத தண்டனைகளை விதிப்பதும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டை அடித்து இழிவுபடுத்துவது என இலங்கை அரசின் தொடர்ச்சியான எதேச்சதிகாரப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    தேர்தல் மேடைகளில் வெறும் வாக்குகளுக்காக மட்டும் கச்சத்தீவு பற்றியெல்லாம் பேசும் மத்திய பாஜக கூட்டணி அரசும், மாநில விடியா திமுக அரசும் இலங்கையின் இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும், மாநிலத்தில் ஆட்சியும், மத்தியில் 40 எம்.பி.க்களைக் கொடுத்தும், தமிழ்நாட்டின் மீனவர்கள் நலன் குறித்து விடியா திமுக அரசு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் மீனவர்களுக்கு இவர்கள் இருவரும் இழைக்கும் வரலாற்றுத் துரோகம் கடும் கண்டனத்திற்குரியது.

    உடனடியாக இலங்கை அரசிடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது போடப்பட்டுள்ள அபாண்டமான அபராதம் மற்றும் தண்டனைகளை ரத்து செய்வதுடன், மீனவர்களையும் அவர்தம் உடைமைகளையும் உடனே விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக கும்பகோணம் ரதிமீனா பி.எஸ்.சேகர் நியமனம்.
    • அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக அரியலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ப.இளவழகன் நியமனம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் (சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.) அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கழக புரட்சித் தலைவி பேரவை இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக கும்பகோணம் ரதிமீனா பி.எஸ்.சேகர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக அரியலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ப.இளவழகன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • முகமது நபிகள் பிறந்த நாளை முஸ்லிம்கள் மிலாது நபியாக கொண்டாடுகிறார்கள்.
    • மிலாது நபிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    முகமது நபிகள் பிறந்த நாளை முஸ்லிம்கள் மிலாது நபியாக கொண்டாடுகிறார்கள். நாளை மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நன்நாளாம் ''மீலாது நபி'' திருநாளில், உலகெங்கும் வாழும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், ''உண்மையைப் பேசுதல்; தூய எண்ணத்தோடு வாழ்தல்; ஏழை, எளியோருக்கு உதவிபுரிதல்; அனைவரிடத்திலும் அன்புடனும், நற்பண்புடனும் பழகுதல்; புகழையும், அறத்தையும் தராத செயல்களை செய்யாதிருத்தல்'' என்பது இறைத்தூதர் நபிகள் நாயகம் உலகிற்கு நல்கிய போதனைகள் ஆகும்.

    நபிகள் நாயகம் பிறந்தநாளன்று, அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக் கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த ''மீலாது நபி'' நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேலும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்று அழைக்கிறார்கள்.
    • அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்; அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும்.

    சென்னை:

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். ஓணம் பண்டிகை நாளை (செப்.15) கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில்,

    அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்; அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்தத் திருஓணத் திருநாளில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், அனைவருக்கும் எனது இதயங்கனிந்த "ஓணம்" திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தவர் மைத்ரேயன்.
    • மைத்ரேயன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் இணைந்தார்.

    பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த மைத்ரேயன், மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

    இது தொடர்பாக அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (12.9.2024 வியாழக் கிழமை), நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.

    அதனை, கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிசாமி அவர்கள் பரிசீலனை செய்து, டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாங்கள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் இழக்க விரும்பவில்லை.
    • அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.வின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தஞ்சையில் அவருக்கு நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இருக்கிற அ.தி.மு.க. தொண்டர்களில் 100 சதவீதத்தில் 99.9 சதவீதம் பேர் அ.தி.மு.க. இணைய வேண்டும். 2026-ல் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆட்சி கொண்டுவர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அந்த எண்ணத்தை நிச்சயமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 2026-ல் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி ஏற்படும்.

    நாங்கள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் இழக்க விரும்பவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் அவர்களாக வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். அதாவது ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என்பது இணையும்போது ஒரு முடிவுக்கு வரும். அடுத்த ஆண்டு (2025) டிசம்பர் மாதத்திற்குள் ஒரு நல்ல முடிவு ஏற்படும்.

    பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் செயல்பாடுகள், சட்டமன்ற தேர்தலில் அவர்களின் செயல்பாடுகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை அழித்து விடுவார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். உண்மையும் அதுதான். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாங்கள் அ.ம.மு.க., தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினோம். அன்றைக்கு நாம் தனித்து நின்று 150 இடத்திற்கு மேல் வந்து விடலாம் என்று சொல்லி எல்லோரையும் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார். அதுபோல பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி வரும், 40 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று விடலாம் என்று கூறினார். ஆனால், 20 சதவீத வாக்குகள் வரும் அளவுக்கு மோசமான நிலைக்கு கொண்டு வந்து விட்டார்.

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறார். சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். டிசம்பருக்குள் நிச்சயம் ஒற்றுமை வரும். 2026-ம் ஆண்டு நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை அரசு சரி செய்ய வேண்டும்.
    • அதிமுக வலிமையான கட்சி என்பதால் அவதூறு பரப்புகின்றனர்.

    சேலம்:

    சேலம் நரசோதிப்பட்டி கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் உள்ள குறைபாடுகளை நான் சுட்டிக்காட்டினேன். குறைகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை. இதற்கு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தெந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லையோ அதை சரிசெய்தால் பரவாயில்லை. அதை விட்டு விட்டு நான் சொன்ன கருத்துக்கு எதிர்மறை கருத்து என்பது எந்த விதத்தில் நியாயம்.

    கேள்வி: வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் 99 சதவீதம் சாதி பாகுபாடுகள் தமிழகத்தில் அப்படியே தான் இருக்கிறது என சொல்லியுள்ளார்?

    பதில்: ஒவ்வொரு பேருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. அவருடைய கருத்தை அவர் சொல்லி இருக்கிறார்.

    கே: அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் பரவியுள்ளது குறித்து?

    ப: இதுபற்றி அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. வேண்டும் என்று இதுமாதிரி புரளியை கிளப்பி விடுறாங்க. அ.தி.மு.க. என்பது ஒரு கடல். இதில் அவரை மாதிரி ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கட்சியில் அங்கம் வகிக்கிறாங்க. கட்சிக்காக உழைத்து கொண்டிருக்காங்க. அ.தி.மு.க. ஒரு வலிமையான இயக்கம். 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த இயக்கம். பொன்விழா கண்ட கட்சி. அதனால் வேண்டும் என்று திட்டமிட்டு சிலர் வதந்தியை கிளப்பிக்கிட்டு இருக்கு. இது கண்டிக்கத்தக்கது.

    கே: பரந்தூர் விமான நிலையம் விரிவாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து?

    ப: அரசாங்கம் அவர்களை அழைத்து முறையாக பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வு காண வேண்டும். அந்த மக்களின் பிரச்சினை என்ன? அவர்கள் என்ன? என்ன? கோரிக்கை வைக்கிறாங்க? என அதற்காக ஒரு குழு அமைத்து அந்த குழுவின் மூலமாக தீர்வு காண வேண்டும். அதுதான் என்னுடைய நிலைபாடு.

    கே: தமிழகத்தில் மருந்து தட்டுபாடு நிலவி இருப்பதாக கூறப்படுவது குறித்து?

    ப: நேற்று கூட ஊடகத்தில் வந்த செய்தி. கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ள கழிவுகள் எல்லாம் வெளியேறி துர்நாற்றம் வீசுவதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தேன். தமிழகத்தினுடைய பெரும்பான்மையான மருத்துவமனைகளில் இப்படிப்பட்ட நிலை தான் உள்ளது. ஏற்கனவே நான் இந்த மருத்துவமனையில் உள்ள இந்த குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டினேன். அதற்கு ஆட்சியாளர்கள் எதிர்ப்பு தான் தெரிவிக்கிறார்களே தவிர அதை சரி செய்யாமல் விட்டுவிட்டு வேண்டும் என்றே எடப்பாடி பழனிசாமி தவறான கருத்து சொல்கிறார் என கூறுகிறார்கள்.

    நாங்கள் அங்கு இருக்கிற நிலைபாட்டை எடுத்து சொல்கிறோம். குறைபாடுகளை தீர்ப்பது அரசினுடைய கடமை. மக்கள் எங்களிடம் விண்ணப்பம் மூலம் கோரிக்கை வைக்கிறாங்க. இப்படியெல்லாம் குறைபாடு இருக்கிறது, இதையெல்லாம் நீங்கள் வெளியே தெரிவிக்க வேண்டும். சரி செய்ய வேண்டும் என சொல்றாங்க. அதன் அடிப்படையில் நாங்கள் அறிக்கை வெளியிடுகிறோம். ஊடகத்தின் வாயிலாக பேசுகிறோம். அரசாங்கம் எந்தெந்த மருத்துவமனையில் குறைபாடுகள் இருக்கிறதோ? அதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு மாதம் ஒருமுறை பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ.100-ம், கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ.150-ம் வழங்கப்படுவதாகவும் தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது.
    • பலமுறை நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2021 மே மாதம், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, நான் ஏற்கெனவே ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள ஏழை, எளிய ஆதி திராவிடர் மாணவர்கள் அடிப்படை வசதியின்றி சொல்லொண்ணா துயரம் அனுபவித்து வருகிறார்கள் என்பதையும், பல இடங்களில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளேன்.

    ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் உள்ள சுமார் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளில் சுமார் 82,500 பள்ளி மாணாக்கர்களும், சுமார் 16,500 கல்லூரி மாணாக்கர்களும் என்று சுமார் 99 ஆயிரம் மாணவ, மாணவியர் தங்கியுள்ளதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விதிகளின்படி, உணவுப்படி வழங்கப்படுவதாகவும், இது தவிர பண்டிகை காலங்களில் சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதியும், சோப்பு, எண்ணெய் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு மாதம் ஒருமுறை பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ.100-ம், கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ.150-ம் வழங்கப்படுவதாகவும் தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது.

    மயிலாப்பூரில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் பல கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ளதாகவும், அங்குள்ள கழிவறைகள் சுகாதாரமின்றி, கதவுகள் உடைந்துள்ள நிலையில் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் வெளியாட்கள் வளாகத்தில் மதுபானங்கள் அருந்துவதாகவும், அசைவ உணவு வழங்கப்படும்போது 3-ல் 1 பங்கு மாணவர்களே சாப்பிடக்கூடிய அளவில் உணவு வழங்கப்படுவதால், பல மாணவர்கள் சாப்பாடு இல்லாமல் பசியோடு இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், இது போன்ற பல குறைகள் குறித்து பலமுறை நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    உடனடியாக தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளை போர்க்கால அடிப்படையில் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை சீர் செய்ய தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×