search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

    • ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் முன்னிலையிலேயே ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
    • நீர் நிலைகளில் தூர் வாரும் பணிகள் முடிவடைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் மழை காலங்களில் மிகப்பெரிய வெள்ள பாதிப்புகளை ஒவ்வொரு வருடமும் பொதுமக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த முறை வெள்ளப்பெருக்கால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது, மழை பாதிப்புகளில் மக்கள் சிரமப்படக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியவும், பொதுமக்களிடம் கள நிலவரத்தை நேரில் கேட்டு அறிந்து அதற்கான தீர்வுகளை மேற்கொள்ளவும் புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டு களத்தில் இறங்கினார்.

    அதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் முன்னிலையிலேயே ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. நேற்று அடையாறு மண்டலத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின்சார வாரியம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 20 அரசுத்துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    முக்கியமாக அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆய்வுக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், அடையாறு மண்டலத்தில் உள்ள வேளச்சேரி பகுதியில் கடந்த ஆண்டு எங்கெல்லாம் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது, தற்போது அந்த பகுதிகளில் என்னென்ன சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உடனே பொதுமக்கள் எந்தெந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன, இந்த முறை எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்கள்.

    உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம், 'பொதுமக்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு இன்னும் 2 நாட்களில் சீரமைப்பு பணிகளை முடித்து கொடுக்க வேண்டும்' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

    சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த கூட்டத்தில் மழைநீர் பாதிப்பை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது நலச்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த மண்டலத்தில் கடந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்ட பின் இங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறித்து விளக்கமாக தெரிவித்து உள்ளோம்.

    முக்கிய நீர் நிலைகள் இந்த மண்டலத்தில் உள்ளது. 98 சதவீதம் நீர் நிலைகளில் தூர் வாரும் பணிகள் முடிவடைந்து உள்ளது. பழுது ஏற்பட்டுள்ள சாலைகளை விரைவில் போட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். பொதுமக்களும், குடியிருப்போர் நலச்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் தங்கள் பகுதியில் உள்ள பாதிப்புகளை தெரிவித்தனர். அதனை சரி செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து அதிகாரிகளும் இங்கு இருந்ததால் அவர்களும் 2 நாட்களில் நேரடியாக சென்று பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரை முடிவடையும் நிலையில் உள்ளது. பணிகளை முடிக்க துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழை நீரை சமாளிப்போம், வெல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் மதுரவாயல் பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். வருகிற 16-ந்தேதி கோடம்பாக்கம் மண்டலத்திலும், 17-ந்தேதி பெருங்குடி மண்டலத்திலும், 18-ந்தேதி சோழிங்கநல்லூர் மண்டலத்திலும் ஆய்வுக்கூட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்துகிறார்.

    • கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.
    • என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் கணவரான முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இன்று மரணம் அடைந்தார்.

    82 வயதான அவர் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் 50 ஆண்டுகளாக நிர்வாக ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

    முரசொலி செல்வத்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில் கூறியிருப்பதாவது:-

    முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.

    கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.

    தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்.

    என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்.

    செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே... திராவிட இயக்கத்தின் படைக்கலனே... கழகத்தின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர் என்று தெரிவித்துள்ளார்.

    • தொழில் அமைதியை உருவாக்குவதற்குப் பதிலாக, தொழிலுக்கு குந்தகம் விளைவிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொள்கிறது.
    • தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில், நிர்வாகத்தினருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தி.மு.க. அரசு, தன்னுடைய அதிகார பலத்தின்மூலம் தொழிலாளர்களை மிரட்டி, அடக்கி, ஒடுக்கி வைக்கப் பார்க்கிறது. போராடுவது என்பது தொழிலாளர்களின் உரிமை. அதனை ஒடுக்க நினைப்பது தொழிலாளர் விரோதப் போக்கு. அவர்கள் பெற்ற உரிமையை பறிக்கும் செயல் ஆகும்.

    தொழில் அமைதியை உருவாக்குவதற்குப் பதிலாக, தொழிலுக்கு குந்தகம் விளைவிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொள்கிறது. தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க உறுதுணையாக இருக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்தார்.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    சென்னை:

    பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

    இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    ரத்தன் டாடாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தம். இந்திய தொழில்துறையின் உண்மையான கலங்கரை விளக்கமாக ரத்தன் டாடா விளங்குகிறார்.

    அவரது தொலைநோக்கு தலைமை டாடா குழுமத்தை வடிவமைத்தது மட்டுமல்லாமல், நெறிமுறை வணிக நடைமுறைகளுக்கு உலகளாவிய அளவுகோலையும் அமைத்தது.

    தேசத்தைக் கட்டியெழுப்புதல், கண்டுபிடிப்புகள் மற்றும் பரோபகாரம் ஆகியவற்றில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு மில்லியன் கணக்கான உயிர்களின் மீது அழியாத முத்திரையை பதித்துள்ளது.

    இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டது. ஆனால் அவரது பாரம்பரியம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.

    அவரது இழப்பின் இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
    • மொத்தம் 1937 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை-உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்து, வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் மண்வளத்தினை அறிந்திட தமிழ் மண் வளம் இணையதளம், வேளாண்மை எந்திரமயமாக்குதல் திட்டம், உழவர் பெருமக்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    வேளாண்துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், அரசின் வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அவ்வகையில், இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இந்நாள்வரை வேளாண்மை உழவர் நலத்துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, பல்வேறு வகையான தொழில் நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 1714 நபர்களுக்கும், பணிக் காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 223 நபர்களுக்கும், என மொத்தம் 1937 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கும், பணிக் காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 42 நபர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 5 நபர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, வேளாண்மை இயக்குநர் முருகேஷ், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் முதன்மைச் செயலாளர் பிரகாஷ்,தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமார வேல்பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உமர் அப்துல்லா புதிய முதல்-மந்திரியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • பாரதிய ஜனதா 29 இடங்களை கைப்பற்றி உள்ளது.

    காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இங்கு பா.ஜ.க, காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன.

    90 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இறுதியில் இக்கூட்டணி 49 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பாரதிய ஜனதா 29 இடங்களை கைப்பற்றி உள்ளது.

    காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா புதிய முதல்-மந்திரியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், காஷ்மீர் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காங்கிரஸ் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துகள். வெற்றியை காட்டிலும் ஜனநாயகத்திற்கும், இந்தியாவிற்கும் முக்கியமானது. மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த ஜம்மு-காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான ஆணை இது. இந்த தருணம் ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையையும் மதிக்கும் நியாயமான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று கூறியுள்ளார்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நியமனம்.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நியமனம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    அதன்படி வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேருவையும்; தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமியையும்;

    திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவையும்; தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தையும்; தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனையும்;

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவையும்;

    நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனையும்;

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியையும்;

    கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியையும்; காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தியையும்; பெரம்பலூர் மாவட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரையும்;

    நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும்; மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனையும் நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
    • பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் பணியை பார்வையிட நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்

    2026 சட்டமன்ற தேர்தல் பணிக்காக தொகுதி பார்வையாளர்களை நியமனம் செய்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் பணியை பார்வையிட நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 

    • சாம்சங் தொழிலாளர்கள் 25 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
    • சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 25 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    குறிப்பாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட உள்ளிட்ட நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. ஆனாலும் தொடர்ந்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணசேன் ஆகியோர் தலையிட்டு தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு நேற்றும் இன்றும் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் போராட்டக்குழுவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியது

    இந்நிலையில், சாம்சங் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உடன்பாட்டால் காஞ்சிபுரம் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் 25 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது

    • பூங்காவை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயம்
    • ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயம்

    சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

    மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவை போற்றுவதற்காக சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவுக்கு எதிரில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் 6.09 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    ரூ.45 கோடியே 99 லட்சம் செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவின் நுழைவுவாயிலில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் எனப்படும் கம்பியில் தொங்கியபடி செல்லும் சாகச பயணம், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி பனி மூட்டப்பாதை, 2,600 சதுர அடி நீளமுள்ள ஆர்க்கிட் குடில், அரியவகை கண்கவர் பூச்செடிகளை காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரத்துடன் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறி தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம், சுவரோவியம் ஆகியவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    பூங்காவை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என்றும், இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டை பெறலாம். 'கியூ ஆர்' கோடு மூலமாகவும் நுழைவுச்சீட்டை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250/- சிறியவர்களுக்கு - ரூ.200/- குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150/- சிறியவர்களுக்கு - ரூ.75/- எனவும், மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு - ரூ.50/- எனவும். கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.40/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • ஒத்துழைப்பு, வசதிகளை செய்துத்தர இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்து இருந்தது.
    • இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    நேற்றைய சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் மெரினாவில் கூடிய மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண எதிர்பார்த்ததை விட மிக அதிகமானோர் வந்ததே நெரிசல் ஏற்பட காரணம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "சென்னையில் இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துத்தர இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்து இருந்தது."

    "விமான சாகச நிகழ்ச்சிக்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்திருந்தன. இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது."

    "இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிகமிக அதிக அளவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும் போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப் போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்,". என்று குறிப்பிட்டுள்ளார்.

    • முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    • கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களாய் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    நேற்று சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிருவாகரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

    இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளிவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையம் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


    ×