search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 MLAs disqualification case"

    18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கூவத்தூர் கலாச்சாரம் தொடர்வதால் குதிரை பேரம் விரைவாக ஆரம்பிக்கும் என்றும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். #MLAsDisqualificationCase #ArjunSampath
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    144 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு பல லட்சம் மக்கள் வருவார்கள் என்று தெரிந்தும் அரசும், அறநிலையத்துறையும் ஒத்துழைக்கவில்லை. போக்குவரத்து வசதி, ரெயில் வசதி, பெண்கள் உடை மாற்றும் அறைகள் எல்லாம் சரி செய்து தரப்படவில்லை. புஷ்கர விழாவில் 40 லட்சம் மக்கள் புனித நீராடி இருக்கிறார்கள்.

    18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கூவத்தூர் கலாச்சாரம் தொடர்கிறது. இதனால் குதிரை பேரம் விரைவாக ஆரம்பிக்கும். இதற்கு மாற்று அரசியல் கண்டிப்பாக வரவேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. இருக்கும் வரை இது போன்ற அரசியல் நடக்கும் என்றார். இதற்காகத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் ஆரம்பித்திருக்கிறார். ஆன்மீக அரசியல் கண்டிப்பாக வெற்றி பெறும்.

    வருகிற 26-ந் தேதி சென்னையில் மீ டூ விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பொதுவாக பாலியல் விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். அது பொய்யென்றால் புகார் அளித்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுபோன்ற வி‌ஷயங்களில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்.

    எச்.ராஜா மீது தொடர்ந்து மீம்ஸ் மூலம் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கூறப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். இதை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MLAsDisqualificationCase  #ArjunSampath
    டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் என 21 பேர் குற்றாலத்தில் இன்னும் 2 நாட்கள் தங்கி இருக்க திட்டமிட்டுள்ளனர். #MLAsDisqualificationCase #18MLAs #TTVDhinakaran
    தென்காசி:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.

    அவர்கள் அப்போதைய தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை ஆகஸ்டு 22-ந்தேதி சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுகிறோம்” என்று கூறி இருந்தனர்.

    இதையடுத்து 19 எம்.எல்.ஏ.க்களிடமும் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். பிறகு 19 எம்.எல்.ஏ.க்களின் செயல், தானாக முன் வந்து அ.தி.மு.க.வின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து வெளியேறியதற்கு சமம். எனவே 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் ஆகஸ்டு 24-ந்தேதி பரிந்துரை செய்தார்.

    இதற்கிடையே 19 எம்.எல்.ஏ.க்களில் எஸ்.டி.கே.ஜக்கையன் மட்டும் செப்டம்பர் 17-ந்தேதி சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி அறிவித்தார்.

    இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட கருத்தை தீர்ப்பாக வழங்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்திய நாராயணன் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி முதல் இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்தார். கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியுடன் விசாரணை முடிவடைந்தது.

    தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் நீதிபதி சத்திய நாராயணன் ஒத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இந்த வாரம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

    இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் சாதகமாக தீர்ப்பு வந்தால், தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் அனைத்து தரப்பினரும் இந்த தீர்ப்பின் முடிவை ஆவலுடன் எதிர் பார்த்து உள்ளனர்.

    இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தொடர்ந்து தங்கள் அணியில் பாதுகாப்பாக வைக்க தினகரன் அணி மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு நேற்று அழைத்து சென்றனர். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கிமுத்துவுக்கு சொந்தமான சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


    தங்க தமிழ்செல்வன் (ஆண்டிப்பட்டி), செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), பழனியப்பன் (பாப்பிரெட்டி பட்டி), கதிர்காமு (பெரிய குளம்), ஏழுமலை (பூந்தமல்லி), முருகன் (அரூர்), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), பார்த்திபன் (சோழிங்கர்), கோதண்டபாணி (திருப் போரூர்), சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்), ரெங்கசாமி (தஞ்சாவூர்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), சுப்பிரமணியன் (சாத்தூர்), ஜெயந்தி பத்ம நாபன் (குடியாத்தம்), உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்) ஆகிய 15 பேர் நேற்று இரவே பழைய குற்றாலத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்று தங்கினர்.

    அவர்களுடன் பிரபு எம்.எல்.ஏ.வும் தங்கினார். இன்று காலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல். ஏ.க்களான முத்தையா (பரமக்குடி), தங்கதுரை (நிலக்கோட்டை) ஆகியோரும், எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோரும் குற்றாலம் சொகுசு விடுதிக்கு வந்தனர்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல் (பெரம்பூர்) இன்று பிற்பகல் குற்றாலம் சொகுசு விடுதிக்கு வருகிறார். இதனால் குற்றாலத்தில் 21 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

    இன்று காலை குற்றாலத்தில் தங்கியுள்ள தங்க தமிழ்செல்வன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலர் பழைய குற்றாலம் ரோட்டில் நடைபயிற்சி சென்றனர். பின்பு விடுதிக்கு சென்று தங்கினர்.

    தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நீராடிய காட்சி.

    சிறிது நேரத்திற்கு பிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும், பதவியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்களும் தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு பாபநாசத்திற்கு சென்றனர். அங்கு அனைவரும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார்கள். பின்னர் அங்கிருந்து மீண்டும் குற்றாலம் சொகுசு விடுதிக்கு திரும்பினார்கள். இன்னும் 2 நாட்களுக்கு அவர்கள் குற்றாலத்தில் தங்கி இருக்க திட்டமிட்டுள்ளனர்.

    டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் குற்றாலத்தில் தங்கி இருப்பதை தொடர்ந்து அங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் சென்று குவிந்துள்ளனர்.

    அந்த தனியார் விடுதிக்கு வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு பலத்த பாதுகாப்பு போட்டுள்ளார்கள். #MLAsDisqualificationCase #18MLAs #TTVDhinakaran
    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு எதிராக வந்தாலும் கூட ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை என்று சரத்குமார் கூறினார். #MLAsDisqualificationCase #Sarathkumar
    பொன்னேரி:

    பொன்னேரி அருகே திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் ஜனப்பன் சந்திரத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து தொடர்ந்து கட்சி அலுவலகத்தை அதன் தலைவர் சரத்குமார் திறந்து வைத்தார்.

    காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாக எடுக்க வேண்டும், அமைச்சர் விஜயபாஸ்கர் இதில் துரிதமாக செயல்பட வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை திசை திருப்ப பா.ஜ.க. சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்து இருக்கலாம். கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் விலை உயர்வை திசை திருப்பும் உள் நோக்கம் இதில் இருக்கலாம்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, அவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு எதிராக வந்தாலும் கூட ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை.

    பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தில் ஏற்கனவே அ.தி.மு.க.வினர் பேசி முடித்து வைத்திருப்பார்கள்.


    மோடி இந்தியாவின் பிரதமரா என கேள்வி உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கொடுத்துள்ளார். தொழில் அதிபர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி அணுகூலமாக செயல்படுகிறார்.

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தல் என்றாலும் அனைத்து தேர்தலிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும்.

    மீ டூ குற்றச்சாட்டுக்களை முன் வைக்கும்போது குறைந்தபட்ச ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் பெண்களிடம் தவறாக நடக்கக்கூடாது. தற்போது மீ டூ விவகாரத்தால் அச்சம் ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் இல்லை. அதனால் அதன் செயல்பாடுகள் குறித்து தம்மால் கருத்து கூற முடியாது.

    சபரிமலையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டது கண்டிக்கதக்கது. செய்தியாளர்கள் இருந்தால் தான் என்ன நடைபெறுகிறது என வெளி உலகத்திற்கு தெரிய வரும்.

    இவ்வாறு சரத்குமார் கூறினார்.

    விழாவில் மாநில கவுரவ ஆலோசகர் சந்திரபோஸ், துனைப்பொதுசெயலாளர் சேவியர், பொருளாளர் சுந்தரேசன், இளைஞரணி இணை செயலாளர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் கிரிபாபு, தொகுதி செயலாளர் பாபு, சித்தூர் சுரேஷ்ரெட்டி, வீரராகவலூ, தேசப்பா, மன்னார் நூர் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். #MLAsDisqualificationCase  #Sarathkumar
    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதி தீர்ப்பை எழுதி முடித்து விட்டதாகவும், நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. #18MLAsCase #MLAsDisqualificationCase
    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு 4 அணிகள் உருவானது.

    அதன்பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து அ.தி.மு.க. கட்சி- ஆட்சி இரண்டையும் கைப்பற்றினார்கள்.

    சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் தனி அணியாக செயல்பட்டு வரும் தினகரனுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஆதரவு அளித்து வந்தனர். அவர்கள் தமிழக கவர்னரை சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், அவருக்கு பதில் வேறு ஒருவரை முதல்-அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து 18 எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சிபாரிசின் பேரில் சபாநாயகர் தனபால் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

    சபாநாயகர் நடவடிக்கையை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது.

    நீதிபதி சத்திய நாராயணா

    இதையடுத்து 3-வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சத்திய நாராயணா இந்த வழக்கை விசாரணை நடத்தினார். வக்கீல்கள் வாதம் நிறைவு பெற்றதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.

    இந்த நிலையில் நீதிபதி தீர்ப்பை எழுதி முடித்து விட்டதாகவும், நாளை மறுநாள் (25-ந்தேதி) இதில் தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வருமா? அல்லது செல்லாது என்று தீர்ப்பு வருமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    செல்லாது என்று தீர்ப்பு கூறினால் 18 பேருக்கும் எம்.எல்.ஏ. பதவி திரும்ப கிடைத்து விடும். இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இந்த நிலையில் மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஆட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    தகுதி நீக்கம் செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் 18 தொகுதிகளும் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டி வரும்.

    இதனால் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. #18MLAsCase #MLAsDisqualificationCase
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்றும் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிய வருகிறது. #18MLAsCase #MLAsDisqualificationCase
    சென்னை:

    அ.தி.மு.க.வில் தனித்தனியாக செயல்பட்ட அணிகள் இணைப்புக்குப் பின் டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் ஆதரித்தனர்.

    அவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து முறைப்படி விலகாமலேயே தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். அதே சமயம் தாங்கள் அ.தி.மு.க.வில் நீடிப்பதாகவும் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களும் கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். ஆனால் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    முதல்வரை மாற்றக்கோருவது உள்கட்சி விவகாரம். இதில் தான் தலையிட முடியாது என்று கவர்னர் மறுத்து விட்டதாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே 18 எம்.எல்.ஏ.க்களும் கட்டளையை மீறியதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க. கொறடா சபாநாயகருக்கு சிபாரிசு செய்தார். இதை ஏற்று 18 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    ஆனால் விளக்கம் அளிக்க மறுத்து விட்டதால் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது செல்லும் என்று அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியும், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.


    இதனால் 3-வது நீதிபதி முடிவுக்கு விடப்பட்டது. 3-வது நீதிபதியாக எம்.சத்திய நாராயணன் நியமிக்கப்பட்டார். கடந்த ஜூலை 21-ந்தேதி முதல் அவர் வழக்கை விசாரித்து வந்தார்.

    இதில் சபாநாயகர், சட்டசபை செயலாளர், முதல்- அமைச்சர், அரசு கொறடா ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர்.

    இதேபோல் தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் மூத்த வக்கீல்கள் ஆஜராகி தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். நேற்று இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது.

    அப்போது தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வக்கீல்கள் வாதாடுகையில், “கவர்னரை சந்தித்தது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி என்று கூற முடியாது, தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து செயல்படவில்லை, இதற்காக கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

    சபாநாயகர் தரப்பு வக்கீல் வாதாடும்போது, 18 பேருக்கும் போதிய அவகாசம் வழங்கப்பட்ட பின்பே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரை மாற்றும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று தெரிந்தும் அவரிடம் மனு கொடுத்துள்ளனர். இதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. எனவே தகுதி நீக்கம் செய்தது சரிதான் என்றனர்.

    வக்கீல்கள் வாதம் நிறைவடைந்ததால் இந்த வழக்கில் அடுத்த கட்டமாக எழுத்துப்பூர்வமான பதில்கள் தாக்கல் செய்ய வேண்டுமா என்று வக்கீல்கள் கேட்டனர்.

    அதற்கு அவசியம் இல்லை, வக்கீல்கள் வாதமே தனக்கு நிறைவாக இருக்கிறது என்று நீதிபதி சத்திய நாராயணன் கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

    எனவே அடுத்த 1 வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்றும் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிய வருகிறது.  #18MLAsCase #MLAsDisqualificationCase
    18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #MLAsDisqualificationCase
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்,  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.



    இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார்.

    அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், இன்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை நிறைவு செய்தார். இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி.

    இந்த வழக்கில் இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வெளியாகும்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி வீட்டிற்கு செல்லும் என டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வருகிறார். எனவே, இது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #MLAsDisqualificationCase
    டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், அரசு கொறடா தரப்பு வாதம் இன்று நிறைவுபெற்றதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. #18MLAsCase #MLAsDisqualificationCase #MadrasHC
    சென்னை:

    தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதையடுத்து, இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணா விசாரித்து வருகிறார்.

    நேற்றைய விசாரணையின்போது, முதல்வர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது, முதல்வரை மாற்றக்கோரி 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க முடியாது எனவும் கூறினார்.

    இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது அரசு கொறடா தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.



    அப்போது, 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது சரியானதுதான் என்றும் சபாநாயகரின் முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், சபாநாயகர் அழைத்ததும் தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்ததால் ஜக்கையன் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    அரசு கொறடாவின்வாதம் இன்று நிறைவடைந்ததையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. நாளை மறுநாள் மீண்டும் விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.  #18MLAsCase #MLAsDisqualificationCase #MadrasHC
    முதல்வரை மாற்றும்படி 18 எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்த விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க முடியாது என்று முதல்வர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். #18MLAsCase #MLAsDisqualificationCase #MadrasHC
    சென்னை:

    தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதையடுத்து, இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணா விசாரித்து வருகிறார்.

    இந்நிலையில், தகுதி  நீக்க வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய வாதத்தின்போது முதல்வர் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.


    ‘முதல்வருக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா? என ஆளுநர் முடிவெடுக்கும் நிலையை 18 பேரும் ஏற்படுத்தி உள்ளனர். இதன்மூலம் அவர்கள் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக விட்டுக்கொடுத்து விட்டதாகவே கருத முடியும். முதல்வரை மாற்றக்கோரி 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க முடியாது’ என முதல்வர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். #18MLAsCase #MLAsDisqualificationCase #MadrasHC
    தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில், மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் வரும் 23-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளார். #MLAsDisqualificationCase
    சென்னை:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.

    புதிய நீதிபதி சத்ய நாராயணன் இன்று மாலை 4 மணிக்கு விசாரணையை தொடங்கினார். முதலில் இரு தரப்பு வக்கீல்களையும் அழைத்து விசாரணையை நடத்துவது குறித்து ஆலோசித்தார். இந்த வழக்கை எப்போது தொடங்கி நடத்துவது என்பது குறித்து வக்கீல்களின் கருத்தை கேட்டறிந்தார். 

    அதன்பின்னர் வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார். 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார்.

    நீதிபதி சத்யநாராயணன் தனது விசாரணையை ஒரு வாரத்திற்குள் முடிக்கும்பட்சத்தில், அதிலிருந்து ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. #MLAsDisqualificationCase
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #Congress #thirunavukarasar
    ஆற்காடு:

    வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கட்சி வளர்ச்சி சம்பந்தமான சந்திப்பு மற்றும் ஆய்வு கூட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் இரு வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ள 3-வது நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும்.

    தகுதி நீக்கத்தால் 18 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை, வாக்களித்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும்.

    அ.தி.மு.க. இருவேறு அணிகளாக இருப்பதாலும், தோல்வி பயத்தாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயங்குகிறது. வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தோற்பது உறுதி. இப்போது நடைபெறும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.

    மக்கள் ஜெயலலிதாவுக்குதான் வாக்களித்தார்கள். எடப்பாடி பழனிசாமிக்கோ, பன்னீர்செல்வத்துக்கோ அல்ல. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக உள்ளது.

    மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழக அரசை பின்னால் இருந்து இயக்குகிறது. தமிழகத்தில் எங்கு தீவிரவாதம் உள்ளது என்பதை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெளிவாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மத்திய அரசே நடவடிக்கை எடுக்கலாம்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை யார் வேண்டுமானலும் சந்திக்கலாம். நடிகர் கமல்ஹாசன் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார். அவர் மரியாதை நிமித்தமாக ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். இருவரும் அரசியல் நிலவரம் குறித்து பேசினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #thirunavukarasar
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கக்கோரி நேற்று தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரிய டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சில மாதங்களுக்கு பிறகு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரது தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 14-ந் தேதி வழங்கப்பட்டது. அப்போது 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். அதாவது 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் தீர்ப்பு வழங்கினர்.

    இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதியாக, நீதிபதி விமலா அறிவிக்கப்பட்டார்.

    இதற்கிடையே, ‘இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்தால் காலதாமதமாகும் என்றும், இதனால் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்றும் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேர் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    இதுகுறித்து மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வு முன் ஆஜராகி, 17 பேரின் மனுக்களையும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

    அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 27-ந் தேதி (இன்று) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர்.

    இந்தநிலையில், இந்த வழக்கின் விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொண்டு, முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா தாக்கல் செய்தார்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்த வழக்கை வாபஸ் பெறுவது பற்றி தங்க தமிழ்செல்வன் பரிசீலனை செய்து வருகிறார்.
    சென்னை:

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு கூறி இருந்தார். நீதிபதி சுந்தர் செல்லாது என்றும் தீர்ப்பு கூறினார். இதனால் 3-வது நீதிபதி விமலா விசாரணைக்கு வழக்கு சென்றுள்ளது.

    இதுபற்றி தங்க தமிழ் செல்வன் கூறியதாவது:-

    நான் நீதிபதிகளின் தீர்ப்பை மதிப்பவன். ஆனால் எங்கள் வழக்கில் எந்த காலக்கெடுவும் சொல்லாமல் தீர்ப்பு கூறியதால் தான் அதை விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    3-வது நீதிபதியை நியமித்து 10 நாளில் வழக்கை முடிக்குமாறு கூறி இருந்தால் மதித்திருப்பேன். எங்களுக்கும் தீர்வு கிடைத்திருக்கும். அதை ஏன் சொல்லவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி.

    நாங்கள் எம்.எல்.ஏ.வாக இருக்கிறோமா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள 9 மாதம் காத்து இருந்திருக்கிறோம். இன்னும் எங்களுக்கு தெளிவாக விடை கிடைக்கவில்லை.

    அதன்படி நியாயத்தை எதிர்பார்த்து நீதிமன்றத்தை நாடினோம். ஆனால் அங்கும் மாத கணக்கில் வழக்கு நடந்தால் என்ன பிரயோஜனம்? எங்கள் பதவி காலமே முடிந்து விடும்.

    அதனால்தான் வழக்கை வாபஸ் பெறப்போவதாக கூறி இருந்தேன். ஆனால் இப்போது அதுவும் முடியுமா? முடியாதா? என்ற கேள்வி எழுகிறது.

    ஏனென்றால் வழக்கை வாபஸ் பெற எந்த நீதிபதியிடம் மனு கொடுப்பது என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. மனுவை ஏற்க மறுத்தால் யாரை அணுகுவது என்ற நிலை ஏற்படும்.

    அப்படியே மனு ஏற்கப்பட்டாலும் உடனே இடைத்தேர்தலை நடத்த மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தல் வரை தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தி விடுவார்கள்.

    அப்படியே தேர்தல் நடந்தாலும் நான் இடைத்தேர்தலில் நிற்க முடியுமா? முடியாதா? என்ற சட்ட சிக்கலை ஏற்படுத்தி விடுவார்கள்.

    தேர்தலில் நின்றாலும் தேர்தல் அதிகாரி மூலம் எனது மனுவை நிராகரிக்க செய்து விடுவார்கள்.

    இந்த அளவுக்கு எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்க சட்டத்தில் இடம் உள்ளதால் யோசிக்க வேண்டி உள்ளது.

    சட்ட நிபுணர்களும் 3 விதமான கருத்தை கூறி உள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

    அடுத்த வாரம் பெங்களூர் செல்கிறேன். அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சிறைக்கு சென்று சந்தித்து பேச உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×